search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை - ராமதாஸ் புகாருக்கு மு.க.ஸ்டாலின் பதில்

    பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் புகாருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 16-ந்தேதி நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு சென்னை திரும்பும் வழியில் தூத்துக்குடியில் தியேட்டருக்கு சென்று ‘அசுரன்’ படம் பார்த்தார்.

    பின்னர் படத்தை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். அதில் ‘அசுரன்’ படம் மட்டுமல்ல. பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தை சாடும்- சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்.

    கதை-களம்-வசனம் என வென்று காட்டி இருக்கும் வெற்றிமாறனுக்கும், வாழ்ந்து காட்டியிருக்கும் தனுசுக்கும் பாராட்டுக்கள் என தெரிவித்து இருந்தார்.

    ராமதாஸ்

    இதை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். அதில், “பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் ‘அசுரன்’ படம் அல்ல. பாடம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆஹா அற்புதம், அசுரன் கற்றுத்தந்த பாடத்தை ஏற்று முரசொலி அலுவலகத்துக்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்” என கூறியிருந்தார்.

    இது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. முரசொலி அமைந்து இருக்கும் இடம் பஞ்சமி நிலமா? இல்லையா? என்று பலரும் விவாதிக்கத் தொடங்கினர்.

    இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    மருத்துவர் ராமதாஸ் தற்போது முரசொலி இருக்கும் இடத்தை பஞ்சமி நிலம் என்று பச்சையாக புளுகி இருக்கிறார். அது பஞ்சமி நிலம் இல்லை. வழிவழியாக தனியாருக்கு பாத்தியப்பட்ட பட்டா-மனை.

    நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் ராமதாஸ் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். அவர் சொல்வதை நிரூபிக்க தவறி, அது பச்சைப்பொய் என்றால், அவரும், அவரது மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    முரசொலி அலுவலகத்துக்கான பட்டாவையும் அவர் டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார்.

    Next Story
    ×