என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    • ஒரு சிலருக்கு புருவங்கள் மிகவும் அடர்த்தியாக பெரிதாக காணப்படும்.
    • ஒரு குறிப்பிட்ட கால அளவில் திரெட்டிங் செய்வது சரியாக இருக்கும்.

    புருவத்தின் அடர்த்தி, வடிவம் மற்றும் எவ்வளவு நீளமாக இருக்கிறது என்பது கண்களை ஹைலைட் செய்யும். த்ரெட்டிங் செய்து கொள்ளும் போது வலிக்கும், சுற்றியிருக்கும் பகுதிகளில் சிவந்து போய், லேசாக வீக்கமாகத் தெரியும். சிலருக்கு சில நாள் வரை எரிச்சலும் அரிப்பும் ஏற்படும். எனவே, ஐப்ரோ த்ரெட்டிங் செய்யப் போகிறீர்கள் என்றால், என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் செய்யக்கூடாது என்பதையும் இங்கே பார்க்கலாம்.

    ஒரு சிலருக்கு புருவங்கள் மிகவும் அடர்த்தியாக பெரிதாக காணப்படும். அவர்கள் த்ரெட்டிங் செய்தால் நிச்சயமாக சில நாட்களுக்கு புருவங்களைச் சுற்றி சிவந்து, கண்கள் லேசாக வீக்கமாகத் தான் இருக்கும். எனவே புருவம் அடர்த்தியாக இருப்பவர்கள் த்ரெட்டிங் செய்வதற்கு பதிலாக ட்ரிம் செய்து கொள்ளலாம். இதன் மூலம், அழகான மென்மையான புருவங்களைப் பெறலாம்.

    நீங்கள் திரெட்டிங் செய்து கொள்ள விரும்பினால்,மேக்கப்பை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். கண் மை, மஸ்காரா என்று எதையுமே போட்டுக்கொள்ள கூடாது. அதேபோல திரெட்டிங் செய்த பிறகு குறைந்தது ஒரு நாளைக்காவது எந்த மேக்கப் சாதனத்தையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    திரெட்டிங் செய்த சில மணி நேரத்திலேயே உங்களுக்கு ஏதேனும் க்ரீம் அல்லது கிளென்சர் பயன்படுத்த வேண்டும் என்பது போல உணர்வு தோன்றும். திரெட்டிங் செய்யும்போது ஃபாளிக்கில் திறக்கப்படுவதால், நீங்கள் கிளென்ஸர் அல்லது க்ரீம்கள் எதேனும் பயன்படுத்தினால் அந்த இடத்தில் புண்ணாக மாறி தழும்பாக அடையாளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

    ஒவ்வொருவருக்கும் அவரவரின் புருவத்தின் வளர்ச்சி, அடர்த்தி மற்றும் வடிவத்துக்கு ஏற்றவாறு ஒரு குறிப்பிட்ட கால அளவில் திரெட்டிங் செய்வது சரியாக இருக்கும். ஒரு சிலருக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையும், ஒரு சிலருக்கு மாதம் ஒருமுறையும், மிகவும் மெல்லிசான புருவம் இருப்பவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திரெட்டிங் செய்தால் கூட போதுமானது. எனவே உங்கள் முகத்திற்கு, உங்கள் புருவத்திற்கு ஏற்றவாறு எந்த கால இடைவெளியில் நீங்கள் திரெட்டிங் செய்து கொள்ள வேண்டும் என்று உங்களுடைய அழகு கலை நிபுணரிடம் கேட்டு அதையே பின்பற்ற வேண்டும். இடையில் நீங்கள் சுயமாக திரெட்டிங் செய்து கொள்ள வேண்டாம். அவசரமாக ஓரிரு புருவ முடிகளை நீங்கள் ட்வீசரில் நீக்கினால் கூட, புருவத்தின் அழகு கெட்டுவிடும்.

    எவ்வளவு நேர்த்தியாக, வலியே இல்லாமல் புருவம் திருத்தப்பட்டாலும், மிகக் குறைந்த அளவிலாவது வீக்கம் மற்றும் எரிச்சல் ஏற்படலாம். எனவே வீக்கம் மற்றும் சிவந்திருப்பது போன்றவற்றைக் குறைப்பதற்கு ஐஸ் கட்டி அல்லது கற்றாலை ஜெல்லை பயன்படுத்தலாம்.

    • கறிவேப்பிலை துவையலை வாரம் இருமுறை சாப்பிட்டு வர முடி உறுதியாகும்.
    • கறிவேப்பிலையை அரைத்து அடை போல் தட்டிக் காய வைக்க வேண்டும்.

    கறிவேப்பிலையை உண்பதால் ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கும். ஊட்டச்சத்து குறைப்பாட்டால் முடி உதிரும் பிரச்சனை சரியாகும். நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையுடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி, சூடான சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட, முடி வளரும்.

    இரண்டு கிளாஸ் தண்ணீரில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை முதல் நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் காலை இதனுடன் சிறிதளவு சீரகம், இந்துப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடித்துவர முடி வளரும். இளநரை சரியாகும்.

    மூன்று நெல்லிக்காயுடன் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைச் சேர்த்து அரைத்து, வடிகட்டி குடித்து வரலாம். வலுவான, அடர்த்தியான கூந்தலாக மாறும்.

    கறிவேப்பிலை துவையலை வாரம் இருமுறை சாப்பிட்டு வர முடி உறுதியாகும். முடி உதிர்தல் பிரச்சனை தடுக்கப்படும்.

    கறிவேப்பிலை இலைகளை அரைத்து அரை நெல்லிக்காய் அளவு உருட்டி 40 நாள்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, முடி நன்றாக வளரும்.

