என் மலர்tooltip icon

    அரியலூர்

    தா.பழூர் ஒன்றியத்தில் நடை பெற்று வரும் ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.
    அரியலூர்:

    அரியலூர்  மாவட்டம் ஜெயங்கொண்டம்  அருகே தா.பழூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறையினர் கீழ் நடை பெற்று வரும் திட்ட பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் ஆய்வு செய்தார்.

    அப்போது வெண்மான் கொண்டான் கிராமத்தில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு  வரும் சமுதாயசுகாதார வளாகத்தை திட்ட இயக்குனர்   ஆய்வு செய்தார்.

    பின்னர்  பிரதம  மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.1.70 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகள், மாவட்ட ஊராட்சி 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.2.60 லட்சத்தில் வெண்மான்கொண்டான் பெருமாள் கோவில் தார்சாலை மற்றும்  பருக்கள் ஊராட்சியில்  அழிசுகுடி முதல் கீழவெளி வரை ரூ.18.64 லட்சத்தில்  அமைக்கப்பட்ட தார்சாலை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    அப்போது சாலை தரமாக அமைக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து இருபுறமும் அளவீடு செய்யச் சொல்லி கணக்கீடு செய்தார். அதே ஊராட்சியில் நடை பெற்று வரும் 100 நாள் வேலை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். அப்போது தொழிலாளர்களுக்கு சம்பளம் சரியாக வருகிறதா என்பது குறித்து விளக்கம் கேட்டார்.

    மேலும் பணிகள் முழுமையாக நடைபெறவேண்டும் என்றும் ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்க வேண்டுமென அலுவலர்களுக்கு திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் அறிவுரை வழங்கினார்.
    அரசு டாஸ்மாக் மதுபார், தியேட்டர் உள்ளிட்ட 25 இடங்களை அதிரடியாக அதிகாரிகள் அகற்றினர்.
    அரியலூர் :

    அரியலூர்  மாவட்டம் செந்துறையில்  பெரிய  ஏரி உள்ளது.  பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் கரை மற்றும் வரத்து வாய்க்கால்கள் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிக் கப்பட்டு இருந்தது.

    இதனை அகற்ற பொதுப் பணித்துறையினர் பல ஆண்டுகளாக முயன்று வந்தனர். அங்கு வசிப்பவர்களுக்கு பல ஆண்டுகளாக அவகாசம் கொடுத்து வந்தனர்.

    இந்த  நிலையில்  நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவை தொடர்ந்து தமிழக அரசு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தர விட்டது. அதனைத்தொடர்ந்து செந்துறை தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில்  உள்ள  பொதுப்பணித்துறை  ஏரி  மற்றும் வரத்து வாய்க்கால்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்.

    அதனைத்  தொடர்ந்து செந்துறை தாசில்தார் குமரய்யா மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். பல்வேறு கட்ட  பேச்சுவார்த்தையை தொடர்ந்து நேற்று ஆக்கிரமிப்புகள் உறுதியாக அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  

    அதனைத் தொடர்ந்து  அப்பகுதியில் வாசிக்கும் சிறு  தொழில் நிறுவனங்கள் மற்றும் குடியி ருப்பு மக்கள் தாங்களாகவே ஏறிக்கரை பகுதியில் அமைத் திருந்த கட்டிடங்கள், தொழில் சார்ந்த  உபகரணங்கள் மற்றும்  கொட்டகைகளை இரவோடு இரவாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் பாதுகாப்பு இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற செந்துறை தாசில்தார் குமரய்யா தலைமையில் தாலுகாவில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும்  உதவியாளர்கள் படைசூழ   அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.  தாங்களாகவே ஆக் கிரமிப்புகளை அகற்றும் குடியிருப்பு  வாசிகளுக்கு அவகாசம் கொடுத்தனர்.

    அவகாசம் கொடுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத சினிமா தியேட்டரின் சுற்றுச் சுவர் மற்றும் ஜெனரேட்டர் கட்டிடத்தை  அதிரடியாக உடைத்தனர்.   அதேபோல் அரசியல் பிரமுகர் கலியமூர்த்தி என்பவர் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கட்டி இருந்த  அரசு  மதுபான பாரையும் அதிரடியாக அடித்து  உடைத்து  அகற்றினர்.

