என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் அருகே காதல் திருமணம் செய்த கர்ப்பிணி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்தவர் சர்மிளா (வயது 26). இவரும் அப்பகுதியை சேர்ந்த கலைராஜ் என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் சர்மிளாவை அவரது பெற்றோர் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அவருடன் 3 வருடம் வரை வாழ்ந்து வந்தார். இதன் மூலம் ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில் சர்மிளா கணவரை பிரிந்து மீண்டும் தனது காதலன் கலைராஜூடன் சென்னையில் வாழ்ந்து வந்தார். அவர் மூலம் தற்போது சர்மிளா 7மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.

    இதனிடையே அவர், தனது குழந்தையை அழைத்து செல்வதற்காக செந்துறை வந்தார். ஆனால் குழந்தையை அழைத்து செல்லக்கூடாது என்று சர்மிளாவுக்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அவர் செந்துறை பொன்பரப்பியில் உளள அவரது உறவினர் வீட்டில் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். காதலனை திருமணம் செய்ததால் சர்மிளாவை அவரது பெற்றோரே கவுரவ கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இது குறித்து செந்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.


    செந்துறை அருகே சாலையை கடந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள மருவத்தூர் காலனி தெருவை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி ஸ்ரீரங்கம் (வயது 68). ஆடு மேய்ப்பவர்.
    நேற்று வழக்கம் போல் பக்கத்து ஊரான விழுப்பனங்குறிச்சியில் ஆடு மேய்த்து விட்டு வீடு திரும்பினார். விழுப்பனங்குறிச்சி பஸ் நிலையம் அருகில் ரோட்டை கடக்கும் போது  எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில்  சம்பவ இடத்திலேயே ஸ்ரீரங்கம் பலியானார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் செந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்ற போலீசார் ஸ்ரீரங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு  செந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்பு இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மோட்டார் சைக்கிளில் பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த சங்கர் (32) மற்றும் அவரது நண்பர்கள் மணிகண்டன், செந்தில் ஆகிய மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில்  குடிப்பதற்கு மது வாங்கி வந்த போது விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக சங்கரை போலீசார்  கைது செய்தனர். தப்பி சென்ற  இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
    அரியலூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் வாலிபர் பலியானார். 27 பேர் காயமடைந்தனர்.

    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கீழப்பழுவூரில் ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. வாடிவாசலில் இருந்து பாய்ந்து வந்த காளைகளை 150-க்கும் மேற்பட்ட வீரர்கள் அடக்கினர்.

    ஜல்லிக்கட்டில் பிடி படாத காளையின் உரிமையாளருக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் 27 பேர் காயமடைந்தனர்.

    இதில் தோகுடி கிராமத்தைச் சேர்ந்த வேளாங்கண்ணி (வயது 29) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வேளாங்கண்ணி இறந்தார்.

    ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு முறைகேடுகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    செந்துறை:

    ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு முறைகேடுகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் செந்துறை ஊராட்சியில் ஏலம் விடப்பட்ட வாரச்சந்தை ஏலத்தை உடனடியாக ரத்து செய்திடவும், பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, கழிவறை கட்டகோரியும், 100 நாள் வேலையை பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்கிடவும்

    100 பணியாளர்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிடக் கோரியும், பேருந்து நிலையத்திற்கு அருகேயுள்ள சித்தேரியை சுற்றி கம்பி வேலை அமைத்து பாதுகாத்திட கோரியும், வாரச்சந்தைக்கு தனியாக இடம் ஒதுக்கி கடைகள் கட்டி முறையாக குடிநீர், மின்விளக்கு, கழிவறை போன் வசதிகளை செய்து தரகோரியும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில துணை செயலாளர் கருப்புசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் வீரவளவன், தெற்கு தலித் வெற்றி, மாவட்ட அமைப்பாளர் பாலசிங்கம்,சேகர், இராஜேந்திரன், தீரவளவன், மற்றும்

    200க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முக்கிய பிரமுகர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    அரியலூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் விவசாயிகளுக்கு நீரில் கரையும் உரங்களை கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கினார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கட்கிழமை “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1472 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் தன்விருப்ப நிதியிலிருந்து, அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் ரமேஷிடம் அவசர சிகிச்சை பகுதி மற்றும் 500 வார்டு பகுதிக்கு வெள்ளை சுண்ணாம்பு பூசுவதற்கு ரூ.25,000க்கான காசோலையினையும், அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மைத் துறையில் நுண்ணீர் பாசன திட்டம் 2016-17ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அரியலூர் வட்டாரத்திலுள்ள அருங்கால் கிராமத்தில் 17.03.2017 அன்று சொட்டுநீர் பாசன முறையில் கரும்பு மற்றும் மக்காசோளம் சாகுபடி செய்துள்ள விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த பொழுது, விவசாயிகள் நீரில் கரையும் உரங்கள் வழங்க கோரிக்கை விடுத்தனர். அதனைத்தொடர்ந்து 16 விவசாயிகளுக்கு ரூ.24,640 மதிப்பில் நீரில் கரையும் உரங்களையும், இடையத்தாங்குடி, வேலயுதம், என்பவரது வயலின் தீவன மக்காசோளம் கருகியதால் இழப்பீட்டு தொகையாக ரூ.5,000 க்கான காசோலையினையும், மாவட்ட ஆதிதிராவிடர் நல துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.5000 வீதம் ரூ.30,000 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் 11 பயனாளிகளுக்கு தலா ரூ.5000 வீதம் ரூ.55,000 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களையும் மாவட்ட கலெக்டர் சரவண வேல்ராஜ் வழங்கினார்.

