என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் தப்பியோடிய கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடாவுக்கு தினந்தோறும் விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து ரெயிலில் சோதனை மேற்கொண்ட ரெயில்வே போலீசார் அதில் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 400 கிலோ எடையுள்ள 20 ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திராவிடம் அரிசி மூட்டைகள் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் தப்பியோடிய கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.

    • முகத்தில் கைதுண்டு கட்டியபடி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கொண்டு திடீரென ராஜ பாண்டியனை துரத்தியுள்ளனர்.
    • இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜபாண்டியன் அருகில் உள்ள எம்.கே.ரெட்டி தெருவில் ஓடிய போது பின்னால் மர்மநபர்கள் துரத்தி சென்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டியன் (26). போட்டோகிராபராக வேலை செய்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் அவரது நண்பர் ஐயப்பன் (35), ஐயப்பனின் மனைவி கன்னியம்மாள் (30) ஆகியோருடன் திருவண்ணாமலை மாவட்டம் பர்வத மலை சிவன் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்காக நேற்று இரவு தாம்பரம் பேருந்து நிலையம் வந்துள்ளார்.

    பின்னர் தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து நடுவீரப்பட்டு பகுதிக்கு செல்ல பேருந்துக்காக அவரது நண்பருடன் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார்.

    அப்போது முகத்தில் கைதுண்டு கட்டியபடி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கொண்டு திடீரென ராஜ பாண்டியனை துரத்தியுள்ளனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜபாண்டியன் அருகில் உள்ள எம்.கே.ரெட்டி தெருவில் ஓடிய போது பின்னால் மர்மநபர்கள் துரத்தி சென்றனர்.

    மர்மநபர்களிடமிருந்து தப்பிக்க அங்குள்ள தனியார் மருத்துவமனையில் நுழைந்து அங்கிருந்த ஒரு அறையின் உள்ளே புகுந்துள்ளார்.

    ஆனாலும் விடாமல் துரத்தி வந்த மர்மநபர்களில் ஒருவர் ராஜபாண்டியனை சரமாரியாக வெட்டினார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனையில் இருந்தவர்கள் சத்தமிட்டதை அடுத்து மர்மநபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

    இதனை அடுத்து அங்கிருந்து மீட்கப்பட்ட ராஜபாண்டியன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தகவல் அறிந்து வந்த தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் இச்சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

    • வாகனங்களால் 10 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    • போக்குவரத்து நெரிசலால் ஓங்கூர் ஆற்று பாலத்தை கடக்க 3 மணி நேரத்திற்கு மேலாகிறது.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்ட எல்லை முடிவில் விழுப்புரம் மாவட்ட எல்லை தொடக்கத்தில் ஓங்கூர் ஆற்று பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே ஒரு வழி பாதையில் போக்குவரத்து செல்கிறது.

    இதனால் நெரிசலில் வாகனங்களால் 10 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட எல்லை முடிவான ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே விழுப்புரம் மாவட்ட தொடக்க எல்லையில் ஓங்கூர் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் மேலே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைந்திருக்கிறது.

    நேற்று மாலை முதல் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பாதையில் பாலம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அதிகமான பழுதடைந்தது. இதனால் நெடுஞ்சாலை துறையின் சார்பில் பராமரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    பாலம் பராமரிப்பு பணி நடைபெறும் 200 மீட்டர் தூரத்திற்கு திருச்சி-சென்னை சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றி எதிர் திசையில் வாகனங்கள் செல்ல தற்காலிகமாக வழி செய்யப்பட்டு வாகனங்கள் செல்கின்றன.

    இந்த நிலையில் 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் நோக்கி கார் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் செல்ல தொடங்கின.

    இன்று காலை 5 மணி முதல் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிக அளவில் சென்று கொண்டிருக்கின்றன. ஓங்கூர் பாலத்தில் ஒரு வழி பாதையில் வாகனங்கள் செல்வதால் ஓங்கூரிலிருந்து -அச்சரப்பாக்கம் வரை 10 கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் காத்து நின்றபடி மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருக்கின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலால் ஓங்கூர் ஆற்று பாலத்தை கடக்க 3 மணி நேரத்திற்கு மேலாகிறது.

    • யானைகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் ஆகஸ்டு 12 உலக யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • யானைகள் தினத்தையொட்டி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகள் விரும்பும் அனைத்து வகையான உணவுகளை அளித்து யானைகள் தினத்தை கொண்டாடினர்.

    வண்டலூர்:

    உலக யானைகள் தினத்தையொட்டி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. வாழும் இனங்களில் யானைகள் முக்கியமானவை. ஏனென்றால் இவைகள் சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    யானைகளை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் என்றும் அழைப்பார்கள். யானைகள் பல வழிகளில் தங்கள் வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன. பாதைகள் உருவாக்குதல் மரக்கிளைகளை கத்தரித்தல், விதைகள் பரப்புதல், வறண்ட காலங்களில் ஆற்றுப்படுகைகளை தோண்டி நீர் பாசன துறைகளை உருவாக்கி மற்றவர்களுக்கு உதவுகின்றன.

    யானைகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் ஆகஸ்டு 12 உலக யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    யானைகள் தினத்தையொட்டி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகள் விரும்பும் அனைத்து வகையான உணவுகளை அளித்து யானைகள் தினத்தை கொண்டாடினர். இப்பூங்காவில் ரோகினி மற்றும் பிரக்ருதி ஆகிய இரண்டு பெண் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த சகோதரி யானைகள் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்கினங்களில் பார்வையாளர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.

    இவ்விழாவில் யானைகளுக்கு பலாப்பழம், தர்பூசணி, கரும்பு, வெல்லம், தென்னங்கீற்றுக்கள் மற்றும் மூங்கில் இலைகள் புற்கள் ஆகியவை தீவனத்துடன் வழங்கப்பட்டு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தை யானைகள் விரும்பி உண்டு மகிழ்ந்தன.

    • மாமல்லபுரத்தை பொறுத்தவரை சர்வதேச சுற்றுலாவிற்கு பெயர் போன இடமாக இருந்தாலும், இங்கு பல வகை போதை வஸ்துக்கள் ரகசியமாக விற்கப்படும் பகுதியாக உள்ளது என சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.
    • உளவுத்துறை போலீசார் அதனை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அவர்களை தக்க ஆதாரங்களுடன் கைது செய்யவும் போலீசார் தயாராகி வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் தனியார் கல்லூரியில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி சத்தியபிரியா தலைமையில் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதில் மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், கல்லூரி முதல்வர், பேராசிரியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மாணவர்களுக்கு அறிவுரைகளை கூறிய டி.ஐ.ஜி, மாமல்லபுரத்தை பொறுத்தவரை சர்வதேச சுற்றுலாவிற்கு பெயர் போன இடமாக இருந்தாலும், இங்கு பல வகை போதை வஸ்துக்கள் ரகசியமாக விற்கப்படும் பகுதியாக உள்ளது என சிலர் புகார் தெரிவித்துள்ளனர். உளவுத்துறை போலீசார் அதனை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அவர்களை தக்க ஆதாரங்களுடன் கைது செய்யவும் போலீசார் தயாராகி வருகிறார்கள். இனி வரும் காலங்களில் இங்கு அடிக்கடி சர்வதேச விழாக்கள் நடக்க இருப்பதால் பாதுகாப்பும் அதிகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

    • மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் உள்ள 6,000 வீடுகளுக்கு இலவசமாக கைத்தறி துணியிலான தேசிய கொடி வழங்க முடிவு செய்தது.
    • இதையடுத்து இன்று முதல் கொடிகளை பேரூராட்சி ஊழியர்கள் வீடுதோறும் இலவசமாக வழங்கி வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை கொண்டாடும் வகையில், வீடுகள் தோறும் மக்கள் ஆக. 13 முதல் 15 வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதனால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து அலுவலகங்களும் அதற்கான பணிகளை பல்வேறு வகைகளில் செய்து வருகிறது.

    இந்த நிலையில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் உள்ள 6,000 வீடுகளுக்கு இலவசமாக கைத்தறி துணியிலான தேசிய கொடி வழங்க முடிவு செய்தது.

    இதையடுத்து இன்று முதல் கொடிகளை பேரூராட்சி ஊழியர்கள் வீடுதோறும் இலவசமாக வழங்கி வருகிறார்கள்.

    • மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 15 ஏக்கரில் கடல் மணல்பரப்பு தயாராகி வருகிறது.
    • விழாவில் கலந்து கொள்ள சிறுவர்களுக்கு அனுமதி இலவசம்.

    மாமல்லபுரம்:

    தமிழகத்தில் முதல் முறையாக சுற்றுலாத் துறை மூலம் மாமல்லபுரத்தில் நாளை (சனிக்கிழமை) சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடக்கிறது. இதனை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.

    இந்த பட்டம் விடும் திருவிழா வருகிற 15-ந்தேி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் வெளி நாட்டைச் சேர்ந்த 4 குழுக்கள் உள்பட 10 குழுக்கள் கலந்து கொள்கின்றன.

    விழா மதியம் 12 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.

    இதற்காக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 15 ஏக்கரில் கடல் மணல்பரப்பு தயாராகி வருகிறது. தரையில் உள்ள மேடுபள்ளங்களை சமப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    ராட்சத பட்டங்கள் 100 அடிக்கு மேல் பறக்க விடப்படும் என்பதாலும் அருகே இருக்கும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    விழா நடைபெறும் 3 நாட்களும் நடன நிகழ்ச்சி, இசைவிழா, பேஷன் ஷோ, உணவு திருவிழா உள்ளிட்ட பல்வேறு கேளிக்கைகள் நடைபெறுகிறது.

    விழாவில் கலந்து கொள்ள சிறுவர்களுக்கு அனுமதி இலவசம். நிகழ்ச்சிக்கு www.tnikf.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

    • டியூசனுக்கு சென்றிருந்த மகனை அழைத்து வருவதற்காக மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில் டிரைவர் தூக்கில் தொங்கி உள்ளார்.
    • டிரைவர் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் கமிஷனர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அலாவுதீன் (38). இவர் அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் டிரைவராக பணிபுரிந்த வந்தார்.

    இவருக்கு சுனிதா என்ற மனைவியும், மகளும் உள்ளனர். ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பெண் ஒருவருடன் அலாவுதீன் சகஜமாக பேசி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் இதுபற்றி அலாவுதீனின் மனைவியிடம் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சங்கர்நகர் போலீசில் புகார் அளித்தார்.

    இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் அலாவுதீன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    டியூசனுக்கு சென்றிருந்த மகனை அழைத்து வருவதற்காக மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில் அவர் தூக்கில் தொங்கி உள்ளார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவரது செல்போனை ஆய்வு செய்த போது அதில் தற்கொலைக்கான காரணம் குறித்து பேசிய வீடியோ ஒன்று இருந்தது. அதில் அலாவுதீன் கூறி இருப்பதாவது:-

    ஆஸ்பத்திரியில் நான் ஒரு பெண்ணுடன் சகஜமாக பேசுவதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அந்த பெண்ணுடன் என்னை தொடர்புபடுத்தி பேசியது மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனது சாவுக்கு ஆஸ்பத்திரி உரிமையாளரும், மேலும் சில பெண் ஊழியர்களுமே காரணம். என்னையும் அந்த பெண்ணையும் அவமானப்படுத்தியதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் தற்கொலை செய்கிறேன்.

    இவ்வாறு அலாவுதீன் வீடியோவில் வாக்குமூலம் போன்று பதிவு செய்து வைத்திருந்ததையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

    • மீன் குஞ்சுகள் வளர்க்க மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
    • அதிக விண்ணப்பங்கள் பெறப்படின், முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை அலுவலகத்தின் மூலம் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்பின் கீழ் கீழ்காணும் திட்டங்களில் பயன்பெற மீனவ பயனாளி, மீனவ விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வாங்கிடும் திட்டத்தில் ஒரு அலகுக்கு மகளிர் பிரிவினருக்கு 60 சதவீதம் மானியம் ரூ.12 லட்சம் வழங்கப்படவுள்ளது.

    ஒருங்கிணைந்த அலங்கார மீன்வளர்ப்பு அலகு (நன்னீர் மீன்களை இனப்பெருக்கம் மற்றும் வளர்த்தல்) ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு அலகுக்கு மகளிர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் ரூ.15 லட்சம் வழங்கப்படவுள்ளது.

    புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60 சதவீத மானியம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

    புதிய மீன்வளர்ப்பு குளங்கள் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் ரூ.2 லட்சத்து 80 லட்சம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60 சதவீத மானியம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

    புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டத்தில் 0.5 ஹெக்டேருக்கான செலவினமான ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் செலவினத்தில் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. நன்னீர் மீன்வளர்ப்புக்கான நடுத்தர அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் ஒரு அலகுக்கான செலவினமான ரூ.14 லட்சம் செலவினத்தில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

    250 முதல் 1000 ச.மீ பரப்புள்ள பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் மீன்வளர்ப்பை ஊக்குவித்திட உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் ஒரு அலகுக்கு (1000 ச.மீட்டருக்கு) ஆகும் செலவினமான ரூ.36 ஆயிரத்தில் 50 சதவீதம் மானியம் ரூ.18 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

    எனவே இந்த திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், கிழக்கு கடற்கரை சாலை, சின்ன நீலாங்கரை, சென்னை 600115 அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று உரிய ஆவணங்களுடன் வருகிற 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். அதிக விண்ணப்பங்கள் பெறப்படின், முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜவுளி பூங்காக்கள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • ஜவுளிபூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளிபூங்கா அமைக்க முன்வரும் தொழில்முனைவோர்களுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும்.

    இவ்வாறு அமைய உள்ள ஜவுளிபூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும்.

    இத்தகைய சிறிய ஜவுளிபூங்காவின் அமைப்பு பின்வரும் உட்பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும் நிலம், உட்கட்டமைப்பு வசதிகள் (சாலைவசதி, சுற்றுசுவர், கழிவுநீர்வாய்க்கால் அமைத்தல், நீர் வினியோகம், தெருவிளக்கு அமைத்தல், மின்சாரவசதி மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தொலைதொடர்பு வசதி போன்றவைகள்).

    ஆய்வுக்கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்குவசதி, மூலப்பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி, அலுவலகம் மற்றும் இதர இனங்கள், உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள், எந்திரங்கள் மற்றும் தளவாடங்கள்.

    சிறிய ஜவுளிப் பூங்காவிற்கான திட்டமதிப்பீடு என்பது மேற்குறிப்பிட்ட இனங்கள் ஆகும். எனவே, இந்த 3 இனங்கள் மட்டுமே அரசின் 50 சதவீத மானியத்தை பெறதகுதியான முதலீடாக கருதப்படும். மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும், தகவல்களுக்கு மண்டல துணை இயக்குநர், துணிநூல்துறை, சேலம் அலுவலகத்தை அணுகலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருத்தேரி பகத்சிங் நகர் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்.
    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள திருத்தேரி பகத்சிங் நகர் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 46). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

    பின்னர் மாலை வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.

    இதுகுறித்து வெங்கடேசன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் வெங்கடேசன் வீட்டில் திருடியது ஆப்பூர் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி (வயது 27) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் மூர்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 5-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதி இலவசம்.
    • உள்நாட்டு பயணிக்கு ரூ.40-ம், வெளிநாட்டு பயணிக்கு ரூ.600-ம் பார்வையாளர் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை :

    இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதையொட்டி மத்திய அரசு கடந்த 5-ந்தேதி முதல் வருகிற 15-ந்தேதி வரை 11 நாட்களுக்கு இந்தியா முழுவதும் புராதன சின்னங்களை கண்டுகளிக்க இலவச அனுமதி வழங்கியுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் மாமல்லபுரத்துக்கு குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் இலவசமாக பார்த்து ரசித்தனர்.

    குறிப்பாக மாமல்லபுரம் புராதன சின்னங்களை காண உள்நாட்டு பயணிக்கு ரூ.40-ம், வெளிநாட்டு பயணிக்கு ரூ.600-ம் பார்வையாளர் கட்டணமாக நுழைவு கட்டண மையங்களில் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் மாமல்லபுரம் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் மேற்பார்வையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி சீரமைத்தனர்.

    நேற்றும் இலவச அனுமதியால் புராதன சின்னங்களில் சுற்றுலா பயணிகள் வருகை ஓரளவுக்கு காணப்பட்டது.

    ×