என் மலர்tooltip icon

    அரியலூர்

    • ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் நாளை 16-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • ஆலத்தியூர், இருங்களாகுறிச்சி, மணக்குடையான், மாறாகுறிச்சி, சோழன்பட்டி மற்றும் புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலையில் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.

     அரியலூர்:

    செந்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பொன்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் நாளை 16-ந்தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான ஆர்.எஸ். மாத்தூர், அசாவீரன்குடிக்காடு, குறிச்சிகுளம், பூமுடையான்குடிக்காடு, துளார், ஆதனக்குறிச்சி, கோட்டைக்காடு, முதுகுளம்,

    குவாகம், கொடுக்கூர், இடையக்குறிச்சி, வல்லம், முள்ளுக்குறிச்சி, தாமரைப்பூண்டி, ஆலத்தியூர், இருங்களாகுறிச்சி, மணக்குடையான், மாறாகுறிச்சி, சோழன்பட்டி மற்றும் புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலையில் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜெயங்கொண்டம் ரோட்டரி சங்கம் சார்பில் நாளை இலவச மருத்துவமுகாம் நடை பெறுகிறது.
    • முகாமில் உயரம் மற்றும் எடை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    அரியலூர்:

    ஜெயங்கொண்டம் ரோட்டரி சங்கம், திருச்சி தங்க மயில் ஜூவல்லரி லிமிடெட் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் ஜெயங்கொண்டம் விருத்தாச்சலம் ரோடு, ஸ்டார் திருமண மண்டபத்தில் நாளை (16-ந்தேதி, வியாழக்கிழமை)காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

    ரோட்டரி 3000-ன் மாவட்ட பொதுச்செயலாளரும், துணை ஆளுநரும், தங்கமயில் ஜூவல்லரி முதன்மை செயல் அதிகாரியுமான வி.விஷ்வ நாராயணன், மாவட்ட பப்ளிக் இமேஜ் மற்றும் டிஸ்பிளே சேர்மன் டாக்டர் கே.சீனிவாசன், மண்டல ஒருங்கிணைப்பாளர் எ. சரவணன், உதவி ஆளுநர் ஆர்.சி.குமணன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    இதில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ., மாநில சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் நகராட்சி துணைத்தலைவர் வெ.கொ.கருணாநிதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைக்கிறார்கள்.

    முகாமில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்கிறார்கள். உயரம் மற்றும் எடை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    முகாமிற்கான ஏற்பாடுகளை ஜெயங்கொண்டம் ரோட்டரி சங்க சாசன தலைவர் கே. செல்வராஜ், தலைவர் பி.கிருபாநிதி, செயலாளர் கே.சேதுராமன், பொருளாளர் கே.இளவரசன் ஆகியோர் செய்துள்ளனர்.

    • அரியலூர், உடையார்பாளையம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய வட்டங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது.
    • ஜமாபந்தியில் பெறப்பட்ட 345 மனுக்களில் 25 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய வட்டங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

    அரியலூர் மாவட்டத்தில் பொட்டவெளி, இலுப்பையூர், ராயம்புரம், சென்னிவனம், ஓட்டக்கோவில், அமினாபாத், கோவிந்தபுரம், அரியலூர் வடக்கு,

    அரியலூர் தெற்கு, வாலாஜாநகரம், கயர்லாபாத், கல்லங்குறிச்சி, கடுகூர், அயன்ஆத்தூர், பெரிய நாகலூர், தேளூர், காவனூர், விளாங்குடி ஆகிய 18 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது.

