என் மலர்
சமையல்
- இளம் காயாக இருக்கும் அத்தியை பறித்து ருசியாக சமைக்க முடியும்.
- கிராமப்புறங்களிலும் மலைவாசஸ்தலங்களிலும் அதிகமாக வளரும்.
தேவையான பொருள்கள்:
பாசிப்பருப்பு - தேவையான அளவு
அத்திக்காய் - கால் கிலோ
பெரிய வெங்காயம் நறுக்கியது - 2
மஞ்சள் தூள் - சிறிதளவு
தக்காளி - 2
பூண்டு - 2 பல்
உப்பு - சுவைக்கு ஏற்ப
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - தாளிக்க
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை
அத்திக்காயை மஞ்சள் தூள் போட்டு நீரில் கழுவி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பாசிப்பருப்பை குக்கரில் இரண்டு விசில் விட்டு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பாதி வெந்திருக்கும் பாசிப் பருப்புடன் அத்திக்காய் மற்றும் உங்களுக்கு விருப்பமான சாம்பார் காய்கள் போட்டு ஒரு விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கி வைத்த வெங்காயம், பூண்டு, தக்காளி, போன்றவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
நன்றாக வதங்கிய பின் வேகவைத்து எடுத்து வைத்த பருப்பு மற்றும் காய்கறிகளைச் சேர்த்து கூடவே தேவையான அளவு உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு உளுந்து தாளித்து, கூடவே கறிவேப்பிலை சேர்த்து, அடுப்பை அணைத்த பின் பெருங்காயம் ஒரு பின்ச் சேர்த்து இறக்கி சாம்பாரில் சேர்க்கவும். அவ்வளவுதான்... அத்திக்காய் சாம்பார் தயார்.

- உடலின் பல பிரச்னைகளைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது.
- மருத்துவத்தைப் பொறுத்தவரை அத்தி பழத்துக்கென தனி இடம் உள்ளது.
அத்தி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் அத்திப்பழம், உடலின் பல பிரச்னைகளைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது. இயற்கை மருத்துவத்தைப் பொறுத்தவரை அத்தி பழத்துக்கென தனி இடம் உள்ளது. கிராமப்புறங்களிலும் மலைவாசஸ்தலங்களிலும் அதிகமாக வளரும் அத்திப்பழத்தை பெரும்பாலானோர் தேனில் ஊற வைத்தும், காய வைத்து பொடியாக்கியும் சாப்பிட்டிருப்போம்.
ஆனால், இளம் காயாக இருக்கும் அத்தியை பறித்து ருசியாக சமைக்க முடியும் என்பது பலருக்கும் தெரியாத தகவல். வாய் ருசிக்க அத்திக்காய் பொரியல். எப்படி செய்யலாம் வாங்க பார்க்கலாம்...
தேவையான பொருள்கள்:
அத்திக்காய் - கால் கிலோ (நல்ல இளம் காயாகப் பார்த்து எடுத்துக்கொள்ளவும். காயின் காம்பை உடைத்தால் பால் வரக்கூடிய அளவுக்கு இருப்பது போன்ற காய் என்றால் மிகவும் நல்லது)
பெரிய வெங்காயம்- 2 (நறுக்கியது)
வரமிளகாய் - காரத்துக்கு ஏற்ப
தக்காளி - 1
பூண்டு - 6-8 பல்
சோம்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
கடுகு - தாளிக்க
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை
அத்திக்காயை சிறிது சிறிதாக வெட்டி நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு மஞ்சள்தூள் சிறிதளவு, உப்பு சிறிதளவு சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். முக்கால் பதம் வெந்ததும் நீரில் இருந்து எடுத்து தனியாக வடிகட்டி வைக்க வேண்டும்.
ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கடுகு தாளிக்கவும். கடுகு பொரிந்ததும், கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்க்க வேண்டும். கூடவே நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியதும் பூண்டு பல் மற்றும் சோம்பு இரண்டையும் சேர்த்து வதக்க வேண்டும். பூண்டும், சோம்பும்தான் இந்த டிஷ்சுக்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கக் கூடியது.

