என் மலர்tooltip icon

    அரியலூர்

    செந்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(சனிக்கிழமை) நடைபெறுகிறது.
    செந்துறை:

    செந்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(சனிக்கிழமை) நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான செந்துறை, இலங்கைச்சேரி, ஆதிகுடிக்காடு, உஞ்சினி, நல்லாம்பாளையம், சிறுகடம்பூர், சோழன்குறிச்சி, ஆனந்தவாடி, சென்னிவனம், ராயம்புரம், அகரம், கட்டையன்குடிக்காடு, மருவத்தூர், சேடக்குடிக்காடு, விழுப்பணங்குறிச்சி, பொன்பரப்பி, சிறுகளத்தூர், மருதூர், வஞ்சினபுரம், நல்லநாயகபுரம், நக்கம்பாடி, மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, வங்காரம், அயன்தத்தனூர், முல்லையூர், நத்தகுழி, உகந்தநாயகன்குடிக்காடு, பெரியாகுறிச்சி, இலைக்கடம்பூர், நிண்ணியூர், பிலாக்குறிச்சி, வீராக்கன், செதலவாடி, நாகல்குழி, கீழமாளிகை, மத்துமடக்கி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் மாலையில் பணி முடியும் வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று செந்துறை உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
    அரியலூர் அருகே நள்ளிரவில் நாய்க்காக அதன் உரிமையாளர் சாலை மறியலில் ஈடுபட்டது போலீசார் மற்றும் லாரி ஒட்டுனர்களிடையே பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டத்தில் அதிக அளவில் தனியார் மற்றும் அரசு சிமெண்டு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து தினந்தோறும் ஏராளமான லாரிகளில் சிமெண்டு மூட்டைகள் பல்வேறு கிராமங்களை கடந்து வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இதேபோல் அரியலூர் அருகே தாமரைக்குளம் கிராமத்தில் தனியார் சிமெண்டு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் அங்குள்ள ஆலை குடியிருப்புக்கு எதிரே ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக ஸ்பைகி என்ற நாட்டு நாயை செல்லமாக வளர்ந்து வந்தார்.

    கடந்த 2 நாட்களாக அந்த செல்ல நாயை காணவில்லை. ராஜகோபால் தனது வளர்ப்பு நாய் ஸ்பைகி எங்கு தேடியும் கிடைக்காததால் விரக்தியில் இருந்தார். இதற்கிடையே தனியார் சிமெண்டு ஆலை நிர்வாகத்தின் சார்பில் அந்த பகுதியில் சுற்றி திரிந்த ஏராளமான நாய்களை பிடித்தது தெரியவந்தது.

    இதுபற்றி அங்கிருந்த ஆலை காவலாளியிடம் கேட்டபோது, அது இந்த நேரம் உயிருடன் இருக்கிறதா தெரியவில்லை என்று அலட்சியமாக பதில் அளித்ததாக தெரிகிறது.

    இதனை கேட்டு ஆத்திரமடைந்த உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் சிமெண்டு ஆலையில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வெளியே சென்ற 20-க்கும் மேற்பட்ட லாரிகளை நள்ளிரவில் சிறைப்பிடித்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராஜகோபால் போலீசாரிடம், தங்களுக்கு வளர்ப்பு நாய் வேண்டும், அல்லது ஆலை நிர்வாகத்தினர் நாயை பிடித்து எந்த இடத்தில் விட்டார்கள் என்று கூறினால் நாங்கள் சென்று மீட்டுக்கொள்கிறோம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு பதில் அளித்த ஆலை நிர்வாகம் காலையில் பேசிவிட்டு கூறுகிறோம் என பதில் அளித்தால் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

    நள்ளிரவில் நாய்க்காக சாலை மறியலில் ஈடுபட்டது போலீசார் மற்றும் லாரி ஒட்டுனர்களிடையே பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
    ஜெயங்கொண்டம் அருகே அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 3 கொத்தனார்கள் படுகாயம் அடைந்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமத்தை சேர்ந்தவர்கள் இளையராஜா (வயது 33), ராஜேந்திரன் (34), கார்த்திகேயன் (31). கொத்தனார்களான இவர்கள் 3 பேரும் ஜெயங்கொண்டம் அருகே ஒரு கோவிலில் கட்டிட பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று முன்தினம் வேலை முடிந்து இரவு 10 மணியளவில் சூரியமணல் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். சிற்பக் கலைக்கூடம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், பஸ்சின் முன்புற சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் சிக்கியதில் கொத்தனார்கள் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, பாதுகாப்பு படையினர் உதவியுடன் அவர்கள் 3 பேரையும் மீட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களில் இளையராஜா மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீசார், பஸ் டிரைவர் குமாரை(52) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    உடையார்பாளையம் பகுதியில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலரழகன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காக்காப்பாளையத்தை சேர்ந்த செல்லம்மாள்(வயது 34), உடையார்பாளையத்தை சேர்ந்த குமணவள்ளல்(55), தத்தனூர் கீழவெளியை சேர்ந்த செல்வம்(45), இடையார் ஏந்தலை சேர்ந்த முருகன்(45) ஆகியோர் அவர்களது மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் செவிலியர் வீட்டில் 43 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசெல்வன். இவரது மனைவி புனிதா இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இளைய மகள் திருப்பதியில் கல்லூரியில் படித்து வருகிறார். புனிதா கிராம சுகாதார செலியராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் புனிதாவிற்கு பணி உயர்விற்கான கவுன்சிலிங், சென்னையில் நடைபெற உள்ளதையொட்டி, கடந்த சனிக்கிழமை தனது கணவருடன் வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டார். காலையில் பழனி செல்வனின் வீடு திறந்து இருப்பதைக் கண்ட அருகில் இருந்தவர்கள், இதுகுறித்து சென்னையில் இருந்த பழனிசெல்வதிற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்துசென்னையிலிருந்து கிளம்பிய பழனி செல்வன் வீட்டிற்கு வந்து பார்த்த போதுவீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அடுத்த மாதம் தனது அண்ணனுக்கு நடைபெற உள்ள அறுபதாம் கல்யாணத்திற்காக சேர்த்து வைத்த பணம், நகை மற்றும் மகள்களுக்காக சேர்த்துவைத்த நகை என 43 சவரன் நகை மற்றும் 75 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அவர் தங்கியுள்ள மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு நடந்து வந்தார்.
    அரியலூர்:

