என் மலர்
செய்திகள்

அரியலூர் அருகே விபத்து: ஓட்டல் மேலாளர் நசுங்கி பலி
ஜெயங்கொண்டம்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள இன்னாம்பூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 28). சென்னையில் உள்ள ஓட்டலில் கேட்டரிங் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மீனா (25). இவர்களுக்கு ஒரு வயதில் மிதுனா என்ற பெண் குழந்தை உள்ளது.
மீனா கடந்த 6 மாதத்திற்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் சத்தியமூர்த்தி தனது மகளை அவரது பெற்றோர் பராமரிப்பில் விட்டு விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் மிதுனாவுக்கு ஒரு வயது ஆகியதையடுத்து இன்று பிறந்தநாள் கொண்டாடப்பட இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக சத்தியமூர்த்தி நேற்றிரவு சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் இன்னாம்பூருக்கு புறப்பட்டார்.
இன்று அதிகாலை 1 மணியளவில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி தஞ்சை- சென்னை சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பல்க்கில் பெட்ரோல் போட்டு விட்டு, சாலையில் ஏற முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் மீது மோதிவிட்டு சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் அரசு பஸ் ஒன்றின் உடைந்த பாகம் கிடந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் மோதியது அரசு பஸ்சாக இருக்கலாம் என்று தெரிகிறது.
குழந்தை பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வந்த போது சத்தியமூர்த்தி விபத்தில் பலியான சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்-தந்தையை இழந்து நிற்கும் குழந்தை மிதுனாவை பார்த்து உறவினர்கள் கண்ணீர் வடித்தனர்.