பின்னர் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இத்துடன் வேகவைத்து வடிகட்டிய அத்தியைப் போட்டு தேவையான அளவு உப்பும் சேர்த்து வதக்க வேண்டும். எண்ணெயில் வதக்க வதக்க உருளைக்கிழங்கு பொரியல் போலவே மொறுமொறுவென வர ஆரம்பிக்கும். அந்த பதத்தில் இறக்கி ரசம் சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு எனத் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
- உற்சாகமான மன நிலையில் பயணத்தை தொடர்வதற்கு வழிவகை செய்யும்.
- பாதாம் பருப்பு பயண பலகார பட்டியலில் அவசியம் இடம்பெற வேண்டும்.
பயணங்கள் மேற்கொள்பவர்கள் வீட்டை விட்டு புறப்படும்போதே அத்தியாவசிய பொருட்களை உடன் எடுத்துச் செல்வது போல பயணத்திற்கு ஏற்ற பலகாரங்களையும் கொண்டு செல்ல வேண்டும். அவை உற்சாகமான மன நிலையில் பயணத்தை தொடர்வதற்கு வழிவகை செய்யும் விதத்தில் அமையும்.
அந்த வகையில் பாதாம் பருப்பு பயண பலகார பட்டியலில் அவசியம் இடம்பெற வேண்டும். அதில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உண்டு. அது அன்றாட வைட்டமின் ஈ தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்துவிடும்.
பயணத்திற்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக 5, 6 பாதாம் பருப்புகளை தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும். அதனை சாப்பிடுவது நொறுக்குத்தீனிக்கு மாற்றாக அமையும். உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை கொடுப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். தயிரில் பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிடுவதும் உடலுக்கு வலு சேர்க்கும்.
பிஸ்கெட் சாப்பிட விரும்புபவர்கள் ஓட்ஸ் சேர்த்து தயாரிக்கப்படும் பிஸ்கெட்டை உடன் எடுத்துச் செல்லலாம். அது பயணங்களின்போது செரிமான செயல்பாடுகள் சீராக நடைபெறுவதற்கு உதவி புரியும். நொறுக்குத்தீனி சாப்பிட ஆசைப்படுபவர்கள் புரதம் கலந்த குக்கீஸ், சாக்லெட்டுகளை தேர்ந்தெடுக்கலாம். கோதுமை பிரெட், உலர் பழங்கள், உலர் தானியங்களில் தயாரான பலகாரங்களையும் பயணத்தின்போது உட்கொள்ளலாம்.
- அதிரசம் செய்யும்போது பேரீச்சம் பழம் சேர்த்தால் ருசியாக இருக்கும்.
- பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்தால் விரைவில் பழுக்காது.
* முட்டைக்கோசை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனை தயிரில் போட்டு ஊறவைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்த்தால் முட்டைகோஸ் தயிர் பச்சடி புது சுவையுடன் இருக்கும்.
* அதிரசம் செய்யும்போது மாவுடன் சிறிது பேரீச்சம் பழம் சேர்த்தால் ருசியாக இருக்கும்.
* ஜவ்வரிசியை தண்ணீரில் ஊற வைத்து பாயசம் செய்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
* மெதுவடைக்கு உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து அரைத்தால் எண்ணெய் அதிகம் செலவாகாது.
* பக்கோடா மொறுமொறுப்பாக இருக்க மாவை கலக்கும்போது சிறிது நெய்யும், உப்பிட்ட தயிரும் கலக்க வேண்டும்.
* தேங்காய் எண்ணெய்யில் சுத்தமான உப்புக்கல்லை சிறிது போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாது.
* எந்த வகை சட்னி செய்தாலும் சிறிது புதினா சேர்த்து அரைக்க வாசனையாக இருக்கும்.
* பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்தால் அவை விரைவில் பழுக்காது.
* வாழைப்பூவுடன் முருங்கைக்கீரை சேர்த்து பொரியல் செய்தால் சுவை சூப்பரோ சூப்பர்.
* வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பூ கூட்டு செய்யும்போது தேங்காய் எண்ணெய்யில் தாளித்தால் ருசியாக இருக்கும்.
* முருங்கை இலையை உருவிய பிறகு காம்புகளை நறுக்கிப்போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பிடலாம். அது உடல், கை, கால் அசதிக்கு நல்லது.
* கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா செய்யும்போது கூடவே மில்க்மெய்ட் ஊற்றி கிளறினால் அல்வா மணம், ருசியுடன் இருக்கும்.
* நெய் ஊற்றி ரவா லட்டு செய்த பின்பு தூய வெண்மை நிறம் கிடைக்க, சர்க்கரையை பொடித்து அதில் லட்டை புரட்டி எடுக்க வேண்டும்.
* கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு 2:1:1 என்ற விகிதத்தில் கலந்து பஜ்ஜி செய்தால் சுவை அமோகமாக இருக்கும்.
* தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் செய்த பின்பு மோர் மிளகாயை எண்ணெய்யில் பொரித்து பொடி செய்து தூவினால் சுவையாக இருக்கும்.
* பஞ்சாமிர்தத்துடன் ஒரு கப் பால் சேர்த்து ஒரு மூடி தேங்காய் துருவல் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து அது சூடானதும் அதில் கொட்டி கிளறி தட்டில் கொட்டி துண்டுகளாக்கினால் பஞ்சாமிர்த பர்பி ரெடி.
* உளுந்து வடை செய்யும்போது 2 டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை செய்தால் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.
- மீன் உணவுகளில் இது வித்தியாசமான சுவை.
- இதன் சுவை நாக்கில் நிரந்தரமாக தங்கி விடும்.
மீன் உணவுகளில் இது வித்தியாசமான சுவை. தேங்காய்ப்பால் கலவையில் உரிய மசாலாக்கள் சேரும்போது இதன் சுவை நாக்கில் நிரந்தரமாக தங்கி விடுகிறது. சமைத்து சுவைத்துப் பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
மீன் -1/2 கிலோ
வெங்காயம் -1 (நீளமாக நறுக்கியது)
இஞ்சி விழுது -1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -10 (நறுக்கியது)
தக்காளி -1 நீளமாக நறுக்கியது
தேங்காய் -1/2 மூடி(துருவியது)
கார்ன் மாவு -1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு -1/2 பழம்
உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப
செய்முறை:
மீனை உப்பு போட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதை உடையாமல் ஜாக்கிரதையாக வறுக்க வேண்டும். ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைத்து, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
துருவிய தேங்காயை வெதுவெதுப்பான நீரில் போட்டு ஊற வைத்து பிழிந்து பால் எடுத்து வைக்க வேண்டும். நீர் ஊற்றி அரைத்து இரண்டாம் பால் எடுக்கவும். இரண்டாவது எடுத்த தேங்காய்ப்பாலை வறுத்த மசாலாவில் ஊற்றி மீன் துண்டுகளை போட வேண்டும்.
இதை 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து சமைக்க வேண்டும். பின்னர் முதலில் எடுத்த பாலை ஊற்றி எலுமிச்சம் பழச்சாறை சேர்த்து இறக்க வெண்டும். இப்போது மண மணக்கும் மீன் மொய்லி சுவையுடன் ரெடி.

