என் மலர்tooltip icon

    உலக கோப்பை கால்பந்து-2022

    • ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்தில் குரோஷியா வீரர் கோல் அடித்தார்.
    • 2வது பாதி ஆட்டத்தின் முடிவில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரை இறுதி ஆட்டங்களில் தோல்வி அடைந்த குரோஷியா-மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஜோஸ்கோ குவார்டியோல் தமது அணிக்கான முதல் கோல் அடித்தார்.

    பதிலுக்கு 9வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் அக்ரஃப் தாரி ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் சமநிலையில் இருந்தது. இதையடுத்து 42வது நிமிடத்தில் குரோஷியா வீரர் மிஸ்லாவ் ஒர்சிக் தமது அணிக்கான 2வது கோலை அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்ட முடிவில் குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

    இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் எதுவும் அடிக்கவில்லை. கூடுதல் நேர ஆட்ட முடிவிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற குரோஷியா இந்த உலக கோப்பை தொடரில் 3வது இடத்தை பிடித்தது.

    • அரைஇறுதியில் 0-2 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் பணிந்தது.
    • குரோஷியா அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் மொராக்கோவுடன் கோலின்றி டிரா கண்டது.

    தோகா:

    கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நாளை இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவை சந்திக்கிறது. முன்னதாக இன்று (சனிக்கிழமை) கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரைஇறுதியில் தோல்வி கண்ட குரோஷியா-மொராக்கோ அணிகள் சந்திக்கின்றன.

    அரைஇறுதிக்கு முன்னேறிய ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த முதல் அணி என்ற பெருமையை பெற்ற மொராக்கோ அணி தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ளது. முதலாவது லீக் ஆட்டத்தில் குரோஷியாவுடன் கோலின்றி டிரா செய்த மொராக்கோ அணி பெல்ஜியம், கனடா அணிகளை தோற்கடித்து தனது பிரிவில் (எப்) முதலிடத்தை பிடித்து நாக்-அவுட் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.

    2-வது சுற்றில் ஸ்பெயினுடன் கூடுதல் நேரம் முடிவில் கோலின்றி டிரா செய்த மொராக்கோ அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதுடன், கால்இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை சாய்த்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. அரைஇறுதியில் 0-2 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் பணிந்தது. குரோஷியா அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் மொராக்கோவுடன் கோலின்றி டிரா கண்டது.

    அடுத்த ஆட்டத்தில் கனடாவை வென்றது. அதற்கு அடுத்த ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் கோலின்றி டிரா செய்து தனது பிரிவில் 2-வது இடத்துடன் நாக்-அவுட் சுற்றுக்குள் கால்பதித்தது. 2-வது சுற்றில் ஜப்பானுடன் கூடுதல் நேரத்தில் டிரா (1-1) செய்த குரோஷியா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் சாய்த்தது. கால்இறுதியில் பிரேசிலுடன் கூடுதல் நேரம் முடிவில் டிரா (1-1) செய்து பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தது. அரைஇறுதியில் 0-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் சரண் அடைந்தது.

    வலுவான அணிகளை முந்தைய சுற்று ஆட்டங்களில் வீழ்த்தி இருக்கும் இவ்விரு அணிகளும் அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி குறித்து மொராக்கோ அணியின் பயிற்சியாளர் வாலிட் ரெக்ரஜி கூறுகையில், 'இந்த ஆட்டத்தில் மனரீதியாக வலுவாக செயல்படுவது கடினமானதாக இருக்கும். இதுவரை களம் இறங்காத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். 3-வது இடத்தை பிடிக்க கடுமையாக முயற்சிப்போம். இதில் வென்று வெண்கலப்பதக்கத்துடன் தாயகம் திரும்ப விரும்புகிறோம்' என்றார்.

    • உலக கோப்பை இறுதி போட்டி தனது கடைசி சர்வதேச ஆட்டம் என்று குரோஷியாவை வீழ்த்திய பிறகு மெஸ்சி தெரிவித்தார்.
    • மரடோனா வழியில் மெஸ்சி நாட்டுக்காக உலக கோப்பையை பெற்று கொடுப்பாரா? என்ற ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

    உலகின் தலை சிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி கிளப் போட்டிகளில் பல கோப்பைகளை வென்று இருக்கிறார். அர்ஜென்டினா அணிக்காக உலக கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை என்ற ஏக்கம் 32 வயதான அவருக்கு நீண்ட காலமாக இருக்கிறது.

    2014-ல் இறுதிப்போட்டி வரை வந்து ஜெர்மனியிடம் தோற்று உலக கோப்பையை இழந்தார்.

