என் மலர்tooltip icon

    அரியலூர்

    முதல் மனைவிக்கு தெரியாமல் மைனர் பெண்ணை ஏமாற்றி இரண்டாம் திருமணம் செய்த வழக்கில், மகன் மற்றும் தந்தைக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    அரியலூர்:

    முதல் மனைவிக்கு தெரியாமல் மைனர் பெண்ணை ஏமாற்றி இரண்டாம் திருமணம் செய்த வழக்கில், மகன் மற்றும் தந்தைக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    அரியலூர் மாவட்டம் வஞ்சினாபுரம் கிராமத்தை சேர்ந்த புஷ்பராஜ் மகன் நடராஜன் (வயது 30). காண்டிராக்டரான இவருக்கு ராஜேஸ்வரி (25) என்ற மனைவி உள்ளார்.இந்நிலையில் சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரி என்ற 17 வயது சிறுமியை இரண்டாவதாக நடராஜன் திருமணம் செய்து கொண்டார்.

    இதற்கு நடராஜனின் தந்தை புஷ்பராஜூம் உடந்தையாக இருந்தார். இதையறிந்த நடராஜனின் முதல் மனைவி ராஜேஸ்வரி , கடந்த பிப்ரவரி 1-ந்தேதி அரியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி அரியலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பளித்தார். இதில் நடராஜன் மற்றும் அவரது தந்தை புஷ்பராஜ் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.20ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
    பெண்ணை தாக்கி நகை பறித்த டவுசர் கொள்ளையனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி ஜெயங்கொண்டம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள  அய்யூர் கிராமத்தை  சேர்ந்தவர் அறிவழகி. இவர் கடந்த 3-1-2015 அன்று  அங்குள்ள வனப்பகுதியில்  ஆடுகள் மேய்த்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு டவுசர் அணிந்து வந்த மர்மநபர் , அறிவழகியின் கழுத்தை நெரித்து , அவர் அணிந்திருந்த நகையை பறித்து சென்று விட்டார். மயக்கமடைந்த  அறிவழகியை அப்பகுதி பொதுமக்கள் மீ ட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக  கூவாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில்,  ஜெ. மேலூர் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகன்  பாலமுருகன் (35) என்பது தெரியவந்தது. 

    இதையடுத்து அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    இந்த வழக்கு விசாரணை ஜெயங்கொண்டம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி மதிவாணன் தீர்ப்பளித்தார். இதில் பாலமுருகனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
    தா. பழூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்த தொழிலாளி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    தா.பழூர்

    தா.பழூரை அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 65). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காரைக்குறிச்சியில் இருந்து தனது சொந்த ஊரான சீனிவாசபுரத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருகையூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் (23) மோட்டார் சைக்கிளில் மதனத்தூரில் இருந்து காரைக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் முருகேசன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    காயமடைந்த ராஜ்குமார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    டெல்லி முகாமில் பணிபுரிந்து வந்த அரியலூர் ராணுவவீரர் வைரஸ் காய்ச்சலுக்கு பலியானார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரிதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அழகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் ராஜதுரை (வயது 24). இவர் கடந்த 2003-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.

    தற்போது டெல்லி 5-வது பட்டாலியனில் பணிபுரிந்து வந்த நிலையில் 15 தினங்களுக்கு முன்பு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதை அடுத்து ராஜதுரையின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் வந்து உடனிருந்தனர்.

    இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ராஜதுரையின் உடல்நிலை மோசமாகி சிகிச்சை பலனளிக்காமல் ராணுவ மருத்துவமனையில் இறந்துவிட்டார். ராஜதுரையின் உடல் நேற்று சொந்த ஊரான அழகாபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. ராணுவ மரிதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    இதுகுறித்து ராஜதுரையின் தந்தை அண்ணாதுரை கூறுகையில், எனது மகன் ராஜதுரை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நாட்டிற்காக சேவை செய்து வந்தார். திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டு ராணவு மருத்துவமனையில் சேர்த்ததாக தகவல் கிடைத்து சென்று பார்த்தோம்.

    அப்போது என் மகனுக்கு ஸ்க்ரைப் வைரஸ் தாக்கியுள்ளதாகவும், இது மிகவும் மோசமான ஆபத்தான வைரஸ் என்றும், இதற்கு முன்பே பல ராணுவ வீரர்கள் இதே வைரசால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ராணுவ வீரர்களின் குடும்பத்தார் சிலரையும் இந்த ஸ்க்ரைப் வைரஸ் தாக்கியதும் அவர்களும் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

    முன்னதாக ராணுவ வீரர் உடலுக்கு கிராம மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
    ஜெயங்கொண்டம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பிய பின் ஊழியர்கள் சாவியை அங்கேயே விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் உள்ளது. இதில் பணம் நிரப்பும் காண்டிராக்ட் பணியை கும்பகோணத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் செய்து வருகிறது.