    காற்று மாசு, சுகாதாரத்திற்கு பெரும் சுற்றுச்சூழல் ஆபத்தாக வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் மோனாக்சைடு உள்ளிட்டவை விளங்குவதோடு, மனித சுகாதாரத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது. இதில் கார்பன்டை ஆக்சைடு ஆபத்தான வாயுவை வெளியேற்றி பூமியை மாசுபடுத்தி பருவநிலை மாற்றத்தை உண்டாக்குகிறது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மாசை கட்டுப்படுத்த பல்வேறு பசுமை முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. இதன்படி மாசற்ற அலுவலக வாரம் கடைபிடித்தலின் ஒருபகுதியாக வாரத்தில் ஒருநாள் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதை அலுவலர்கள் தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது.

    இந்நிலையில் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய வழியுறுத்தலின்படி மாசற்ற அலுவலக வாரம் கடைபிடித்தலின் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேற்று அவர் தங்கியுள்ள மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு நடந்து வந்தார்.

    இது குறித்து அவர் கூறுகையில், வாரத்தில் புதன்கிழமை கள ஆய்வு பணிகள் மேற்கொள்வதன் காரணமாக வாகன பயன்பாட்டினை தவிர்க்க இயலாத சூழ்நிலையில் திங்கட்கிழமையன்று முழுவதும் அலுவலக பணி என்பதால் வாகனம் தவிர்க்கப்படும். இது தொடர்பாக அரசு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு இதை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எனவே வெளியிடங்களில் இருந்து வரக்கூடிய அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், வாரத்தில் ஒரு நாள் பொது போக்குவரத்து வாகனங்களையோ அல்லது சைக்கிளை பயன்படுத்தியோ, அலுவலகங்களின் அருகே உள்ளவர்கள் நடைபயணமாகவோ அலுவலகங்களுக்கு செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதன் மூலம் காற்று மாசு, போக்குவரத்து நெருக்கடி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 7 ஆயிரத்து 866 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு விசாரித்ததில், 3 ஆயிரத்து 102 வழக்குகளுக்கு மொத்தம் ரூ.4 கோடியே 63 லட்சத்து 95 ஆயிரத்து 931-க்கு தீர்வு காணப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், அரியலூர், செந்துறை நீதிமன்றங்களுக்காக நடந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களை, அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மகாலட்சுமி தொடங்கி வைத்தார்.

    ஜெயங்கொண்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தினை சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான திருமணி தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 7 ஆயிரத்து 866 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு விசாரித்ததில், 3 ஆயிரத்து 102 வழக்குகளுக்கு மொத்தம் ரூ.4 கோடியே 63 லட்சத்து 95 ஆயிரத்து 931-க்கு தீர்வு காணப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், மூத்த சிவில் நீதிபதியுமான அழகேசன் செய்திருந்தார்.
    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கள்ளக்காதலியின் 13 வயது மகளை 4-வதாக திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கண்டக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரிய கருக்கை கிராமத்தை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன். இவர் அரசு போக்குவரத்து கழக ஜெயங்கொண்டம் கிளையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கு மூன்று முறை திருமணம் ஆகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் இவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பரமேஸ்வரி என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பரமேஸ்வரி தனது மூன்று மகள்களில் 13 வயது உடைய இளைய மகளுடன் வந்து ராதாகிருஷ்ணனுடன் குடும்பம் நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் 6-ந்தேதியன்று 13 வயது சிறுமிக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் பெரிய கருக்கை கிராமத்திலுள்ள ஒரு கோவிலில் வைத்து ராதாகிருஷ்ணனின் தாய் ருக்மணி, கள்ளக்காதலி பரமேஸ்வரி ஆகியோர் சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    ராதாகிருஷ்ணன் சிறுமியை வற்புறுத்தி உறவு கொண்டு தற்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார். இது தெடர்பாக அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் காளத்தி சேகரனுக்கு தகவல் கிடைத்தது.