- குழந்தைள் விரும்பி சாப்பிடுவர்.
- காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இது நல்ல மாற்று.
குழந்தைகள் சுரைக்காய் என்றாலே முகம் சுளித்து சாப்பிட மறுத்துவிடுவார்கள். குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் எளிமையாகவும், சுவையாகவும் சுரைக்காய் வைத்து கபாப் செய்யலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
சுரைக்காய் துருவல் – ஒன்றரை கப்
இஞ்சி – ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு – அரை கப்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கார்ன்ஃப்ளார் – ஒரு டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா தூள் – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 3 பல்
பச்சை மிளகாய் – 5
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் சுரைக்காய்களை அதன் தோலினை நீக்கிவிட்டு அதனை துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் கடலைப் பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பின்னர் கடலைப்பருப்பினை தண்ணீரை வடித்துவிட்டு, இதனுடன் சுரைக்காய் துருவல், இஞ்சித் துருவல் சேர்த்துக் கலந்து ஆவியில் வேகவிட்டு எடுக்க வேண்டும். ஆறிய பிறகு இதனுடன் பூண்டுப் பல், பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் விடாமல் வடைக்கு அரைப்பதைப் போல் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
இதனுடன் உப்பு, சோம்பு, கொத்தமல்லித்தழை, மஞ்சள்தூள், சோள மாவு, கரம் மசாலா தூள் சேர்த்து பிசைய வேண்டும். மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, நீளவாக்கில் விரல்களைப் போல் உருட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நீளவாக்கில் உருட்டியவற்றைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும். இதனை சூடாக தக்காளி சாஸ் உடன் பரிமாறலாம்.