    கறிவேப்பிலையை அரைத்து அடை போல் தட்டிக் காய வைக்க வேண்டும். நன்றாகக் காய்ந்த பிறகு, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, தொடர்ந்து தலைக்குத் தேய்த்துவர, முடி செழுமையாக வளரும்.

    கறிவேப்பிலையைக் காய்ச்சி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தொடர்ந்து தேய்த்து வர, முடி நன்கு வளரும்.

    கறிவேப்பிலைச் செடியில் இருந்து இலைகளுடன் கூடிய குச்சியை வெட்டிக் காயவைக்கவும். இலைகள் உதிரும்வரை காத்திருக்க வேண்டும். இலைகள் உதிர்ந்ததும் அவற்றை எடுத்து, அத்துடன் சிறிது வெந்தயம் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். அவ்வப்போது இந்தப் பொடியைத் தலைக்குத் தேய்த்து வந்தால், நரை பிரச்னைகள் நீங்கும்.

    கறிவேப்பிலையுடன் 2 மிளகு சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், தலையில் உள்ள பொடுகு குணமாவதோடு முடியும் செழித்து வளரும்.

    • முகத்திற்கு மசாஜ் செய்ய கூடுதல் கவனம் தேவை.
    • சோர்ந்துபோன தசைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்க மசாஜ் உதவும்.

    முகத்திற்கு அழகூட்டுவதற்கு எண்ணற்ற கிரீம்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. அழகு நிலையங்கள் பலவும் முகத்திற்கு பொலிவூட்ட பல வித உபயங்களை கையாளுகின்றன. அதில் முக்கியமானது முக மசாஜ். முகத்திலிருக்கும் உயிரற்றுப்போன அணுக்களை நீக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சோர்ந்துபோன தசைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கவும் மசாஜ் உதவும். இது முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து பொலிவை கூட்டுகிறது.

    மசாஜ் செய்ய அழகு நிலையங்களுக்குத்தான் செல்லவேண்டும் என்பதில்லை. நாமே நமது முகத்தை வீட்டிலேயே மசாஜ் செய்து கொள்ளலாம். முகம் மொத்தமாக சேர்த்து 20 நிமிடம் வரை மசாஜ் செய்யலாம். மாதத்துக்கு ஒருமுறையாவது மசாஜ் செய்தால் முகத்தின் அழகு அதிகரிக்கும்.

    முகத்தில் கண், மூக்கு, உதடு போன்ற மிருதுவான பகுதிகள் இருப்பதால் முகத்திற்கு மசாஜ் செய்ய கூடுதல் கவனம் தேவை. கண்கள் தவிர பிற பகுதிகளுக்கு கீழிருந்து மேல்புறமாகத்தான் மசாஜ் செய்யவேண்டும். கண்களுக்கு மட்டும் அதை சுற்றியுள்ள பகுதியில் வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும்.

    பஞ்சில் கிளென்சிங் மில்க் அல்லது தயிர் தடவி முகத்தை சுத்தப்படுத்துங்கள். பேன்ஸி கடைகளில் பல்வேறு பிரண்ட்களில் நர்ஸிங் க்ரீம் கிடைக்கிறது. அவரவர் முகத்திற்கு பொருத்தமான க்ரீமை தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. நர்ஸிங் க்ரீமை முகம் முழுக்க பரவவிட்டு தடவிக் கொள்ளுங்கள்.

    கழுத்தில் தொடங்கி கன்னம், தாடை, கண், மூக்கு என்று ஒவ்வொரு பகுதிக்கும் நேரம் ஒதுகி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். ஒவ்வொரு பகுதியையும் நான்கிலிருந்து ஆறு தடவை செய்யலாம். பால், ஏடு, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றையும் உபயோகித்து மசாஜ் செய்யலாம். நம் தோலுக்கு ஊட்டங்களை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையிருப்பால் நர்ஸிங் க்ரீம், பாலேடு போன்றவற்றிலிருக்கும் ஊட்டங்களை எளிதில் உறிஞ்சிக் கொள்ளும்.

    மசாஜ் செய்து முடித்ததும் இரு கைகளாலும் கன்னத்தை லேசாக தட்டுங்கள். பிறகு இரு கைகளால் முகத்தை சிறிது நேரம் மூடிக் கொள்ளுங்கள். பிறகு சிறுது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டால் முகத்தை துடையுங்கள். பிறகு பேஸ் ஸ்கிரப் அல்லது அரிசிமாவை பால் கலந்து பேஸ்டாக்கி முகத்தில் ஐந்து நிமிடங்கள் வரை கரகரப்பாக தேய்க்க வேண்டும்.

    பின் மூக்கின் ஓரங்களில் இருக்கும் பிளாக் ஹெட்ஸ்களை அதற்கான உபகரணம் பயன்படுத்தி நீக்க வேண்டும். ஆழமாக இருக்கும் பிளாக் ஹெட்ஸ்களை நீக்கும் முயற்சிக்க வேண்டாம். ஏனெனில் அது வேறுவிதமான பாதிப்புகளை உருவாக்கிவிடும்.

    மேற்சொன்ன மசாஜ் முறைகள் உலர்ந்த மற்றும் சாதாரண சருமத்தினருக்கு மட்டும்தான் பொருந்தும். முகத்தில் பரு இருக்கும் பெண்கள் சுயமாக மசாஜ் செய்யக்கூடாது.எல்லாம் முடிந்த பிறகு முகத்தில் முல்தானி மெட்டியில் சிறிது பால் குழைத்து பேஸ்பேக் தடவி உலர விடுங்கள். பத்து நிமிடம் போன பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிவிடவும். அப்புறம் பாருங்கள் உங்கள் முகம் பள பளப்பாய் ஜொலிக்கும்.

