என் மலர்
நீங்கள் தேடியது "அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகைகள் கொள்ளை"
- அரியலூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்
- வீட்டின் முன்பக்க கதவு கடப்பாறையால் உடைக்கப்பட்ட நிலையில் திறந்த நிலையில் கிடந்ததை பார்த்து நாகலிங்கம் அதிர்ச்சி அடைந்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சீனிவாசன் நகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம் (வயது 45). இவர் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி மீனாட்சி, அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் விடுதியில் தங்கி படித்து வரும் நிலையில், இளைய மகன் பெற்றோருடன் உள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு அதே பகுதியில் வசித்து வரும் மீனாட்சியின் தாய் வீட்டிற்கு நாகலிங்கம் தனது மனைவி மற்றும் இளைய மகனுடன் சென்றிருந்தார். இரவு அங்கேயே தங்கிவிட்டு இன்று காலை மீண்டும் தனது வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு கடப்பாறையால் உடைக்கப்பட்ட நிலையில் திறந்த நிலையில் கிடந்ததை பார்த்து நாகலிங்கம் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 3 பீரோக்களும் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதிலிருந்த 6 பவுன் நகை, வங்கி பாஸ் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போயிருந்தது.
இதுகுறித்து நாகலிங்கம் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொள்ளை குறித்து துப்பு துலக்க மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணவர்கள் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர்.
நள்ளிரவில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.






