என் மலர்
பீகார்
- சாலையில் நடந்து சென்ற ஆண் நபர் ஒருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலம் பெட்டையா பகுதியில் உள்ள சாலை ஒன்றில் மாணவிகள் கைக்கிள் ஓட்டிக் கொண்டு சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த கார் ஒன்று மாணவிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த சிறுமிகள் அனைவரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை தவிர சாலையில் நடந்து சென்ற ஆண் நபர் ஒருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 10ம் வகுப்பு படிக்கும் சிறுமிகள் பயிற்சி வகுப்புகளுக்காகச் சென்று கொண்டிருந்தபோது விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
மாணவிகள் மீது வேகமாக கார் மோதிய சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி காண்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
आगे ही नहीं पीछे भी...!सड़क पर अपने लेन में तो चले ही लेकिन ऐसा लग रहा है कि आगे के साथ पीछे भी देखना होगा.कार और बाकी वाहनों के चालक तो देखते भी हैं लेकिन अब साइकिल वालों को भी देखना होगा.. लड़कियां अपने लेन में जा रही थीं और पीछे से बोलेरो ने उड़ा दिया.. बेतिया का वीडियो... pic.twitter.com/3YPthqvCV4
— Prakash Kumar (@kumarprakash4u) June 6, 2023
- பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இளம் பெண்ணை கடத்தி சென்றதாக அவரது காதலனின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
பாட்னா:
பீகார் மாநிலம் அராரியா பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்தனர். இந்த விபரம் பெண் வீட்டாருக்கு தெரிந்ததும், அவர்கள் இளம்பெண்ணை கண்டித்தனர். மேலும் அவரை வீட்டை விட்டு வெளியே செல்லவும் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் அந்த பெண், தனது காதலரை ரகசியமாக தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த பின்பு இருவரும் அருகில் உள்ள கிராமத்தில் தனியாக வசித்து வந்தனர். இதற்கிடையே இளம்பெண்ணை தேடிய உறவினர்கள், அவர் அருகில் உள்ள கிராமத்தில் காதல் திருமணம் செய்து வசிப்பதை அறிந்தனர்.
2 நாட்களுக்கு முன்பு அங்கு சென்ற பெண்ணின் உறவினர்கள் வீட்டில் இருந்த அந்த பெண்ணை வலுகட்டாயமாக வெளியே இழுத்து வந்து ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்றனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை சிலர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் பலரும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் கடத்தி சென்ற பெண்ணை அவரின் உறவினர்கள் ஆணவ கொலை செய்து விடுவார்கள் என்றும், அவர்களிடம் இருந்து பெண்ணை காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே இளம் பெண்ணை கடத்தி சென்றதாக அவரது காதலனின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விபத்துகளை பற்றி நான் பெரிதாக கருத்து தெரிவிக்க மாட்டேன்.
- ரெயில்வேயை அருங்காட்சியகத்தில் வைக்க இந்த அரசு விரும்புகிறது.
பாட்னா :
பாராளுமன்ற தேர்தலை ஓரணியாக நின்று சந்திப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் ஏற்பாடு செய்துள்ளார்.
வருகிற 12-ந் தேதி நடைபெறுவதாக இருந்த இக்கூட்டம், தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் சார்பில் ஒரு முதல்-மந்திரியும், மூத்த தலைவரும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத்சிங் கூறியிருந்தார்.
ஆனால், கட்சி தலைவர்தான் பங்கேற்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கண்டிப்புடன் கூறியுள்ளார். நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
ஜூன் 12-ந் தேதி தங்களுக்கு வசதியாக இல்லை என்று காங்கிரசும், மற்றொரு கட்சியும் என்னிடம் தெரிவித்தன. எனவே, கூட்டத்தை தள்ளிவைக்க முடிவு செய்தேன். மற்ற கட்சிகளுடன் ஆலோசித்து புதிய தேதியை தெரிவிக்குமாறு காங்கிரசிடம் கூறியுள்ளேன். அதன்பிறகு புதிய தேதி அறிவிக்கப்படும்.
