என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்பேத்கர் சிலை மீது லாரி மோதல்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
    X

    அம்பேத்கர் சிலை மீது லாரி மோதல்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

    அம்பேத்கர் சிலை மீது லாரி மோதியதால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலை அருகில் அண்ணா, பெரியார், அம்பேத்கர், எம்.ஜி.ஆர். ஆகியோரின் சிலைகள் நிறுவப்பட்டு, அரசியல் கட்சியினர் சார்பில் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் அரியலூரில் இருந்து கும்பகோணம் நோக்கி நிலக்கரி எடுத்து செல்லும் சரக்கு லாரி ஒன்று நேற்று காலை தா.பழூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ஜெயங்கொண்டம்–கும்பகோணம் சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை மீது மோதியது. இதில் அம்பேத்கர் சிலை சாய்ந்து, அடிப்பாக தூண்கள் சேதமடைந்தது. அப்போது அருகில் இருந்த விளம்பர பதாகை மீது அம்பேத்கர் சிலை சாய்ந்ததால் சிலைக்கு சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

    இதனையறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பா.ம.க.வினர் சிலை கீழே விழாதபடி சரிசெய்தனர். மேலும் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அம்பேத்கர் தெரு பொதுமக்கள் இணைந்து, மதனத்தூர் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சிலையை சேதப்படுத்திய லாரி உரிமையாளரிடம் பேசி, சிலையை புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் மதனத்தூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே வளைவில் சென்ற சரக்கு லாரி ஒன்று எம்.ஜி.ஆர். சிலை மீது மோதி அதன் தூண்கள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×