search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்துறையில் கடைகள் அடைப்பு: பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்
    X

    செந்துறையில் கடைகள் அடைப்பு: பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

    சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து செந்துறையில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு ஆலைக்கு செந்துறையில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து அங்கு சுண்ணாம்புக்கல் தரம் குறித்து ஆய்வு செய்ய ராட்சத ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணியில் சிமெண்டு ஆலை நிர்வாகம் ஈடுபட்டது.

    இதை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் அங்கு சென்று ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும் செந்துறை பகுதியில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று கூறி கடந்த வாரம் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் செந்துறையில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி கடை அடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி, செந்துறையில் நேற்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மேலும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், செந்துறை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கங்களால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் குடிநீர் பிரச்சினையும் ஏற்படுகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    எனவே செந்துறை பகுதியில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். மேலும் விவசாயிகளிடம் பெற்ற நிலத்தை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். இதை மீறி சுரங்கப்பணி நடந்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
    Next Story
    ×