ஆனால், ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். கூட்டத்தில் பங்கேற்க சம்மதித்துள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பிலும் அந்தந்த கட்சிகளின் தலைவர்தான் பங்கேற்க வேண்டும்.
எந்த கட்சியாவது, வேறு ஒரு பிரதிநிதியை அனுப்புவதாக சொன்னால், அது ஏற்புடையது அல்ல. உதாரணமாக, காங்கிரஸ் கட்சி, தலைவரை தவிர்த்து வேறு ஒருவரை அனுப்பி வைக்கும் என்ற செய்தி உலவுகிறது. அதை எங்களால் ஏற்க முடியாது.
ஒடிசா ரெயில் விபத்து துயரமானது. விபத்துகளை பற்றி நான் பெரிதாக கருத்து தெரிவிக்க மாட்டேன். ஆனால், ரெயில்வேயை அருங்காட்சியகத்தில் வைக்க இந்த அரசு விரும்புகிறது.
வாஜ்பாய் ஆட்சியில் நான் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, 1999-ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் நடந்த ரெயில் விபத்துக்காக ராஜினாமா கடிதம் கொடுத்தேன். அதை ஏற்க வாஜ்பாய் விரும்பாதபோதிலும், எனது பிடிவாதத்தால் ஏற்றுக்கொண்டார். பிறகு மீண்டும் வாஜ்பாய் ஆட்சி அமைந்தபோது, ரெயில்வே மந்திரி ஆனேன்.
ரெயில்வே மந்திரியாக, தற்போதைய பிரதமரின் மாநிலத்துக்கு கூட நான் நிறைய செய்துள்ளேன். ஆனால் அதையெல்லாம் அவர் நினைவில் வைத்துக்கொள்ள விரும்ப மாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தரமற்ற வகையில் பாலம் கட்டப்பட்டுள்ளதாக பாஜக கூறி உள்ளது.
- மீண்டும் பாலம் இடிந்து விழுந்ததால் முதல்வர் நிதிஷ் குமார் மீது குற்றம்சாட்டி உள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் பாலம் கட்டப்படுகிறது. கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பாலத்தின் இரண்டு பகுதிகள் இன்று மாலை திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தன. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டபோது யாராவது வேலை செய்துகொண்டிருந்தார்களா? என தெரியவில்லை. உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட புயல் காரணமாக பாலம் சேதமடைந்தது. ககாரியா, அகுவானி மற்றும் சுல்தாங்கஞ்ச் பகுதிகளுக்கிடையே கங்கை நதியில் பாலத்தின் மையப்பகுதி கட்டப்பட்டு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இப்போது மீண்டும் பாலம் இடிந்து விழுந்ததால் முதல்வர் நிதிஷ் குமார் மீது பாஜக குற்றம்சாட்டி உள்ளது. தரமற்ற வகையில் பாலம் கட்டப்பட்டுள்ளதாக பாஜக கூறி உள்ளது. மேலும், முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
- ஆரம்பத்தில் பதில் அளிக்காத டாக்டர்களுக்கு தற்போது பகிரங்க நோட்டீஸ் வெளியிடப்பட்டு உள்ளது.
- 15 நாட்களில் விளக்கம் அளிக்காவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பாட்னா :
பீகார் மாநில சுகாதாரத்துறை, அறிவிப்பு இல்லாமல் நீண்ட காலமாக விடுப்பில் இருந்த 62 அரசு டாக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர்களில் சிலர் ஒரு ஆண்டாகவும், மேலும் சிலர் 5 ஆண்டுகளுக்கு மேலாகவும் பணிக்கு வராமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றிய அறிவிப்பு சுகாதார துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அனுமதியற்ற விடுமுறைக்கு 15 நாட்களில் விளக்கம் அளிக்காவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதல்-மந்திரி நிதிஷ்குமார் மற்றும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பதில் அளிக்காத டாக்டர்களுக்கு தற்போது பகிரங்க நோட்டீஸ் வெளியிடப்பட்டு உள்ளது. இனி அடுத்தகட்ட நடவடிக்கை தொடர இருக்கிறது. அதிகபட்ச ஒழுங்கு நடவடிக்கையாக தவறு செய்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட சட்டத்தில் இடம் உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- நிஷாவின் இடது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
- துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சரண் மாவட்டத்தை சேர்ந்த பாடகி நிஷா உபாத்யாய். போஜ்புரி பாடகியான இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மேடைகளில் பாடி வருகிறார்.
