என் மலர்
செய்திகள்

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு நீரில் கரையும் உரங்கள்: கலெக்டர் வழங்கினார்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கட்கிழமை “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1472 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் தன்விருப்ப நிதியிலிருந்து, அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் ரமேஷிடம் அவசர சிகிச்சை பகுதி மற்றும் 500 வார்டு பகுதிக்கு வெள்ளை சுண்ணாம்பு பூசுவதற்கு ரூ.25,000க்கான காசோலையினையும், அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மைத் துறையில் நுண்ணீர் பாசன திட்டம் 2016-17ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரியலூர் வட்டாரத்திலுள்ள அருங்கால் கிராமத்தில் 17.03.2017 அன்று சொட்டுநீர் பாசன முறையில் கரும்பு மற்றும் மக்காசோளம் சாகுபடி செய்துள்ள விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த பொழுது, விவசாயிகள் நீரில் கரையும் உரங்கள் வழங்க கோரிக்கை விடுத்தனர். அதனைத்தொடர்ந்து 16 விவசாயிகளுக்கு ரூ.24,640 மதிப்பில் நீரில் கரையும் உரங்களையும், இடையத்தாங்குடி, வேலயுதம், என்பவரது வயலின் தீவன மக்காசோளம் கருகியதால் இழப்பீட்டு தொகையாக ரூ.5,000 க்கான காசோலையினையும், மாவட்ட ஆதிதிராவிடர் நல துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.5000 வீதம் ரூ.30,000 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் 11 பயனாளிகளுக்கு தலா ரூ.5000 வீதம் ரூ.55,000 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களையும் மாவட்ட கலெக்டர் சரவண வேல்ராஜ் வழங்கினார்.
மேலும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சுயவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு தேசிய மய மாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் 20 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலையினையும் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) பாலாஜி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஹேமலதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரூபன்தாஸ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இம்தியாஸ்முகமது, இளநிலை மறுவாழ்வு அலுவலர் சீனிவாசன், வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