    நேற்றிரவு அந்த நிறுவன ஊழியர்கள் ஏ.டி.எம். மையத்துக்கு வந்து எந்திரத்தில் ரூ. 10 லட்சம் முதல் 15 லட்சத்திற்கும் மேலாக பணம் நிரப்பினர். எந்திரத்தை திறந்து பணத்தை வைத்து பூட்டிய அவர்கள், பின்னர் சாவியை அங்கேயே மறந்து வைத்து சென்று விட்டனர்.

    இந்த நிலையில் அங்கு ஜெயங்கொண்டம் போக்குவரத்து முதல்நிலை காவலர் குமார், பணம் எடுக்க சென்றார். அப்போது எந்திரத்தில் சாவி தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    உடனே இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமிக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வங்கியின் அதிகாரியை தொடர்பு கொண்டு விபரத்தை கூறினர். மேலும் அதிகாரிகள் வரும் வரை அங்கேயே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் யாரையும் ஏ.டி.எம். மையத்திற்குள் அனுமதிக்க வில்லை.

    இந்த நிலையில் வங்கியின் அசோசியேட் அன்புச் செல்வன் ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்து சென்றார். அவரிடம் போலீசார் சாவியை கொடுத்தனர். மேலும் ஏ.டி.எம். மையத்திற்கு காவலர்கள் நியமிக்க வேண்டும் என்றும், அலட்சியமாக செயல்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களை கண்டித்து அறிவுரையும் வழங்கினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை தெரிவிக்கலாம் என்று அரியலூர் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக 3 பெண் வாக்குச்சாவடிகள், 3 ஆண் வாக்குச்சாவடிகள், 1001 அனைத்துவாக்காளர் வாக்குச்சாவடிகள் அடங்கிய மொத்தம் உள்ள 1007 ஊரக உள்ளாட்சி வாக்குச்சாவடிகளுக்கும். 17 பெண் வாக்குச்சாவடிகள், 17 ஆண் வாக்குச்சாவடிகள், 25 அனைத்து வாக்காளர்கள் வாக்குச்சாவடிகள் கொண்ட 59 நகராட்சி வாக்குச்சாவடிகள் மற்றும் 30 பேரூராட்சி அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடிகளும் கொண்ட மொத்தம் உள்ள 89 நகர்புற

    உள்ளாட்சி வாக்குச்சாவடிகளுக்கான வரைவு பட்டியல்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம ஊராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் 8.9.2016 அன்று விளம்பரப்படுத்தப்படும்.

    இந்த அறிவிப்பில் பொதுமக்களோ, தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களோ, அரசியல் கட்சிகளின் மாவட்ட பிரதிநிதிகளோ தங்களது கருத்துக்களை அல்லது மறுப்புரைகளை ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கலாம், இப்பொருள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் 9.9.2016 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உள்ளுர் பிரதிநிதிகள், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஜெயங்கொண்டத்தில் சுகாதார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டத்தில் நாடுதழுவிய பொதுவேலை நிறுத்தத்தில் பொதுசுகாதார தொழிலாளர்கள் கலந்துகொண்டு ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், குறைந்த பட்ச ஊதியம் 18 ஆயிரமும், குறைந்தபட்ச பென்சன் ரூ.9 ஆயிரமும் வழங்க வேண்டும். 5 வருடங்களுக்கு மேலாக பணிசெய்யும் ஒப்பந்த பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு பொதுசுகாதார தொழிலாளர் சங்கதலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் தம்பிசிவம், சத்துணவு பணியாளர் சங்க பொறுப்பாளர் பிரான்சிஸ் லூயிஸ் ஆகியோர் பேசினர்.

    நிர்வாகிகள் சிலம்பு செல்வி, கிருஷ்ணன், துரை, சுரேஷ், ஜெயா, லட்சுமி, சீதா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட பொருளாளர் விஜயகுமார் வரவேற்றார். முடிவில் சங்கத்துணைத்தலைவர் கொளஞ்சி நன்றி கூறினார்.