    அரியலூர்   கலெக்டர் உத்தரவின் பேரில் செந்துறை தாசில்தார் போலீஸ் பாதுகாப்பு இன்றி வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உதவியுடன் பாரபட்சம் இன்றி  40 ஆண்டு கால நீர்நிலை ஆக்கிரமிப்பு களை அதிரடியாக அகற்றிய சம்பவம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்    இடையே பெரும் பரபரப்பையும் வர வேற்பையும் பெற்றது. 
    கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டரிடம் வலியுறுத்தினர்.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்  நடைபெற்றது. கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து பேசுகையில், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு ரூ.50  வசூல் செய்யப்படுகிறது. இதனை மாவட்ட கலெக்டர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகளுக்கு முழுமையாக கடன் வழங்க வேண்டும்.
     
    புறம்போக்கு, ஏரி, குளம் வாரி, மயானம் ஓடை ஆகிய பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வேளாண் துறை மூலம் வழங்கப்படும் எந்திரங்கள் அனைத்தும் பழைய விவசாயிகளுக்கு வழங்காமல் புதிய விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்ட மைப்பின் அரியலூர் மாவட்டத் தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன்  கூறுகையில், பொதுமக்களின் போராட்டங்களையடுத்து அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்துக்கும், தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை கிராமத்துக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.

    அதனை ஆய்வு செய்ய ரூ.23 லட்சம் ஒதுக்கீடு செய் யப்பட்டு பின்னர் மாநில நீர் வள ஆதார வல்லுநர்கள் நேரில் பார்வையிட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட் டது. ஆனால் தற்போது தமிழக அரசு, இந்த திட்டம் மக்களுக்கு பயனற்றது அறிவித் திருப்பது  விவசாயிகளி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக மறு பரிசீலனை செய்து, இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விவசாய இலவச மின்சார இணைப்புக்கு பொதுப்பணித் துறையின் தடைச்சான்று கோரப்படுகிறது. இதனால் ஏற்படும் காலதாமம் ஏற்படுகிறது. எனவே விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் எச்.பி. பயன்படுத் தப்பட்ட சான்றளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிக ளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

    விவசாயிகள் விசுவநாதன், செந்தில், விஜயகுமார் கூறுகையில், யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மல்லூர் மருதையாற்றின்  குறுக்கு பாலம் கட்ட வேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரி, அதனை ஆழப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர், அவைகள் மீது நட வடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார். 
    மாளிகைமேட்டில் நடந்து வரும் 2-வது கட்ட அகழாய்வில் பழங்கால மண்பானை, செங்கல் சுவர் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருகே மாளிகைமேடு பகுதியில் தமிழக அரசு தொல்லியல் துறையின் சார்பில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியின்போது கடந்த 4-ந் தேதி பழங்கால செப்பு காப்பு கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் தங்க காப்பு என்று கூறப்பட்ட நிலையில், அதன் மீதான ஆராய்ச்சியை தொடர்ந்து அது செப்பு காப்பு என்பது தெரியவந்தது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த அகழாய்வு பணியின்போது பழங்கால மண்பானை, மண்ணாலான கெண்டி செம்பின் மூக்குப்பகுதி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த அகழாய்வு பணியில் முதல்முறையாக கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த சிவப்பு நிற மண்பானை 25 செ.மீ. உயரமும், 12.5 செ.மீ. அகலமும் கொண்டதாகும். தரையில் இருந்து 18 செ.மீ. ஆழத்தில் இந்த பானை கிடைக்கப்பெற்றது. அந்த பானையின் ஒரு பகுதி சிறிது உடைந்த நிலையில் காணப்பட்டது.

    மேலும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால அரண்மனையின் தொடர்ச்சியாக தற்போது 22 அடுக்கு கொண்ட செங்கல் சுவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட பானை போன்றவை எத்தனை ஆண்டுகள் பழமையானவை என்பது ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என ெதால்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கல்வெட்டு ஆதாரங்களின் உதவியுடன், மாளிகைமேட்டில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட அகழ்வாராய்ச்சியின்போது செங்கல் அமைப்பு மற்றும் ஏராளமான அலங்காரத்துடன் கூடிய கூரை ஓடுகள், அரண்மனையின் கட்டமைப்பு எச்சங்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுவரை இந்த அகழ்வாராய்ச்சி பணியில் கிடைத்த பழங்கால பொருட்களில் சீன மண்பாண்டங்கள், செப்பு நாணயங்கள் மற்றும் செம்பு பொருட்கள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மணிகள் மற்றும் வளையல்கள், அலங்கரிக்கப்பட்ட கற்கள் ஆகியவையும் அடங்கும். மேலும் தொடர்ந்து நடைபெறும் அகழாய்வு பணியில் பல்வேறு பழங்கால பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
    போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் 29-ந் தேதி ஏலம் விடப்படுகிறது.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு  குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசு டைமையாக்கப்பட்ட  வாகனங்கள் 29.03.2022 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆயுதப்படை  மைதானத்தில்  27 இரண்டு சக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்படும். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

