என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம்
    X
    அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம்

    10 மாதத்தில் தி.மு.க.வின் சாயம் வெளுத்து விட்டது- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வேலூரில் நடந்தது. இதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    மக்களுக்கான கட்சி அ.தி.மு.க. தான். நாம் கொஞ்சம் அசந்த நேரத்தில் ஆட்சியை இழந்தோம். இனி அனைத்து தேர்தலிலும் 100 சதவீத வெற்றியை பெறுவோம்.

    அரசியல் வரலாற்றில் தடம்பதித்த, சாதனை படைத்த இயக்கம் அ.தி.மு.க. தான். கடந்த சட்டமன்ற தேர்தலில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டோம். தி.மு.க. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்தார்கள்.

    10 மாத ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக இருந்து வருகிறது. 10 மாதத்தில் தி.மு.க.வின் சாயம் வெளுத்து விட்டது. தி.மு.க. கொடுத்த 505 வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.

    ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் ரத்து என கூறினார். ஆனால் நீட் தேர்வுக்கு மூலகாரணமாக அஸ்திவாரம் போட்டது தி.மு.க. தான். தற்போதுவரை அதை ரத்து செய்யாமல் நாடகமாடி வருகிறார்கள்.

    அரசு பள்ளி மாணவர்களின் டாக்டர் கனவு பறிபோய் விடக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க. கொண்டு வந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தற்போது 531 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

    இந்திய அரசியல் அமைப்புபடி கவர்னர் அவரது பணியை செய்கிறார். அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவரை திரும்ப பெறச்சொல்லி பகட்டு அரசியலை தி.மு.க. செய்து வருகிறது.

    பாராளுமன்றத்தில் பிரச்சினை செய்கிறார்கள். இது என்ன நியாயம். நீட்டுக்கு எதிராக சட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து தி.மு.க. விளம்பர அரசியலை செய்து வருகிறது.

    மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு பிரச்சனை உலகம் முழுவதும் பரவியது. இது தொடர்பாக அப்போது பிரதமரிடம் பேசி 24 மணி நேரத்தில் தீர்வு கண்டோம்.

    கூட்டத்தில் பங்கேற்றவர்கள்


    தற்போது தி.மு.க. அரசு மக்களிடம் வசமாக மாட்டியுள்ளது. விடியல் தருவதாக சொன்னார்கள். தினமும் விடிகிறது. ஆனால் நல்லாட்சி விடியவில்லை.

    பொங்கலுக்கு தி.மு.க. கொடுத்த பொருட்களை மக்களால் சாப்பிட முடியவில்லை. அதை மாட்டுக்கு கொண்டு போய் வைத்தால் மாடு நம்மை பார்த்து முறைக்கிறது. தேர்தல் வாக்குறுதியின் படி அவர்கள் பணமும் கொடுக்கவில்லை.

    மக்கள் தற்போது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். அ.தி.மு.க.வின் நல்லாட்சி எப்படி மாறியது என மக்கள் தற்போது சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள். தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்காக கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறியும், தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும் வாக்குகளை கேட்கவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×