    • முடியின் வளர்ச்சி தான் உங்கள் உடல் ஆரோக்கியத்தை குறிக்கிறது.
    • சிலருக்கு தலை முடியை பிடித்து இழுத்தாலே முடி கொத்தாக வரும்.

    முடியின் வளர்ச்சி மிக முக்கியமானதாக எப்போதும் கருதப்படுகிறது. மேலும் முடியின் வளர்ச்சி தான் உங்கள் உடல் ஆரோக்கியத்தை குறிக்கிறது. அதிகமாக முடி கொட்டினால் அது உடல் நலத்திற்கு நல்லது கிடையாது. ஒரு சில முக்கிய செயல்கள் தான் நம் முடியை அதிகம் கொட்ட வைக்கிறது. முடிகள் அதிகமாக கொட்டுகிறது என்றால், நீங்கள் உங்கள் முடியிற்கு அதிக அழுத்தத்தை தருகிறீர்கள் என்று அர்த்தம்.

    சிலருக்கு தலையை சீப்பால் சீவினால் முடி கொத்து கொத்தாக கொட்டி கொண்டேயிருக்கும். இன்னும் சிலருக்கு தலை முடியை பிடித்து இழுத்தாலே முடி கொத்தாக வரும். இன்னும் சிலர் தலை குளித்து விட்டு வந்தால் பாத்ரூம் முழுவதும் முடி உதிர்ந்து காணப்படும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் முடி கொட்டி இளம் வயதிலேயே தலையில் வழுக்கையுடன் காணப்படுவர். இதற்கு சில முக்கிய காரணங்களை பட்டியலிட்டுள்ளோம்

    1. அடிக்கடி தண்ணீர் மாற்றி குளிப்பது முடி உதிர காரணமாக அமைகிறது

    2. எப்போதும் அதிக சூடுள்ள சுடுநீரில் குளிப்பது கூட தலை முடி உதிர வழி வகுக்கும்

    3. நீச்சல் குளம் போன்ற இடங்களில் குளோரின் நிறைந்த தண்ணீர் இருக்கும் அதில் குளித்தால் முடி உதிரும்

    4. சில இடங்களில் உப்பு நீர் இருக்கும். இந்த தண்ணீரில் உள்ள உப்பின் காரணமாகவும் தலைமுடி உதிரலாம்.

    5. நம் உடலுக்கு தேவையான சரியான அளவு வைட்டமின் மற்றும் பிற நுண்ணூட்ட சத்துக்கள் இல்லாவிட்டால் கூட முடி உதிரலாம் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    6. தலை முடியை சுத்தமாக வைத்துக் கொள்ளாதோருக்கு முடி உதிரும்

    7. தினமும் தலைக்கு குளித்து தலையில் பேன், பொடுகு, சிக்கு இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொண்டால் முடி உதிரவே உதிராது.

    இயற்கையான பொருட்கள் பயன்படுத்தினாலே முடியின் ஆரோக்கியம் மேம்படும். மேலும், தலையில் அழுக்குகள் சேர்ந்தால் தலையை உடனே அலசிவிட வேண்டும்.

    சத்தான உணவுகளை தவிர்த்து வந்தால், அது உங்கள் உடல் நலனை மட்டுமல்ல முடியின் ஆரோக்கியத்தையும் முற்றிலுமாக குறைத்து விடும். உண்ணும் உணவில் ஊட்டசத்துக்கள் இல்லையென்றால், அதில் எந்த நன்மையையும் இல்லை.

    தலை குளித்து முடித்த பின்னர் கூந்தலை காய வைக்க ஹேர் ட்ரையரை பயன்படுத்தினால், முடியை அவை உடைய செய்து விடும். முக்கியமாக இந்த ஹேர் ட்ரையர்கள் முடியின் அடி வேரையே பாதித்து முடி கொட்ட செய்து விடும். எனவே, முடியில் ஹேர் ட்ரையர் பயன்படுத்தும் பழக்கத்தை தவிர்த்து விடுங்கள்.

    • சருமத்தை இலேசாக வெளுக்கச் செய்யும் தன்மை இப்பழங்களுக்கு உண்டு.
    • கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் ஸ்ட்ராபெர்ரி பயன்படுகிறது.

    ஸ்ட்ராபெர்ரி அனைத்துவிதமான சருமங்களுக்கும் அளவிட முடியாத நன்மைகளை தருகிறது. சருமத்துளைகளில் அடங்கியிருக்கும் அழுக்குகளை வெளியேற்றவும், முகத்தை சுத்தப்படுத்தவும் சிறப்பாக செயல்படுகிறது.

    இந்தப் பழங்கள் மிகவும் சுவையும், மணமும் கொண்டவை. சருமத்தைச் சுத்தப்படுத்தும். அழகுச் சாதனப் பொருள் தயாரிப்பில் இப்பழங்களின் மணமும், குணமும் உபயோகிக்கப்படுகின்றன. பருவப் பெண்கள் பரு மற்றும் வடுக்களைத் தடுக்க தங்கள் உணவில் இப்பழங்களைச் சேர்த்துக் கொள்ளுதல் நலம் பயக்கும்.

    சருமத்தை இலேசாக வெளுக்கச் செய்யும் தன்மை இப்பழங்களுக்கு உண்டு. அதனால் முகத்திலுள்ள பருக்களின் வடுக்களை விரைவில் மறையச் செய்யும் குணம் கொண்டது. வெயிலினால் ஏற்படும் சருமப் பராமரிப்பிலிருந்தும், சூரியக்கதிர் வீச்சிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும்.

    ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் சாலிசிலிக் அமிலமானது முகப்பருக்களை நீக்க உதவுகிறது. இறந்த செல்கள் முகத்தில் தேங்கியிருக்கும் போது முகத்தின் பளபளப்பு குறைகிறது. இந்த இறந்த செல்களை நீக்க உதவுகிறது.