    மேலும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சுயவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு தேசிய மய மாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் 20 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலையினையும் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கினார்.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) பாலாஜி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஹேமலதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரூபன்தாஸ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இம்தியாஸ்முகமது, இளநிலை மறுவாழ்வு அலுவலர் சீனிவாசன், வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    அரியலூர் எஸ்.ஆர்.நகரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதிதாக கட்டப்பட்ட ‘பார்’ கட்டிடம் மர்மநபர்களால் இடிக்கப்பட்டது.
    தாமரைக்குளம்:

    மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அரியலூரில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. அதன்படி அம்மாகுளத்தில் இருந்த டாஸ்மாக் கடையும் அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக அய்யப்பன் ஏரிக்கு அருகில் எஸ்.ஆர்.நகரில் புதிதாக கடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டிட பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

    மேலும் எஸ்.ஆர்.நகரில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடமும் மனு கொடுக்கப்பட்டது. இருப்பினும் கடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. அதன் அருகே ‘பார்’ அமைக்கும் பணிகளும் நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புதிதாக கட்டப்பட்ட பார் கட்டிடத்தை மர்மநபர்கள் இடித்து தரைமட்டமாக்கினர். இதுகுறித்து அரியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் எஸ்.ஆர்.நகரில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மற்றும் அம்மாகுளம், ரெங்கசமுத்திரம் பொதுமக்கள் அரியலூர்-தஞ்சை சாலை அம்மாக்குளம் பிரிவு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  
    ஜெயங்கொண்டம் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம்  ஜெயங்கொண்டம் அருகே உள்ள  சூரியமணல் கிராமம் ஆர்.எஸ்.பதி  தோப்பில் முதியவர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக   ஜெயங்கொண்டம் போலீசாருக்கு  தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.அப்போது அங்கு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.  அவரது காலில் காயம் இருந்தது.

    இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த முதியவரின் பெயர், ஊர் விவரம் தெரியவில்லை. எப்படி இறந்தார் என்றும் தெரியவில்லை. காலில் காயம் உள்ளதால் யாராவது மர்ம நபர்கள் அடித்துக்கொன்று ஆர்.எஸ்.பதி தோப்பில் தூக்கில் தொங்க விட்டு சென்றனரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம் பகுதியில் டாஸ்மாக் கடை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜெயங்கொண்டம்:

    உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை அகற்றகோரி வந்த உத்தரவினால் பல்வேறு இடங்களில் பெரும்பாலான கடைகள் அகற்றப்பட்டன. அவற்றை மாற்று இடங்களில் திறப்பதற்காக அதிகாரிகள் இடங்கள் தேர்வு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஜெயங்கொண்டம்-திருச்சி சாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே இருந்த கடை அருகில் உள்ள என்.ஏ.ஜி. காலனியில் மாற்றுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் கடை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

    கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்த ஒரு கடையை மாற்றி நெல்லித்தோப்பு - கைலாசபுரம் கிராமத்தின் மத்தியில் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது. அதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் இந்த கடையை அகற்றாவிட்டால் கடை முன்பாக தற்கொலை செய்துகொள்வோம் என ஆவேசமடைந்தனர்.

    ஓலையூரில் காலனி தெரு அருகே தற்பொழுது ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் குடிமகன்கள் குடித்துவிட்டு ஆங்காங்கே அலங்கோலமாக கீழே விழுந்து கிடப்பதும், வழியில் செல்வோர்களிடம் வம்பு சண்டை இழுப்பதுமாக உள்ளதால் அக்கடையினை அகற்றக்கோரி நேற்று காலை முதல் இரவு 8 மணிவரை தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டம் ஒருபுறம் நடந்த நிலையிலும், போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் வியாபாரம் ஒருபக்கம் நடைபெற்று வந்தது. அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால் அடுத்த நடவடிக்கை எடுப்பது என அப்பகுதி மக்கள் கலந்தாலோசித்து வருகின்றனர்.

