search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  சி.சி.டி.வி. வீடியோ காட்சியை விசாரணை கமி‌ஷனிடம் வழங்குவோம்: நாஞ்சில் சம்பத்
  X

  சி.சி.டி.வி. வீடியோ காட்சியை விசாரணை கமி‌ஷனிடம் வழங்குவோம்: நாஞ்சில் சம்பத்

  எங்களிடம் உள்ள சி.சி.டி.வி. காட்சி வீடியோவை விசாரணை கமி‌ஷனிடம் வழங்குவோம். விசாரணை கமி‌ஷன் முடிந்த பின்னரே பொதுமக்களுக்கு அதுகுறித்து வெளியிடப்படும் என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.

  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலையில் அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-

  அ.தி.மு.க. ஆட்சியில் தொண்டர்கள் ஜெயிலுக்கு செல்லும் நிலை உள்ளது. ஜனநாயக ஆட்சி இல்லை யாரும் கேள்வி கேட்க முடியவில்லை. என் மீது வழக்கு போட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய முயற்சி செய்கிறார்கள்.

  பெண்களை கேலி செய்ததாக என் மீது வழக்கு போட்டுள்ளனர். இந்திய துணை கண்டத்தை விரல் நுணியில் ஆண்டவர் ஜெயலலிதா. மோடி ஜெயலலிதாவை பார்க்க வீட்டு வாசலில் காத்து கிடந்தார்.


  3-வது பெரிய கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. ஜெயலலிதா உடல் நிலை குறித்து ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யவில்லை மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் தனது உடல் நலம் பற்றி கவனிக்கவில்லை. அவர் சர்க்கரை நோயால் பாதிக்கபட்டிருந்தார். ஜெயலலிதா சாக்லெட், ஜஸ்கிரீம் விரும்பி சாப்பிடுவார். இதனை சாப்பிட வேண்டாம் என யாரும் சொல்ல முடியவில்லை. செப்டம்பர் 22-ந் தேதி ஜெயலலிதா கீழே விழுந்தார். அவரை ஆஸ்பத்திரியில் சசிகலா சேர்த்தார்.

  நட்புக்கு இலக்கணமாக ஜெயலலிதா சசிகலா இருந்தனர். சசிகலா அண்ணன் ஜெயராமனை ஐதராபாத் தோட்ட பணிக்கு ஜெயலலிதா அனுப்பி வைத்தார். அங்கு மின்வேலியில் சிக்கி ஜெயராமன் இறந்து விட்டார்.


  இது சம்பந்தமாக சசிகலா ஜெயலலிதாவிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. திவாகரன், நடராஜன் கைதான போது சசிகலா தலையிடவில்லை.

  3 முறை முதல் அமைச்சராக இருந்தவர் ஓ.பி.எஸ். அவர் தற்போது துணை முதல்-அமைச்சராக உள்ளார். எதற்காக இந்த பதவிக்கு ஒப்பு கொண்டார். ஜெயலலிதாவின் ஆன்மாவோடு பேசியதாக ஓ.பி.எஸ். கூறுகிறார். ஆன்மாவிடம் பேசினால் இவர் சாமியாரா? சாமியார் திருவண்ணாமலையில் தான் இருக்க வேண்டும். அங்கு இருக்க கூடாது அண்ணாவின் வழியில் கட்சி தொடர்ந்து செயல்படுகிறது. தினகரன் கர்ணன் போன்றவர்.


  இவ்வாறு அவர் பேசினார்.

  முன்னதாக நிருபர்களிடம் நாஞ்சில் சம்பத் கூறியதாவது:-

  மறைந்த முதல் -அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நான் அவரை சந்திக்கவில்லை. மருத்துவமனை நிர்வாகி ரெட்டியிடம் கேட்பேன். அவர் கூறியதை தான் நான் நிருபர்களிடம் கூறினேன்.

  அளவுக்கு அதிகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம் இருந்ததால் தான் அவர் நிலை குலைந்து போனார்.

  சிகிச்சை தொடர்பான காட்சிகளை வெளியிட அவர் விரும்பவில்லை. ஜெயலலிதா கைரேகை தொடர்பாக சர்ச்சை குறித்து உண்மை, விசாரணை கமி‌ஷனில் தெரியவரும். எங்களிடம் உள்ள சி.சி.டி.வி. காட்சி வீடியோவை விசாரணை கமி‌ஷனிடம் வழங்குவோம். விசாரணை கமி‌ஷன் முடிந்த பின்னரே பொதுமக்களுக்கு அதுகுறித்து வெளியிடப்படும்.

  கிருமி தொற்று காரணமாக டாக்டர்கள் யாரையும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை. என்னை பொறுத்தவரை இது தொடர்பான கேள்வி கேட்கக்கூடாது. காலம் ஜெயலலிதாவிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மரணம் நிரந்தரமானது. இதை சர்ச்சைக்குள்ளாக்க கூடாது.

  ஒருவரின் உடல்நிலையை சர்ச்சை ஆக்குவது அநாகரீகம். ஓ.பன்னீர்செல்வம் என்கிற பச்சை துரோகியும், எடப்பாடி பழனிசாமியும் இல்லாத அ.தி.மு.க.வை தீர்மானிக்கவே நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் இணைவதற்கு சாத்தியம் இல்லை.

  தீபக் பேட்டி அனைத்தும் அபத்தம். போயஸ் கார்டன் இல்லம் தற்போது பூட்டி காணப்படுகிறது. முதல் -அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகவேண்டும். வேறு முதல் -அமைச்சரை தேர்ந்தெடுக்க வேண்டும். வேறு முதல் -அமைச்சருக்கு யார் தகுதியானவர்கள் என்று என்னிடம் கேட்டால் நான் டி.டி.வி.தினகரனை பரிந்துரை செய்வேன்.

  18 எம்.எல்.ஏ.க்களை நாங்கள் நிர்பந்தித்து எங்களது கட்டுப்பாட்டுக்குள் வைக்கவில்லை. நீதிக்கான போராட்டத்தில் இந்த 18 பேரும் உறுதியாக இருக்கிறார்கள். கருத்து சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்படுகிறது. நான் ஒரு விமர்சகர். விமர்சகரை விமர்சகத்தால் தான் எதிர்கொள்ள வேண்டும். என் மீது தொடரப்பட்ட வழக்குகளுக்கு மாநில அரசு தான் காரணம். பா.ஜ.க. தூண்டுதலால் என் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

  நடிகர் கமல்ஹசானின் அனைத்து கருத்துகளும் உண்மை. எடப்பாடி பழனிசாமி அரசு தமிழக பிரச்சினைக்களுக்கு தீர்வு காண்பது கிடையாது. முதல் -அமைச்சருக்கு எதிராக 18 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் எழுதிய நேரத்திலேயே முதல் -அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக்கப்பட்டிருக்க வேண்டும்.

  ஆட்சியை கைப்பற்ற தி.மு.க. வியூகம் அமைக்கிறது. விரைவில் தேர்தல்வர பிரகாசமான சூழ்நிலை உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×