    கொலாஜன் உற்பத்தி குறைவால் சருமத்தில் சுருக்கங்களும் இளவயதில் முதுமை தோற்றமும் உண்டாகிறது. இந்த கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் ஸ்ட்ராபெர்ரி பயன்படுகிறது. அழகான நிறத்தை கொண்டிருக்கும் ஸ்ட்ராபெர்ரி வைட்டமின் சி சத்து நிறைந்தது. இவற்றில் இருக்கும் ஒமேகா 3 கூடுதலாக சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி முகத்தை பொலிவாக வைக்க உதவுகிறது.

    ஸ்ட்ராபெர்ரி, தயிர், தேன் மூன்றையும் சமஅளவில் எடுத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும், இவை முகப்பருவை குறைப்பதோடு முகத்தையும் பொலிவாக்க உதவும். வாரம் ஒருமுறை இந்த பேக் போடுவதன் மூலம் முகப்பருக்களை விரைவாக குறைக்க முடியும்.

    ஸ்ட்ராபெர்ரி மசித்தது 2 டீஸ்பூன், கற்றாழை ஜெல் 1 டீஸ்பூன், பாலேடு 1 டீஸ்பூன் எடுத்து மூன்றையும் நன்றாக கலந்து குழைத்து முகம் மற்றும் கழுத்துபகுதியில் தடவுங்கள். பிறகு இலேசாக மசாஜ் செய்து விடவும். 20 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை இதை செய்யலாம். கற்றாழை ஜெல் முகத்தில் இருக்கும் வறட்சியை தடுத்து எண்ணெய் பசை இல்லாமல் சருமத்தை பொலிவாக வைக்க உதவுகிறது. கற்றாழை பயன்படுத்துவதால் அவை சருமத்துளைகளை அடைக்காமல் முகத்தை சுத்தம் செய்து வெளியேறும். சருமத்தில் கரும்புள்ளிகள். பருக்களால் வடு போன்றவற்றையும் மறைய செய்யக்கூடியது. இதனோடு ஸ்ட்ராபெர்ரி கலந்து சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது.

    ஸ்ட்ராபெர்ரியை மசித்து எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை காத்திருந்து வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவினால் எண்ணெய் பசை கட்டுக்குள் வரும்.இது அதிகப்படியான எண்ணெயை நீக்குவதோடு சருமத்தையும் சுத்தம் செய்து இயற்கை ப்ளீச் போல் சருமத்தை சுத்தம் செய்ய உதவுகிறது.

    • சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை இயற்கையாக குணமாக்கும் தன்மை தேனில் உள்ளது.
    • தேனில் இயற்கையாகவே ஈரப்பதம் அளிக்கும் மூலப்பொருட்கள் அதிகம் உள்ளது.

    தவறான உணவு பழக்கம்,அதிக காற்று மாசு, இரவு நேரத்தில் தாமதமாக உறங்குதல், அதிக கெமிக்கல் கொண்ட கிரீம்களை பயன்படுத்துதல் இப்படிபட்ட வாழ்க்கை முறை மாற்றத்தால் முகத்தின் ஆரோக்கியம் கெட்டு பல வித பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், கரு வளையங்கள், தழும்புகள் ஆகியவை உண்டாகுகின்றன. இது போன்ற பாதிப்புகள் அனைத்தையும் எளிதில் குணமாக்க ஆயுர்வேத மருத்துவ குணம்கொண்ட தேன் உதவுகிறது என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை இயற்கையாக குணமாக்கும் தன்மை தேனில் உள்ளது. இதில் உள்ள என்சைம்கள், தாவரங்களின் மூலப்பொருட்கள் மற்றும் இதிலுள்ள நல்ல பாக்டீரியா ஆகியவை ஒன்று சேர்ந்து உங்களுக்கு சிறந்த முக அழகை தரும். தூய்மையான, பதப்படுத்தப்படாத தேன் உங்கள் முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகளை நீக்கி பளபளப்பான சரும அழகை உண்டாக்கும். மேலும் இதன் இயற்கை தன்மை தோல் நோய்கள் மற்றும் அரிப்புகள் வராமல் தடுத்து உங்களை எப்போதும் இளமையாக வைக்கும்.

    தேனில் இயற்கையாகவே ஈரப்பதம் அளிக்கும் மூலப்பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே முகத்திற்கு தேனை பயன்படுத்தினால் மிக விரைவிலே மங்கலான உங்கள் முக அழகு பொலிவாக மாறிவிடும். சிறிது எலுமிச்சை சாற்றுடன் தேனை கலந்து முகத்தில் தடவி வருவதால் கரும்புள்ளிகளை எளிதில் விரட்டலாம். அத்துடன் உங்கள் சருமத்தின் நிறத்தை கூட்டும், முகத்தை மென்மையாக்கும், முகத்தின் நிறத்தை பளபளப்பாக்கும், என்றென்றும் இளமையான தோற்றத்தை தரும். தேனில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைட் முகத்தில் உள்ள தழும்புகளை மறைய வைக்க உதவும் என அழகியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

    இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் அதிகமான பருக்களால் அவதிப்பட்டு வருகின்றனர். பருக்கள் உருவாகி மறைந்து விடாமல், அந்த இடத்தில் பெரிய தழும்புகளையும் உருவாக்கி விடுகிறது. பருக்களையும் அதனால் ஏற்படும் தழும்புகளையும் மிக சுலபமாக நீக்க சிறிது நெய்யுடன் தேன் கலந்து தடவி வாருங்கள். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள புண்கள், வீக்கம், வடுக்கள் போன்றவை எளிதில் குணமாகும்.