- உணவு பழக்க வழக்கத்தால் உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகிறது.
- இதற்கு சரியான தீர்வு என்றால் அது பூசணிக்காய் சூப் தான்.
மாறிப்போன நம் உணவு பழக்க வழக்கத்தால் உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகிறது. முக்கியமாக இளம் தலைமுறையினர் வயிற்றுப்புண்ணால் அவதிப்படுகின்றனர். அதிக காரம், பாஸ்ட் புட் போன்ற உணவுகளால் வயிற்றில் புண் உருவாகி பெரும் அவஸ்தையை கொடுக்கிறது. இதற்கு சரியான தீர்வு என்றால் அது பூசணிக்காய் சூப் தான்!
தேவையான பொருட்கள்
பூசணிக்காய் துண்டுகள் – ஒரு கப்,
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
பால் – ஒரு டம்ளர்,
மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்,
பூண்டு – 2 பல்,
சின்ன வெங்காயம் – 4,
உப்பு – தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். கடாயில் வெண்ணெயை போட்டு சூடாக்கி, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், நசுக்கிய பூண்டை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் பூசணிக்காய் துண்டுகள், உப்பு சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் 4 டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
பூசணிக்காய் வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு பூசணிக்காயை மட்டும் எடுத்து ஆற வைத்த பின் மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதை, காய் வேகவைத்த தண்ணீரில் கலக்கவும். இதனுடன் பால், மிளகு, சீரகத்தூள் சேர்த்துக் கலக்கி அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.
இதனால் கிடைக்கும் பலன்கள்:
சிறுநீரகப் பிரச்சனைகள், கல் அடைப்புகள் நீங்கும். உடல் பருமன், கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் அருந்தலாம். வயிற்றுப்புண், குடல் புண் இருப்பவர்கள் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும்.
- சுவையான ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் பூனாதான்.
- இதன் சுவை சற்று வித்தியாசமாக இருக்கும்.
வட இந்தியாவில் மிகவும் காரமான மற்றும் சுவையான ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் பூனாதான். இதன் செய்முறை சற்று வித்தியாசமாக இருக்கும். மேலும் இதில் சிக்கனை கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக வேக வைப்பதால், இதன் சுவை இன்னும் அதிகமாகும்.
இந்த ரெசிபி சிக்கனை வித்தியாசமாக சமைக்க நினைப்போருக்கு சிறந்ததாக இருக்கும். இப்போது அந்த சிக்கன் பூனாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 2 கிலோ (பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
பூண்டு - 12 பற்கள்
வரமிளகாய் - 10
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
பட்டை - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் பூண்டு, வரமிளகாய், கிராம்பு, ஏலக்காய், பட்டை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிக்கனை நன்கு கழுவி, அதில் உள்ள ஈரத்தை பேப்பர் டவல் கொண்டு முற்றிலும் எடுத்துவிட வேண்டும்.
பின்னர் சிக்கன் துண்டுகளின் மேல் எண்ணெய் தடவி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை தேய்த்து, 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊறவைத்துள்ள சிக்கன் துண்டை போட்டு, தீயை குறைவில் வைத்து, 8-10 நிமிடம் பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம் சேர்த்து தாளித்து, வறுத்த சிக்கன் துண்டை சேர்த்து, உப்பு, தயிர் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி விட வேண்டும். விசில் போனதும், அதனை திறந்து குளிர வைத்து, அதனை மற்றொரு வாணலியில் ஊற்றி, 5 நிமிடம் சிக்கன் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான சிக்கன் பூனா ரெடி! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, சப்பாத்தி அல்லது சாதத்துடன் பரிமாற வேண்டும்.
- காலிஃப்ளவரில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம்.
- காலிஃப்ளவரை புதினாவுடன் சேர்த்து வெரைட்டி ரைஸ்
காலிஃப்ளவர் புற்றுநோயை குறைப்பதிலும், அப்புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக செயல்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலிஃப்ளவரில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது. இத்தகைய காலிஃப்ளவரை புதினாவுடன் சேர்த்து வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை உயர்த்துங்கள்.
தேவையான பொருட்கள்
நறுக்கிய காலிஃப்ளவர் - ஒரு கப்
சாதம் – ஒரு கப்
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
புதினா – ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய், நெய் – தலா 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும். புதினாவுடன் பச்சை மிளகாய் சேர்த்துத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் அரைத்த புதினா விழுது, உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்க வேண்டும். பின்னர் காலிஃப்ளவரைச் சேர்த்து வேகவிட்டு இறக்கவும்.
இதனுடன் வடித்த சாதம் சேர்த்து நன்கு புரட்டி எடுத்தால், காலிஃப்ளவர் – புதினா ரைஸ் ரெடி. சுவையும் அருமையாக இருக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகம் அளிக்கும். நீங்களும் உங்களது வீடுகளில் செய்துபாருங்கள்.
- உடல் எடை குறைப்பதில் கோதுமைக்கு முக்கிய பங்கு உண்டு.
- கோதுமையில் சுவையான பாயசம்.
கோதுமை நமது உடல் எடையினைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது. இந்த கோதுமையில் சுவையான பாயசம் செய்வது பற்றி தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை - 1 கப்
பாதாம் பருப்பு -3
முந்திரி பருப்பு -3
உலர்ந்த திராட்சை -5
வெல்லம் - 1 கப்
நெய் - 2 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 1 கப்
பால் - 1/2 கப்
ஏலக்காய்த் தூள் - 1 ஸ்பூன்
செய்முறை:
கோதுமையினை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு கோதுமையின் மீது உள்ள உமி போன்ற தோல் உரிந்து வரும் அளவிற்கு அரிசி களைவதுபோல் ஒன்றிரண்டு முறை நீரில் கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் வெள்ளை முத்துக்கள் போன்று கோதுமை கிடைக்கும். இதனை குக்கரில் போட்டு 3 விசில் வரை வேக விடவும்.
அடுத்து வாணலியில் வெல்லத்தை சேர்த்து தண்ணீர்விட்டு பாகுபோல் காய்ச்ச வேண்டும். பின்னர் வெல்லப்பாகினை வடிகட்டிவிட்டு மீண்டும் அதே கடாயில் சேர்த்து பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து கிளற வேண்டும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பாதாம், ஏலக்காய்த்தூள் சேர்த்து வறுத்து அதனை வெல்லப்பாகுக் கலவையில் கொட்டிக் கிளற வேண்டும்.
அடுத்து பால் மற்றும் வேகவிட்ட கோதுமையை சேர்த்து 5 நிமிடங்கள் கிளறிவிட்டு இறக்கினால் சுவையான கோதுமை பாயாசம் ரெடி. இதனுடன் சிறிதளவு சுக்கு பொடி சேர்த்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

