என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் ஊராட்சி தெத்தேரி கிராமம் வெள்ளாற்றில் அனுமதியின்றி டிப்பர் லாரிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளப்படுவதாக தளவாய் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மணல் ஏற்றிய 2 டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

    இதனிடையே அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுரேஷ், அவரது சகோதரர் ரமேஷ் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் போலீஸ் நிலையம் சென்று உதவி ஆய்வாளர் கமலஹாசனிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பொக்லைன் மற்றும் லாரிகளையும் எடுத்து சென்றனர்.

    இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கமலஹாசன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கருணாநிதி விசாரணை நடத்தி, அ.தி. மு.க. ஒன்றிய செயலாளர் சுரேஷ், அவரது சகோதரர் ரமேஷ் மற்றும் சிலர் மீது கொலை மிரட்டல், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், சுரங்கம் மற்றும் கனிமவள பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தார்.

    இதற்கிடையே அ.தி.முக. ஒன்றிய செயலாளர் மீது புகார் கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் கமலஹாசனை தூத்தூர் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து அரியலூர் மாவட்ட எஸ்.பி. அணில்குமார் கிரி உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    வி.கைகாட்டி பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்த கோவிலில் பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களின் மூலஸ்தான விமானம் திருப்பணிகள் நடைபெற்று நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

    இதையொட்டி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து காலை 9.30 மணியளவில் கலசம் புறப்பாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாணவேடிக்கை, நாதஸ்வர இசையுடன் சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்திருந்த கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர்.

    பின்னர் விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் மூலஸ்தான விமான கலசத்திற்கு முதலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க பாலமுருகன் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    இதில் வி.கைகாட்டி, தேளூர், நாகமங்கலம், ரெட்டிப்பாளையம், காட்டுபிரிங்கியம், ஓரத்தூர்,  விளாங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ஜெயங்கொண்டம் அருகே கள்ளக்காதலை தட்டிக் கேட்டதால் திருமணமான 5 மாதத்தில் கர்ப்பிணி மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் ஆனந்தராஜ் (வயது 30). இவர் ஜெயங்கொண்டத்தில் ஒரு தனியார் செல்போன் சிம்கார்டு விற்பனை மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கோயிலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகள் ஆனந்தி (22) என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. ஆனந்தி ஆசிரியை பயிற்சி படித்து விட்டு வேலைக்காக காத்திருந்தார்.

    இந்த நிலையில் ஆனந்தி கர்ப்பம் அடைந்தார். 3 மாத கர்ப்பிணியான அவருக்கும், கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பெற்றோரிடம் கூறி ஆனந்தி வேதனைப்பட்டுள்ளார்.

    நேற்று இரவு ஆனந்தராஜ் குடும்பத்தினர் சிதம்பரத்தில் உள்ள ஆனந்தியின் பெற்றோருக்கு போன் செய்து ஆனந்தி தற்கொலை செய்து விட்டதாக கூறிவிட்டு போனை துண்டித்து விட்டனர்.

    உடனே ஆனந்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சூரியமணல் கிராமத்திற்கு வந்தனர். ஆனந்தியின் உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது ஆனந்தியின் கழுத்தில் காயம் இருந்ததால் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசில் ஆனந்தியின் தந்தை சீனிவாசன் ஆனந்தராஜூக்கு திருமணத்திற்கு முன்பே வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனால் தனது மகளுக்கும், ஆனந்தரா ஜூக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாவும் அதில் கூறியுள்ளார்.

    மேலும் தனது மகளை ஆனந்தராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் அடித்து கொலை செய்திருக்கலாம் என்றும் அந்த புகாரில் கூறியிருந்தார். இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கணவர் ஆனந்தராஜ் மற்றும் அவரது பெற்றோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கர்ப்பிணிப் பெண் திருமணமான 5 மாதத்தில் மர்மமாக இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கினார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கினார். கூட்டத்தில் கலெக்டர்  தெரிவித்ததாவது:-

    அரியலூர் மாவட்ட த்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு வகையான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.  இதில் குறிப்பாக இரண்டு கால்கள் செயல்கள் இழந்த மற்றும் முற்றிலும் நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் 22 நபர்களுக்கு ரூ.12 லட்சத்து 91 ஆயிரத்து 180 மதிப்பில் வழங்கப்பட்டது.

