search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமரின் பொதுக்கூட்ட பேச்சுக்கு நாராயணசாமி கடும் கண்டனம்
    X

    பிரதமரின் பொதுக்கூட்ட பேச்சுக்கு நாராயணசாமி கடும் கண்டனம்

    சரித்திரம் மாறி வருவதை தெரியாமல் பிரதமர் மோடி பேசியுள்ளார் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை லாஸ் பேட்டையில் நடந்த பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.

    பிரதமர் மோடி பேசும் போது, “நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது. ஜூன் மாதத்துக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் ஒரே முதலமைச்சராக நாராயணசாமி மட்டுமே இருப்பார் என்று கூறினார்.

    இதற்கு முதலமைச்சர் நாராயணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறிய தாவது:-

    எந்த கட்சிக்கும் தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். பாராளுமன்றத்தில் 2 இடங்களை பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. மக்கள்தான் வெற்றி, தோல்வி குறித்து தீர்ப்பு அளிப்பார்கள். பிரதமர் முடிவு செய்து விட முடியாது.

    திரிபுரா, மிசோரம், நாகலாந்து, மேகாலயா ஆகிய 4 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 2 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கண்டிப்பாக காங்கிரஸ் அமோகமாக வெற்றி பெறும்.

    வருகிற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி.

    அதைத்தொடர்ந்து அரியானாவில் சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மராட்டியத்திலும் இனி காங்கிரஸ் ஆட்சிதான் வரும்.

    பாரதிய ஜனதா அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே, மக்கள் ஒட்டு மொத்தமாக காங்கிரஸ் பக்கமும், மதச்சார்பற்ற அணியின் பக்கமும் திரும்பி உள்ளனர். சரித்திரம் மாறி வருகிறது.

    இதனை தெரிந்து கொள்ளாமல் எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் வெற்றி பெறாது என்று பிரதமர் விமர்சித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. ஒரு நாட்டின் பிரதமர் இப்படி ஒரு அரசியல் கட்சியை பற்றி விமர்சனம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.



    நியமன எம்.எல்.ஏ.க்கள் செயல்படுவதை நான் தடுக்கவில்லை. எனக்கு எந்த வேலையும் இல்லை. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க வேண்டும். எங்களை பொறுத்த வரை சட்டப்படியும். விதிமுறைகள்படியும் 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் நேரடியாக நியமிக்க மத்திய அரசுக்கோ, உள்துறை அமைச்சகத்துக்கோ அதிகாரம் கிடையாது.

    உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரை பிரதமருக்கு தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரங்க சாமி முதலமைச்சராக இருந்த போது, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஒரு பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த வழக்கு உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் தேர்தல் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். tamilnews
    Next Story
    ×