என் மலர்
அரியலூர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அரியலூர் மாவட்ட த.மா.கா. மகளிரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் அண்ணாசிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.
மாநில மகளிரணி தலைவி கன்னிகாதேவி, விவசாய அணி புலியூர் நாகராஜன், கொட்டிவாக்கம் முருகன், ஜி.ஆர். மூப்பனார், முன்னாள் எம்.பி. கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. ரெங்கராஜன், நல்லமுத்து, மாசிலாமணி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
உச்சநீதிமன்ற உத்தரவின் படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும். காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அரசியல் லாபத்திற்காக பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெயங்கொண்டம:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் வேதநாயகம் (வயது 40) இவர் சென்னை மகாதானபுரத்தில் வசித்து வருகிறார். இவரது தாய் வைரம் உடையார் பாளையத்தில் தனியாக வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று வைரம் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் வீட்டில் புகுந்து வைரத்தின் கழுத்தை கையால் நெரித்து சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டினர். பின்னர் அவர் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இது குறித்து அவரது மகன் வேதநாயகம் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் தூத்தூர் அருகேயுள்ள கே.மாத்தூர் கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல் ( வயது 48). விவசாயி. இவர் கடந்த 2-ம் தேதி மதியம் தனது மனைவி மாலாவிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளதாக தெரிகிறது. அதற்கு மாலா மறுத்துள்ளார்.
இதனால் பழனிவேல் கோபித்துக் கொண்டு வீட்டின் பின்புறம் பருத்தி செடிக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். இதனால் அவர் வீட்டிற்கு மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவையாறு அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக பழனிவேல் இறந்தார். இது குறித்து அவரது மகன் ஐயப்பன் தூத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் மகாராஜபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தினேஷ் குமார் (வயது 25) லாரி டிரைவர். இவர் அரியலூரில் உள்ள ஒரு தனியார் சிமெண்ட் ஆலையில் சிமெண்ட் ஏற்றி வருவதற்காக கும்பகோணத்தில் இருந்து டாரஸ் லாரியை ஓட்டிச் சென்றார்.
அப்போது தா.பழூர் - விளாங்குடி சாலை சுந்தரேசபுரம் தனியார் பள்ளி அருகே நிறுத்தி பின்பக்க டயர்களில் காற்று போதுமான அளவு சரியாக உள்ளதா? என பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவ்வழியே நிலக்கரி ஏற்றி வந்த லாரி மோதியதில் தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்து விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிதாசன் சம்பவ இடம் விரைந்து சென்று தினேஷ்குமாரின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் நாமக்கல் மாவட்டம், கணேசபுரத்தைச் சேர்ந்த பழனிவேல் மகன் பிரபு (33) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அரியலூர் அருகே உள்ள வெங்கடகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 68), விவசாயி. இவரது மனைவி அழகம்மாள் (60). இவர்களுக்கு சின்னராசு, சுரேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் சின்னராசு சிங்கப்பூரிலும், சுரேஷ் பெங்களூரிலும் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்றிரவு முத்துசாமியும், அவரது மனைவியும் வீட்டின் கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளே அயர்ந்து தூங்கினர். இந்த நிலையில் நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.
பின்னர் தனி அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 35 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.
இன்று காலை முத்துசாமி எழுந்து பார்த்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததையும், பீரோ திறந்து கிடப்பதையும், அதில் இருந்த 35 பவுன் நகை கொள்ளை போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து உடனடியாக கயர்லாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூரில் உரக்கடை அதிபர் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரி தாக்கி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந் நிலையில் விவசாயி வீட்டில் 35 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தொடர்ச்சியாக நடந்து வரும் இந்த சம்பவங்களால் அரியலூர் பகுதி பொதுமக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் 2016 ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தல்கள் 17.10.2016 மற்றும் 19.10.2016 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது.