    மேலும் லேன்கோ பவுன் டேஷன் கும்பகோணம் மூலம் (கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதி) நிதித்திட்டத்தின் கீழ் 70 நபர்களுக்கு செயற்கை அவையங்களும் (கால்கள்), 77 நபர்களுக்கு ஊன்று கோல்களும், 8 நபர்களுக்கு முடநீக்கு சாதனைங்களும் என ஆக மொத்தம் 155 நபர்களுக்கு ரூ.5 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, மாவட்டத்திலுள்ள தகுதியான மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை பெற மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் விண்ணப்பித்து பயன்பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இம் தியாஸ் முகமது, இளநிலை மறு வாழ்வு அலுவலர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
    அரியலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பழைய குடும்ப அட்டையை மாற்றி புதிய குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) நாளை மறுநாள் (1.4.2017 தேதி) முதல் வழங்கப்படவுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பழைய குடும்ப அட்டையை மாற்றி புதிய குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) நாளை மறுநாள் (1.4.2017 தேதி) முதல் வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக நியாயவிலைக் கடையில் அலைபேசி எண்ணை பதிவு செய்த குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

    அவ்வாறு பதிவு செய்யப்பட்ட குடும்ப அட்டைதாரரின் அலைபேசி எண்ணிற்கு `ஸ்மார்ட் கார்டு தயாராக உள்ளது' குறித்து குறுந் தகவல் மூலம் தெரிவிக்கப்படும்.

    எனவே, அலைபேசி எண்ணை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள், குடும்ப உறுப்பினர்களில் ஒருவரது அலைபேசி எண்ணை தங்கள் பகுதிக்கான நியாயவிலைக் கடை விற்பனையாளிடம் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    அரியலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பழைய குடும்ப அட்டையை மாற்றி புதிய குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) நாளை மறுநாள் (1.4.2017 தேதி) முதல் வழங்கப்படவுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பழைய குடும்ப அட்டையை மாற்றி புதிய குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) நாளை மறுநாள் (1.4.2017 தேதி) முதல் வழங்கப்படவுள்ளது.

    முதற்கட்டமாக நியாயவிலைக் கடையில் அலைபேசி எண்ணை பதிவு செய்த குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட குடும்ப அட்டைதாரரின் அலைபேசி எண்ணிற்கு ‘ஸ்மார்ட் கார்டு தயாராக உள்ளது’ குறித்து குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும்.

    எனவே, அலைபேசி எண்ணை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள், குடும்ப உறுப்பினர்களில் ஒருவரது அலைபேசி எண்ணை தங்கள் பகுதிக்கான நியாயவிலைக் கடை விற்பனையாளிடம் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் 100 நாள் வேலையை முழுமையாக வழங்கவும், நிலுவையிலுள்ள சம்பள தொகையை உடனடியாக வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருமானூர்:

    திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் 100 நாள் வேலையை முழுமையாக வழங்கவும், நிலுவையிலுள்ள சம்பள தொகையை உடனடியாக வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் ஏலாக்குறிச்சி ஊராட்சி வாண்டராயன் கட்டளை பொதுமக்கள் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு வாண்டராயன் கட்டளை கிராமத்தில் 100 நாள் வேலையை 20 நாட்கள் தான் தருவதாகவும், நிலுவையிலுள்ள சம்பளத்தை தர கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னன், மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் ஸ்பீதா ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இது குறித்து உரிய அதிகாரிகளிடம் பேசுவதாக கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கட்கிழமை "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்''கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர்  அலுவலகக் கூட்டரங்கில், திங்கட்கிழமை "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்''கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 688 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை திருமதி.லோகேஸ்வரி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்)  பாலாஜி, துணை ஆட்சியர் (நிலம்)  சீனிவாசன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    ஜெயங்கொண்டத்தில் போலீஸ்-பொதுமக்கள் நட்புறவு வளர்ப்பு சங்கத்தின் சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டத்தில் போலீஸ்-பொதுமக்கள் நட்புறவு வளர்ப்பு சங்கத்தின் சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன் தலைமை தாங்கினார்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். போலீஸ்-பொதுமக்கள் நட்புறவு சங்க மாநில பொது செயலாளர் முகமது ரபீக் வரவேற்றார். போட்டியினை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இறகுப்பந்து, 200 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