- பிங்கான் பாத்திரங்கள் பலரது விருப்பமாக இருக்கின்றன.
- பிங்கான் பாத்திரங்கள் வெப்பத்தை அதிகமாக உட்கிரகிக்காது.
பார்ப்பதற்கு பளபளப்பாகவும், கண்ணைக் கவரும் டிசைன் மற்றும் வடிவமைப்புகளிலும் கிடைக்கும் 'செராமிக்' எனப்படும் 'பிங்கான்" பாத்திரங்கள் பலரது விருப்பத் தேர்வாக இருக்கின்றன. சீனாவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட பிங்கான், தற்போது உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சமைப்பதைவிட சமையலுக்கு உபபோகித்த பாத்திரங்களை சுத்தம் செய்வது பலருக்கும் கடினமான வேலையாக இருக்கிறது. அந்த வகையில், பாத்திரம் கழுவும் நேரத்தையும் செராமிக் பாத்திரங்கள் குறைக்கின்றன. காரணம், இவற்றில் எண்ணெய், உணவுத் துகள்கள் ஆகியவை அதிகமாக ஒட்டுவது இல்லை. இதனால் செராமிக் பாத்திரங்களை விரைவாக சுத்தப்படுத்த முடியும்.
சில பாத்திரங்களின் மேற்பகுதியில் பூசப்பட்டுள்ள பூச்சுகள் அதிக வெப்பத்தை உட்கிரகிக்கும். இதன் விளைவாக, அதில் உள்ள ரசாயனங்கள் சமைக்கப்படும் உணவிலும் கலந்து சாப்பிடுபவர்சுளுக்கு தீங்கு விளைவிக்கும். பிங்கான் பாத்திரங்கள் வெப்பத்தை அதிகமாக உட்கிரகிக்காது. இதன் மூலம் உணவில் எவ்விதமான ரசாயனமும் கலக்காது. பிங்கான் பூச்சு பூசப்பட்ட பாத்திரங்களை 500 டிகிரி பாரன்ஹீட் வரை சூடுபடுத்தினாலும் அது எவ்விதமான ரசாயன புகையையும் வெளியிடாது. தரமான பீங்கான் பாத்திரங்களை வாங்கி பயன்படுத்துவது முக்கியமானது.
பிங்கான் பூச்சு பூசப்பட்ட உலோகப் பாத்திரங்களை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் விரிசலோ, கீறலோ ஏற்பட்டால் அடிப்பகுதியில் உள்ள உலோகத்தின் நன்மை சமைக்கும் உணவுடன் கலக்க நேரிடும். கீறல் விழுந்த பிங்கான் பாத்திரங்களை சுத்தப்படுத்துவது கடினமாக இருக்கும்.
ஒழுங்கற்ற வடிவம் கொண்ட, சேதம் அடைந்த, தரம் குறைந்த பிங்கான் பாத்திரங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். மேலும் ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் வண்ணங்கள் அதிகமாக பூசப்பட்ட பீங்கான் பாத்திரங்களை வாங்குவதையும் தவிர்க்கவும். ஏனெனில் இந்த வண்ணங்களை அடர்த்தியாக காட்டுவதற்காக அவற்றுடன் ஈயம் அதிகமாக கலக்கப்படுகிறது.

