என் மலர்
அரியலூர்
செந்துறை:
செந்துறை வட்டாட்சியர் அலுவலக கூட்ட மன்றத்தில் செந்துறை வருவாய் கிராம உதவியாளர் சங்க கூட்டம், மற்றும் நிர்வாகிகள் தேர்வு வட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் காமராசு, வட்டச் செயலாளர் ராயர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட துணைத் தலைவர் பைரவன் சிறப்புரையாற்றினார்.
காலியாக இருந்த தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் பதவிக்கு வெற்றிவேல் தேர்வு செய்யப்பட்டார். மேலும் இன்று நடைபெறும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அனைத்து துறை வருவாய் சங்கம் நடத்தும் காலவரையற்ற வேலை நிறுத் தத்தில் முழுமையாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செந்துறை வட்டத்தை சேர்ந்த வருவாய் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பரம சிவம் வரவேற்றார்.
முடிவில் வட்ட துணை செயலாளர் காமதேவன் நன்றி கூறினார்.
ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் திட்டத்தின் கீழ் ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் ரோட்டில் அமைந்துள்ள வாரச்சந்தையின் கிழக்கு பகுதியில் இடத்தை தேர்வு செய்து ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பில் புதிதாக நகராட்சி அலுவலக கட்டிடம் கட்ட கட்டுமான பணிக்கான பூமிபூஜை கடந்த 21-ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பணிகள் நடந்து வந்தன.
இந்த நிலையில் நேற்று வாரச்சந்தை என்பதால் வியாபாரிகள் கடைகள் போட வந்தபோது, 300 வியாபாரிகளுக்கு இடம் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள், அங்கு நகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வேறு இடத்தை அப்போது வியாபாரிகள் கூறுகையில், நாங்கள் 40 ஆண்டு காலமாக சந்தையை இதே இடத்தில் தான் நடத்தி வருகிறோம். பொதுமக்களுக்கு இதுதான் மையமாகவும், வசதியான இடமாகவும் இருக்கிறது. நகராட்சி அலுவலகம் கட்ட நகரில் சின்னவளையம், வேலாயுதநகர், மகிமைபுரம், கீழக்குடியிருப்பு, மேலக்குடியிருப்பு, மலங்கன் குடியிருப்பு, கரடிகுளம் போன்ற இடங்களில் ஒன்றை தேர்வு செய்து கட்டிக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் சந்தையை அதுமாதிரியான இடத்தில் வைத்தால் மக்களால் அவ்வளவு தூரம் வர இயலாது. ஆகவே மாவட்ட நிர்வாகமும், நகராட்சி ஆணையரும் இதுதொடர்பாக நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும். தற்போது புதிய கட்டிட கட்டுமான பணியை நிறுத்த வேண்டும். மேலும் நகராட்சி அலுவலகத்துக்கு வேறு இடத்தை தேர்வு செய்து நகராட்சி நிர்வாகத்தினர் கட்டிடம் கட்ட வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, நகராட்சி பொறியாளர் புகழேந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சந்தையில் கடை வைக்க இடம் இல்லாத வியாபாரிகளுக்கு அங்கேயே வெளியில் வேறு இடத்தை தேர்வுசெய்து கொடுப்பதாகவும், அதுவரை கட்டுமான பணியை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட "விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்'' வருகிற வெள்ளிக்கிழமை (28.04.2017) அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து பயனடையலாம்.
என மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பனை மரங்களில் இருந்து பதநீர் இறக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்து தங்கிக்கொண்டு பதநீர் இறக்கி விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருமானூர் பகுதியில் சிலர் பதநீர் இறக்குவதாக கூறி தடை செய்யப்பட்ட கள் இறக்கி அதில் அதிக அளவு போதை மருந்து பவுடர் கலந்து விற்பனை செய்வதாக அரியலூர் எஸ்.பி. அனில்குமார் கிரிக்கு புகார்கள் வந்தது.
