என் மலர்tooltip icon

    அரியலூர்

    தா.பழூர் அருகே மினிவேன் மோதி முதியவர் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த அணைக்குடம் காலனி தெருவை சேர்ந்தவர் நந்தன் (வயது 65). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள கடைக்கு செல்வதற்காக சைக்கிளில், கும்பகோணம்–ஜெயங்கொண்டம் சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த மினிவேன் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நந்தனை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நந்தன் பரிதாபமாக இறந்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கும்பகோணம்–ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், இச்சாலையில் வேகத்தடை இல்லாததால் அதிகளவு விபத்து ஏற்படுகிறது.

    எனவே மேற்கண்ட சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். மேலும் கனரக வாகனங்களை சீராக இயக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து தகவலறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டத்தால் கும்பகோணம்–ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அரியலூர் ராஜாஜிநகரில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஜோதிவேல் அனைவரையும் வரவேற்றார்.
    அரியலூர்:

    அரியலூர் ராஜாஜிநகரில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஜோதிவேல் அனைவரையும் வரவேற்றார்.

    மாவட்ட அவைத்தலைவர் சந்திரகாசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமை தாங்கி பேசினார். பின்னர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு விண்ணப்ப மனுக்களை வழங்கினார்.

    இதில் மாவட்ட துணை செயலாளர்கள் ஞானமூர்த்தி, கென்னடி கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    அரியலூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் 23-ந்தேதி நடக்கிறது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மூன்றாம் கட்டமாக தலா ஒரு கிராமம் வீதம் அம்மா திட்ட முகாம் வருகிற 23-ந்தேதி வருவாய் வட்டாட்சியர் தலைமையில்  நடைபெற உள்ளது.

    உடையார்பாளையம் வட்டத்தில் குருவாலப்பர் கோவில் கிராமத்தில் நடைபெறுகிறது.

    இம்முகாமில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத்திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும்.

    பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வெளியிட்டு தெரிவித்தாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் 2016-க்கான ஆறு ஊராட்சி ஒன்றியங்கள், இரண்டு நகராட்சிகள் மற்றும் இரண்டு பேரூராட்சிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்களில் அரியலூர் மாவட்டத்தில் 3,03,629 ஆண் வாக்காளர்கள், 3,11,198 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 4 பேர் ஆக மொத்தம் 614831 வாக்காளர்கள் அடங்கிய இறுதி வாக்காளர் பட்டியல் உள்ளது என மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் அவர்கள் தெரிவித்தார்.

    இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரெங்கராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கங்காதாரணி ஆகியோர் உடனிருந்தனர்.

    வி.கைகாட்டி அருகே பஸ் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து புளியமரத்தில் மோதி 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூரில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் கல்லூரி பஸ்சில் சென்று படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கல்லூரி மாணவர்கள் பஸ்சில் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது வி.கைகாட்டி அருகே வந்த போது பஸ் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து புளியமரத்தில் மோதியது. இதில் பஸ்சில் இருந்த ரெட்டிபாளையம் சேர்ந்த மகேந்திரன் (21), உத்திராபதி (28), ஜெயராஜ் (19), பாலமுருகன் ஆகிய 4 மாணவர்களும் படுகாயம் அடைந்தனர்.

    இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் தனியார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஸ்சில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து கயர்லாபாத் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகன விதிமுறைகளை மீறியதாக 245 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாதிருத்தல், அதிவேகமாக செல்லுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்பட வாகன விதிமுறைகளை மீறியதாக 245 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை போலீசார் அபராதமாக வசூலித்தனர். தொடர்ந்து இனி வரும் காலங்களில் இதே போன்று வாகன விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
    அரியலூர் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சுதாகர் (வயது 29). இவர், கடந்த 9-7-2016 அன்று ரெங்கசமுத்திரம் கிராமத்தில் நடந்த உறவினரின் திருமணத்திற்கு சென்றார்.

    அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமியை சுதாகர் தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதையறிந்த அச்சிறுமியின் பெற்றோர்  அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர்.

    இதுதொடர்பான  வழக்கு அரியலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சுதாகருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து போலீசார் சுதாகரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    ஜெயங்கொண்டம் அருகே தாயை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர்   மாவட்டம், ஜெயங்கொண்டம்   அருகே உள்ள  கல்லாத்தூர், தெற்கு தெருவை  சேர்ந்தவர்  புகழேந்தி  (வயது 45),  கூலித் தொழிலாளி.இவரது மனைவி அமுதா (42), இவர்களுக்கு  2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    புகழேந்தியின்  தந்தை  கடந்த சில வருடங்களுக்கு முன்பு  இறந்து விட்டார். இதனால்  அவரது  தாய் மணிமேகலை  புகழேந்தியுடன் வசித்து  வந்தார்.

    இந்த நிலையில்  புகழேந்தி தினமும்  மது அருந்தி விட்டு வீட்டிற்கு   வருவது வழக்கம். அதேபோல் நேற்றும் மது அருந்தி வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும் அவரது மனைவி அமுதாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால்  கோபம்  அடைந்த அமுதா அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    அப்போது வீட்டில் இருந்த தாய் மணிமேகலையிடம் புகழேந்தி குடிப்பதற்கு  பணம் கேட்டுள்ளார். மணிமேகலை  தன்னிடம்  பணம் இல்லை என்று   கூறவே, ஆத்திரம்  அடைந்த  அவர் குடிபோதையில் கீழே கிடந்த உருட்டுக்கட்டையை    எடுத்து மணிமேகலையை சரமாரி  தாக்கியுள்ளார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த  மணிமேகலை ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார். இது  குறித்த தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்றனர். பின்னர் மணிமேகலையின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புகழேந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாயை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் காடுகளையும், காட்டு விலங்குகளையும் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வன உயிரின வார விழா கடைபிடிக்கபட்டது. இதனை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி அரசுக்கல்லூரியில் நடத்தப்பட்டது.
    அரியலூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் காடுகளையும், காட்டு விலங்குகளையும் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வன உயிரின வார விழா கடைபிடிக்கபட்டது. இதனை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி அரசுக்கல்லூரியில் நடத்தப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    இப்போட்டிகளுக்கு நடுவர்களாக தமிழ்த்துறை பேராசிரியர்கள் சேகர், தமிழ்மாறன் மற்றும் இயற்பியல்துறை பேராசிரியர் ராசமூர்த்தி ஆகியோர் செயல்பட்டனர். பேச்சுபோட்டி, ஓவியப்போட்டிகளில் முதல் இடம் பிடித்த மாணவ, மாணவிகள் வருகிற 8–10–2016 அன்று சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

    வன உயிரின வார விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் கருணாகரன் மற்றும் வனத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
    செந்துறையில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், செந்துறை பேருந்து நிலையம் அருகில் தமிழக அரசின் சாதனை குறித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் புகைப்படக் கண்காட்சி இன்று (12-09-2016) நடைபெற்றது.

    இந்த புகைப்படக் கண்காட்சியில் தமிழக முதலமைச்சரால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பாக இ - பொது சேவை மையங்களின் செயல்பாடு பற்றிய புகைப்படங்கள் மற்றும் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

    மேலும், விலையில்லா கறவைப் பசுக்கள், விலையில்லா வெள்ளாடுகள், மற்றும் கால்நடைகளுக்கு குறைந்த விலையில் தீவனப்புல், விலையில்லா மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர், முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, சத்துணவுத் திட்டத்தின் மூலம் சத்துமாவு உருண்டை வழங்குதல், திருமண உதவி மற்றும் விவசாய இடுபொருட்கள் வழங்குதல்,

    முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம், மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ், மடிக்கணினி, சைக்கிள், சீருடைகள், போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததை 520-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர். புகைப்படக் கண் காட்சியை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நந்தகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள்சரவணன் (செய்தி), சிவக்குமார் (விளம்பரம்) பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் நடந்தது.
    ஜெயங்கொண்டம்:

    இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் நடந்தது.

    மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், எம்.பி-யு மான ரெங்கராஜன் கலந்துகொண்டு இன்றைய அரசியல் குறித்து சிறப்புரையாற்றினார். 

    மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, அழகர்சாமி, இளங்கோவன், கலையரசி, ரமேஷ், துரைசாமி, சிற்றம்பலம் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

    கூட்டத்தில் ஒன்றிய கமிட்டி செயலாளர்கள் பரமசிவம், கந்தசாமி, வேல்முருகன், புனிதன், தங்கராசு, ஆறுமுகம் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  
    முடிவில் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினர் குடும்பத்திற்கு நிதி வழங்கப்பட்டது. முடிவில் துரைராஜ் நன்றி தெரிவித்தார்.
    அரியலூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் பள்ளி நிர்வாகி உள்பட 2 பேர் பலியானார்கள்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் பள்ளி நிர்வாகி உள்பட 2 பேர் பலியானார்கள்.

    அரியலூர் அருகே உள்ள கடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரவேந்தன் (வயது 55). இவர் தனியார் பள்ளி நிர்வாகியாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்றிரவு இவர் அதே ஊரைச்சேர்ந்த தனது நண்பரான கொளஞ்சி (45) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அரியலூரில் இருந்து கல்லங்குறிச்சி சென்றனர்.

    பின்னர் அங்கு பணியை முடித்துவிட்டு மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கடுக்கூர் பிரிவு சாலையில் திரும்பியபோது எதிரே வந்த டிப்பர் லாரி திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த கோர விபத்தில் வீரவேந்தன், கொளஞ்சி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் கயர்லாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ரவீந்திர பிரகாஷ் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (31) என்பவரை கைது செய்தார்.

    விபத்தில் பள்ளி நிர்வாகியும் அவரது நண்பரும் பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×