search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்களை நேரடியாக சந்திக்க அமைச்சர்கள் தயங்குகிறார்கள்- தினகரன்
    X

    பொதுமக்களை நேரடியாக சந்திக்க அமைச்சர்கள் தயங்குகிறார்கள்- தினகரன்

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முழுமையாக சென்றடையாததால் பொதுமக்களை நேரடியாக சந்திக்க அமைச்சர்கள் தயங்குவதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #GajaCyclone
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பார்வையிட்டார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி சேதமடைந்த விவரங்களை கேட்டறிந்தார்.

    சோழகன்பட்டியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் உள்ள மக்களை அமைச்சர்கள் யாரும் இதுவரை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறவில்லை. ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் 24 மணி நேரமும் அதிகாரிகளையும் பணியாற்ற விடவில்லை. நிவாரண பணிகள் முழுமையாக மக்களை சென்றடையவில்லை. எனவே தான் பொதுமக்களை நேரடியாக சந்திப்பதற்கு அமைச்சர்கள் தயங்குகின்றனர்.

    இதனால்தான் காரிலேயே அவர்கள் வலம் வருகின்றனர். இத்தனைக்கும் இடையே பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அனைத்து கிராமங்களிலும் திண்டாடி வருகின்றனர். இதனை தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை, மத்திய அரசும் கண்டு கொள்ளவில்லை. மத்திய அரசு உடனடியாக தேசியப் பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து உடனடியாக முதற்கட்டமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

    கஜா புயலால் நான்கு மாவட்டங்களில் மட்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும். முகாம்களிலும், பள்ளிகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    இயல்பு நிலை திரும்பிவிட்டது என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற செயலில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அவர்கள் உடனடியாக களத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும்.


    புயலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணங்களை அரசு உடனடியாக கணக்கிட்டு வழங்க வேண்டும். தற்போதுதான் கிராமங்களில் வி.ஏ.ஓ.க்கள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி உள்ளதாக தகவல் வந்துள்ளது. உங்களது பணிகளை உடனடியாக முடித்து, இழப்பீடு தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #GajaCyclone #TNMinisters
    Next Story
    ×