இது குறித்து மது விலக்கு போலீசாருக்கு உத்தர விட்டார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் அதிக அளவு போதை பொருள் கலந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 13 பேர் கைது செய்தனர். இச்சம்பவத்தையடுத்து, அரியலூர் மாவட்டம், முழுவதும் பனை மரங்களில் இருந்து பதநீர் இறக்குவதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
தடையை மீறி ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கொம்மேடு மற்றும் வடவீக்கம் பகுதிகளில் கள் இறக்கி விற்பனை செய்வதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின்பேரில் எஸ்.ஐ. சுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்தபோது அங்குகள் இறக்கி விற்பனை செய்து கொண்டிருந்த மயிலாடுதுறை மண்ணிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் மகன் மகாதேவன் (45), அதேபோன்று வட வீக்கத்தில் விற்பனை செய்துகொண்டிருந்த விருது நகர் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் அன்பு (40) இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 60 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.
போராட்டத்திற்கு டாக்டர்கள் சங்க தலைவர் லட்சுமிதரன் தலைமை தாங்கினார். டாக்டர் சங்க தலைவர் செல்வமணி போராட்டத்தை தொடங்கி வைத்தார். சங்க செயலாளர் மதியழகன், தா.பழூர் வட்டார மருத்துவ அலுவலர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில், தமிழ்நாடு அரசு மருத்துவ பட்ட மேற்படிப்பில், அரசு 50 சதவீத இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற ஆணையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதை தமிழக அரசு மீண்டும் வழங்க வேண்டும் என்றும், 7–வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டியும், மத்திய அரசில் பணிபுரியும் டாக்டர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக்கோரியும், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் மருத்துவ அலுவலர் சங்க மாவட்ட தலைவர் டாக்டர் அருண் பிரசன்னா, டாக்டர்கள் ரவிச்சந்திரன், மோகன், செந்தில் அனுஷயா, உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களில் பணிபுரியும் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வரதராஜன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கண்ணன் நன்றி கூறினார்.
தமிழகத்தில் பனை மரங்களில் இருந்துகள் இறக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு இடங்களில் தடையை மீறி கள் இறக்கப்பட்டு வருகிறது. அதனை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பனை மரங்களில் இருந்து பதநீர் இறக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி தொழிலாளர்கள் பலர் பதநீர் இறக்கி விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் திருமானூர் பகுதியில் சிலர் தடை செய்யப்பட்ட கள் இறக்கி, அதில் அதிக அளவு போதை மருந்து பவுடர் கலந்து விற்பனை செய்வதாக அரியலூர் மாவட்ட மது விலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு அனுமதியின்றி கள் இறக்கப்பட்டு, அதில் அதிக அளவு போதை மருந்து கலந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல் மாவட்டத்திற்குட்பட்ட ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்பட பல்வேறு இடங்களிலும் போதை மருந்து கலந்த கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக ஓலையூர் பகுதியில் கள் விற்பனை செய்த திருவண்ணாமலையை சேர்ந்த ஜெயராமன் (வயது 45), பெரியவளையம் கிராமத்தில் விற்பனை செய்த ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரை சேர்ந்த மைனர் (50) மற்றும்பெரியதத்தூரில் விற்பனை செய்த பாண்டியன்(36) உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர்களிடமிருந்து போதை மருந்து கலந்த 30 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து அரியலூர் மாவட்டம் முழுவதும் பனை மரங்களில் இருந்து பதநீர் உள்பட பல்வேறு பொருட்களை எடுப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால் தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
அரியலூர் மாவட்டம், வெங்கட்ரமணபுரத்தை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் சக்திவேல் (வயது 24). கூலி தொழிலாளி.
இந்நிலையில் சக்திவேல் நேற்று மோட்டார் சைக்கிளில் பொய்யாத நல்லூருக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது வெங்கட்ரமண புரத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிரே சிமெண்ட் ஏற்றுவதற்காக அரியலூரில் இருந்து லாரி வந்து கொண்டிருந்தது.
திடீரென லாரியும், பைக்கும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து அங்கு விரைந்து வந்த நெரிச்சி கோறை போலீசார் சக்தி வேலின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து லாரி டிரைவர் நாராயணசாமி (36) என்பவரை கைது செய்தனர்.
அரியலூர்:
அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்லங்குறிச்சி ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியை ஆய்வு செய்து, விடுதியிலுள்ள கட்டிடத்தின் மேற்கூரையில் ஏற்பட்டுள்ள பழுது மற்றும் விடுதியின் சமையலறையை சுத்தமாக பராமரித்திடவும் வண்ணம் பூசிடவும், விடுதியில் மழைநீர் சேகரிப்பு தொட்டி உடனடியாக அமைத்திடவும் அலுவலர்களுக்கு கலெக்டர் சரவணவேல்ராஜ் உத்தரவிட்டார்.