    அவர் அளித்த புகாரின் படி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து கண்டக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் பரமேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மீன்சுருட்டி அருகே மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், மீன்சுருட்டி அருகே உள்ள குமிளங்குழி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ஆரோக்கியராஜ்(வயது 47) தனது வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. 

    இதையடுத்து ஆரோக்கியராஜை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 6 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட 2 நகராட்சிகள், 2 பேரூராட்சிகளில் 33,172 ஆண் வாக்காளர்கள், 35,523 பெண் வாக்காளர்கள் ஆக மொத்தம் 68,695வாக்காளர்கள் அடங்கிய வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2021-க்கான 2 நகராட்சிகள், 2 பேரூராட்சிகளுக்கான வாக்காளர்கள் பட்டியல்கள் முறையே அரியலூர் நகராட்சியில் 11,579 ஆண் வாக்காளர்கள், 12,627 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

    ஜெயங்கொண்டம் நகராட்சியில் 13,270 ஆண் வாக்காளர்கள், 14,262 பெண்வாக்காளர்கள், உடையார்பாளையம் பேரூராட்சியில் 4,888 ஆண் வாக்காளர்கள், 4,994 பெண் வாக்காளர்கள், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 3,435 ஆண் வாக்காளர்கள், 3,640 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

    அதன்படி அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட 2 நகராட்சிகள் மற்றும் 2 பேரூராட்சிகளில் 33,172 ஆண் வாக்காளர்கள், 35,523 பெண் வாக்காளர்கள் ஆக மொத்தம் 68,695வாக்காளர்கள் அடங்கிய வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரகு, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, பா.ஜ.க. ஐயப்பன், தி.மு.க. முருகேசன், அ.தி.மு.க. பாலு, காங்கிரஸ் சந்திர சேகர், தே.மு.தி.க. ராமஜெயவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே குறிப்பிட்ட மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்திற்கு 15.12.2021 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையம், நலவாழ்வு மையங்களில் (HWC-HSCs) உள்ள கீழ்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இடைநிலை சுகாதாரபணியாளர் பதவியிடங்களின் எண்ணிக்கை 91 (மாறுதலுக்குட்பட்டது), 50 வயது வரை. தகுதி செவிலியர் பட்டயபடிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம், இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும்தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம். பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் (நிலை2) பதவியிடங்களின் எண்ணிக்கை 35 (மாறுதலுக்குட்பட்டது), 50 வயது வரை.

    தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி (உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்), பத்தாம் வகுப்பில் தமிழை மொழிப்பாடமாக பெற்றிருக்க வேண்டும், இரண்டு வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் சுகாதார ஆய்வாளர் துப்புரவு ஆய்வாளர், கல்வித்தகுதி (அங்கீகரிக்கப்பட்டதனியார் நிறுவனங்கள் பல்கலை கழகங்கள் காந்தி கிராம், கிராமிய நிறுவனம் உள்ளிட்ட நிகர்நிலை பல்கலைகழகங்களில் இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறையால் வழங்கப்பட்ட சான்றிதழ் விண்ணப்ப படிவங்கள் தேசிய நலவாழ்வு குழும (https://nhm.tn.gov.in/) வலைதளத்தில் வேலை வாய்ப்பு (Career Section) பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே குறிப்பிட்ட மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்திற்கு 15.12.2021 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வி தகுதியின் சான்றிதழ்களின் நகல்கள் புகைப்படத்துடன் துணை இயக்குநர் சுகாதார ப்பணிகள் அலுவலகம், மாவட்ட பல்துறை வளாக அலுவலகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர்621704 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டுமெனவும் மேலும் விவரங்களுக்கு தேசிய நலவாழ்வு குழுமம் (https://nhm.tn.gov.in) வலைதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லது அரியலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் அலுவலக வேலை நாட்களில் நேரில் சென்று அறிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    திருமானூர் அருகே ஆடு திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேனாபதி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ்(வயது 59). விவசாயியான இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆடு கத்தும் சத்தம் கேட்டு அவர் வெளியே வந்து பார்த்தபோது, 2 பேர் ஒரு ஆட்டை திருடி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த காமராஜ் சத்தம் போட்டார். ஆனால் அக்கம், பக்கத்தினர் வருவதற்குள் 2 பேரும் இருசக்கர வாகனத்தில் ஆட்டுன் தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து காமராஜ் திருமானூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் ஆடுகளை திருடியது கரைவெட்டிபரதூர் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமியின் மகன் இன்பத்தமிழன்(20), நீலமேகத்தின் மகன் சுந்தரன்(20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஆட்டை விற்க முயன்றபோது போலீசார் சுற்றி வளைத்து பிடித்து, ஆட்டை மீட்டனர். மேலும் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    ×