என் மலர்
செய்திகள்

தமிழகத்தில் சாதிய-மதவாத சக்திகள் காலூன்ற பார்க்கின்றன: திருமாவளவன் பேட்டி
திருச்சி:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்ததே தமிழக அரசு தான். ஆனால் தற்போது கிரானைட் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று உயர் நீதிமன்றத்தில் தலைமை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளது என்ன வென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும்.
விடுதலை சிறுத்தை கட்சியினர் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. கரூர், மயிலாடுதுறையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும்.
மத்திய அரசுதான் தமிழகத்திற்கு சர்க்கரை வழங்குகிறது. இதனால் சர்க்கரை விலை உயர்வுக்கு மத்திய அரசும் ஒரு காரணம். விலை உயர்வை ரத்து செய்ய முதல் -அமைச்சர் எடப்பாடி பழனி சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்பு தமிழகத்தில் ஒரு குழப்பமான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. பா.ஜனதா-அ.தி.மு.க. இடையே சாதகமான சூழ் நிலை நிலவி வருகிறது. சாதிய -மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்ற பார்க்கின்றன. அதனை தடுப்பது ஜனநாயக சக்தியின் கடமை.
பல்வேறு சமூக தலைவர்களுடன் பேசி பா.ஜனதா தன்மயப்படுத்தி வருகிறது. அதில் பல தலித் அமைப்புகள், சமுதாய அமைப்புகள் பா. ஜனதா பக்கம் சென்று விட்டது உண்மைதான். ஆனால் விடுதலை சிறுத்தை கட்சியை குறைத்து மதிப்பிட முடியாது. எப்போதும் தனித்துவமாக செயல்படும்.
மது, ஊழலை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது போல் கந்து வட்டியையும் ஒழிக்க குரல் கொடுக்க வேண்டும். கந்து வட்டிக்கு எதிராக நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விரைவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
வருகிற 3-ந்தேதி ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அது குறித்து முடிவு செய்யப்படும். பண மதிப்பிழப்பு நாளான நவம் பர் 8-ந்தேதியை கருப்பு தினமாக விடுதலை சிறுத்தை கட்சி சார்பிலும் அனுசரிக்கப்படும். தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்து நிர்வாகிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.