    மேலும் விபரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப் பாளர்,  மதுவிலக்கு  அமல் பிரிவு, அரியலூர் மாவட்ட அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்.9498165793, 9498159595 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    பொது ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் 29.03.2022 காலை 08.00 மணிக்கு ரூ.1000- முன்தொகை செலுத்தி தங்களது  பெயர்  முகரியை பதிவு செய்து கொள்ளவேண்டும். ஏலத்தில் கலந்து கொள்பவருக்கு அடையாள எண் கொண்ட  வில்லை  வழங்கப்படும்.  பதிவு  செய்து கொண்டவர் மட்டுமே ஏலத் தில் கலந்து கொள்ளலாம். அவருடன் பிறருக்கு அனுமதி யில்லை.

    வாகனத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்த வர் ஏலத்தொகை மற்றும் ஜி.எஸ்.டி.-யுடன் சேர்த்து  பிற்பகல் 3 மணிக்குகள் உரிய அலுவலரிடம் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். வைப்புத்தொகை கழித்துக்   கொள்ளப்படும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்  உரிய தொகையை செலுத்ததவறினால் வைப்புத்தொகை திருப்பி தரப்பட மாட்டாது.

    ஏலம்  ரூ.100-ன் மடங்கில் கேட்கப்பட வேண்டும். வாகனத்துடன் வாகனம் ஏலத்தில் எடுத்ததற்கான சான்று மட்டுமே வழங்கப்ப டும். வாகனத்தின் பதிவு சான்று வழங்க இயலாது. ஏல நடவடிக்கைகள் அனைத்தும் ஏலக்குழு  அலுவலர்களால் முடிவு செய்யப்படும்.

    பொது ஏலத்தில் காவல்துறை சார்ந்த எவரும் கலந்துகொள்ள அனுமதியில்லை. வாகனங்களை 27.03.2022-ஆம் தேதி காலை 10.00 மணி முதல் பார்வையிடலாம்.

    ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையின் நகலை தவறாமல் கொண்டு வர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
    ஜெயங்கொண்டம் நேஷனல் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் கண்காட்சி நடை பெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் கண்காட்சி நிகழ்ச்சி  நடை பெற்றது. 

    நிகழ்ச்சியை  கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன் மற்றும் மேலாண்மை இயக்குனர் அமீர்தேவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.இந்த வணிகவியல்கண் காட்சியில் கல்லூரி மாணவர்கள் ஏராளமான கண்காட்சி களை வைக்கப்பட்டுள்ளனர். 

    இதில் முன்னதாக மனிதவி யல் துறைதலைவர் கோபி நாத் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு முதல்வர் அன்பரசி  தலைமை தாங்கினார். விழாவில் பேராசிரியர்கள் சிவசங்கர், மாரிமுத்து, மஞ்சுளா, கலையரசி ஆகியோர் கலந்து கொண்டனர். 

    முடிவில் பிரியதர்ஷினி உதவி பேராசிரியர் நன்றி கூறினார்.

    வரதராஜன்பேட்டையில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் குடிநீர் வசதி கேட்டு வலியுறுத்தினர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் மார்கிரேட் அல்போன்ஸ் தலைமையில், துணைத் தலைவர் எட்வின் ஆர்தர் முன்னிலையில் நடைபெற்றது. செயல் அலுவலர் ஜெயசெல்வி வரவேற்றுப் பேசினார். 

    இதில் மொத்தம் 15 வார்டு கவுன்சிலர்களில் தலைவர் உட்பட 12 கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கூட்டத்தில் வார்டு எண் 9, 7, 1, 15, 10 உள்ளிட்ட வார்டுகளில் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும், 

    பட்டதெரு ஆரோக்கியபுரம் கல்லறை அருகே உள்ள ஆழ்குழாய் கிணறு சுத்தம் செய்ய வேண்டும்,15-வது வார்டு ஆழ்குழாய் கிணற்றில் சுத்தம் செய்து மேற்கு ஆரோக்கியபுரம் மாதா கோயில் அருகே சின்டெக்ஸ் டேங்க் அமைக்க வேண்டும்,  

    நந்தவன குட்டையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய பைப்லைன் அமைத்து ஆரோக்கியபுரம் மற்றும் மேற்கு ஆரோக்கியபுரம் வரையில் குடிநீர் செல்லும் வகையில் பைப்லைன் அமைக்க வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்து மனு அளித்தனர்.

