search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல் முருகனுக்கு, ஓ.பி.சி.அணி மாநில துணைத்தலைவர் சி.ஏழுமலை ஆளுயரமாலை அணிவித்த காட்சி.
    X
    எல் முருகனுக்கு, ஓ.பி.சி.அணி மாநில துணைத்தலைவர் சி.ஏழுமலை ஆளுயரமாலை அணிவித்த காட்சி.

    அதிமுக கூட்டணியை வெற்றிபெற செய்ய உறுதி ஏற்க வேண்டும்- எல் முருகன் பேச்சு

    தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை வெற்றிபெற செய்ய உறுதி ஏற்கவேண்டும் என பா.ஜ.க.மாநில தலைவர் எல்.முருகன் பேசினார்.
    போளூர்:

    போளூர் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. தேர்தல் ஆலோசனை கூட்டம் போளூர் ஸ்ரீராமஜெயம் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில ஓ.பி.சி. அணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளருமான சி.ஏழுமலை தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி இதுவரை வலிமைமிக்க பிரதமராக திகழ்ந்து வருகிறார். அவர் பலமான தமிழகத்தை உருவாக்க விரும்புகிறார். பிரதமரின் சிறப்பான திட்டங்களால் பா.ஜ.க.வுக்கு தமிழக மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் தங்களுக்கு நோய் தொற்றிக் கொள்ளுமோ என உயிருக்கு பயந்து தி.மு.க.வினர் வெளியே வரவில்லை. ஆனால் பா.ஜ.க.வினர் களத்தில் இறங்கி சேவை செய்தனர். போளூர் தொகுதியில் சி.ஏழுமலை, பொதுமக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணப் பொருட்களையும் கொரோனா காலகட்டத்தில் வழங்கினார்.

    பிரதமர், கொரோனா நிவாரண நிதியாக மாதம் ரூ.500 வீதம் ஒரு கோடி ஏழை மக்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தினார். ஆண்டுக்கு 6 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறார். அனைவருக்கும் வீடு, கழிவறை, அனைவருக்கும் கியாஸ் இணைப்பு என ஏராளமான திட்டங்கள் பிரதமரால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது. தி.மு.க. தமிழக மக்களுக்கும், பண்பாட்டுக்கும், பக்திக்கும் எதிரானது. கந்தசஷ்டியை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்துக்கு தி.மு.க. ஆதரவு தந்தது. எனவே இந்தத் தேர்தலில் கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவு தந்த தி.மு.க. வை பா.ஜ.க. என்ற காவிக்கூட்டம் ஓட ஓட விரட்டி அடிக்கும்.

    இலங்கையில் 1½ லட்சம் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும் இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். தி.மு.க.வையும், கமிஷனையும் பிரிக்க முடியாது. அதனால்தான் வேளாண்மை சட்டத்தை எதிர்த்து வருகின்றனர். எனவே அ.தி.மு..க. கூட்டணியை வெற்றி பெறச் செய்ய பா.ஜ.க. தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநில ஓ.பி.சி. அணி துணைத் தலைவர் சி.ஏழுமலை பேசுகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பா.ஜ.க. மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. மற்ற கட்சிகளெல்லாம் தேய்ந்து வருகிறது. உலக அரங்கில் பிரதமர் மோடி உயர்ந்து நிற்கிறார். தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி மலரும் காலம் விரைவில் வரும். அதற்கு மாநிலத் தலைவர் கரத்தினை வலுப்படுத்துவோம் என்றார்.

    நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் செல்வேந்திரன் வடக்கு மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் நித்யானந்தம், மாவட்ட பார்வையாளர் ராஜேந்திரன், தர்மரக்ஷண சமிதி வேலூர் கோட்ட அமைப்பாளர் முருகன், பா.ஜ.க. மாவட்டத் துணைத் தலைவர் கோபி, பொதுச்செயலாளர் கோவிந்தராஜ், ஆரணி நகர செயலாளர் சேகர், போளூர் நகர செயலாளர் வெங்கடேசன், வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பன்னீர்செல்வம், ஜெயச்சந்திரன், பாண்டுரங்கன், சீனுவாசன் உள்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக வசூர் கூட்ரோட்டில் சி.ஏழுமலை தலைமையில் கேரளா செண்டை மேளத்துடன் மாநில தலைவர் முருகனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேடையில் ஆளுயர மாலை அணிவித்து நினைவு பரிசை ஏழுமலை வழங்கினார். போளூர் பைபாஸ் சாலை, குன்னத்தூர் கூட்ரோடு, ஸ்ரீராமஜெயம் கல்வி நிறுவன வளாகம் போன்ற பகுதிகளில் மாநிலத் தலைவர் முருகனை வரவேற்று சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு கொடிகள், தோரணங்கள், டிஜிட்டல் பேனர்கள், கட் அவுட்டுகள் போன்றவை அமைக்கப்பட்டு இருந்தது.
    Next Story
    ×