    செந்துறை அருகே பள்ளி மாணவன் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை:

    செந்துறை அருகே உள்ள காடூர் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் மனைவி விருத்தாம்பாள். இவர்களது மகன் வேலுசாமி (வயது 15). செந்துறை அருகில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 23.08.2016 அன்று மதியம் உணவு சாப்பிட்டு விட்டு மதியம் 3 மணிக்கு பள்ளியை விட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் விடுதிக்கு செல்லவில்லை இதுகுறித்து முருகானந்தத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் வேலுசாமியை காணவில்லை. இதுகுறித்து தாய் விருத்தாம்பாள் செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இதன் பேரில் செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெபராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 4,94,513 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் சரவணவேல்ராஜ் கூறினார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆகியவற்றிற்கான வாக்காளர் வரைவு பட்டியல் 01.09.2016-ஆம் தேதி வெளியிடப்பட்டதின் அடிப்படையில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 122538 ஆண் வாக்காளர்களும், 122734 பெண் வாக்காளர்களும், 4 இதர வாக்காளர்களும் என மொத்தம் 245276 வாக்காளர்கள் உள்ளனர். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 123508 ஆண் வாக்காளர்களும், 125729 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 249237 வாக்காளர்கள் உள்ளனர்.

    இம்மாவட்டத்தில் 246046 ஆண் வாக்காளர்களும், 248463 பெண் வாக்காளர்களும், 4 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 494513 வாக்காளர்கள் உள்ளனர். 01.09.2016 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து சிறப்பு சுருக்க திருத்த காலமான 01.01.2017 அன்றைய தேதியின்படி 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் இதுவரை பெயர் இடம் பெறாதவர்கள் ஆகியோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 01.09.2016 முதல் 30.09.2016 வரை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் பெறப்படும். மேலும் 10.09.2016 மற்றும் 24.09.2016 ஆகிய இரு தினங்கள் கிராம சபா அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறும். 11.09.2016 மற்றும் 25.09.2016 ஆகிய இரண்டு தினங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை முகவர்களும் ஒருங்கிணைந்து வாக்காளர் பட்டியலிலுள்ள தவறுகள், விடுதல்கள் போன்றவற்றைக் கண்டறிந்து தெரிவிக்கலாம்.

    எனவே, தகுதியான வாக்காளர்கள் அனைவரும் 01.09.2016 முதல் 30.09.2016 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    அரியலூர் தொகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பள்ளி கட்டிட பணிகளை அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அரியலூர்:

    அரியலூர் சட்டமன்ற தொகுதியில் அரியலூர் யூனியனில் தாமரைகுளம், ரெட்டிபாளையம், திருமானூர் ஒன்றியத்தில் வாரணவாசி, ஆகிய கிராமங்களில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் ரூ.3½ கோடியில் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நடப்பு ஆண்டிலேயே புதிய கட்டிடத்தில் வகுப்புகள் இயங்கவேண்டும் என்றும், அதனால் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளை கேட்டுக்கொண் டார். இந்த நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ஜெயங்கொண்டம் அருகே மின்கம்பி மாட்டு வண்டி மீது விழுந்ததில் மாடு இறந்து போனது. மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவன்தொண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 45). மாட்டு வண்டியில் விறகு வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இவர் வழக்கம் போல் மாட்டு வண்டியில் விறகுகளை ஏற்றி கொண்டு வியாபாரத்திற்க்கு சென்றுள்ளார். அப்போது அவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ராஜாகொள்ளை பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென மின் கம்பி ஒன்று அவர் வந்த மாட்டு வண்டி மீது விழுந்தது. இதில் ராமச்சந்திரன் தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த ரவி மின் கம்பியை அகற்ற முயற்சி செய்தார். அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இந்த விபத்தில் மாடு சம்பவ இடத்தில் பலியானது.

    படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மூன்றாம் கட்டமாக தலா ஒரு கிராமம் வீதம் அம்மா திட்ட முகாம் நாளை வருவாய் வட்டாட்சியர் தலைமையில் நடைபெறுகிறது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மூன்றாம் கட்டமாக தலா ஒரு கிராமம் வீதம் அம்மா திட்ட முகாம் நாளை வருவாய் வட்டாட்சியர் தலைமையில் பின்வருமாறு நடைபெற உள்ளது.

    உடையார்பாளையம் வட்டத்தில் தேவனூர் கிராமத்தில் நடைபெறுகிறது.

    இம்முகாமில் வருவாய்த்துறையின் சமூகப் பாதுகாப்புத்திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    ×