    கடந்த ஆண்டு பிரேசிலை வீழ்த்தி கோபா அமெரிக்கா கோப்பையை வென்று அர்ஜென்டினாவுக்கு பெருமை சேர்த்தார். 28 ஆண்டு கனவை நனவாக்கினார். அதே போன்று மரடோனா வழியில் மெஸ்சி நாட்டுக்காக உலக கோப்பையை பெற்று கொடுப்பாரா? என்ற ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் உள்ளனர். 36 ஆண்டுகால அர்ஜென்டினாவின் கனவை அவர் நிறைவேற்றுவாரா என்ற எதிர் பார்ப்பும் இருக்கிறது.

    உலக கோப்பை இறுதி போட்டி தனது கடைசி சர்வதேச ஆட்டம் என்று குரோஷியாவை வீழ்த்திய பிறகு மெஸ்சி தெரிவித்தார். இதனால் உலக கோப்பையுடன் அவர் வெளியேறுவாரா ? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த உலக கோப்பையில் மெஸ்சியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருக்கிறது. தனது முழு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். 5 கோல்கள் அடித்துள்ளார். 3 கோல்கள் அடிக்க உதவி புரிந்துள்ளார். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் பந்தை கடத்தி செல்லும் விதம் பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்கிறது.

    வீரர்களை ஏமாற்றி பந்தை கொண்டு செல்வதில் அவருக்கு நிகரான வீரர் யாரும் இல்லை என்பதை இந்த தொடரில் அவர் பல ஆட்டத்தில் நிரூபித்து காட்டியுள்ளார். குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 3-வது கோல் அடிக்க மெஸ்சி பந்தை கொண்டு சென்ற விதம் மிகவும் அபாரமாக இருந்தது.

    தேவைக்கு ஏற்ப வேகமாக ஓடுவது, பந்தை எதிர் அணி வீரர்களின் காலுக்கு இடையில் அடித்து கொண்டு செல்வது என்பது உள்பட பல்வேறு மேஜிக்கை வெளிப்படுத்தி வருகிறார்.

    உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்தார். அவர் 11 கோல்கள் அடித்துள்ளார். குரோஷியாவுக்கு எதிரான அரை இறுதியில் கோல் அடித்ததன் மூலம் அவர் பாடிஸ்டுடாவை (10 கோல்) முந்தினார்.

    உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற மெஸ்சியின் கனவு நனவாகுமா? என்று அர்ஜென்டினா ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கிறார்கள்.

    • பிரான்ஸ் அணி 4-வது முறையாக இறுதி போட்டியில் ஆடுகிறது. 2006-ல் இத்தாலியிடம் தோற்று கோப்பையை பறி கொடுத்தது.
    • அர்ஜென்டினா 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது.

    லுசைல்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி கத்தாரில் தொடங்கி யது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன.

    கடந்த 2-ந்தேதி லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் நெதர்லாந்து, செனகல் ( குரூப் ஏ ), இங்கி லாந்து , அமெரிக்கா (பி), அர்ஜென்டினா போலந்து (சி), பிரான்ஸ் ஆஸ்திரேலியா ( டி ) , ஜப்பான் , ஸ்பெயின், (இ), மொராக்கோ, குரோஷியா (எப்), பிரேசில், சுவிட்சர்லாந்து (ஜி), போர்ச்சுக்கல், தென் கொரியா ( எச் ) ஆகிய 16 நாடுகள் நாக்அவுட்டான 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

    ஈக்வடார், கத்தார், ஈரான், வேல்ஸ், மெக்சிகோ, சவுதி அரேபியா, துனிசியா, டென்மார்க், ஜெர்மனி, கோஸ்டாரிகா , பெல்ஜியம், கனடா , கேமரூன், செர்பியா, உருகுவே , கானா ஆகிய நாடுகள் முதல் சுற்றி லேயே வெளியேற்றப் பட்டன.

    2-வது சுற்று ஆட்டங்கள் கடந்த 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடந்தது. இதன் முடிவில் நெதர் லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோஷியா, பிரேசில், மொராக்கோ, போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, போலந்து, செனகல், ஜப்பான், தென் கொரியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகியவை 2-வது சுற்றில் வெளி யேறின.

    கால்இறுதி போட்டிகள் கடந்த 9 மற்றும் 10-ந்தேதி நடைபெற்றது. இதன் முடிவில் குரோஷியா, அர்ஜென்டினா, மொராக்கோ , பிரான்ஸ் ஆகிய நாடுகள் அரை இறுதிக்கு முன்னேறின. பிரேசில் , நெதர்லாந்து , போர்ச்சுக்கல் , இங்கிலாந்து ஆகியவை கால்இறுதியில் வெளியேற்றப்பட்டன.