    இந்த ஜமாபந்தியில் பெறப்பட்ட 345 மனுக்களில் 25 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் கலெக்டர் அலுவலக மேலாளர் முத்துலட்சுமி,

    தாசில்தார் குமரய்யா, தலைமையிடத்து துணை தாசில்தார் கோவிந்தராஜ், மண்டல துணை தாசில்தார் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் சாமிதுரை, சர்வே பிரிவு அன்புச்செல்வி, கிராம நிர்வாக அதிகாரிகள் உமா சங்கர், நந்தகுமார், முருகேசன், சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
    • அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் இருந்த குப்பைகளை அப்புறப்படுத்தியும் போலீஸ் நிலையத்தில் ஒட்டடை அடித்து தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

    அரியலூர்:

    மாதம் ஒருமுறை இரண்டாவது சனிக்கிழமை போலீஸ் நிலையங்கள் மற்றும் போலீசார் குடியிருப்பு இடங்களைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தை தூய்மை காக்கும் வண்ணம் தூய்மை பணி செய்ய தமிழக காவல் துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார்.

    இதையடுத்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் ஆலோசனையின் பேரில்

    அனைத்துமகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் இரண்டாவது சனிக்கிழமை தூய்மை பணி மேற்கொண்டார்.

    அப்போது அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் இருந்த குப்பைகளை அப்புறப்படுத்தியும் போலீஸ் நிலையத்தில் ஒட்டடை அடித்து தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது

    • ஜெயங்கொண்டத்தில் குழந்தைகள் ஆரோக்கியம் குறித்த மருத்துவ முகாம் நடை பெற்றது.
    • மருத்துவர் உமா தலைமையில் குழந்தைகள் ஊட்டச்சத்துகுறைபாடு உள்ளதா மேலும் குழந்தைகளுக்கு எடை குறித்து மருத்துவ பரிசோதனை செய்தனர்.


    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் குழந்தைகள் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் குறித்து மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன் அடிப்படையில் மீன்சுருட்டி நடமாடும் மருத்துவமனை அரசு சமுதாய சுகாதார நிலையம் சார்பாக ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதியில் உள்ளஅங்கன்வாடிமையங்களில் மருத்துவர் உமா தலைமையில் குழந்தைகள் ஊட்டச்சத்துகுறைபாடு உள்ளதா மேலும் குழந்தைகளுக்கு எடை குறித்து மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

    இதில் ஜெயங்கொண்டத்தில் உள்ள அடி பள்ளம் தெரு நாச்சியார் அம்மன் கோவில் தெரு செங்குந்தபுரம் வடக்கு தெற்கு உள்ளிட்ட மையங்களில் குழந்தைகளுக்கு பரிசோதனை முகாம் நடை பெற்று வருகிறது.




    • விழாவில் கலந்து கொண்ட ஆண்களில் பெரும்பாலானோர் சட்டை அணியாமல் இடுப்பில் வெள்ளை வேட்டியும், தலையில் துண்டும் கட்டியிருந்தனர்.
    • பல்வேறு மந்தைகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சாமி மாடுகளை அழைத்து வந்து கோவில் முன் பூஜைகள் செய்யப்பட்டது.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே உள்ள பெரியூர்பட்டியில் மந்தையம்மன் கருத்தநாயக்கர் மந்தை கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 5-ந்தேதி பக்தர்கள் காப்பு கட்டி விரதத்துடன் தொடங்கியது. 8 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் 18 பட்டிக்கு கட்டுப்பட்ட 96 கிராமங்களை சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் தங்கள் பகுதியில் வளர்க்கும் சாமி மாடுகளுடன் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட ஆண்களில் பெரும்பாலானோர் சட்டை அணியாமல் இடுப்பில் வெள்ளை வேட்டியும், தலையில் துண்டும் கட்டியிருந்தனர்.

    திருவிழாவில் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான அதில் அந்த சமுதாய மக்கள் சடங்குகள் செய்து, பல்வேறு மந்தைகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சாமி மாடுகளை அழைத்து வந்து கோவில் முன் பூஜைகள் செய்யப்பட்டது.

    கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொத்துகொம்பு எல்லைக்கு அனைத்து சாமி மாடுகளை அழைத்து சென்றனர். அங்கிருந்து சாமி மாடுகள் கரடு முரடான பாதையில் கோவிலை நோக்கி விரட்டி வந்தனர். மாடுகளுடன் அந்த சமுதாயத்தை சேர்ந்த ஆண்கள் காலில் செருப்பு அணியாமல் ஓடி வந்தனர். பின்னர் மாலை தாண்டும் நிகழ்ச்சியில் தரையில் போடப்பட்டு இருந்த வெள்ளை துணியை தாண்ட வைத்தனர்.