பிங்கான் பூச்சு பூசப்பட்ட பாத்திரங்கள் பராமரிப்பு:
செராமிக் பூச்சு பூசப்பட்ட பாத்திரங்களை மென்மையான திரவம் கொண்டே சுத்தப்படுத்தவேண்டும். கரடு முரடான ஸ்கிரப்பர்களை பயன்படுத்தாமல் ஸ்பாஞ்சு கொண்டு இவற்றை சுத்தப்படுத்துவது நல்லது. செராமிக் பாத்திரங்களில் சமைக்கும்போது குறைவான அல்லது மிதமான தீயை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக குடாக இருக்கும் செராமிக் பாத்திரங்களை உடனடியாக குளிர்ச்சியான வெப்பநிலைக்கு உட்படுத்தகூடாது.
செராமிக் பாத்திரங்களை டிஷ்வாஷர் சுத்தப்படுத்துவதைவிட கைகளால் சுத்தப்படுத்துவதே சிறந்தது. செராமிக் பாத்திரங்களில் சமைப்பதற்கு பிளாஸ்டிக் அல்லது மரத்தால் ஆன கரண்டிகளையே பயன்படுத்த வேண்டும். உலோகக் கரண்டிகள் செராமிக் பூச்சுகளில் கீறலை உண்டாக்கும்.
- 'கேக் அலங்காரம்' பற்றிய சில ஆலோசனைகள்.
- பெண்கள் பலரும் 'கேக்' தயாரிப்பை சுயதொழிலாக செய்து வருகிறார்கள்.
பெண்கள் பலரும் 'கேக்' தயாரிப்பை சுயதொழிலாக செய்து வருகிறார்கள். கேக்குகளை சுவைப்பதற்கு முன்பாக, அவற்றின் மேல் செய்யப்படும் அலங்காரம்தான் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்படி செய்கிறது. தயாரிப்பில் புதிதாக ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு 'கேக் அலங்காரம்' பற்றிய சில ஆலோசனைகள்...