இதற்காக அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு பொதுத் தேர்தல் பார்வையாளாராக ஆர்.லால்வீணாவை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. பொதுத்தேர்தல் பார்வையாளர் பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா மாளிகை அறை எண்.01-ல் தங்கியுள்ளார். பொதுமக்கள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பொதுப்பார்வையாளரை 9436960360 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் எ.சரவணவேல்ராஜ், தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள விரகாலூரில் மக்கள் சேவை இயக்கம், தமிழ்நாடு விவசாய சங்கம், மற்றும் விவசாயிகளின் சார்பில் வறண்டு கிடக்கும் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் சேவை இயக்க மாநில செயலாளர் தங்க சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் மணியன், மாவட்ட துணைத்தலைவர் பிச்சைப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வரப்பிரசாதம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் தங்கமலை, சாமிதுரை மற்றும் சங்கத்தினர், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த அணைக்குடம் கிராமத்தில் வடக்குவெளியிலுள்ள முந்திரிகாட்டில் சுமார் 30 வயதுமிக்க வாலிபர் ஒருவர், அங்குள்ள முந்திரி மரத்தில் சேலையில் தூக்கிலிட்டு உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இந்தநிலையில் அந்த வழியே சென்ற பொதுமக்களுக்கு கடுமையான துர்நாற்றம் வீசியது. இதில் சந்தேகமடைந்த பொதுமக்கள் முந்திரிகாட்டில் சென்று பார்த்தபோது வாலிபரின் பிணத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் தா.பழூர் போலீசுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் ராதாகி ருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்கு பதிந்து, இறந்த வாலிபர் யார் என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அடித்து கொலை செய்தார்களா? என்பது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பன் மகன் அந்தோணி ஜோசப் (வயது 39). இவர் நேற்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி ஆரோக்கிய மேரியை அழைத்துக் கொண்டு ஜெயங்கொண்டம் கோர்ட்டுக்கு வந்துள்ளார்.
பின்னர் மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக கீழக்குடியிருப்பு கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த மினி சரக்கு வேன் மோதியது. இதில் பின்னால் உட்கார்ந்து வந்த ஆரோக்கிய மேரி தூக்கி எறியப்பட்டார். பலத்த காயமடைந்தவரை காப்பாற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
இது குறித்து அந்தோணி ஜோசப் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து மினி சரக்கு வேன் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய கல்லாத்தூர் அண்ணாநகரைச் சேர்ந்த அண்ணாமலை மகன் பழனிசாமி (34) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி அரியலூர் நகராட்சிக்குட்பட்ட செட்டி ஏரி மெயின் வரத்து வாய்க்கால், சித்தேரி வாய்க்கால் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
நகராட்சிக்குட்ப்பட்ட பகுதிகளில் உள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றது. மேலும், மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைப்புகளை தூர்வாரும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது என அரியலூர் ஆணையர் (பொறுப்பு) சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த ஆண்டிமடம் காவலர் குடியிருப்பு அருகே வண்ணான் குட்டை ஏரியில் அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி வி.ஏ.ஓ மணிவண்ணன் ஆண்டிமடம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிந்து இறந்த முதியவரின் உடலை கைப்பற்றி விசாரித்ததில் இறந்தவர் சூரக்குழி கிராமம் வீரவாஞ்சிநகர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் மணி (வயது 70) என்றும், அவருக்கு மனைவி, குழந்தைகள் யாரும் இல்லை.
உறவினர்களின் ஆதரவும் இல்லாததால் ஆண்டி மடம் பகுதிகளில் கிடக்கும் காலி மதுபாட்டில்களை சேகரித்து அதனை விற்று ஜீவனம் செய்து வந்துள்ளார் என்பதும், நேற்று முன்தினம் வண்ணான் குளம் ஏரியின் ஓரத்தில் கிடக்கும் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் போது தவறி ஏரிக்குள் விழுந்து இறந்திருக்கிறார் என்று தெரியவந்தது.
அரியலூர் அருகே டி.எஸ்.பி. திட்டியதால் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். உடலை சாலையில் போட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுச்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் . ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மகன் தனபால் (வயது 23). போலீஸ்காரரான இவர் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் டி.எஸ்.பி. இனிகோதிவ்யனுக்கு டிரைவராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த தனபால், வீட்டின் அறைக்கு சென்று தூங்கினார். இன்று காலை அவர் நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அறைக்கு சென்று பார்த்த போது தூக்குப்போட்ட நிலையில் தனபால் பிணமாக தொங்கினார். இதனால் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனிடையே தனபால் தற்கொலைக்கு டி.எஸ்.பி. இனிகோதிவ்யன்தான் காரணம் என்று குற்றம் சாட்டி, சிதம்பரம்- ஜெயங் கொண்டம் நெடுஞ்சாலையில் தனபால் உடலை போட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் உடையார் பாளையம், மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தனபாலின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.
தனபால் தற்கொலைக்கு காரணமான டி.எஸ்.பி.மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எஸ்.பி. சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை செய்து கொண்ட தனபால், அந்த பகுதியை சேர்ந்த சாராய வியாபாரி ஒருவரிடம் மாமூல் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாமூல் பெறுவதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அந்த சாராய வியாபாரி,டி.எஸ்.பி. இனிகோதிவ்யனிடம் கூறவே, அவர் தனபாலை தகாத வார்த்தைகளால் திட்டி கண்டித்தாராம். மேலும் திருச்சி ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த தனபால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