இந்நிலையில், பாட்னாவில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நிஷா மேடையில் ஆடலுடன் பாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் மீது திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில், நிஷாவின் இடது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு விழுந்தார்.
இதையடுத்து நிஷாவை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு, நிஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நிஷா இதுவரை எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை என்றாலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வாகனக் கடனைப் பத்திரப்பதிவு விதிகளைப் பின்பற்றி மட்டுமே வசூலிக்க வேண்டும்.
- மீட்பு முகவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு.
கடனைத் திருப்பிச் செலுத்தாததற்காக உரிமையாளர்களிடமிருந்து மீட்பு முகவர்கள் மூலம் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வாகனங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்வது வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று பாட்னா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
'மீட்பு முகவர்கள்' என்று அழைக்கப்படும் குண்டர்கள் வாகனங்களை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்வதற்கு உச்ச நீதிமன்ற உத்தரவு முற்றிலும் தடை செய்கிறது.
இதுதொடர்பான 5 மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி பிரசாத், "வாடிக்கையாளர் மாத தவனை செலுத்தத் தவறியிருந்தால், வாகனத்தை பறிமுதல் செய்ய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீட்பு முகவர்களின் சேவைகளைப் பயன்படுத்த முடியாது. அத்தகைய மீட்பு முகவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடுகிறேன்.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வாகனக் கடனைப் பத்திரப்பதிவு விதிகளைப் பின்பற்றி மட்டுமே வசூலிக்க வேண்டும்" என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
- தலைமை ஆசிரியையை சக ஆசிரியைகள் அங்குள்ள வயல்வெளியில் தள்ளி கடுமையாக தாக்கினர்.
- வகுப்பறை ஜன்னல்களை மூடுவது தொடர்பான வாக்குவாதம் முற்றிய நிலையில் மோதல்
பாட்னா:
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியைக்கும், இரண்டு ஆசிரியைகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
ஆசிரியைகளில் ஒரு தரப்பினர் வகுப்பறையின் ஜன்னல்களை மூடுமாறு கூறி உள்ளனர். மற்றொரு தரப்பினர் அதற்கு மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தலைமை ஆசிரியை வகுப்பறையை விட்டு வெளியேறினார். ஆனால் அவரை துரத்தி வந்த இரண்டு ஆசிரியைகள், தலைமை ஆசிரியையை அங்குள்ள வயல்வெளியில் தள்ளி சரமாரியாக அடித்தனர். செருப்பாலும் தாக்கினர். அதன்பின்னர் அந்த வழியாக சென்ற சிலர் சண்டையை விலக்கிவிட்டுள்ளனர். சக மாணவர்கள் வேடிக்கை பார்க்க ஆசிரியைகள் அடித்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரு ஆசிரியைகளுக்கிடையே உள்ள தனிப்பட்ட தகராறு காரணமாக, பள்ளியில் மோதிக்கொண்டதாக கல்வி அதிகாரி நரேஷ் கூறினார். மேலும், இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விசாரணை நடத்தி வருவதாகவும் நரேஷ் கூறினார்.
- பீகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.
- அரசு நடத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாட்னா ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.
புதுடெல்லி:
பீகார் மாநிலத்தில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. முதல் கட்ட கணக்கெடுப்பு முடிந்து 2-வது கட்ட பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே, சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, 'சமத்துவத்துக்கான இளைஞர்கள்' என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதில், வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என கூறப்பட்டிருந்தது. மனுதாரர் தரப்பு வக்கீல் முகுல் ரோஹத்கி வாதத்துக்குப் பிறகு மனுவை ஏற்றுக்கொள்ள நீதிபதிகள் மறுத்து விட்டனர். பாட்னா ஐகோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். அந்த மனுவை தாக்கல் செய்த 3 நாட்களுக்குள் பரிசீலித்து, முடிவு செய்யுமாறு பாட்னா ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து, பாட்னா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த பாட்னா ஐகோர்ட், பீகாரில் நிதிஷ்குமார் அரசு நடத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து பாட்னா ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் அரசு தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், அரசியலமைப்பின் 15 மற்றும் 16-வது பிரிவின் கீழ் சாதி அடிப்படையிலான தரவுகளை சேகரிப்பது அரசியலமைப்பு ஆணை என்றும், சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை விதிக்கப்பட்டால் முழு பயிற்சியும் பாதிக்கப்படும். எனவே தடையை நீக்க வேண்டும் என கோரப்பட்டது.
இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடைவிதித்த பாட்னா ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வ்ழக்கின் விசாரணையை ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
- பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டத்தில் உள்ள மொராதாபாத் கிராமத்தில் கழிவுநீர் கால்வாயில் பெரிய மூட்டை கிடந்தது.
- கால்வாயில் இருந்து மக்கள் கட்டு கட்டாக பணத்தை அள்ளி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டத்தில் உள்ள மொராதாபாத் கிராமத்தில் கழிவுநீர் கால்வாயில் பெரிய மூட்டை கிடந்தது. மேலும் சில ரூபாய் நோட்டுகள் தண்ணீரில் மிதந்தன. இதை பார்த்த சிலர் கால்வாய்க்குள் இறங்கி அந்த மூட்டையை பிரித்தனர். அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியது.
உடனே கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து கால்வாய்க்குள் இறங்கினர். அவர்கள் போட்டி போட்டு கொண்டு கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகளை அள்ளி சென்றனர். கழிவுநீரையும் பொருட்படுத்தாமல் அதில் மிதந்த 2000, 500, 100 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளை எடுத்து சென்றனர். அந்த ரூபாய் நோட்டுக்கள் உண்மையானது என்று கிராம மக்கள் தெரிவித்தனர். அதிகாலையில் வாகனத்தில் வந்த சிலர் பண மூட்டையை கால்வாயில் வீசி சென்றதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார், மாவட்ட நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். ரூபாய் நோட்டுக்கள் உண்மையானதா? என்பது உறுதியாக தெரியவில்லை. அந்த ரூபாய் நோட்டுகளை கால்வாயில் வீசி சென்றது யார்? என்று தீவிரமாக விசாரணை நடக்கிறது.
கால்வாயில் இருந்து மக்கள் கட்டு கட்டாக பணத்தை அள்ளி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- பீகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.
- முதல் கட்ட கணக்கெடுப்பு முடிந்து, தற்போது 2-வது கட்ட பணி நடந்து வருகிறது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. முதல் கட்ட கணக்கெடுப்பு முடிந்த நிலையில் தற்போது 2-வது கட்ட பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே, சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, 'சமத்துவத்துக்கான இளைஞர்கள்' என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதில், வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என கூறப்பட்டிருந்தது.
மனுதாரர் தரப்பு வக்கீல் முகுல் ரோத்தகி வாதத்துக்குப் பிறகு மனுவை ஏற்றுக்கொள்ள நீதிபதிகள் மறுத்து விட்டனர். பாட்னா ஐகோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். அந்த மனுவை தாக்கல் செய்த 3 நாட்களுக்குள் பரிசீலித்து, முடிவு செய்யுமாறு பாட்னா ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, பாட்னா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பீகாரில் நிதிஷ்குமார் அரசு நடத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதித்து பாட்னா ஐகோர்ட் உத்தரவிட்டது.
- திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கோர சம்பவம் நடந்துள்ளது.
- சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய லாரி ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.
பீகார் மாநிலம் சிதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள மகோல்வா பகுதியில் கும்பலை ஏற்றிச் சென்ற மூன்று சக்கர வாகனம் மீது வேகமாக வந்த லாரி ஒன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், குழந்தைகள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் நேற்று மாலை திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கோர சம்பவம் நடந்துள்ளது.
படுகாயமடைந்தவர்கள் சீதாமரியில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் சீதாமர்ஹி போலீஸ் அதிகாரி பிரசாந்த் குமார் கூறினார்.
மேலும், இறந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய லாரி ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.