    கடைகளில் விற்கும் பதப்படுத்தட்ட தேனை முகத்திற்கு பயன்படுத்த கூடாது. காரணம், கடைகளில் விற்கப்படும் தேனை முழுவதுமாக சூடு படுத்துகின்றனர். எனவே அதில் உள்ள இயற்கை பாக்டீரியா, என்சைம்கள் குறைந்து விடுகிறது. எனவே சரும பாதுகாப்பிற்கு சுத்தமான, பதப்படுத்தபடாத தேனை பயன்படுத்த வேண்டும்.

    • அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
    • குளிக்கும்போது சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

    தினமும் குளிப்பது நல்ல பழக்கம். அது சருமத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் சிலர் ஒரு நாளைக்கு பல முறை குளிப்பார்கள். அப்படி உடல் சுத்தத்தை பராமரிப்பது ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அது சருமத்திற்கு பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் உடலில் சென்சிட்டிவ் எனப்படும் அதிக உணர் திறன் கொண்ட பகுதிகளில் சருமமும் ஒன்றாகும். ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறையோ, அடிக்கடியோ குளித்தால் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படலாம். வாரத்திற்கு 7 முறைக்கு மேல் குளிப்பதும் ஒவ்வொரு முறையும் சோப் அல்லது கிளென்சர் பயன்படுத்துவதும் சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய் தன்மையை அகற்றி பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தும். சரும தொற்றுக்கும் வழிவகுத்துவிடும்.

    எத்தனை முறை குளிக்கலாம்?

    வாரத்திற்கு 10 முறை குளிப்பது தவறில்லை. ஆனால் ஏற்கனவே சரும பிரச்சினை கொண்டிருப்பவர்கள் வாரத்திற்கு 5 முறைக்கு மேல் குளிப்பது தீங்கு விளைவிக்கும் என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. சருமத்தின் தன்மையை பரிசோதித்துவிட்டு மருத்துவரிடம் எத்தனை தடவை குளிப்பது பொருத்தமானது என்று ஆலோசனை கேட்கலாம்.

    அதிகமாக குளித்தால் சருமத்திற்கு என்ன பாதிப்பு நேரும்?

    பாக்டீரியா, கிருமிகள் மற்றும் வறட்சி போன்றவை தாக்காமல் இருக்க சருமத்தில் இயற்கையாகவே பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பது சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். இறந்த செல்களை நீக்குவதற்கு வித்திடும். ஆனால் ஒரு நாளில் அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

    அப்படி குளிக்கும்போது ஒவ்வொரு முறையும் சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதாவது சருமம் வறட்சி அடைவது, சரும எரிச்சல், சரும தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். அதிக நேரம் குளிப்பதன் காரணமாக ஒவ்வாமை, நோய்த்தொற்று கூட ஏற்படலாம். அடிக்கடி குளிக்கும் செயல்முறையின்போது உடலை அதிகமாக சுத்தம் செய்தால், சருமத்தை பாதுகாப்பதற்காக ஆன்டிபாடிகளாக செயல்படும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உடலில் இருந்து நீங்கிவிடும். மேலும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளை அதிகம் பயன்படுத் துவது, சரும நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். நல்ல நுண்ணுயிரிகளை உடலில் இருந்து அகற்றிவிடும்.

    குளிக்கும் நேரத்தை குறையுங்கள்

    ஒன்றுக்கு மேற்பட்ட தடவை குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால், குளிக்கும் நேரத்தை குறையுங்கள். உதாரணமாக, தினமும் 10 நிமிடங்கள் குளித்தால், அதை 5 நிமிடங்களாக குறையுங்கள். எவ்வளவு குறைவாக சருமத்தில் தண்ணீர் படிகிறதோ அவ்வளவு குறைவாக சரும பிரச்சினைகள் ஏற்படும்.

    சூடான நீரை தவிருங்கள்:

    அதிகமாக குளித்தால், சுடுநீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுடுநீர் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி, சருமத்தை வறண்டு போகச் செய்து விடும். வெதுவெதுப்பான அல்லது சாதாரண நீரை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். அதிலும் குளிர்ந்த நீரை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் குளிர்ந்த நீர் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சரும வறட்சி, அரிப்பு, வீக்கம் போன்ற பாதிப்புகளை குறைக்கும். சரும துளைகள் திறப்பதை தடுக்கும். கூடுமானவரை15 நிமிடங் களுக்கு மேல் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

    மென்மையான குளியல் சோப்பைப் பயன் படுத்துங்கள்:

    குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப் உள்ளிட்டவை ரசாயன கலப்பு அதிகம் அல்லாமல் இயற்கை தயாரிப்புகளாக இருப்பது நல்லது. இரண்டாவது முறை குளிக்க விரும்பினால் சோப்பை தவிர்த்துவிட்டு தண்ணீரில் அப்படியே குளிப்பதுதான் நல்லது. சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க மென்மையான அல்லது பால் கலந்த ஈரப்பதமூட்டும் சோப்பை பயன்படுத்தலாம். இது அதிகப்படியான குளியலால் ஏற்படக்கூடிய தோல் பிரச்சினைகளை குறைக்கும்.

    உடலை உலர வையுங்கள்:

    குளித்து முடித்ததும் உடலை உலர்வடைய செய்வதற்கு டவலை கொண்டு அழுத்தமாக தேய்க்கக்கூடாது. அது சருமத்தில் உராய்வை, எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். உடலில் இருக்கும் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி விடும். டவலை கொண்டு மென்மையாக துடைப்பதுதான் சரியானது. உடலில் படிந்திருக்கும் அதிகப்படியான நீரை அகற்றும் விதத்தில்தான் துடைக்க வேண்டும். குளித்து முடித்ததும் 'பாத் ரோப்' எனப்படும் மென்மையான உடையை அணிவது நல்லது. சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் இருக்க வேண்டுமெனில், மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது அவசியமானது.

