search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு தரும் தொகை, யானை பசிக்கு சோளப்பொறி போன்று தான் அமையும்- வைகோ
    X

    மத்திய அரசு தரும் தொகை, யானை பசிக்கு சோளப்பொறி போன்று தான் அமையும்- வைகோ

    கஜா புயலுக்கு மத்திய அரசு தரும் தொகை, யானை பசிக்கு சோளப்பொறி போன்று தான் அமையும் என்று வைகோ தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #GajaCyclone #CentralGovt
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சிக்கு வந்த ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ, இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சோழவள நாடு என்று பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்று, மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்து அவர்களை உயிரோடு சாகடித்து விட்டனர்.

    மேலும் தற்போது வீசிய கஜா புயலுக்கு 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகி உள்ளது. பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் அழிந்து விட்டது. வாழை, கரும்பு, பயிர்கள் போன்றவை நாசமாகி விட்டன.

    புயல் பாதிப்புகளுக்காக தமிழக அரசு உடனே ரூ.1000 கோடி ஒதுக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் பிரதமரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரண தொகையாக ரூ.13 ஆயிரம் கோடி கேட்க உள்ளார். ஆனால் இதில் 4 சதவீதம் கூட மத்திய அரசிடம் இருந்து வராது. அவர்கள் தரும் நிதி, யானை பசிக்கு சோளப் பொறி போன்று அமையும்.

    தமிழகத்தில் உள்ள அதிகாரிகள் இந்திய அளவில் சிறப்பாக செயல்படும் அதிகாரிகள் என்று பெயர் பெற்றவர்கள். அதை நிரூபித்து விட்டார்கள். அனைத்து மாவட்ட கலெக்டர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். மேலும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் உதயகுமார் ஆகியோரை பாராட்டியே ஆக வேண்டும்.


    மின்வாரிய ஊழியர்கள், காவல் துறையினர் இரவு- பகல் பாராமல் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கஜா புயலில் அ.தி.மு.க. அரசு சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் முதல்வர் செய்த தவறு, புயல் வந்த 8 மணி நேரத்தில் களத்தில் நின்று பணியாற்றிருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை.

    தொடர்ந்து விவசாய கடன், கல்விக்கடன், வணிக கடன்களின் வட்டிகளை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். 5 ஆண்டுகளுக்கு பிறகே கடனை திரும்ப வசூல் செய்ய வேண்டும். மேலும் அரசு அளிக்கும் நிவாரண தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும்.

    தொடர்ந்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. மோடி பிரதமராக இருப்பதற்கே தகுதி இல்லாதவர் போன்று செயல்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko #GajaCyclone #CentralGovt
    Next Story
    ×