என் மலர்tooltip icon

    அரியலூர்

    பெண்ணை திட்டி தாக்கியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி ஜெயங்கொண்டம் கோர்ட் தீர்ப்பளித்தது.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகில் உள்ள சூரக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம் (எ) நெடுஞ்சேரியார் (66). கடந்த 2007-ம் ஆண்டு இவரது வீட்டின் அருகில் வசித்த சந்திரகாசன் மனைவி இந்திராணி (இறந்துவிட்டார்) என்பவரை திட்டி தாக்கியதில் கை ஒடிந்தது.

    இதுகுறித்து இந்திராணி ஆண்டிமடம் போலீசில் புகார் அளித்தார். இவ்வழக்கு தொடர்பாக ஆண்டிமடம் போலீசார் ராஜாராம் மீது ஜெயங்கொண்டம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் மதிவாணன் பெண்ணை திட்டிய ராஜாராமுக்கு 2 ஆண்டு மெய்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

    அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒருமாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    அரியலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சிகிச்சை பலனின்றி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் கோவிந்த புரத்தை சேர்ந்தவர் ராஜா (வயது43). இவர் அவரது நண்பர்கள் கலியன், தண்டபாணி ஆகியோருடன் மகாலிங்கபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் அஜித்குமார் (23) என்பவர் வந்தார்.

    இந்நிலையில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 4 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அரியலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அஜித்குமார் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அஜித்குமார் இறந்தார்.

    இது குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் பகுதியை சுற்றி கடந்த 2013ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் மூலம் அருகில் உள்ள சோழங்குறிச்சி, தேவாமங்கலம், குருவா லப்பர்கோவில், பூவாயி குளம், விழப்பள்ளம் ஆகிய பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு துளையிட்டு ஆயில், வாயு உள்ளதா என பரிசோதனை செய்து பரி சோதனை குழாய்கிணறு அமைத்துள்ளனர்.

    விழப்பள்ளம் மற்றும் சோழங்குறிச்சி பிளாண்டில் கசிவு ஏற்பட்டு ஓ.என்.ஜி.சி நிறுவன தொழில்நுட்ப வல்லுனர்கள் வந்து வாயு கசிவதை சரிசெய்தனர். இப்படி மாறி, மாறி கசிவு ஏற்பட்டு வருகின்றது.

    அரியலூர் மாவட்டம் வறட்சியான மாவட்டம், விவசாயம் பாதிக்கப்பட்ட மாவட்டம், இந்த பகுதியில் திட்டத்தை துவங்கினால் மேலும் பாதிக்ககூடும், சோழர்காலத்தில் வெட்டப்பட்ட சோழகங்கம் என்கின்ற பொன்னேரி, அருகில் உலக புராதன சின்னமான கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த சின்னம் பாதிக்க படகூடாது. விவசாயம் பாதிக்க கூடாது ஆகையால் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள ஓ.என்.ஜி.சி-யின் ஹைட்ரோகார்பன் திட்டத்தை துவங்கவிட மாட்டோம் என தமிழக ஏரிமற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்கத்தலைவர் விசுவநாதன் மற்றும் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்து பிளாண்டை முற்றுகையிட முயன்றனர்.

    அப்போது ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி இனிகோ திவ்யன் தலைமையிலான மீன்சுருட்டி போலீசார் சங்கத்தலைவர் விசுவநாதன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    ஜெயங்கொண்டத்தில் அடிக்கடி சாலையில் நடக்கும் விபத்துகளை தடுக்கும் வகையிலும், சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டத்தில் அடிக்கடி சாலையில் நடக்கும் விபத்துகளை தடுக்கும் வகையிலும், சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலும் ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து செல்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்தை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தொடங்கி வைத்து ஹெல்மெட் அணிவதன் அவசியத்தையும், அணியாமல் செல்வதால் ஏற்படும் உயிரிழப்பு பற்றியும், அனைவரும் அவசியம் சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் பேசினார்.

    ஊர்வலம் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் தொடங்கி திருச்சிரோடு, பஸ் நிலையம், தா.பழூர் ரோடு வழியாக சென்று மீண்டும் நான்கு ரோட்டில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் போக்குவரத்து காவலர்கள் கண்ணன், குமார், முருகையன், ரத்தினவேல் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  
    செந்துறை அருகே விவசாயி வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கீழராயம்புரம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 47) விவசாயி. இவரது மனைவி சுலோச்சனா(43). இவர்களது மகன்கள் பிரகாஷ் (18) , வெற்றிச்செல்வன்.

    நேற்று உலகநாதன் வெளியூரில் படித்து வரும் தனது மகனுக்கு பணம் அனுப்புவதற்காக ஆனந்தாவாடி கிராமத்தில் உள்ள தனியார் வங்கிக்கு சென்று விட்டார் .மனைவி சுலோச்சனா மாடு மேய்க்க சென்றிருந்தார். பின்னர் மாலையில் வீட்டிற்கு வந்த போது முன்பக்க கதவு திறந்து கிடந்தது.

    மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் வரை இருக்கும்.

    இது குறித்து உலகநாதன் இரும்புலிக்குறிச்சி போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் அருகே இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலி டாக்டர் 2 வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 54). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    ரகுபதி மருத்துவ புத்தகத்தை படித்து அதன்படி கிராமத்தில் மருத்துவம் பார்த்து வந்தார். மேலும் மருந்துக்கடையும் வைத்து நடத்தி வந்தார். இவரது மருந்து கடையில் பாளையக்குடி கிராமத்தை சேர்ந்த பிரியா (25, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    பிரியா மீது மோகம் கொண்ட ரகுபதி, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவரை பலவந்தமாக பலாத்காரம் செய்தார். மயக்கம் தெளிந்த பிரியாவிடம், நீ மயக்கமாக இருக்கும் போது உன்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளேன்.

    எனவே என்னை 2-வதாக நீ திருமணம் செய்து கொண்டால் நாம் இருவரும் சந்தோ‌ஷமாக இருப்போம் என ரகுபதி தெரிவித்துள்ளார். ஆனால் பிரியா மறுத்து விட்டார்.

    மேலும் அவருக்கு திருமணம் செய்ய பேசி முடித்து நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. அப்போது ரகுபதி மாப்பிள்ளை வீட்டாரிடமும், மாப்பிள்ளையிடமும் தான் செல்போனில் எடுத்து வைத்திருந்த படத்தை காண்பித்து நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த பிரியா கடந்த 4-9-2015 அன்று ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் செல்வகுமாரி வழக்கு பதிவு செய்து ரகுபதியை தேடி வந்தார். ஆனால் அவர் போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்றிரவு கல்லாத்தூர் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த ரகுபதியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் மீது மானபங்கபடுத்துதல், அவதூறாக பேசுதல், கொலை மிரட்டல், தனக்கு கீழ் வேலை செய்தவரை பலாத்காரம் செய்தல் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான ரகுபதி ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து செந்துறையில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு ஆலைக்கு செந்துறையில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து அங்கு சுண்ணாம்புக்கல் தரம் குறித்து ஆய்வு செய்ய ராட்சத ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணியில் சிமெண்டு ஆலை நிர்வாகம் ஈடுபட்டது.

    இதை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் அங்கு சென்று ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும் செந்துறை பகுதியில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று கூறி கடந்த வாரம் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் செந்துறையில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி கடை அடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி, செந்துறையில் நேற்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மேலும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், செந்துறை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கங்களால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் குடிநீர் பிரச்சினையும் ஏற்படுகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    எனவே செந்துறை பகுதியில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். மேலும் விவசாயிகளிடம் பெற்ற நிலத்தை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். இதை மீறி சுரங்கப்பணி நடந்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
    அரியலூர் மாவட்டத்தில் ஜாமீனில் வெளியே வருவோர், சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
    அரியலூர்:

    தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சீமை கருவேலமரங்கள் வளர்ந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் அதனை அகற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. மேலும் மரம் அகற்றும் பணியை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தர விடப்பட்டது.

    அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சீமை கருவேலமரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சீமைகருவேல மரங்களை பொதுமக்கள் தங்கள் சொந்த செலவிலேயே அகற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இப்பணியை மாவட்ட நீதிபதிகள், உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட வக்கீல்கள் குழுவினரும் ஆய்வு செய்து வருகின்றனர். இருப்பினும் பல்வேறு இடங்களில் இன்னும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படாமல் உள்ளது.

    இந்த நிலையில் அரியலூர் மாவட்ட நீதிபதி ரகுமான் இன்று அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில், அரியலூர் மாவட்டத்தில் குற்றவழக்குகளில் கைதாகி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வருவோர் அனைவரும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். 20 நாட்களுக்குள் 100 சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

    மரங்களை அகற்றிய பிறகு அதற்கான சான்றினை கிராம நிர்வாக அதிகாரிகளிடம் பெற்று கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
    அரியலூர் மாவட்டத்தில் ரே‌ஷன் கடைகளில் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
    அரியலூர்:

    தமிழகம் முழுவதும் ரே‌ஷன் கடைகளில் அரிசி, பருப்பு, மண்எண்ணெய், பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரே‌ஷன் கடைகள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    அதன்படி அரியலூரில் உள்ள 8 ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரெயில் நிலையம் முன்பு உள்ள ரே‌ஷன் கடையில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகரம் முழுவதும் ரே‌ஷன் கடைகள் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 110 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

    செந்துறை தாலுகாவில் உள்ள 68 ரே‌ஷன் கடைகள் முன்பும் தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாம்பாளையத்தில் ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜ் தலைமையிலும், செந்துறையில் ஊராட்சி செயலாளர் காளமேகம் தலைமையிலும் மற்றும் அனைத்து ஊராட்சிகளிலும் அந்தந்த பகுதி ஊராட்சி செயலாளர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    மீன்சுருட்டி பகுதியில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயங்கொண்டத்தில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு வடக்கு ஒன்றிய செயலாளர் தனசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் பொய்யாமொழி, முன்னால் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்துச்சேர்வா மடம், இளையபெருமாள் நல்லூர், கங்கைகொண்ட சோழபுரம் உள்பட பல்வேறு ரே‌ஷன் கடைகள் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் உள்பட 165 பேரை போலீசார் கைது செய்தனர்.
    உடையார்பாளையம்

    உடையார்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் எதிர்புறம் உள்ள ரே‌ஷன் கடை முன்பு தி.மு.க. நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதேபோல் உடையார்பாளையத்தை சுற்றியுள்ள பகுதிகளான கழுமங்கலம், தத்தனூர், கச்சிபெருமாள், சோழங்குறிச்சி, சுத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள ரே‌ஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து ஈடுபட்ட தி.மு.க.வினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்

    ஜெயங்கொண்டத்தில் தி.மு.க. மாநில இணை செயலாளர் சுபாஷ் சந்திரசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 112 பேரும், தா.பழூரில் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 பேரும், ஆண்டிமடம், வரதராஜன்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 159 பேரும், விக்கிரமங்கலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22 பேரும், வி.கைகாட்டியில் 114 பேரும், திருமானூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர் கென்னடி உள்பட 320 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அரியலூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைத்து தி.மு.க. வினர் அனைவரும் அந்தந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
    ஜெயங்கொண்டம் அருகே கூட்டுறவு சங்க செயலாளர் மீது தாக்குதல் நடத்திய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து மீன்சுருட்டி போலீசார் தேடிவருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் ஒன்றியம், மீன்சுருட்டி அருகே உள்ள இளையபெருமாள் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது55). இவர் முத்துச்சேர் வாமடம் கிராமத்திலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக உள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மகன் பரத்துக்கும்(29) மயிலாடுதுறை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சரண்யா லட்சுமி(27) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த சரண்யாலட்சுமியின் சகோதரர் சீனு(எ)சீனிவாசன், தனது நண்பர்கள் 6பேருடன் பரத் வீட்டிற்கு சென்று செல்வராஜிடம் தனது சகோதரியுடன் பிரச்சனை செய்வதாக கூறி திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன் மற்றும் அவருடன் வந்த 6 பேரும் சேர்ந்து செல்வராஜை தாக்கிவிட்டு கொலைமிரட்டல் விடுத்துச் சென்றனர்.

    இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து மீன்சுருட்டி போலீசார் சீனிவாசன் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.
    அரியலூர் மாவட்டம் தா.பழுரில் கோவிலில் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

    தா.பழுர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழுர் கோடாலிகருப்பு கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உண்டியலை உடைத்து மர்மநபர்கள் திருடி சென்றனர்.

    இது குறித்து தா.பழுர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வந்தனர். இதில் கோவிலில் திருடியது கோடங்குடி தெற்கு தெருவை சேர்ந்த ரெங்கசாமி (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    அரியலூர் அருகே குழந்தை பிறந்த நாளில் பங்கேற்க வந்த ஓட்டல் மேலாளர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள இன்னாம்பூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 28). சென்னையில் உள்ள ஓட்டலில் கேட்டரிங் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மீனா (25). இவர்களுக்கு ஒரு வயதில் மிதுனா என்ற பெண் குழந்தை உள்ளது.

    மீனா கடந்த 6 மாதத்திற்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் சத்தியமூர்த்தி தனது மகளை அவரது பெற்றோர் பராமரிப்பில் விட்டு விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் மிதுனாவுக்கு ஒரு வயது ஆகியதையடுத்து இன்று பிறந்தநாள் கொண்டாடப்பட இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக சத்தியமூர்த்தி நேற்றிரவு சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் இன்னாம்பூருக்கு புறப்பட்டார்.

    இன்று அதிகாலை 1 மணியளவில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி தஞ்சை- சென்னை சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பல்க்கில் பெட்ரோல் போட்டு விட்டு, சாலையில் ஏற முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் மீது மோதிவிட்டு சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் அரசு பஸ் ஒன்றின் உடைந்த பாகம் கிடந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் மோதியது அரசு பஸ்சாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    குழந்தை பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வந்த போது சத்தியமூர்த்தி விபத்தில் பலியான சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்-தந்தையை இழந்து நிற்கும் குழந்தை மிதுனாவை பார்த்து உறவினர்கள் கண்ணீர் வடித்தனர்.

    ×