    • பருக்களை விரல்களால் கிள்ளுவதை முதலில் கைவிடவேண்டும்.
    • கொழுப்பு உணவுகளைக் குறைத்துக் கொண்டால், பருக்கள் சீக்கிரத்தில் குணமாகும்.

    இன்றைய இளைஞர்கள் பலரும் சந்திக்கும் பெரும் பிரச்னை முகப்பரு. பொதுவாக, 13 வயதில் முகப்பரு தொடங்கி 35 வயதுவரை இது நீ்டிக்கும். சிலருக்கு, இளமைப் பருவம் கடந்த பிறகும் நீடிக்கலாம். குடும்பத்தில் யாருக்கேனும் இருந்திருந்தால், வாரிசுகளுக்கு வர அதிக வாய்ப்புண்டு. சில பெண்களுக்கு மாதவிலக்கின்போது, மாறும் ஹார்மோன்களின் அளவினாலும் அந்த சமயங்களில் மட்டும் முகப்பரு ஏற்படும். அதுபோன்று, சினைப்பையில் நீர்க்கட்டி இருக்கும் பெண்களுக்கு முகப்பரு வருவது வழக்கம்.

    ஆல்பா ரெடக்டேஸ் எனும் என்சைம் அதிகமாக இருப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் ஏற்படலாம். இந்த என்சைம் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகப்படுத்தி, பருக்கள் வர வழிவகுக்கிறது.

    முகத்தில் எந்தக் களிம்பைப் பூசினாலும், 20 நிமிடங்களுக்கு மேல் அதை வைத்திருக்கக் கூடாது. காரணம், அதற்கு மேல் களிம்பு தங்கினால், அதில் தூசு சுலபமாக ஒட்டிக் கொள்ள, எண்ணெய்ச் சுரப்பிகள் அடைபட்டு முகப்பருவுக்கு வழி அமைத்துவிடும். தினமும் குறைந்தது மூன்று முறை முகத்தைச் சோப்புப் போட்டு இளஞ்சூடான தண்ணீரில் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சந்தனச் சோப்பு நல்லது. அடிக்கடி சோப்பை மாற்றக்கூடாது. சுத்தமான பருத்தித் துண்டால் முகத்தைத் துடைக்க வேண்டும். முகத்தைத் துடைப்பதற்கென்று தனியாகத் துண்டு வைத்துக் கொள்வது இன்னமும் நல்லது. முகத்தை ரொம்பவும் அழுத்தித் துடைக்கவும் கூடாது. வாரத்திற்கு இருமுறை வெந்நீரில் ஆவி பிடிப்பது நல்லது. முகப்பரு உள்ளவர்கள் முகத்தில் பவுடர் பூசுவதை தவிர்ப்பது நல்லது.

    முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவுகளைக் குறைத்துக் கொண்டால், பருக்கள் சீக்கிரத்தில் குணமாகும். உடலில் கொழுப்பின் அளவு கூடும்போதும், எண்ணெய்ச் சுரப்பிகளின் துவாரம் மூடிக்கொள்ள வாய்ப்புண்டு.

    எந்நேரமும் பருக்களை விரல்களால் கிள்ளுவதை முதலில் கைவிடவேண்டும். பருக்களிலிருந்து வெள்ளைநிறக் குருணைகளை வெளியேற்ற பருக்களைக் கிள்ளாதீர்கள், பிதுக்காதீர்கள் மிகவும் தேவைப்பட்டால் மட்டும் இதற்கென்றே இருக்கிற இடுக்கியைப் பயன்படுத்துங்கள்.

    நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ளுவது நல்லது. தினசரி 3 லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். கொழுப்பு மிகுந்த இறைச்சி, நெய், வெண்ணெய், வனஸ்பதி, பாலாடை, முட்டை, கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட், ஃபுட்டிங், பீட்சா, பர்கர், தந்தூரி, பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், எண்ணெய் பலகாரம் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.

    • லிப்ஸ்டிக் மேல் லிப் கிளாஸை அதிகமாகப் போடாதீர்கள்
    • கன்சிலரை அள்ளிப் பூசி கண்களின் கருவளையத்தை மறைக்கப் பார்க்காதீர்கள்.

    எல்லா பெண்களுக்குமே தாங்கள் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. நான் இப்பதான் முதன்முறையாக மேக்கப் போட்டுக்கப் போறேன். நான் எப்படி மேக்கப்பை முறைப்படி போடுவது? என்கிறீர்களா? கவலையை விடுங்கள். இது உங்களுக்கான டிப்ஸ்தான்.

    கல்லூரியிலிருந்தோ அல்லது வேலை முடிந்தோ வீட்டுக்குள் போனவுடன் தரமான க்ளென்ஸரை முகத்தில் புள்ளி புள்ளியாக வைத்து, பின்னர் கீழிருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் தடவுங்கள். ஒரு நிமிடம் கழித்து சிறிதளவு பஞ்சால் முகத்தை அழுத்தி (மேல் நோக்கி) துடைக்கவும். இதனால் முகத்திலுள்ள அழுக்கெல்லாம் வெளியேறி விடும். முகத்தை க்ளென்ஸிங் செய்தவுடன், முகத்திலுள்ள துளைகளெல்லாம் ஓப்பனாகி விடும். இதற்கு தரமான டோனரை முகத்தில் தடவினால் தான் சருமம் இறுக்கமாகும். உங்கள் சருமத்துக்கு ஏற்ற டோனரைத் தொடர்ந்து தடவி வந்தால் முகத் தசைகள் தொய்ந்து போகாது. உங்கள் இளமையும் உங்களை விட்டுப் போகாது.