    இதில் 200 சாமி மாடுகள் பங்கேற்றது. மாலை தாண்டுதலில் முதல், 2-வது மற்றும் 3-வதாக வந்த சாமி மாடுகள் கவுரவிக்கப்பட்டது.

    • அரியலூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்
    • வீட்டின் முன்பக்க கதவு கடப்பாறையால் உடைக்கப்பட்ட நிலையில் திறந்த நிலையில் கிடந்ததை பார்த்து நாகலிங்கம் அதிர்ச்சி அடைந்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சீனிவாசன் நகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம் (வயது 45). இவர் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி மீனாட்சி, அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் விடுதியில் தங்கி படித்து வரும் நிலையில், இளைய மகன் பெற்றோருடன் உள்ளார்.

    இந்த நிலையில், நேற்று இரவு அதே பகுதியில் வசித்து வரும் மீனாட்சியின் தாய் வீட்டிற்கு நாகலிங்கம் தனது மனைவி மற்றும் இளைய மகனுடன் சென்றிருந்தார். இரவு அங்கேயே தங்கிவிட்டு இன்று காலை மீண்டும் தனது வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு கடப்பாறையால் உடைக்கப்பட்ட நிலையில் திறந்த நிலையில் கிடந்ததை பார்த்து நாகலிங்கம் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 3 பீரோக்களும் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதிலிருந்த 6 பவுன் நகை, வங்கி பாஸ் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போயிருந்தது.

    இதுகுறித்து நாகலிங்கம் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொள்ளை குறித்து துப்பு துலக்க மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணவர்கள் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர்.

    நள்ளிரவில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

    • இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி (வயது 70)
    • எதிர்பாராதவிதமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி (வயது 70)

    இவர் தனது ஊரிலிருந்துஜெயங்கொண்டம் வாரச்சந்தையில் காய்கறி வாங்க சந்தைக்கு வந்துவிட்டு மேலும் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக 4 ரோட்டில் இருந்து சிதம்பரம் ரோட்டில் உள்ள மளிகை கடைக்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.இதில் மயங்கி கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமானூரில் நாளை 15-ந் தேதி பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்ய படுகிறது.
    • ஏலாக்குறிச்சி, தூத்தூர், குருவாடி, மேலராமநல்லூர், திருமழபாடி, இலந்தை கூடம், அரண்மனைக்குறிச்சி, சாத்தமங்கலம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

    அரியலூர்:

    திருமானூரில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்ய படுகிறது

    திருமானூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் உள்ள சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை 15-ந் தேதி (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

    இதனால் இங்கிருந்து மின் வினிேயாகம் பெறும் திருமானூர், ஏலாக்குறிச்சி, தூத்தூர், குருவாடி, மேலராமநல்லூர், திருமழபாடி, இலந்தை கூடம், அரண்மனைக்குறிச்சி, சாத்தமங்கலம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரியலூரில் ரூ.79 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட சப்-கலெக்டர் பங்களா யாரும் குடியேறாததால் புதர் மண்டி கிடக்கிறது.
    • அந்த குடியிருப்பு வளாகத்தில் மது அருந்துவது உட்பட பல்வேறு குற்றச்செயல்களுக்கு சமூக விரோதிகள் பயன்படுத்துகின்றனர்.

    அரியலூர் :

    அரியலூரில் திருச்சி சாலையில் சப்-கலெக்டருக்கான புதிய குடியிருப்பு ரூ.79.50 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டது. பின்னர் கடந்த 2020 ஜூன் 1-ந்தேதி இந்த குடியிருப்பு திறக்கப்பட்டது.

    ஆனால் அந்த குடியிருப்பில் இதுவரை சப்-கலெக்டரோ அல்லது கோட்டாட்சியரோ குடியேறவில்லை. இதனால் அந்த கட்டிடத்தை சுற்றி சீமைக்கருவேல முட்செடிகள் ஆளுயரத்திற்கு மேல் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது.