    இதே போல் தா.பழுர் அருகே கோடாலி கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் அணைக்கரை- சிலால் பிரிவு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அம்பேத்கர் சிலை மீது லாரி மோதியதால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலை அருகில் அண்ணா, பெரியார், அம்பேத்கர், எம்.ஜி.ஆர். ஆகியோரின் சிலைகள் நிறுவப்பட்டு, அரசியல் கட்சியினர் சார்பில் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் அரியலூரில் இருந்து கும்பகோணம் நோக்கி நிலக்கரி எடுத்து செல்லும் சரக்கு லாரி ஒன்று நேற்று காலை தா.பழூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ஜெயங்கொண்டம்–கும்பகோணம் சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை மீது மோதியது. இதில் அம்பேத்கர் சிலை சாய்ந்து, அடிப்பாக தூண்கள் சேதமடைந்தது. அப்போது அருகில் இருந்த விளம்பர பதாகை மீது அம்பேத்கர் சிலை சாய்ந்ததால் சிலைக்கு சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

    இதனையறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பா.ம.க.வினர் சிலை கீழே விழாதபடி சரிசெய்தனர். மேலும் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அம்பேத்கர் தெரு பொதுமக்கள் இணைந்து, மதனத்தூர் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சிலையை சேதப்படுத்திய லாரி உரிமையாளரிடம் பேசி, சிலையை புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் மதனத்தூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே வளைவில் சென்ற சரக்கு லாரி ஒன்று எம்.ஜி.ஆர். சிலை மீது மோதி அதன் தூண்கள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
    ஆதி திராவிட விவசாயிகள் துரித மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என அரியலூர் கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    தாட்கோ மூலம் ஆதிதிராவிட விவசாயிகளுக்காக செயல்படுத்தப்படும் துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பதாரர் ஆதிதிராவிட விவசாயியாக இருக்கவேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். நிலம் விண்ணப்பதாரருக்குச் சொந்தமாக இருப்பதுடன் அவரது பெயரில் நிலப்பட்டா இருக்கவேண்டும். மேற்கண்ட நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டிருக்கவேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்,

    மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் இணையதள முகவரியில் விண்ணப்பித்தினை பதிவு செய்யவேண்டும். பதிவு செய்யும்போது விண்ணப்பதாரர் பற்றிய விவரங்களுடன் சாதிச்சான்று, குடும்ப அட்டை, இருப்பிட சான்று, குடும்ப ஆண்டு வருமானச்சான்று, கல்வித்தகுதி மற்றும் வயதிற்கான ஆதார சான்றிற்கு பள்ளி மாற்று சான்று, மதிப்பெண் சான்று, வாக்காளர் அட்டை, பான் கார்டு, ஆதார் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை அதற்கான இடத்தில் குறிப்பிட்டு விண்ணப்பதாரருக்குச் சொந்தமாக இருக்கும் நிலப்பட்டா மற்றும் சிட்டா, அடங்கல் நகல் "அ" பதிவேடு நகல், நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டதற்கான நிலத்தின் வரைபடம், சர்வே எண், மின் வாரியத்தில் பதிவு செய்த இரசீது நகல் மற்றும் புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும்.

    இணையதளம் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைபடுபவர்களின் வசதிக்காக அரியலூர் தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ரூ.20 செலுத்தி விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் சரவணவேல்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
    சோனியா காந்தியை விமர்சனம் செய்த எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜெயங்கொண்டம்:

    தமிழக விவசாயிகள், மீனவர்கள் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்றாமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசை கண்டித்து ஜெயங்கொண்டம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்திசிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செங்கமுத்து தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் சீனி பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தனஞ்செயன் துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், சோனியா காந்தியை விமர்சனம் செய்த எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தியும், கச்சைத்தீவை மீட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டு விவசாயத்தை பாதுகாத்திடக்கோரியும், மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் ஐ.என். டி.யு.சி. மாவட்ட தலைவர் தமிழ்மணி, மாவட்ட செயலாளர் பிச்சை பிள்ளை, உத்திராபதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். பரமசிவம், ராஜலிங்கம், ஆறுமுகம், அருளானந்தம் உட்பட 50-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட இளைஞரணி தலைவர் வில்சன் வரவேற்று பேசினார். முடிவில் நகர பொறுப்பு செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.

    அரியலூர் அருகே செக் மோசடி வழக்கில் அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே கீழப்பழுரை சேர்ந்தவர் சக்திவேல், இவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரிடம் கீழப்பழுர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், அ.தி.மு.க. பிரமுகருமான அரிச்சந்திரன் குடும்ப செலவிற்காக சுமார் 4 லட்சம் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது.

    பின்னர், வாங்கியகடனை திருப்பி தருமாறு  சக்திவேல் அரிச்சந்திரனிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் அரியலூர் ஸ்டேட் வங்கி காசோலையை வழங்கியுள்ளார். பின்னர், சக்திவேல் காசோலையுடன் வங்கிக்கு சென்று, அவரது கணக்கில் போட்ட போது கணக்கில் பணமில்லாததால் செக் திரும்ப வந்துவிட்டது.

    இது குறித்து சக்திவேல் 2015ம் ஆண்டு அரியலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாலெட்சுமி  செக் மோசடி செய்ததாக அரிச்சந்திரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 2 மாதத்திற்குள் சக்திவேலிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க வேண்டுமெனவும் தீர்ப்பு அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    ×