search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    18 எம்எல்ஏக்கள் நீக்கத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் செவ்வாய்கிழமை அப்பீல்
    X

    18 எம்எல்ஏக்கள் நீக்கத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் செவ்வாய்கிழமை அப்பீல்

    18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கத்தை எதிர்த்து வருகிற செவ்வாய்க்கிழமை சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டுக்கான மனு தாக்கல் செய்யப்படுகிறது. #18MLAsCaseVerdict #SupremeCourt
    சென்னை:

    முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்ததால் 18 அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார்.

    இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வெளியிட்டனர். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று இந்திராபானர்ஜி தீர்ப்பளித்தார். செல்லாது என்று நீதிபதி சுந்தர் உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க மூன்றாவது நீதிபதியாக சத்திய நாராயணன் அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் தனது தீர்ப்பை வெளியிட்டார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று நீதிபதி சத்திய நாராயணன் தீர்ப்பளித்தார்.

    இதைத்தொடர்ந்து 18 தொகுதிகளையும் காலி இடமாக அறிவிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்தக்கட்டமாக அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் பணியை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கும் என்று தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மதுரையில் கூடி ஆலோசித்தனர். டி.டி.வி.தினகரன் முன்னிலையில் நேற்று அந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. வக்கீல்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இடைத்தேர்தலை சந்திப்பதா? அல்லது மூன்றாவது நீதிபதி தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்வதா? என்று ஆய்வு செய்தனர். அப்பீல் செய்வதற்கு 90 நாட்கள் அவகாசம் உள்ளது. என்றாலும் அதற்கு முன்னதாக அப்பீல் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-


    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

    எங்கள் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், டெல்லியில் பிரபல வழக்கறிஞர்களான கபில் சிபில், அசோக் சிங்வி ஆகியோரை தொடர்பு கொண்டு எங்களுக்காக சுப்ரீம்கோர்ட்டில் வாதாட ஏற்பாடு செய்து வருகிறார். வருகிற செவ்வாய்க்கிழமை (30-ந்தேதி) சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டுக்கான மனு தாக்கல் செய்யப்படும்.

    ஏற்கனவே 2 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு 650 பக்கம் உள்ளது. இப்போது 3-வது நீதிபதியின் தீர்ப்பு 450 பக்கம் உள்ளது. இவற்றை டெல்லியில் உள்ள வழக்கறிஞர்கள் அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.

    முதல்-அமைச்சரை மாற்றக்கோரி கவர்னரிடம் மனு கொடுத்ததற்காக சபாநாயகர் எங்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். ஆனால் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே சபாநாயகரின் ஒருதலைபட்சமான நடவடிக்கையை எதிர்த்து நாங்கள் இறுதிவரை போராடுவோம். இதில் கண்டிப்பாக எங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

    கர்நாடகத்தில் எடியூரப்பா வழக்கிலும் இதேபோல்தான் நடந்தது. இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் வெற்றி கிடைத்தது. அதேபோல் எங்களுக்கும் வெற்றி கிடைக்கும்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, சுந்தர் ஆகிய 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால்தான் 3-வது நீதிபதி சத்திய நாராயணன் நியமிக்கப்பட்டார்.

    இவர் ஏற்கனவே சொன்ன 2 நீதிபதிகளின் தீர்ப்பில் எது சரி என்று பார்த்துதான் தீர்ப்பு கூற வேண்டும். ஆனால் அதை கவனத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக தீர்ப்பு கூறி உள்ளார். இது விதியை மீறியதாகும்.

    இதுபற்றியும் சுப்ரீம் கோர்ட்டில் எடுத்து வைத்து வாதாடுவோம். நாங்கள் மேல்முறையீடு செய்தாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் 18 பேரும் மீண்டும் தேர்தலை சந்திக்கவும் தயாராகவே உள்ளோம்.

    தினகரனை ஆதரிக்கும் ஒரே காரணத்துக்காக ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உள்ளதாக கேள்விப்படுகிறோம். இவர்கள் 3 பேர் மீதும் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியாது.

    இவ்வளவு ஏன்? எங்கள் 18 பேரையும் அ.தி.மு.க.வில் இருந்து இன்னும் நீக்க முடியாமல்தான் உள்ளனர். தைரியம் இருந்தால் நீக்கிப் பார்க்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #18MLAsCaseVerdict #SupremeCourt
    Next Story
    ×