search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் தட்டுப்பாடு - எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
    X

    குடிநீர் தட்டுப்பாடு - எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

    சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் தண்ணீர் தட்டுப்பாடு பற்றி முழுமையான ஆய்வு செய்யப்பட்டது.
    சென்னை:

    பருவ மழை பெய்யாததால் தமிழ்நாடு முழுவதும் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் 4 குடிநீர் ஏரிகளும் வறண்டு விட்டதால் இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் மக்களை மிக கடுமையாகப் பாதித்துள்ளது.

    சென்னை நகர மக்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுவதால் 40 சதவீதம் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது சென்னைக்கு தினமும் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது.

    நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்தின்கீழ் கணிசமான தண்ணீர் பெறப்படுகிறது. வீராணம், நெய்வேலியில் இருந்தும் சென்னைக்கு தண்ணீர் வருகிறது. இவை தவிர திருவள்ளூர் மாவட்ட விவசாய கிணறுகளில் இருந்தும் தண்ணீர் பெறப்படுகிறது.

    நவம்பர் மாதம் வரை சென்னை மக்களுக்கு தினமும் 525 மில்லியன் லிட்டர் தண்ணீரை வழங்க முடியும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தேவைப்பட்டால் வேலூரில் இருந்து ரெயிலில் தண்ணீர் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தந்து உதவ கேரளா முன் வந்துள்ளது. இது தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் அலுவலக அதிகாரிகள், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார்கள்.

    அப்போது அவர்கள், “தற்போது எங்கள் மாநிலத்தில் போதுமான அளவுக்கு பருவ மழை பெய்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் எங்களிடம் தேவைக்கும் அதிகமாகவே தண்ணீர் உள்ளது. அந்த உபரி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு தர கேரளா தயாராக உள்ளது.

    கேரளா குடிநீர் வாரியம் சார்பில் 20 லட்சம் லிட்டர் குடிநீரை அனுப்ப முடியும். திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் அந்த தண்ணீரை கொண்டு வர முடியும். தினமும் கூட எங்களால் இந்த அளவு தண்ணீரை சப்ளை செய்ய முடியும்” என்றனர்.

    கேரளா அதிகாரிகள் கூறியதை கேட்டதும், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு எப்படி கொண்டு வர முடியும் என்று தமிழக அதிகாரிகள் யோசித்தனர். அதற்கும் கேரளா மாநில முதல்-மந்திரி அலுவலக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், “கேரளாவில் கடந்த ஆண்டு வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டபோது, தமிழ்நாடு உள்பட பல பகுதிகளில் இருந்து குடிதண்ணீர் பெற்றோம். ரெயில்வே துறையில் அதற்கான வசதிகள் செய்து கொடுத்தனர். அந்த வசதி தற்போதும் உள்ளது.

    எனவே சென்னை நகர மக்களுக்கு எங்களால் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை ரெயிலில் அனுப்ப முடியும். தமிழக அரசு கேட்டுக் கொண்டால் தினமும் கூட குடிதண்ணீர் அனுப்ப தயாராக உள்ளோம்” என்று கூறினார்கள்.

    இதைக் கேட்ட தமிழக முதல்-அமைச்சர் அலுவலக அதிகாரிகள், இதுபற்றி எடப்பாடி பழனிசாமியிடம் தகவல் தெரிவிக்க முயன்றனர். ஆனால் அப்போது எடப்பாடி பழனிசாமி உடல் நல பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றிருந்தார். இதையடுத்து தமிழக அரசு அதிகாரிகள், “தண்ணீர் பிரச்சினையை நாங்களே சமாளித்து வருகிறோம். இப்போதைக்கு எங்களுக்கு தண்ணீர் வேண்டாம். தேவைப்பட்டால் கண்டிப்பாக கேரள அரசின் உதவியைக் கேட்போம்” என்றனர்.



    இந்த விபரத்தை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று தனது “பேஸ் புக்” பக்கத்தில் வெளியிட்டார். அதில் அவர், “கேரளாவின் உதவியை தமிழகம் நிராகரித்து விட்டது” என்று குறிப்பிட்டிருந்தார். இது பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தண்ணீர் தர முன் வந்ததற்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கேரளா தர தயாராக இருக்கும் தண்ணீரை தமிழக அரசு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

    இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    கேரளா வழங்கும் தண்ணீரை தமிழகம் ஏற்கவில்லை என்று வெளியாகி இருக்கும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை. ஆலோசிக்கிறோம் என்று கூறி இருக்கிறோம். இன்று நடக்க உள்ள குடிநீர் தட்டுப்பாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு முதல்-அமைச்சர் உரிய முடிவை அறிவிப்பார்.

    இவ்வாறு அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

    இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் தண்ணீர் தட்டுப்பாடு பற்றி முழுமையான ஆய்வு செய்யப்பட்டதாக தெரிகிறது.

    தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விவாதிக்கப்ட்டது. மேலும் கேரளாவிடம் இருந்து தண்ணீர் பெறுவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

    Next Story
    ×