     இதில் 7, மற்றும் 11-வது வது வார்டு பகுதியில் போர்க்கால அடிப்படையில் புதிய போர் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.
    ஜெயங்கொண்டம் பொன்னேரியில் ஆக்கிரமிப்பு செய்யபட்டிருந்த 125 ஏக்கர் நிலங்கள் மீட்டகப்பட்டன.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளதுபொன்னேரி எனும் சோழகங்கம் ஏரி.  வரலாற்று சிறப்புமிக்க இந்த ஏரி ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. சுமார் 850 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியால் அதைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்தவர்கள்  விவசாயம் செய்துகொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஏரியின் அருகிலுள்ள சிலர் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து நெல், கடலை, உளுந்து உள்ளிட்ட பயிறு வகைகளை பயிர் செய்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு ஏரி நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது தொடர்ந்து  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இதனை தொடர்ந்து பொன்னேரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து வருவாய்த்துறையினர் தாசில்தார் ஆனந்தன் தலைமையில் 125 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டனர்.

    மேலும் அளவீடு செய்து அதில் பயிரிடப்பட்டுள்ள சாகுபடி பயிர்கள் அகற்றி கரை அமைத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்டெடுத்து அதைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அரியலூர் அருகே ஊர்க்காவல்படை வீரர் குறித்து புகார் கொடுக்க வந்த கல்லூரி மாணவி கோர்ட்டு வளாகத்தில் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குறிச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூன் (வயது 30), திருமணமானவர். இவருக்கு திருமணமாகி சரிதா என்ற மனைவி உள்ளார்.

    செந்துறையில் உள்ள ஊர்க்காவல் படையில் காவலராக பணிபுரிந்து வந்த அர்ஜூன், கடந்த ஆண்டு சன்னாசிநல்லூர் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரிடம் நைசாக பேசி பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்.

    இந்த மாணவி பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வேப்பூரில் உள்ள அரசு கல்லூரியில் சேர்ந்துள்ளார், அந்த கல்லூரிக்கு அருகில் அர்ஜூன் உறவினர் ஒருவர் பெட்டிகடை வைத்திருந்தார். அந்த கடைக்கு அர்ஜூன் செல்வதும், அந்த மாணவியும் கடைக்கு வருவதுமாக மேலும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே நெருக்கம் அதிகமானதையடுத்து ஒரு நாள் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கட்டாயப்படுத்தி அர்ஜூன் அந்த மாணவியுடன் உடலுறவு கொண்டுள்ளார். அதை செல்போனில் படம் எடுத்து அடிக்கடி மாணவியை தனிமையில் சந்திக்க வற்புறுத்தியும் இருக்கிறார்.

    மேலும் தனது முதல் திருமணத்தை மறைத்து, அதே கிராமத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த மாணவி கர்ப்பமாகியுள்ளார். கர்ப்பத்தை கலைக்குமாறு அர்ஜூன் வற்புறுத்திய நிலையில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கர்ப்பம் கலைந்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவங்களை கேள்விப்பட்ட அர்ஜூனனின் முதல் மனைவி சரிதா அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். முதல் மனைவி அனுமதி இல்லாமல் இரண்டாவது திருமணம் செய்ததினால் ஊர்க்காவல் படை காவலர் அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர் ஊர்க்காவல் படையில் இருந்து நீக்கப்பட்டார்.

    அதேபோல் முதல் மனைவி இருப்பதை மறைத்து திருமணம் செய்ததினால் அந்த மாணவியும் அர்ஜூனுடன் வாழாமல் விலகிச் சென்றார். ஆனாலும் மாணவியுடன் ஒன்றாக இருப்பதுபோல், செல்போனில் எடுத்த போட்டோ மற்றும் லேப்டாப், ஏ.டி.எம். கார்டு போன்ற முக்கிய ஆவணங்களை வைத்துக் கொண்டு என்னுடன் வாழ வேண்டும் இல்லையேல் கொலை செய்து விடுவேன், என அர்ஜூன் மிரட்டி வந்துள்ளார்.

    இதுபற்றி புகார் கொடுப்பதற்காக வந்த மாணவி, அரியலூர் மாவட்ட நீதிபதி முன்பு திடீரென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கல்லூரி மாணவியை தடுத்து நீதிபதி முன்பு ஒப்படைத்தனர். மேலும் அவரிடம் இருந்து மண்எண்ணை கேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் நீதிபதியிடம், அர்ஜூன், அவரது முதல் மனைவி சரிதா, தந்தை பழனிவேல், தம்பி மணிமாறன் ஆகியோர் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வருவதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

    மாவட்ட நீதிபதி மகாலட்சுமி அந்த மாணவியிடம் நன்றாக படி, வேலைக்கு செல்ல முயற்சி எடுக்க வேண்டும், வாழ்ந்து காட்ட வேண்டும், தற்கொலை செய்து கொள்வது தீர்வாகாது, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தார்.

