என் மலர்
நவராத்திரி ஸ்பெஷல்

ஷைலபுத்ரி
நவராத்திரி முதல் நாளில் வழிபட வேண்டிய தெய்வம்
- மகிஷாசுரன் என்னும் அரக்கனை அழிப்பதற்காக துர்காதேவி செய்த போரின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
- ஷைலபுத்ரி தேவி துர்கா தேவியின் முதல் வடிவமாகவும், சதி தேவியின் மறு அவதாரமாகவும் உள்ளார்.
"நவராத்திரி" என்றால் "ஒன்பது இரவுகள்" என்று பொருள். அமாவாசையைத் தொடர்ந்து வரும் இந்த ஒன்பது நாட்கள் பெண் தன்மையை வழிபடுவதற்கும், கொண்டாடப்படுவதற்குமான ஒரு மிகச் சிறப்பான காலமாகும்.
இந்த வருடம் நவராத்திரி 22-ந்தேதியான இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அக்.2-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியின் முதல் நாளில் அன்னை சக்தி துர்கா தேவியின் முதல் அவதாரமான ஷைலபுத்ரியை வழிபட வேண்டும். ஷைலபுத்ரியை இமயமலையின் மகள் என்றும், இயற்கையின் முதன்மையான சக்தி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் துர்கா தேவியின் முதல் வடிவமாக வணங்கப்படுகிறார். நவராத்திரி பண்டிகையின் முதல் நாளில் இவரை வழிபட வேண்டும்.
துர்காதேவி, மகிஷாசுரன் என்ற அரக்கனை வதம் செய்வதற்காக போர் புரிந்தார். இந்தப் போரின் தொடக்கமே நவராத்திரி. இந்த முதல் நாள் வழிபாடு துர்கா தேவி மகிஷாசுரனை வென்றதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
நவராத்திரி முதல் நாளில் வழிபடும் தெய்வம் ஷைலபுத்ரி தேவி
ஷைலபுத்ரி தேவி முன் பிறவியில் சதி தேவியாக இருந்தார். சதி தேவி தட்சப் பிரஜாபதியின் மகளாகப் பிறந்தார். அவருக்கு பரமசிவனுடன் திருமணம் ஆனது.
ஆனால், தந்தை தட்சன் சிவனை அவமதித்து யாகத்திற்க அவரை அழைக்கவில்லை. அதை சகிக்க முடியாமல் சதி யாகக் குண்டத்தில் தன்னைத் தானே அர்ப்பணித்தார்.
இதன் பின் சதி மறுபிறவியாக மலைராஜன் இமவானின் மகளாக பிறந்தார். அதனால் தான் அவர் ஷைலபுத்ரி (மலைமகள்) என்று அழைக்கப்படுகிறார்.
வழிபாட்டின் சிறப்பு: முதல் நாளில் ஷைலபுத்ரியின் தெய்வீக சக்தியை வழிபடுவது, வாழ்வில் உள்ள துன்பங்களிலிருந்து விடுபட்டு, அனைத்து நலன்களையும் பெறுவதற்கு உகந்ததாகும்.
ஷைலபுத்ரி தேவி துர்கா தேவியின் முதல் வடிவமாகவும், சதி தேவியின் மறு அவதாரமாகவும் உள்ளார். ஷைலபுத்ரி தேவி இயற்கை அன்னையின் முழுமையான வடிவம் மற்றும் சிவபெருமானின் துணை என்று குறிப்பிடப்படுகிறார்.
நவராத்திரியின் முதல் நாளில், புனிதமான கலசம் நிறுவப்படுகிறது.
ஷைலபுத்ரி தேவி காளையின் (நந்தி) மீது அமர்ந்து ஒரு கையில் திரிசூலத்தையும் மறுகையில் தாமரையையும் ஏந்தியிருக்கிறாள். இந்த வடிவம் தூய்மை, நிலைத்தன்மை மற்றும் புதிதாகத் தொடங்குவதற்கான தைரியத்தில் வேரூன்றிய வலிமையைக் குறிக்கிறது.
ஸ்லோகம்
'ஓம் தேவி சைலபுத்த்ரியை நமஹ' என்ற மந்திரம், துர்கா தேவியின் முதல் அம்சமான ஷைலபுத்ரி தேவியை வணங்குவதற்கான மந்திரமாகும்.






