என் மலர்tooltip icon

    செய்திகள்

    துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
    X

    துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு

    துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள கச்சிபெருமாள் கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன், விவசாயி. புதுக்குடி கிராமத்தில் வசித்து வந்த இவரது மைத்துனர் குமார் கடந்த வாரம் இறந்தார். இவரது 7-ம் நாள் காரிய நிகழ்ச்சி நேற்று புதுக்குடி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் நடந்தது.

    இதில் ராமநாதன் மற்றும் அவரது உறவினர்கள் 24 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் இரவு லோடு ஆட்டோவில் ஊருக்கு புறப்பட்டனர். ஆட்டோவில் சிலர் நின்று கொண்டும், சிலர் அமர்ந்து கொண்டும் பயணித்தனர். ஆட்டோவை மருதுபாண்டி ஓட்டினார்.

    கச்சிப்பெருமாள் பஸ் நிலையம் அருகே செல்லும் போது, சிமெண்ட் கலவை ஏற்றிச்சென்ற லாரி, லோடு ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஆட்டோவின் முன்பகுதி நொறுங்கியது. ஆட்டோவின் பின்னால் நின்று கொண்டும், அமர்ந்து கொண்டும் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

    சித்ரா, செந்தாமரை, டிரைவர் மருதுபாண்டி, காசியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மற்ற அனைவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

    போலீசார் பொது மக்கள் உதவியுடன் காயமடைந்த அனைவரையும் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 8 பேர் இறந்தனர். அவர்களின் விவரம் வருமாறு:-

    செல்வி, ராணி, சரஸ்வதி, மணிகண்ட பிரபு, காமாட்சி, ராஜகுமாரி, முனியம்மாள், அன்னமயில், பலத்த காயமடைந்த வளர்மதி, வாசுகி, அம்சவள்ளி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை வளர்மதியும், அவரை தொடர்ந்து வாசுகி என்பவரும் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. அம்சவள்ளிக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் அவரும் இன்று மதியம் 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    காயமடைந்த லதா, தமிழரசி, வனிதா, லட்சுமி, அலமேலு, அமுதா, புஷ்பா, மற்றொரு தமிழரசி, சாந்தி, தேவகி ஆகியோர் ஜெயங்கொண்டம் மற்றும் தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×