    அடுத்தது மாய்ஸ்ரைசிங் க்ரீம். இதுதான் நம் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் நண்பன். இந்த ஈரப்பதம்தான் நம் இளமையைத் தக்க வைக்கிறது சிலர் 40 வயதிலும் 20 வயது இளைமையுடன் தெரிவது இதனால்தான்!

    வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆயில் பேஸ்டு க்ரீம்களை பயன்படுத்தித் தான் மேக்கப் போட வேண்டும். ஆயில் ஃப்ரீ க்ரீம்களையோ அல்லது டிரை பவுடரையோ கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. சிலருக்கு எப்போதும் அதிகமாக வியர்க்கும். இவர்கள் முகத்துக்கு ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்து விட்டு, மேக்கப் போட்டால் வியர்வையினால் மேக்கப் கலையாது. மேக்கப் உங்கள் முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தினால் உடனடியாக முகத்தை வாஷ் பண்ணி விடுங்கள்.

    ஒரு தடவை மேக்கப் செய்தால் அதை நான்கு மணி நேரம் வரைதான் வைத்திருக்க வேண்டும். அதற்கு மேல் வைத்திருந்தால் மேக்கப் பொருட்களிலுள்ள கெமிக்கல்ஸ் சருமத்தினுள்ளே இறங்கி விடும். அதனால் நாள் முழுவதும் மேக்கப்புடன் இருக்க வேண்டுமென்றால், நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை ஏற்கனவே போட்ட மேக்கப்பை கலைத்து விட்டு அரைமணி நேரம் கழித்து மறுபடியும் மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள். இப்படி செய்தால் மேக்கப்பினால் சருமம் பாதிக்காது.

    உங்கள் சரும நிறத்துக்கு ஏற்ற பவுண்டேஷன், கன்சிலர், காம்பேக்ட் பவுடர் போன்றவைகளை டெஸ்டர் மூலம் போட்டுப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள். அப்போதுதான் மேக்கப் போட்டாலும் அது முகத்தில் தனியாகத் தெரியாது. லிப்ஸ்டிக் மேல் லிப் கிளாஸை அதிகமாகப் போடாதீர்கள். இதனால் லிப்ஸ்டிக் உதட்டிலிருந்து வழிந்து கசியும்! மேக்கப் பிரஷ்ஷை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் கண்டிப்பாக க்ளீன் செய்து விடுங்கள்.

    மேக்கப் செய்யும் போது கண்களையோ அல்லது உதடுகளையோ லைட்டாகும் படி மேக்கப் செய்யுங்கள். உதாரணத்துக்கு, கண்களின் மேல் டிரஸ்சுக்கு மேச்சாக டார்க் கலரிலோ அல்லது மினுமினுப்பாகவோ ஐ ஷேடோ போட்டால், உதடுகளுக்கு லைட் கலரில் லிப்ஸ்டிக் போடுங்கள்.

    கன்சிலரை அள்ளிப் பூசி கண்களின் கருவளையத்தை மறைக்கப் பார்க்காதீர்கள். கன்சிலர் ஓரளவுக்குக் கருவளையத்தை மறைக்குமே தவிர, அதைச்சரி செய்யாது. இதற்கு சிலிகான் கலந்த மேக்கப் சாதனங்களைத்தான் பயன்படுத்த வேண்டும். பெரிய கண்களை உடையவர்கள், ஐலைனரைத் தவிர்த்து, மை மட்டும் போட்டுக் கொள்ளலாம். சிறிய கண்களை உடையவர்கள் ஐலைனரை இரண்டு தடவை போடலாம். கண்கள் பெரிதாக அழகாகத் தெரியும்.

    • புடவையை சரியாக அணிந்தால், பருமனான பெண்களை கூட, ஒல்லியாக காட்டமுடியும்.
    • பொருத்தமான உள்பாவாடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    பெண்களின் அழகிற்கு, கூடுதல் அழகு சேர்க்கும் கலைக்குதான், 'புடவை' என்று பெயர். இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா...? புடவையை முறையாக தேர்ந்தெடுத்து, சரியாக அணிந்தால், பருமனான பெண்களை கூட, ஒல்லியாக காட்டமுடியும். அதேபோல, ஒல்லியான பெண்களையும் கொஞ்சம் பருமனாக காட்டமுடியும். இந்த மாயாஜாலம், புடவைகளில் மட்டுமே சாத்தியம்.

    புடவை கட்டும்போது 'பிலீட்ஸ்' எனப்படும் முந்தானை மடிப்புகளை முன்கூட்டியே தயாரித்துவிட வேண்டும். புடவையின் ரகத்திற்கு ஏற்ப உள்பாவாடை வகைகளை தேர்வு செய்வது சிறப்பு. குறிப்பாக, பட்டு புடவைகளுக்கு லேசான ஷேப்வேர் உள்ளாடைகள் சிறப்பாக இருக்கும். அதேபோல லேசான புடவைகளுக்கு காட்டன் பாவாடைகள் கச்சிதமாக இருக்கும். அதிக விலை கொடுத்து வாங்கி அணியும் புடவைக்கு ஏற்ப உள்ளாடையும் தரமானதாக இருக்க வேண்டும்.

