என் மலர்

  செய்திகள்

  கொடநாட்டில் கொலை: ஜெயலலிதா உயில் கொள்ளை போனதா?
  X

  கொடநாட்டில் கொலை: ஜெயலலிதா உயில் கொள்ளை போனதா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியை கொலை செய்து ஜெயலலிதா எழுதி வைத்திருந்த உயில் கொள்ளையடிக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கோத்தகிரி:

  நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஜெயலலிதாவின் சொகுசு பங்களாவில் கடந்த மாதம் 23-ந்தேதி இரவு 11 பேர் கும்பல் புகுந்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டது.

  காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர் படுகாயம் அடைந்தார்.

  பங்களாவுக்குள் புகுந்த கும்பல், ஜெயலலிதா தங்கும் அறையை குறி வைத்து உடைத்து பொருட்களை அள்ளிச் சென்று விட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேரில் தலைவனாக செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சேலம் அருகே கடந்த 28-ந்தேதி நடந்த விபத்தில் பலியானார். அவரது சாவில் மர்மம் நீடிக்கிறது.

  இந்த நிலையில், அதே தினத்தன்று மற்றொரு குற்றவாளியான சயன் என்பவனும் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். அவனுக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இரு குற்றவாளிகளைத் தவிர மற்ற 9 பேரும் போலீசாரிடம் பிடிபட்டு விட்டனர்.


  கொடநாடு எஸ்டேட்டில் இந்த 11 பேர் கும்பல் என்னென்ன எடுத்துச் சென்றது என்பதில் தொடர்ந்து மர்மம் நீடித்தபடி உள்ளது. ஜெயலலிதாவின் அறையில் இருந்த 3 சூட்கேசுகள் உடைக்கப்பட்டு, அவற்றுக்குள் வைக்கப்பட்டிருந்த பணம், தங்க - வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அந்த 3 சூட்கேஸ்களில் இருந்த சொத்து ஆவணங்களையும் மர்ம கும்பல் அள்ளிச்சென்று விட்டதாக கூறப்பட்டது.

  ஆனால் போலீசார் கூறுகையில், “ஜெயலலிதாவின் 5 கைக்கடிகாரங்கள் மட்டுமே திருட்டு போய் விட்டது” என்றனர். ஆனால் அதையும் போலீசாரால் உறுதிபடுத்த இயலவில்லை.

  கொலை - கொள்ளைக்கு கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் கேரளா போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் வெளியிடும் தகவல்களுக்கும், தமிழக போலீசார் வெளியிடும் தகவல்களுக்கும் மிகுந்த முரண்பாடுகள் உள்ளது. இதனால் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளையில் உண்மையில் என்ன நடந்தது என்பது மர்மமாக இருக்கிறது.

  குற்றவாளிகள் அனைவரும் பிடிபட்டு விட்டதால், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளையில் அவர்களது பங்கு என்ன என்பது தெரிய வந்துள்ளது. கொள்ளைக்கு திட்டமிட்டது கனகராஜ் ஆவார். அதை அரங்கேற்ற உதவி செய்தது மனோஜ் என்ற சாமியார் தலைமையிலான கூலிப்படையாகும்.

  இதில் கனகராஜ் பின்னணியில் இருந்தது யார் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அவர் விபத்தில் மர்மமாக உயிரிழந்து விட்டதால், அந்த ரகசியம் அவரோடு புதைந்து போனது. இதை கண்டுபிடித்தால்தான் கொடநாடு எஸ்டேட்டில் என்னென்ன பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்பது முழுமையாக தெரிய வரும்.

  என்றாலும் பிடிபட்டுள்ள கூலிப்படையினரிடம் இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணை மூலம், கொட நாடு எஸ்டேட்டில் இருந்து ரூ.200 கோடி வரை கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தங்க, வைர நகைகளும் அள்ளிச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.

  இதுபற்றி நீலகிரி மாவட்ட போலீசார், குற்றவாளிகளில் ஒருவனான சயனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சயன்தான் கனகராஜுக்கு மனோஜ் என்ற சாமியார் தலைமையிலான கூலிப்படையை அறிமுகம் செய்து வைத்தார். அதோடு கொலை, கொள்ளையை ஒருங்கிணைத்து நடத்தியதிலும் முக்கிய பங்கு வகித்தார்.