    மேலும் மாணவியின் வாக்குமூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவிக்கு அநீதி இழைக்கப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள் நலன் காக்கும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அரியலூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக வேளாண் உற்பத்தியை பெருக்கி அதிக லாபம் விவசாயிகளுக்கு கிடைக்க செய்யும் வகையில் தமிழக அரசின்  தோட்டக்கலைத் துறையின் மூலம் நவீன வேளாண் தொழில் நுட்பங் கள் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட் டுள்ள வேளாண் பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், கருப்பூர் சேனாபதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவரது வயலில் 3 எக்டேர் பரப்பளவில் இயற்கை பண்ணைய திட்டத்தின்கீழ் பயிரிடப்பட்டுள்ள மா, கொய்யா, கத்தரி, தக்காளி, வெங்காயம், முருங்கை உள்ளிட்ட பயிர்களையும்,

    தேளுர் கிராமத்தைச்சேர்ந்த விவசாயி வேலு என்பவரது வயலில் 1 எக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய், கத்தரி, புடலை, சாமந்தி பூ உள்ளிட்ட பயிர்களையும், விவசாயி கண்ணதாசன் என்பவரது வயலில் 0.80 எக்டேர் பரப்பளவில் பயிரிடப் பட்டுள்ள மிளகாய், கத்தரி, முருங்கை உள்ளிட்ட பயிர்களையும்,

    விவசாயி  பெரியசாமி என்பவரது வயலில் 0.40 எக்டேர் பரப்பளவில் முருங்கை பயிரினையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, பயிர்களின் விவரம், உற்பத்தி திறன், விற்பனை விவரம், சந்தை மதிப்பு, அரசின் மானியத்தொகை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்டறிந்தும், தமிழக அரசின் தோட்டக் கலைத்துறையின் மூலம் விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் செயல்படுத்தும் திட்டங்களை அனைத்து விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

    முன்னதாக, தேளுர் கிராமத்தில் கலியுக வரதராஜ பெருமாள் உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுடன் இயற்கை பண்ணைய சான்று பெற்று தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்து வருவது குறித்தும் இயற்கை பண்ணை முறையில் அவர் கள் செய்து வரும் பணிகள் குறித்தும் கலெக்டர் கலந்துரையாடினார்.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், செந்துறை,  உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய வட்டங்களை  மையமாக கொண்டு முந்திரி  பழச்சாறு தொழிற்சாலையை அமைக்க வேண்டும்.   

    தா.பழூர் அருகே பொன்னாற்று தலைப்பில் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ஆர்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பூ.விசுவநாதன் தலைமை வகித்தார். முந்திரி தழை மற்றும் காய்களுடன் கலந்துகொண்ட சங்க நிர்வாகிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
    அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாதிரி குடிநீர் பரிசோதனை கூடத்தை கலெக்டர் ரமண சரஸ்வதி திறந்துவைத்தார்.


    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் உலக தண்ணீர் தினத்தை  முன்னிட்டு மாதிரி குடிநீர் பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    அரியலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் மார்ச் 22&ந்தேதி தண்ணீரின் அவசியம் குறித்து உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களும் தண்ணீரின் தேவையை உணர்ந்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திட வேண்டும்.

    மழைக்காலங்களில் மழை தண்ணீரை சேமிக்கும் வண்ணம் அவரவர் வீடு மற்றும் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு முறையை கடைபிடித்திட வேண்டும்  என கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

    மாதிரி குடிநீர் பரிசோதனைக் கூடத்தில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குடிநீரின் தரம் மற்றும் கடினத்தன்மை குறித்து செயல்விளக்கம் கலெக்டர் முன்னிலையில் செய்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் விவசாய நிலங்களிலுள்ள நிலத்தடி நீரின் தன்மை குறித்தும் ஆய்வு செய்தனர்.

    பொதுமக்களுக்கு தண்ணீரின் தரம் மற்றும் தண்ணீரின் அத்தியாவசியம் பற்றி விளக்கும் கையேடுகள் வழங்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் முருகேசன், உதவி நிர்வாக பொறியாளர் சுந்தரராஜன், உதவிப்பொறியாளர்கள் ராஜேந்திரன் மற்றும் ஆய்வக அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ×