search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயல் நிவாரண நிதியாக திமுக எம்.பி., எம்எல்ஏக்கள் ஒருமாத ஊதியத்தை அளித்துள்ளனர்- முக ஸ்டாலின்
    X

    கஜா புயல் நிவாரண நிதியாக திமுக எம்.பி., எம்எல்ஏக்கள் ஒருமாத ஊதியத்தை அளித்துள்ளனர்- முக ஸ்டாலின்

    தி.மு.க. பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கஜா புயல் நிவாரண நிதியாக தங்களது ஒரு மாத ஊதியத்தை அளித்துள்ளனர் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். #DMK #MKStalin #GajaCycloneRelief
    திருச்சி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க.வினர் நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் என்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    நிவாரண பொருட்களை சேகரித்து திருச்சியில் உள்ள தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமாறும் அவர் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.

    இன்று அதனை புயல் பாதித்த டெல்டா மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் நிவாரண பொருட்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

    இதில் ரூ.4 கோடி மதிப்புள்ள 400 டன் அரிசி, பருப்பு, ரவை, கோதுமை மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தேவையான பல்வேறு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக சென்று ஆய்வு செய்தேன். பாதிப்புகள் குறித்து அறிந்ததும் அவர்களுக்கு உதவுவதற்காக தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் சேகரித்து திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கு அனுப்பி வைக்கும்படி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கேட்டுக்கொண்டேன்.

    அவர்களும் தேவையான நிவாரண பொருட்களை திருச்சிக்கு அனுப்பி வைத்தனர். சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இன்று அந்த பொருட்கள் அனைத்தும் புயல் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    இந்த பணியில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களுக்கு நன்றியும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்ட முதல் நாளே நான் அங்கு சென்று பார்வையிட்டு உதவிகளை செய்ய உத்தரவிட்டேன். ஆனால் முதல்வர் மக்களை உடனடியாக சந்திக்கவில்லை. 7 நாட்களுக்கு பிறகு ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.




    அதையும் பாதியிலேயே முடித்து விட்டு திரும்பி விட்டார். அமைச்சர்கள் அனைவரும் சாலை வழியாக செல்லும்போது முதல்வர் மட்டும் செல்லாதது ஏன்? எந்த மாநில முதல்வரும் தமிழக முதல்வர் போல் செய்தது இல்லை. இன்று பிரதமரை சந்தித்து பேசி இருக்கிறார். இதிலும் அவர் சரியாக செயல்படவில்லை.

    பிரதமரை சந்திப்பதற்கு முன்பு கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட் டங்களில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், அனைத்து தரப்பினரையும் அழைத்து ஆலோசனை செய்து முழுமையான விபரங்களை திரட்டிய பின்னரே சென்று பேசியிருக்க வேண்டும். அதே எதிர்க்கட்சியினரையும் அழைத்து ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும்.

    ரூ.15 ஆயிரம் கோடி நிவாரண நிதி கேட்டிருப்பதாக கூறுகிறார்கள். முதல் கட்டமாக ரூ.1,500 கோடி இடைக்கால நிவாரண நிதியாக வழங்கவேண்டும் என கேட்டிருக்கிறார்கள். இதையாவது அவர்கள் சரியாக செயல்பட்டு பெற்றுத்தர வேண்டும்.

    ஏற்கனே தானே, வர்தா, ஒக்கி ஆகிய புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு சரியான நிதியை தரவில்லை. தமிழக அரசு ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 573 கோடி நிதி கேட்டது. ஆனால் மத்திய அரசு அப்போது ரூ.2 ஆயிரத்து 12 கோடியை மட்டுமே வழங்கியது.

    இப்போது எந்த அளவிற்கு நிதியை வழங்குவார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மத்திய அரசு மத்திய கஜா புயல் பாதிப்பு குறித்து அறிந்த உடனேயே நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். மாநில அரசு அறிக்கை கொடுத்த பிறகுதான் நிதி வழங்கவேண்டும் என்று நினைப்பது சரியில்லை.

    இதற்கு முன்பு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்த போது இதுபோன்ற பேரிடர் காலங்களில் மத்திய அரசிடம் போதிய நிதியை பெற்றுத்தரவில்லை என்று கூறுவது தவறு. பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்க கூடாது. இப்படி கூறுவது போதிய நிதியை பெற்றுத்தர போவதில்லை என்பதை காட்டுகிறது.

    பா.ஜ..க.வுடன் அ.தி.மு.க. அரசு இணக்கமாக இருக்கும்போது, போதிய நிவாரண நிதியை பெற்றுத்தருவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது? தி.மு.க. பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கஜா புயல் நிவாரண நிதியாக தங்களது ஒரு மாத ஊதியத்தை அளித்துள்ளனர்.

    நிவாரண பணிகளை மேற்கொள்ள அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #GajaCycloneRelief
    Next Story
    ×