    அத்துடன் கட்டிடமும் பாழடைந்து வருகிறது. எனவே மக்களின் வரிப்பணத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அந்தக் கட்டிடத்தை முறையாக பயன்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து சமூக ஆர்வலரும், மாவட் விவசாயிகள் சங்க தலைவருமான செங்கமுத்து கூறுகையில், இந்த குடியிருப்பு கட்டிடம் கட்டி திறக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் பயன்படுத்தப்படாமல் உள்ளது வேதனை அளிக்கிறது.

    இதனால் மக்கள் வரிப்பணத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடம் பாழடைந்து வருகிறது. அந்த குடியிருப்பு வளாகத்தில் மது அருந்துவது உட்பட பல்வேறு குற்றச்செயல்களுக்கு சமூக விரோதிகள் பயன்படுத்துகின்றனர்.

    எனவே சப்-கலெக்டருக்கான அந்த குடியிருப்புக் கட்டிடத்தை சுற்றி வளர்ந்துள்ள சீமைக்கருவேல முட்செடிகளை நிரந்தரமாக அப்புறப்படுத்தி கட்டிடத்தை உடனடியாக பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடை பெற்றது.
    • நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட பத்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.

    பழமையான இக்கோவிலில் தீ மிதி திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, அம்மன் பிறப்பு, திருக்கல்யாணம், குறவஞ்சி நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடைபெற்று அம்மன் வீதி உலா நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. பக்தி சிரத்தையுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட பத்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர்.

    இந்த நிகழ்வில் உடையார்பாளையம், வாணதிரையன்பட்டினம், நாயகனைப்பிரியாள் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம நாட்டாமைகள் செய்திருந்தனர்

    • அரியலூர் அருகே மணகெதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சுங்கச்சாவடியை உடனடியாக மூட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • 60 கிலோ மீட்டருக்குள் சுங்கச்சாவடி அமைத்தால் உடனடியாக அகற்றி விட வேண்டும் என மத்திய அரசின் ஆணையில் உள்ளது.

    அரியலூர் :

    அரியலூர் அருகே மணகெதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சுங்கச்சாவடியை உடனடியாக மூட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    அரியலூர் அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பல ஆண்டுகளாக காட்டாற்று நீர் மணகெதி கிராமத்தில் உள்ள சின்ன ஏரியை சென்றடையும். பின்னர் பெரிய ஏரிக்கும் செல்லும், இதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் நீர்நிலைகளை நீர்வழி பாதையை ஆக்கிரமித்து மண் அடித்து, தூற்றி விட்டதாக கூறப்படுகிறது. அங்கு சட்டவிரோதமாக சுங்க சாவடி அமைக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

    60 கிலோ மீட்டர் இடைவெளியில் சுங்க சாவடியை அமைக்க வேண்டும், 60 கிலோ மீட்டருக்குள் சுங்கச்சாவடி அமைத்தால் உடனடியாக அகற்றி விட வேண்டும் என மத்திய அரசின் ஆணையில் உள்ளது.

    டால்மியாபுரத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மணகெதியில் சுங்கச் சாவடி அமைத்து சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறார்கள். 100 சதவீத சாலை பணிகள் முடிந்தவுடன் தான் சுங்கச்சாவடி செயல்படவேண்டும் சாலை பணிகள் முடியாத நிலையில் அடிப்படை வசதிகள் குடிநீர் வசதி, கழிவறை வசதி, முதலுதவி சிகிச்சை வசதி என எதுவும் இல்லை.

    இந்த சூழ்நிலையில் சட்டவிரோதமாக சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பது சட்டவிரோத செயலாகும். சட்ட விரோதமாக கட்டணம் வசூலித்து வரும் மணகெதி சுங்கச்சாவடியை உடனடியாக மூட வேண்டும்

    என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் தா.பழூர் ஒன்றிய செயலாளர் புகழேந்தி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    ×