என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகேயுள்ள கச்சிப் பெருமாள் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன். இவரது மைத்துனர் அருகில் உள்ள புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன் இறந்துவிட்டார். அவரது துக்க சடங்கிற்கு ராமநாதன் தனது கிராமத்தைச் சேர்ந்த உறவினர்களை கடந்த 24-ம் தேதி மினி சரக்கு வாகனத்தில் புதுக்குடிக்கு அழைத்து சென்றார். பின்னர் சடங்கு முடிந்தவுடன் அழைத்து சென்ற பெண்கள் 25 பேரை மீண்டும் அதே மினி சரக்கு வாகனத்தில் திரும்ப அனுப்பினார்.
அவர்கள் அனைவரும் வந்து கொண்டிருந்தபோது கச்சிப்பெருமாள் ஊர் எல்லை திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் எதிரே அரியலூரிலிருந்து பெண்ணாடம் நோக்கி சென்ற டேங்கர் லாரியும் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 16 பேர் பலியாகினர்.
இவர்களில் 14 பேரின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதியை ஆர்.டி.ஓ. தீனாகுமாரி வழங்கினார். மேலும் இருவரின் குடும்பத்திற்கு இன்று நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். அருகில் தாசில்தார் திருமாறன் உடனிருந்தார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கச்சிப்பெருமாள் கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த கோரவிபத்தில் 14 பேர் பலியாகினர்.
துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்தது. ஒரே கிராமத்தில் 14 பேர் பலியாகியதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
பலியானவர்களின் உடல்கள் அங்குள்ள மயானங்களில் தகனம் செய்யப்பட்டது. சிலரது உடல்கள் புதைக்கப்பட்டது.
விபத்து தொடர்பாக லாரி டிரைவர் உடையார் பாளையம் தெற்கு பரணம் தெற்கு தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் கார்த்திக்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராதா கிருஷ்ணன் மனைவி சாந்தி (வயது45) இன்று காலை மரணமடைந்தார். இதனால் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிறுகடம்பூரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 29), கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி (25). இவர்களுக்கு திருமணமாகி 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வி, கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே சிறுவட்டத்துறையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த ஆடி மாதம் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, இருவரையும் சேர்த்து வைத்தனர். இருப்பினும் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றிரவும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று காலை செல்வி, வீட்டை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த சக்திவேல் திடீரென செல்வியின் கழுத்தை பிடித்து, கட்டிலில் வைத்து தாக்கினார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து சக்திவேல் தப்பி சென்று விட்டார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் இரும்புலிக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய சக்திவேலை வலைவீசி தேடி வருகின்றனர். அவர் மீது ஏற்கனவே இரும்புலிக்குறிச்சி போலீசில் கொள்ளை வழக்குகள் உள்ளது. இந்நிலையில் அவர் மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் அரியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் டவுன் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 74). இவர் அவரது வீட்டின் முன்புறம் உரக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்றிரவு அவரது கடைக்கு 3 வாலிபர்கள் வந்து, உரம் மற்றும் பூச்சி மருந்து கேட்டனர்.
அப்போது சிவக்குமார், நான் கணக்கு வழக்குகளை முடித்து, கடையை பூட்டப்போகிறேன், எனவே நாளை காலை வந்து உரம் வாங்கி கொள்ளுங்கள் என்றார். இதையடுத்து அந்த வாலிபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை 3 வாலிபர்களும் சிவக்குமார் வீட்டிற்கு வந்தனர். வீட்டின் கதவை தட்டி உள்ளே இருந்த சிவக்குமாரை அழைத்தனர். கதவை திறந்து வெளியே வந்த சிவக்குமாரிடம், 3 பேரும் உரம் வாங்க வந்திருக்கிறோம் என்று கூறிய படி அவரிடம் பேசினர்.
திடீரென அவர்கள், சிவக்குமாரை வீட்டிற்குள் தள்ளி, அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின், மோதிரம் ஆகியவற்றை பறித்தனர். மேலும் சிவக்குமாரின் மனைவி ஞானம்மாள் (72) அணிந்திருந்த செயின், மோதிரத்தையும் பறித்தனர்.
பின்னர் தாங்கள் கொண்டு வந்திருந்த கத்தி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டி பீரோவை திறக்கக்கூறி, அதில் இருந்த ரூ.7½ லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். செல்லும்போது சிவக்குமாரையும், ஞானம்மாளையும் கட்டிப்போட்டு விட்டு சென்றனர். கொள்ளை போன நகை- பணத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும்.
இதனிடையே இன்று காலை வீட்டு வேலைக்காரி மாரியம்மாள் என்பவர் பணிக்கு செல்லும் போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடக்கவே, அவசரமாக உள்ளே சென்று பார்த்தார். அப்போது இருவரும் கட்டி போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கட்டுகளை அவிழ்த்து விட்டார்.
உடனே இந்த சம்பவம் குறித்து அரியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் வாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ வேலு, அண்ணாதுரை, சாகுல் அமீது ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் மூலம் சம்பவ இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அரியலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கச்சிப்பெருமாள் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 12 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்நிலையில் விபத்து நிகழ்ந்ததும் லாரி டிரைவர் உடையார்பாளையம் தெற்கு பரணம் தெற்கு தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் கார்த்திக் (26) தப்பியோடிவிட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர். நேற்றிரவு அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே பலியான 15 பேரில் 8 பேரின் உடல்கள் ஒரு மயானத்திலும், 3 பேரின் உடல்கள் மற்றொரு மயானத்திலும் தகனம் செய்யப்பட்டது. வளர்மதி என்பவரின் உடல் உடையார்பாளையத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

போக்குவரத்து போலீஸ்காரர் முருகையனின் மனைவி ராணி மற்றும் ராஜமாணிக்கம் மனைவி சரஸ்வதி ஆகியோரின் உடல்கள் அவர்களது சொந்த நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
செந்தாமரை என்பவரின் மகன் வெளிநாட்டில் இருந்து வருவதால், அவரின் உடல் இன்று கச்சிப்பெருமாள் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. ஒரே கிராமத்தில் 15 பேர் பலியானதால் அப்பகுதி பொதுமக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
அரியலூர்:
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி மாவட்ட அதிமுக சார்பில் பெருமாள் கோவிலிலும், மகளிர் அணி சார்பில் செட்டி ஏரிக்கரை விநாயகர் கோவிலிலும், மாணவர் அணி சார்பில் மார்கெட் தெரு மாங்காய் பிள்ளையார் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாணவர் அணி சங்கர் மகளிர் அணி ஒன்றிய செயலாளர் செல்வராசு, நகர செயலாளர் கண்ணன் , மீனவரணி நாகராஜன், வக்கீல் பிரிவு வெங்கடாஜலபதி, வக்கீல் சாந்தி, ஒன்றிய வக்கீல் ஜெயக்குமார், கல்லங்குறிச்சி பாஸ்கர், நகர தலைவர் வேலுசாமி, நகர பொருளாளர் செந்தில், நகராட்சி கவுன்சிலர் கருணாநிதி, குமார், மாணவரணி முருகேஷன், எம்.ஜி.ஆர். மன்றம் பழனியாண்டி, மணிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள கச்சிபெருமாள் கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன், விவசாயி. புதுக்குடி கிராமத்தில் வசித்து வந்த இவரது மைத்துனர் குமார் கடந்த வாரம் இறந்தார். இவரது 7-ம் நாள் காரிய நிகழ்ச்சி நேற்று புதுக்குடி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் நடந்தது.
இதில் ராமநாதன் மற்றும் அவரது உறவினர்கள் 24 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் இரவு லோடு ஆட்டோவில் ஊருக்கு புறப்பட்டனர். ஆட்டோவில் சிலர் நின்று கொண்டும், சிலர் அமர்ந்து கொண்டும் பயணித்தனர். ஆட்டோவை மருதுபாண்டி ஓட்டினார்.
கச்சிப்பெருமாள் பஸ் நிலையம் அருகே செல்லும் போது, சிமெண்ட் கலவை ஏற்றிச்சென்ற லாரி, லோடு ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஆட்டோவின் முன்பகுதி நொறுங்கியது. ஆட்டோவின் பின்னால் நின்று கொண்டும், அமர்ந்து கொண்டும் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
சித்ரா, செந்தாமரை, டிரைவர் மருதுபாண்டி, காசியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மற்ற அனைவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.
போலீசார் பொது மக்கள் உதவியுடன் காயமடைந்த அனைவரையும் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 8 பேர் இறந்தனர். அவர்களின் விவரம் வருமாறு:-
செல்வி, ராணி, சரஸ்வதி, மணிகண்ட பிரபு, காமாட்சி, ராஜகுமாரி, முனியம்மாள், அன்னமயில், பலத்த காயமடைந்த வளர்மதி, வாசுகி, அம்சவள்ளி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை வளர்மதியும், அவரை தொடர்ந்து வாசுகி என்பவரும் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. அம்சவள்ளிக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் அவரும் இன்று மதியம் 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
காயமடைந்த லதா, தமிழரசி, வனிதா, லட்சுமி, அலமேலு, அமுதா, புஷ்பா, மற்றொரு தமிழரசி, சாந்தி, தேவகி ஆகியோர் ஜெயங்கொண்டம் மற்றும் தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியலூர் உடையார்பாளையம் அருகே சரக்கு வாகனம் மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் 11 பேர் பரிதாபமாக பரிதாபமாக உரியிழந்தனர்.
உயிரிழந்த அனைவரும் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சரக்கு வாகனத்தில் வந்தவர்கள்.
இந்த விபத்தில் மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஜெயங்கொண்டம் :
ஜெயங்கொண்டம் அருகே சலுப்பை கிராமம் வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் ( வயது 50) கூலி தொழிலாளி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமாக வில்லை.
இதனால் மனமுடைந்த பால்ராஜ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து விட்டார். இதையடுத்து அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பால்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மீன்சுருட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராயர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமம் மேலவெளி செக்கடித் தெருவைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மகள் பிரீத்தி ( வயது14). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் அவரது தாயார் சங்கீதா பிரீத்திக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதற்கு பிரீத்தி மறுத்துள்ளார். ஆனால் வலுக்கட்டாயமாக ஜெயங்கொண்டம் அடுத்த மலங்கன்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த பாலசுந்தரம் மகன் கிருஷ்ண மூர்த்தி (29) என்பவருக்கு சோழன்குறிச்சி கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் கடந்த மாதம் 19-ம் தேதி திருமணம் செய்து வைத்தனர்.
இதனால் மனவேதனையில் இருந்த பிரீத்தி அரியலூர் சைல்டு லைனுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்ததின் பேரில் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் சுகுணா ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வ குமாரி விசாரணை நடத்தி, பிரீத்தியின் தாயார் சங்கீதா, புதுமாப்பிள்ளை கிருஷ்ணமூர்த்தி, அவரது தாயார் சாந்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் கிருஷ்ணமூர்த்தி, சாந்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சங்கீதாவை தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர்-சித்ரா தம்பதியரின் மகள் விசித்ரா (வயது 16). மனநலம் பாதிக்கப்பட்டவர். சித்ரா வேலைக்கு செல்லும் போது அருகில் உள்ள உறவினர் வீட்டில் விசித்ராவை விட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 11-ந்தேதி விசித்ரா வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வரும் தேவாங்க முதலியார் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராம்குமார் (27) வந்தார். விசித்ராவிடம் நைசாக பேசிய அவர், வீட்டிற்குள் அழைத்து சென்று பலாத்காரம் செய்தார்.
கடந்த 23-ந்தேதி காளியம்மன் கோவிலில் அமர்ந்திருந்த விசித்ராவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் எனவும் விசித்ராவை மிரட்டியுள்ளார்.
இருப்பினும் ராம்குமாரால் பாதிக்கப்பட்ட விசித்ரா, நடந்த சம்பவம் குறித்து தனது தாய் சித்ராவிடம் தெரிவித்தார். அவர் இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில் குமார் வழக்குப்பதிவு செய்து ராம்குமாரை கைது செய்து விசாரித்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை கோவில் பூசாரியே பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) தலைமையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 28.9.2016 அன்று மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் ஏதாவது இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.