  எனவே இவரது வாக்குமூலம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவரிடம் போலீசார் ஜெயலலிதா எழுதி வைத்திருந்த “உயில்” பற்றி விசாரணை நடத்தியதாக தெரிய வந்துள்ளது.


  ஜெயலலிதா தனது சொத்துக்கள் பற்றி விரிவான உயில் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தனது மறைவுக்கு பிறகு பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள தன் சொத்துக்கள் என்ன செய்யப்பட வேண்டும் என்று அவர் அந்த உயிலில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. அந்த உயில் ஜெயலலிதா அறையில் சூட்கேசுக்குள் வைக்கப்பட்டிருந்ததாம்.

  அந்த சூட்கேஸ் உடைக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி இருப்பதால் கனகராஜ் தலைமையிலான கும்பல், அந்த உயிலை எடுத்துச் சென்று இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. சயன் வாயைத் திறந்தால் இதில் உள்ள உண்மை வெளியில் வரும் என்று கொடநாடு எஸ்டேட் பகுதியில் வசிப்பவர்கள் சொல்கிறார்கள்.

  அவரிடம் இன்னும் விசாரிக்க முடியாததால் போலீசார் காத்திருக்கிறார்கள். அவருடைய உடல்நலம் சற்று தேறியதும் விசாரணை நடத்த உள்ளனர். அப்போது உயில் மற்றும் சொத்து பத்திரங்கள் திருடப்பட்டதா? என்ற வி‌ஷயங்கள் தெரியவரும்.

  ஜெயலலிதா பங்களாவில் உயில் மற்றும் பத்திரங்கள் சூட்கேசில் இருந்தன என்று ஜெயலலிதா வீட்டில் வேலை பார்த்த முன்னாள் நேரக்காப்பாளர் போலீசாரிடம் கூறி இருக்கிறார்.

  அதேபோல ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டில் வேலை பார்த்து வரும் ஊழியர்களும் ஜெயலலிதா மற்றும் சசிகலா அறையில் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் பத்திரங்கள் இருந்தன. அங்கு என்ன இருந்தது என்பது பற்றி ஜெயலலிதா, சசிகலா மற்றும் சிலருக்கு மட்டுமே தெரியும் என்று கூறியிருக்கிறார்கள்.

  ஜெயலலிதாவின் உயில் மற்றும் சொத்து பத்திரங்களை திருடும் நோக்கத்துடன் வந்திருப்பதால் இதில் யாரோ பின்னணியில் இருந்து அவர்களை இயக்கி இருக்கிறார்கள் என்று கருதுகிறார்கள். சயனிடம் போலீசார் விசாரித்தால் இந்த வி‌ஷயங்களும் வெளியே வரும்.

  கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நிறைய அறைகள் உள்ளன. ஆனால் கனகராஜ், சயன் அழைத்து சென்ற கும்பல் மிகச்சரியாக ஜெயலலிதா, சசிகலா பயன்படுத்தும் அறைகளை உடைத்து மூன்று சூட்கேஸ்களில் இருந்த ஆவணங்களையே அள்ளிச் சென்றுள்ளனர். அந்த ஆவணங்களில் பெரும்பாலானவை சொத்து ஆவணங்கள் என்று தெரிகிறது.

  சில சொத்துகள் சி.டி.க்களில் பதிவு செய்யப்பட்டு அந்த சூட்கேஸ்களில் வைக்கப்பட்டு இருந்ததாம். அவை அனைத்தையும் கனகராஜ் தலைமையில் வந்த கும்பல் எடுத்து சென்றதாக சந்தேகம் நிலவுகிறது.

  கொள்ளை போனதாக கருதப்படும் நகைகள், சொத்து ஆவணங்கள் மற்றும் உயில் தற்போது யாரிடம் போய் சேர்ந்து இருக்கும் என்பதிலும் மர்மம் நீடிக்கிறது. இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  நீலகிரி மாவட்ட போலீசாரால் இதில் அனைத்து கோணங்களிலும் செயல்பட்டு விசாரணையை நடத்தி முடிக்க முடியுமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. விசாரணை முழுமையாக நடந்தால்தான் கொள்ளை போன ஆவணங்களை மீட்க முடியும். ஆனால் போலீசாரோ உச்சக்கட்ட குழப்பத்தில் உள்ளனர்.
  Next Story
  ×