தொடர்ந்து எருத்துகாரன் பட்டி ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் புதியதாக சிறுவர் பூங்கா அமைக்கப்படவுள்ள இடத்தை பார்வையிட்டு, பூங்காவிற்கு தேவையான உபகரணங்கள், குடிநீர், சுற்றுச் சுவர் மற்றும் மின் விளக்கு வசதி ஆகியவை ஏற்படுத்திட அலுவலர்களுக்கு உத்தரவு விட்டார்.
தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தா.பழூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ் துளை கிணறு மூலம் அப்பகுதி பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்திடவும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கழிவறை கட்டிடங்கள் கட்டிடவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், கோடைக்காலங்களில் கால் நடைகளுக்கு தண்ணீர் கிடைத்திடும் பொருட்டு அம்பாபூர் ஊராட்சிக்குட்பட்ட விக்கிரமங்கலம் மற்றும் உல்லியக்குடி கிராமத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறையின் சார்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமாக கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளையும் பார்வையிட்டார்.
மேலும் உல்லியக்குடி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள உபரிநீர் செல்லும் வாய்க்கால் பணியினையும் பார்வையிட்டு, அனைத்து பணிகளும் சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் சரவணவேல்ராஜ் உத்தரவிட்டார்.
அரியலூர் மாவட்டம் தா.பழூருக்கு நேற்று கலெக்டர் சரவணவேல்ராஜ் வருகை தந்தார். பின்னர் அவர் தா.பழூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். அப்போது கலெக்டரிடம் தா.பழூர் அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத்துடன் கூடிய கழிவறை வசதி, குடிநீர் வசதிக்கு தேவையான உபகரணங்கள், குடியிருப்பு வசதி மற்றும் வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சுகாதார துறையினர் முன் வைத்தனர். அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர், தா.பழூர் அரசு மருத்துவ மனைக்கு குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி ஆகியவை உடனடியாக செய்து அடிப் படை வசதிகள் மேம்படுத்தப்படும், மேலும் குடியிருப்பு வசதி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு உரிய ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது தா.பழூர் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் லோகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசன், ராஜா, தா.பழூர் அரசு மருத்துவமனை டாக்டர் கருணாகரன், சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலங்கச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வீரபாண்டியன் (வயது 47), விவசாயி. இவர் இன்று காலை செந்துறை போலீஸ் நிலையம் அருகே உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார்.
உடனே செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
அப்போது செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய வீரபாண்டியன், செந்துறை பகுதியில் சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. திட்டப்பணிகள் எதுவும் நடைபெறாமல் அனைத்தும் முடங்கி கிடக்கிறது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மேலே இருந்து குதித்து தற்கொலை செய்வேன் என்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் தொடர்ந்து அவரிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இன்ஸ்பெக்டர் கருணாநிதி, அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனை ஏற்று வீரபாண்டியன் போராட்டத்தை கைவிட்டு மேலே இருந்து கீழே இறங்கினார்.
பின்னர் அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி காலனி தெருவைச்சேர்ந்தவர் தங்கராசு- பவானி தம்பதியின் மகள் சர்மிளா (25). இவரும், அதே பகுதியை சேர்ந்த கலைராஜ் (30) என்பவரும் காதலித்து வந்தனர். இதனை சர்மிளாவின் பெற்றோர் எதிர்த்தனர்.
கடந்த 2008-ம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி, சர்மிளா வீட்டை விட்டு வெளியேறி அரியலூர் போலீஸ் நிலையத்தில் தனது காதலனுடன் தஞ்சம் அடைந்தார். அப்போது இருவீட்டு பெற்றோரையும் போலீசார் அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.
மீண்டும் காதலனுடன் தலைமறைவான சர்மிளாவை அவரது பெற்றோர் அழைத்து வந்து செந்துறை அருகே உள்ள இலைக்கடம் பூர் கிராமத்தை சேர்ந்த அன்புமணி என்பவருக்கு 2009-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு ஹாசினி என்ற குழந்தை உள்ளது.
