search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    தமிழகத்தில் ஒமைக்ரானை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

    சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள், தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

    உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டம் வாரியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    குறிப்பாக, தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு பணி தீவிரமாக்கப்பட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்தும் தமிழ்நாடு அரசு சார்பில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பூசி

    இருப்பினும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1800 ஆக உயர்ந்து விட்டது. மேலும் 121 பேருக்கு ஒமைக்ரான் பரவி விட்டது. ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவதோடு, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புகளை கடுமையாக்குவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, அபராதம் விதிப்பது, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    மேலும், 10-ந்தேதி வரை 50 சதவீத கட்டுப்பாடு அமலில் உள்ள நிலையில் பொங்கல் பண்டிகைகளின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதேப்போல், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை மேம்படுத்துவது, ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்துவது, ஆம்புலன்ஸ் வாகனங்களை அதிகரித்தல், ரேண்டம் முறையில் கூடுதல் பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.


    Next Story
    ×