என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிக்காக அ.தி.மு.க.வை ஓரம் கட்டும் பா.ஜனதா
    X

    ரஜினிக்காக அ.தி.மு.க.வை ஓரம் கட்டும் பா.ஜனதா

    அ.தி.மு.க.வை ஓரம் கட்டிவிட்டு வந்தால் மட்டுமே பா.ஜ.க.வுடன் கூட்டணி பற்றி பேசலாம் என்று ரஜினி தரப்பில் கூறியிருப்பதாக தெரிகிறது. #BJP #Rajinikanth #TNPolitical
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே இருக்கும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் கூட்டணி கணக்கில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.

    பாரதிய ஜனதா கட்சியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த நிலையிலும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சியோடு கூட்டணி அமைக்காமல் அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டது. தனி ஆளாக நின்று 37 தொகுதிகளில் அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்தார் ஜெயலலிதா.

    இதன் பின்னர் அவரது மரணம் தமிழக அரசியல் களத்தில் ஏகப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.

    அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டதும் அக்கட்சியின் இணைப்புக்காக பா.ஜனதா தலைவர்கள் துடியாய் துடித்தனர். மோடியே நேரடியாக தலையிட்டு எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் இணைத்து வைத்ததாகவே கூறப்பட்டது.

    அதே பா.ஜனதா கட்சி தான் இன்று ஊழல் எதிர்ப்பு ஆயுதத்தை கையில் எடுத்து அ.தி.மு.க.வுக்கு எதிராக சாட்டையை சுழற்ற தொடங்கியுள்ளது.

    இதன் பின்னணி என்ன? பா.ஜனதா கட்சியின் தமிழக ஊழல் எதிர்ப்பு கோ‌ஷத்துக்கு காரணம் என்ன? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    கடந்த ஆண்டு இறுதியில் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட ரஜினி, தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அ.தி.மு.க. அமைச்சர்கள் அவர் மீது பாய்ந்தனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாத ரஜினி, ஜெயலலிதா இல்லாததால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை நான் கண்டிப்பாக நிரப்புவேன் என்றும் கூறினார்.

    எம்.ஜி.ஆர். தந்த ஏழைகளின் ஆட்சியை என்னால் தரமுடியும் என்றும் பேசினார். இப்படி அ.தி.மு.க. எதிர்ப்பை ரஜினி கையில் எடுத்தபோது பா.ஜனதா- அ.தி.மு.க. தலைவர்களிடையே இணக்கமான சூழலே நிலவியது.

    தமிழக அரசியலில் தடம் பதிப்பதற்காக நீண்ட நெடுங்காலமாகவே ரஜினியை குறி வைத்து காய் நகர்த்தி வரும் பாரதிய ஜனதா கட்சி அவரது அரசியல் பிரவேசத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வையும் தங்களோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே பா.ஜனதாவின் எண்ணமாக இருந்தது. இதற்கான முயற்சிகளிலேயே அக்கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    இதனை உறுதிபடுத்தும் விதத்திலேயே கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசியல் விமர்சகரும் ஆடிட்டருமான குருமூர்த்தி கருத்து தெரிவித்திருந்தார். பா.ஜனதா, அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடு ரஜினியும் கூட்டு சேர்ந்தால் அது மிகப்பெரிய மாற்றமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

    இந்த கூட்டணியில் ரஜினிக்கு உடன்பாடு இல்லாமலேயே இருந்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் காலூன்றுவதற்கான வேலைகளை முன் கூட்டியே தொடங்க வேண்டிய கட்டாயம் பாரதிய ஜனதா கட்சிக்கு ஏற்பட்டது.

    இதனால் ரஜினியுடன் பா.ஜனதா தலைவர்கள் ரகசிய பேச்சு நடத்தியதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த பேச்சின் போது தமிழ்நாட்டில் அ.தி.மு.க.- தி.மு.க. இல்லாத புதிய அணியை நாம் உருவாக்கலாம் என்று ரஜினி தரப்பில் யோசனை சொன்னதாக கூறப்படுகிறது. குறிப்பாக அ.தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்பதை ரஜினி கண்டிப்புடன் தெரிவித்து விட்டார் என்றே பா.ஜனதாவினர் கூறுகிறார்கள்.


    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைக்க போவதாகவே உறுதியான தகவல்கள் தமிழகத்தில் உலாவிக் கொண்டிருக்கிறது. இதனை உடைத்தெறிய வேண்டும் அப்போதுதான் புதிய அணியை உருவாக்கி நம்மால் சாதிக்க முடியும் என்பதே ரஜினி தரப்பில் நடத்தப்பட்ட பேச்சில் முக்கிய அம்சமாக இருந்துள்ளது. இதன் காரணமாகவே பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவரான அமித்ஷா, ஊழல் எதிர்ப்பை கையில் எடுத்துள்ளார்.

    அ.தி.மு.க.வை ஓரம் கட்டிவிட்டு வந்தால் மட்டுமே கூட்டணி பற்றி பேசலாம் என்று ரஜினி தரப்பில் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியே அமித்ஷாவின் ஊழல் எதிர்ப்பு குரல் என்றும் பா.ஜனதா மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் ஊழல் எதிர்ப்பு கோ‌ஷத்தை கோரசாக எழுப்பவும் பா.ஜனதா கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

    பா.ஜனதா அரசின் சாதனைகள், தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்தது உள்ளிட்ட வி‌ஷயங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்ல அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

    ‘ரஜினி’ என்ற மாஸ் நட்சத்திரத்துடன் மேலும் சில கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் வெற்றி பெற்று விடலாம் என்பது பா.ஜனதாவின் கணக்காக உள்ளது. மற்ற மாநிலங்களில் அமித்ஷா இதுபோன்று ‘மேஜிக்’குகளை நிகழ்த்தி காட்டி உள்ளார். தமிழகத்தில் அது சாத்தியப்படுமா? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. #BJP #Rajinikanth #TNPolitical
    Next Story
    ×