இதற்கிடையே சென்னைக்கு வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற சர்மிளா அங்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தனது பழைய காதலன் கலைராஜூடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தார். இதில் சர்மிளா கர்ப்பமும் அடைந்தார்.
குடும்ப வாழ்க்கைக்கு ஆதாரமாக சர்மிளாவை கடந்த மாதம் (மார்ச்) 16-ந்தேதி சென்னை திருவேற்காட்டில் உள்ள ஒரு கோவிலில் கலைராஜூடன் திருமணமும் செய்து கொண்டார். அதன் பிறகு சென்னையில் இருந்தே கர்ப்பகால சிகிச்சை முறைகளை சர்மிளா மேற்கொண்டு வந்தார்.
இந்தநிலையில் தனது மகள் ஹாசினியை பார்ப்பதற்காக சர்மிளா, தனது காதல் கணவர் கலைராஜூடன் கடந்த 12-ந்தேதி செந்துறைக்கு புறப்பட்டு வந்தார். இதையறிந்த சர்மிளாவின் பெற்றோர் தனது மகளை பார்த்து பேசினர். குடும்ப கவுரவத்திற்கு இழுக்காக இருப்பதை தவிர்க்கும் வகையில் காதலனை கைவிட்டு கணவர் அன்புமணியுடன் குடும்பம் நடத்துமாறு கூறினர்.
மேலும் பெரம்பலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சர்மிளாவை அழைத்து சென்று கர்ப்பத்தை கலைக்குமாறும் வற்புறுத்தினர். அப்போது அங்கு வந்த கலைராஜூவை துரத்தி விட்டு சர்மிளாவை அவரது பெற்றோர் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சர்மிளாவின் பெற்றோர் மகள் என்றும் பாராமல் கர்ப்பிணியை தாக்கினர்.

இதில் மூக்கில் இருந்து ரத்தம் வந்த நிலையில் சர்மிளா பரிதாபமாக இறந்தார். இதனை மறைக்க மன உளைச்சலில் இருந்த சர்மிளா தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தினரிடம் பெற்றோர் நாடகமும் ஆடியுள்ளனர். பின்னர் அவரது உடல் சொந்த ஊரான பொன்பரப்பிக்கு கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்த செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் சர்மிளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே காதல் கணவர் கலைராஜூவும் செந்துறை போலீசில் சர்மிளாவை அவரது பெற்றோர் அடித்து கொன்று விட்டதாக புகார் அளித்தார்.
அதன்பேரில் நடந்த விசாரணையில் குடும்ப கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் தங்கள் மகள் நடந்து கொண்டதால் அவரை கவுரவ கொலை செய்து விட்டதாக பெற்றோர் ஒப்புக் கொண்டனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் குடிநீருக்கே கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.இதன் காரணமாக பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவ மழை சரிவர பெய்யவில்லை. மேலும் நடப்பாண்டிலும் இதுவரை கனமழை இல்லை. இதனால் மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகிறது. அரியலூர் பகுதியில் வெள்ளரிக்காய் சாகுபடி பரவலாக செய்யப்பட்டு வருகிறது.
அரியலூர்- திருச்சி சாலையில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் வெள்ளரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை நேரமாகும். ஆனால் போதிய தண்ணீரின்றி வெள்ளரி கொடி நோய் தாக்குதலுக்கு ஆளாகி கருக தொடங்கியது. இதனால் 3 மாதம் பாடுபட்டு காப்பாற்றிய பயிரை அழிய விட மனமின்றி அருகில் உள்ள சித்தேரியில் தேங்கி நிற்கும் தண்ணீரை குடத்தில் கொண்டு வந்து பயிரை காப்பாற்றி வருகின்றனர் விவசாயிகள்.
இது குறித்து வெள்ளரி பயிரிட்டுள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளரி பயிரிட்டேன். போதிய மழை பெய்யவில்லை. கோடை மழையாவது பெய்யும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கான அறிகுறிகளே இல்லை. இருப்பினும் பாடுபட்டு வளர்த்த பயிரை காப்பாற்ற வேண்டுமே என்று குடம் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி பயிரை காப்பாற்றி வருகிறேன். இதனால் அறுவடையை தொடங்கி விட்டேன் என்றார்.






