search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காந்தி மண்டபத்தில் உள்ள அஸ்திக்கட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்திய காட்சி.
    X
    காந்தி மண்டபத்தில் உள்ள அஸ்திக்கட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்திய காட்சி.

    சபரிமலையில் வழக்கமான நடைமுறை தொடரவே பக்தர்கள் விருப்பம்- பொன்.ராதாகிருஷ்ணன்

    சபரிமலை கோவிலில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தற்போது அந்த கோவிலில் உள்ள வழக்கமான நடைமுறைகளே தொடர வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #Sabarimala
    கன்னியாகுமரி:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பது தொடர்பாக தமிழக அரசு ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது. அதில் எந்த பிரச்சனையும் இல்லை. நிச்சயமாக எய்ம்ஸ் ஆஸ்பத்திரி வந்தே தீரும்.

    தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு யாரையும் கூப்பிட்டு நீங்கள் எடுங்கள் என்று அழைப்பதில்லை. வெளிப்படையாக டெண்டர் தகுதியானவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது. ஆனால் கறைபடிந்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க. போன்ற கட்சிகள்தான் இதுபோன்ற திட்டத்தை எதிர்க்கின்றன.

    ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைகள் வைத்துள்ளார்கள். ஒரே மதத்தில் ஒவ்வொரு இடத்திற்கென்று வழிபாட்டு முறைகளில் மாற்றம் உள்ளது. இந்த வழிபாட்டு முறைகள் ஆரம்ப காலத்தில் எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ அதை மழுங்கடிக்க கூடிய தகுதி யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை.


    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பொறுத்தவரை சபரிமலை கோவில் மீது அதீத நம்பிக்கை கொண்டிருக்கிற பக்தர்கள் அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தற்போது அந்த கோவிலில் உள்ள வழக்கமான நடைமுறைகளே தொடர வேண்டும் என விரும்புகிறார்கள்.

    இந்த பிரச்சனைக்கிடையே மசூதிக்குள் பெண்களை வழிபாட்டுக்கு அனுமதிக்கலாமா? என்ற கேள்வி வந்து கொண்டிருக்கிறது. இது எல்லாம் விவாதத்திற்குரிய வி‌ஷயம் கிடையாது. பெரியவர்கள் அந்த காலத்தில் வகுத்து வைத்திருக்கிறார்கள் என்றால் அதில் கண்டிப்பாக முக்கியத்துவம் இருக்கும்.

    41 நாட்கள் விரதம் இருந்து போடக்கூடிய மாலையை சபரிமலைக்கு சென்றுவிட்டு கழற்றும் வரைக்கும் பக்தர்கள் மனைவி, சகோதரிகளையோ ஏறெடுத்து பார்க்க மாட்டார்கள். அந்தளவுக்கு கடுமையாக விரதம் கடைப்பிடிக்கின்றனர். எனவே இந்த மாதிரி இருக்ககூடாது என்ற சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது.

    அதேபோல மசூதிக்குள் தொழுகை நடக்கும் போது இறைவன் பால் ஒட்டுமொத்த சிந்தனையும் செல்ல வேண்டும் என்று தான் அந்த வழிபாட்டு முறையை வைத்துள்ளார்கள். எதுவாக இருந்தாலும் அந்தந்த மதத்தின் வழிபாட்டு முறைகளில் தலையிட யாரும் முயற்சிப்பது சரியான ஒன்றாக நான் கருதவில்லை.

    கன்னியாகுமரி துறைமுக திட்டம் முன்னேற்ற நிலையில் உள்ளது. விரைவில் இத்திட்டம் வரும். நரிக்குளம் நான்கு வழிச்சாலை இணைப்பு பாலப்பணிகள் முடிந்து தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் முத்துகிருஷ்ணன் உடனிருந்தார். #BJP #PonRadhakrishnan #Sabarimala #GandhiJayanti150  #MahatmaGandhi
    Next Story
    ×