புரூட் கேக்
வெள்ளை நிற கேக்கின் மேல் பகுதியில் ஒரு பக்கத்தில் மட்டும் மாதுனை முத்துகள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி இலைகளை வைக்கவும். அதைச் சுற்றிலும் சிறிய அளவுள்ள சர்க்கரை முத்துகளை தூவவும். இது பார்ப்பதற்கு அழகாகவும், நேர்த்தியாகவும் காட்சி அளிக்கும்.

சாக்லெட் மற்றும் ஸ்பிரிங்கஸ் கேக்
கேக்கின் மேல் பகுதியை தவிர்த்து, பக்கவாட்டுப் பகுதியைச் சுற்றிலும் சாக்லெட், ஸ்பிரிங்கஸ் (சிறிய அளவு சர்க்கரை பூக்கள்) மற்றும் கான்பெட்டி (வண்ணமயமான சாக்லேட் துணுக்குகள்) ஆகியவற்றை கொண்டு கேக்கை அலங்கரிக்கவும். அது பார்ப்பதற்கு வண்ணமயமான தோற்றத்தைத் தரும்.

ரோஸ் கேக்
'கேக்' அலங்கரிக்கும் ஐசிங் முனைகள் கொண்டு கேக்கின் கீழ்ப்பகுதியில் இருந்து மேல்பகுதி வரையிலும் 'ஐசிங் கிரிம் மூலம் ரோஜா பூக்கள் போன்று வடிவமைக்கவும். ஒவ்வொரு அடுக்குக்கும் வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டு அலங்கரித்தால் அழகாக இருக்கும்.

ஸ்ட்ராபெர்ரி கேக்
வெனிலா கேக்கின் மேல்பகுதியின் மையத்தில் ஸ்ட்ராபெர்ரி கிரீமை பூசவும், அதற்கு மேல் ஸ்ட்ராபெர்ரி இலைகளை வைக்கவும், இது பார்ப்பதற்கு நேர்த்தியான தோற்றமளிக்கும் பெர்ரி பழங்கள், உண்ணக்கூடிய ரோஜா பூக்கள் மற்றும் ஸ்டாப்பேரி இலைகளை வைக்கவும் இது பார்ப்பதற்கு நேர்த்தியான தோற்றமளிக்கும்.

பைப்பிங் கேக்:
'கேக்'கின் நிறத்துக்கு ஏற்றவாறு டபுள் கலர் கிரீமைகொண்டு மேல் பகுதியில் பைப்பிங் செய்யவும். அது பார்ப்பதற்கு எளிமையாகவும், கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இருக்கும்.

டஸ்டிங் பவுடர் கேக்:
கேக்கின் மீது பொடித்த சர்க்கரை, கோகோ பவுடர் அல்லது உண்ணக்கூடிய மினுமினுப்பு கிளிட்டர்களை லேசாக தெளிக்கவும். இது எளிதாக செய்யக் கூடிய அலங்காரமாகும்.

மக்ரூன்ஸ் கேக்:
கேக்'கின் மேல்புறத்தில் மக்ரூன்களை கொண்டு பூ போன்ற வடிவத்தில் அடுக்கவும். கேக்கின் பக்க வாட்டுப் பகுதியையும் மக்ரூன்களை கொண்டு அலங்கரிக்கலாம்.

பாஸ்கெட் வீவ் கேக்:
கேக்கைச் சுற்றிலும் 'பாஸ்கெட் வீவ் (கூடை பின்னுவது போன்ற அமைப்பு) பைப்பிங் செய்யவும். பின்பு கிரீம் கொண்டு கேக்கின் மேலே ரோஜா பூக்கள் வடிவமைக்கவும். வெள்ளை நிற முத்துக்கள் கொண்டும் அலங்கரிக்கலாம்.

பான்டன்ட் ரிப்பன் கேக்:
'பான்டன்ட் ரிப்பன்' மூலம் வடிவமைத்த ரோஜாக் களைக் கொண்டு 'கேக்'கைச் சுற்றி வட்ட வடிவில் அலங்கரிக்கவும். பின்பு 'கேக்'கின் மேல் ஸ்பிரிங்கின்ஸ் அல்லது வெள்ளி நிற பால்களை தூவவும்.






