search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழாவுக்கான பந்தல்காலினை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி ஆகியோர் நாட்டியபோது எடுத்த படம்.
    X
    விழாவுக்கான பந்தல்காலினை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி ஆகியோர் நாட்டியபோது எடுத்த படம்.

    தமிழகத்தில் 5 ஆண்டுகளில் படிப்படியாக பூரண மதுவிலக்கு- அமைச்சர் கடம்பூர் ராஜூ

    தமிழகத்தில் 5 ஆண்டுகளில் படிப்படியாக பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #TNMinister #KadamburRaju
    கோவில்பட்டி:

    தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியம் சார்பில் கோவில்பட்டி நகராட்சி குடிநீர் அபிவிருத்தித்திட்ட முடிவுற்ற பணி திறப்பு விழா, புதிய திட்டப்பணிகளின் அடிக்கல் நாட்டு விழா, அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 11-ந்தேதி கோவில்பட்டியில் நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, திட்டப் பணிகளை தொடக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

    இந்த விழாவுக்காக கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்படுகிறது. இதற்கான பந்தல் கால்கோள் விழா கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு கால் கோள் நாட்டினர்.

    பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு 500 டாஸ்மாக் கடைகளையும், பின்னர் 2017ம் ஆண்டு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 500 டாஸ்மாக் கடைகளையும் மூடினர். 5 ஆண்டுகளில் படிப்படியாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும்.

    மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்பதற்கு புனர்வாழ்வு மையம் அமைக்கவும், மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு ரூ.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. தந்தையின் மது குடிக்கும் பழக்கத்தால் நெல்லையில் பள்ளி மாணவர் தற்கொலை செய்தது வருந்தத்தக்கது. அந்த மாணவரின் குடும்பத்துக்கு அரசு உதவி செய்யும்.

    காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், கோர்ட்டின் நடவடிக்கை பற்றி கருத்து கூற முடியாது. நீட் தேர்வு எழுத வேறு மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்ட தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் நீட் தேர்வு மையம் அமைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #KadamburRaju
    Next Story
    ×