    புடவைக்கு கட்டாயம் பால்ஸ் தைக்கவேண்டும். அப்போதுதான் பார்டர் மடங்கும் பிரச்சினை இருக்காது. எப்போதும் புடவையின் நிறம் மற்றும் மெட்டீரியலுக்குப் பொருத்தமான உள்பாவாடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புடவையை கணுக்கால் வரை கட்டாமல், இரண்டு பாதங்களின் சுண்டு விரல்களும் மறையும்படியாகக் கட்ட வேண்டும். ஹீல்ஸ் அணியும் பெண்கள், புடவை கட்டிவிட்டு ஹீல்ஸ் அணியும்போது உயரம் போதாமல் போய்விடும் என்பதால், ஹீல்ஸ் அணிந்தபடியே புடவை கட்டி உயரத்தைச் சரிசெய்துகொள்ளலாம்.

    பிலீட்ஸை பிளவுஸுடன் 'பின்' செய்யும்போது, கழுத்தில் நெருடலாக இருப்பதுபோல தோன்றினால், பிலீட்ஸை அடுக்கிய பின், முதல் மடிப்பை மட்டும் சற்றே தளர்த்தி, சற்று கீழே இறக்கி 'பின்' செய்யலாம். டிரான்ஸ்பரன்ட் மற்றும் நெட்டட் புடவை கட்டும்போது, பிலீட்ஸை இடுப்புப் பகுதியில் பிளவுஸோடு 'பின்' செய்ய வேண்டும். பிலீட்ஸ் ஒன்றை ஒன்று ஓவர்லாப் செய்யாமல் இருக்க, 2, 3-வது பிலீட்ஸை பிளவுஸோடு உள்பக்கமாக பின் செய்ய வேண்டும். இதனால், அடிக்கடி பிலீட்ஸை அட்ஜஸ்ட் செய்யத் தேவை இருக்காது.

    • பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு கழுத்தை சுற்றி கருமை நிறம் படர்ந்து இருப்பதை காணலாம்.
    • இந்த பிரச்சினையை மிக எளிமையாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே போக்கி விடலாம்.

    பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு கழுத்தை சுற்றி கருமை நிறம் படர்ந்து காணப்படுவதை கண்கூடாகப் பார்க்க முடியும். நகைகள் அணிவது, உடல் சூடு, அலர்ஜி இவையே இதற்கான அடிப்படைக் காரணங்கள். இந்த பிரச்சினையை மிக எளிமையாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே போக்கி விடலாம்.

    உருளைக்கிழங்கை தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக அரிந்து அரைத்து, சாறு எடுத்து, கழுத்தை சுற்றி தேய்த்து வர நாளடைவில் கருமை மறைந்து தோலின் உண்மையான நிறம் தெரியத் தொடங்கும்.

    இதேபோல் பாதி எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், கழுத்தில் உள்ள கருமை அகலும்.

    வெள்ளரிக்காய் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும். எனவே வெள்ளரிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.

    பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் - இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.

    முட்டைக்கோஸை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம்.

    இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

    கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு - இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.

    கழுத்து கருமையை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்.

    • இந்த ஃபேஸ் பேக்கை தொடர்ந்து போட்டு வரும் போது சருமத்தின் நிறம் மாறுவதை காணலாம்.
    • இன்று பால் பவுடரை எந்த முறையில் சருமத்திற்கு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

    பால் பவுடருடன் சிறிது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறு சேர்த்து பல்வேறு விதமான பேஷியலை முயற்சி செய்யுங்கள். அது வளமான பொலிவை நமது முகத்திற்கு கொடுக்கும். பாலை விடவும் இது சிறந்தது. ஏனெனில் பாலை விட பால் பவுடரில் சில ஊட்டச்சத்துக்களின் காம்பவுண்ட்டுகள் சேர்க்கப்பட்டிருக்கும். அது சருமத்தை மென்மைப்படுத்த உதவும்.

    எண்ணெய் பசையான சருமம் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு மிகவும் ஏற்ற முறை இதுதான். சருமத்தில் உள்ள எண்ணெய் பசை அதனால் உருவாகும் பருக்கள் ஆகியவற்றைக் குறைத்து சருமத்தின் நிறத்தைக் கூட்டும்.

    ஒரு ஸ்பூன் பால் பவுடருடன் ஃபிரஷ்ஷாக எடுத்த எலுமிச்சை சாறினை இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவையை முகத்தை நன்கு கழுவி விட்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் இடைவெளி இல்லாமல் நன்கு அப்ளை செய்து உலர விடுங்கள். நன்கு உலர்ந்தபின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இந்த முறையைப் பயன்படுத்திப் பாருங்கள். சிறந்த ரிசல்ட்டை பெற்றிருப்பதை உணர்வீர்கள்.

    ஒரு டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன் சில துளிகள் குங்குமப்பூவைச் சேர்த்து அதனுடன் பேஸ்ட் செய்வதற்கான சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட்டாக்கிக் கொள்ள வேண்டும். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து அதை அப்படியே அரை மணி நேரம் உலர விடுங்கள். அதன் பின்னர் குளிர்ந்த நீரால் நன்கு கழுவி விடுங்கள்.

    தேவையான பொருட்கள்:

    பால்பவுடர் - 1 ஸ்பூன்

    அரிசி மாவு - 1 ஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

    ரோஸ் வாட்டர் - 1

    அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவிய பின்னர் இந்த பேக்கை உங்களுடைய முகம் கழுத்து எல்லா இடங்களிலும் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடங்கள் அப்படியே விட்ட பின்னர் முகத்தை தண்ணீரில் லேசாக தேய்த்து கழுவுக் கொள்ளவும். நீங்களே எதிர்பாராத வகையில் முகம் பொழிவு பெற்றிருக்கும். வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது ஒரு நாள் விட்டு, ஒரு நாள், இந்த ஃபேஸ் பேக்கை போட்டு வரும் போது உங்களுடைய சருமத்தின் நிறம் கூடிக்கொண்டே இருக்கும்.

    ×