    இந்த போட்டிகளில் அனை வரையும் உற்சாகப்படுத்துவதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டார். போட்டிகளில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், போலீஸ்- பொதுமக்கள் நட்புறவு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளுக்கு பாலா முருகன், விஜய ஆனந்தன், அசோக் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். தொடர்ந்து மாலையில் நடைபெற்ற விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    முடிவில் மாசிலாமணி நன்றி கூறினார்.
    ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பூவாய்குளம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 7 பேர் படுகாயமடைந்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பூவாய்குளம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி காலை 10 மணிக்கு துவங்கி மாலை 3 மணிவரை நடைபெற்றது.

    இதில் கீழப்பழூர், லால்குடி, தா.பழூர், ஜெயங் கொண்டம், சிலுவைப்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து 280 காளைகளும் 150 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். 

    இதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 7 பேர் படுகாயமடைந்தனர்.  இந்த ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆண், பெண், சிறுவர்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    அரியலூர் அருகே மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆதிகுடிகாடு கிராமத்தை சேர்ந்தவர்  தனபால் (வயது 31). இவர் தனது வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வந்தார். நேற்றிரவு  வியாபாரம் முடிந்ததும் கடையை  பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

    இந்நிலையில் இரவு 1 மணி அளவில் தனபால் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த தனபால் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே செந்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு அதிகாரி பழனிதுரை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் புகழேந்தி, செல்லதுரை, பால்துரை மற்றும் காமராஜ் உள்ளிட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் வரை போராடி தீயை அணைத்தனர்.

    இருப்பினும் தீ விபத்தில் கடையில் இருந்த குளிர்பானங்கள், அரிசி மூட்டைகள், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து  செந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

    மேலும்  தனபால் கடையில் சட்டவிரோதமாக பெட்ரோல் விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதன்மூலம் தீ விபத்து ஏற்பட்டதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் அருகே சமையல் செய்து வைக்காததால் மனைவியை கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை காலனி தெருவை சேர்ந்தவர் சுப்ரவேலு (வயது 42). இவரது மனைவி பழனியம்மாள் (40). இவர்களுக்கு தினேஷ் குமார் என்ற மகனும், கலைவாணி என்ற மகளும் உள்ளனர்.

    தினேஷ்குமார், ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். கலைவாணி திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். கேரளாவில் கூலி வேலை செய்து வந்த சுப்ர வேலு, அவ்வப்போது விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். நேற்று காலை சுப்ரவேலு வெளியில் சென்று விட்டார். பழனியம்மாள், தவசு குழி பகுதியில் உள்ள வயலுக்கு கரும்பு வெட்ட சென்றார். அப்போது வீட்டில் சமையல் செய்து வைக்காமல் சென்றார். இதனிடையே மதியம் வீட்டிற்கு வந்த சுப்ரவேலு, மனைவி சமையல் செய்து வைக்காமல் சென்றதால் ஆத்திரமடைந்தார்.

    இதையடுத்து தவசுக்குழிக்கு சென்ற அவர், அங்கு வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த பழனியம்மாளிடம் எப்படி சமையல் செய்து வைக்காமல் செல்வாய் என்று தட்டிக்கேட்டுள்ளார். மேலும் உடனே சமையல் செய்ய வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

    ஆனால் பழனியம்மாள் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வருகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுப்ரவேலு, அங்கு கிடந்த தென்னை மட்டையை எடுத்து பழனியம்மாள் தலையில் பின்புறம் தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

    உடனே அவரை பொதுமக்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பழனியம்மாள் இறந்தார்.

    இது குறித்து தினேஷ் குமார் ஆண்டிமடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சுப்ரவேலுவை வலைவீசி தேடி வருகின்றனர். மனைவியை கணவனே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×