search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ பிடித்த கட்டிடம் அரசு சார்பில் இடிக்கப்படும்: அமைச்சர் உதயகுமார்
    X

    தீ பிடித்த கட்டிடம் அரசு சார்பில் இடிக்கப்படும்: அமைச்சர் உதயகுமார்

    தியாகராய நகரில் தீ விபத்துக்குள்ளான கட்டிடத்துக்கு பக்கத்தில் உள்ள கட்டிடங்கள் பாதிக்காமல் அக்கட்டிடம் அரசு சார்பில் இடிக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
    சென்னை:

    தீ விபத்துக்கு உள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

    பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் 7 மாடி கட்டிடத்தில் துரதிருஷ்டவசமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இறைவன் அருளால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    தீ விபத்து ஏற்பட்டவுடன் உடனடியாக தீயணைப்பு படையினரும், மீட்பு குழுவினரும் விரைந்து வந்ததால் கட்டிடத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தற்போது தீயை அணைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

    நேற்று இரவு முழுவதும் வருவாய் துறை, பொதுப்பணி துறை அதிகாரிகளும், போலீசாரும், தீயணைப்பு துறையினரும் இணைந்து இங்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

    தீயணைப்பு படையினர் தங்கள் உயிரை பணயம் வைத்து கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த போதிலும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


    பாதுகாப்பு கருதியே சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை ஒட்டியுள்ள கடைகளை மூடச்சொல்லி இருக்கிறோம். அருகில் உள்ள மற்ற பகுதிகளில் எந்த பிரச்சனையும் இன்றி வணிகர்கள் வியாபாரம் செய்து வருகிறார்கள். தற்போது இந்த பகுதியில் இயல்பு நிலை மீண்டும் திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இப்போது நமக்கு இருக்கும் சவாலான பணி கட்டிடத்தை பாதுகாப்பான முறையில் இடிப்பதுதான் ஆகும். இந்த கட்டிடத்தை இடிக்கும் போது அருகில் உள்ள மற்ற கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். அரசு சார்பிலேயே இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    கேள்வி:- 7 மாடி கட்டிடம் கட்டப்பட்டதில் விதிமீறல்கள் இருப்பதாக கூறப்படுகிறதே? கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

    பதில்:- தற்போது எனது கட்டுப்பாட்டில் கீழ் உள்ள வருவாய்துறை சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விதி மீறல் பற்றி மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அதன் பின்னரே அதில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    கே:- இந்த கட்டிடம் எப்போது இடிக்கப்படும்?

    ப:- தற்போது தீயை அணைக்கும் பணிகள்தான் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அந்த பணிகள் முடிந்த பின்னர் உடனடியாக கட்டிடம் இடிக்கப்படும்.

    கே:- மவுலிவாக்கம் கட்டிடம் இடிக்கப்பட்டது போல இந்த கட்டிடமும் வெடி வைத்து தகர்க்கப்படுமா?

    ப:- எந்த முறையில் கட்டிடத்தை இடிப்பது என்பது பற்றி தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது. இதுபற்றி ஐ.ஐ.டி நிபுணர்கள், பொதுப்பணி துறை என்ஜினீயர்களுடன் ஆலோசித்த பின்பே எந்த தொழில்நுட்பத்தில் இடிப்பது என்பது தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர்களுடன் ஜெயவர்த்தன் எம்.பி.யும் கட்டிடத்தை பார்வையிட்டார்.
    Next Story
    ×