search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்
    X
    பெண்

    தற்கொலைக்கு முயன்ற பெண்ணிற்கு நூதன தண்டனை வழங்கிய நீதிபதி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தற்கொலைக்கு முயன்ற பெண்ணிற்கு நீதிபதி நூதன தண்டனை வழங்கினார்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா (வயது 25). இவர் செக்காலைவீதியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் கடையில் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் தொந்தரவு செய்ததாக கூறி கார்த்திகா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    அதற்கு முன்னதாக வாட்ஸ்-அப்பில் அழுகையோடு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தார். இந்த வாட்ஸ்-அப் தகவல் காரைக்குடி நகர் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் கார்த்திகா சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

    இந்தநிலையில் காரைக்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நடுவர் பாலமுருகன் தாமாக முன்வந்து, இது குறித்து விசாரிக்க கார்த்திகாவை கோர்ட்டில் ஆஜர்படுத்த வடக்கு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் கார்த்திகாவை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது நடந்த சம்பவம் குறித்து போலீசார் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்று கார்த்திகாவிடம் நீதிபதி கேட்டதற்கு, அவர் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று கூறினார். பின்பு போலீசாரிடம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டபோது, போலீசார், கார்த்திகா எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கூறியதாக நீதிபதியிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து கார்த்திகாவிற்கு அறிவுரை வழங்கிய நீதிபதி, காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு ஒரு வாரம் சென்று, தற்கொலை முயற்சி செய்து, அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம், தற்கொலை மனநிலையை போக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆலோசனை (கவுன்சிலிங்) வழங்க உத்தரவிட்டார்.
    Next Story
    ×