    13-ந்தேதி நடந்த முதல் அரை இறுதியில் அர்ஜென்டினா 3-0 என்ற கணக்கில் குரோஷியாவை யும், 14-ந்தேதி நடந்த 2-வது அரை இறுதியில் பிரான்ஸ் 2-0 என்ற கணக்கில் குரோஷியாவை யும் வீழ்த்தின.

    2 நாள் ஓய்வுக்கு பிறகு 3-வது இடத்துக்கான ஆட்டம் இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. இதில் மொராக்கோ- குரோஷியா அணிகள் மோதுகின்றன.

    உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை ) இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. லுசைல் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா-நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன.

    உலக கோப்பையை 3-வது முறையாக வெல்லப் போவது யார் ? என்று உலகம் முழுவதும் ஆவலு டன் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அர்ஜென்டி னாவும், பிரான்சும் இரண்டு தடவை சாம்பியன் பட்டம் பெற்று இருந்தன.

    அர்ஜென்டினா 1978, 1986 ஆகிய ஆண்டுகளிலும், பிரான்ஸ் 1998, 2018 ஆகிய ஆண்டுகளிலும் உலக கோப்பையை வென்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். சாம்பியன் பட்டம் பெற இரு அணிகளும் கடுமையாக போராடும்.

    அர்ஜென்டினா 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. கடைசியாக மரடோனா தலைமையில் 1986-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றது.

    அர்ஜென்டினா அணி 6-வது முறையாக இறுதி போட்டியில் ஆடுகிறது. இதில் 3 முறை தோல்வியை தழுவியது. 1930, 1990, 2014 ஆண்டுகளில் அந்த அணி இறுதி போட்டியில் தோற்று கோப்பையை பறி கொடுத்தது. கடைசியாக 2014-ல் மெஸ்சி தலைமை யிலான அணி ஜெர்மனி யிடம் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தது.

    அர்ஜென்டினாவின் பலமே மெஸ்சிதான். இந்த போட்டி தொடரில் அவரது ஆட்டம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இன்னும் ஒரே ஒரு ஆட்டத் தில் தனது திறமையை வெளிப்படுத்தினால் உலக கோப்பை கிடைத்துவிடும்.

    35 வயதான மெஸ்சி இந்த உலக கோப்பையில் 5 கோல்கள் அடித்து எம்பாப் வேயுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார். மேலும் அணியின் மற்ற வீரர்கள் கோல் அடிக்க உதவி புரிந்துள்ளார். இதுவரை 3 கோல்கள் அடிக்க உதவி புரிந்துள்ளார்.

    வீரர்களை ஒருங்கிணைத்து செல்வதிலும் மெஸ்சி முக்கிய பங்கு வகித்து வருகிறார். இதே போல அல்வாரெஸ் (4 கோல்கள்), என்சோ பெர்னாண்டஸ், அலெக்சிஸ் மேக் அலிஸ்டர், மொலினா போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

    இது தவிர கோன்சாலோ மான்டியல், அகுனா, டிபால், ஒட்டமன்டி போன்ற சிறந்த வீரர்களும் இருக்கிறார்கள். பிரான்சின் மின்னல் வேக ஆட்டத்தை எதிர் கொள்வது அர்ஜென்டினாவுக்கு சவாலானது. அந்த அணி பின்களத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

    பிரான்ஸ் அணி பின்களம், நடுகளம், முன் களம் என அனைத்து துறையிலும் அபாரமாக இருக்கிறது. மின்னல் வேகத்தில் ஆடுவது அந்த அணியின் கூடுதல் பலமாகும். ஒவ்வொரு பகுதியில் இருக்கும் வீரர்களும் தலை சிறந்தவர்கள்.

    5 கோல்கள் அடித்துள்ள எம்பாப்வே, 4 கோல் எடுத்த ஆலிவர் ஜிரவுட், கிரீன்ஸ்மேன், டெம்ப்ளே, ரேபியாட், கோண்டே, பெர்னாண்டஸ் போன்ற அபாரமாக ஆடும் வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    பிரான்ஸ் அணி தொடர்ந்து 2-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணி இத்தாலி, பிரேசில் அணிகளுடன் இணையும் வேட்கையில் உள்ளது.

    இத்தாலி 1934, 1938 ஆகிய ஆண்டுகளிலும், பிரேசில் 1958, 1962 ஆகிய ஆண்டுகளிலும் உலக கோப்பையை தொடர்ச்சியாக கைப்பற்றியது.

    பிரான்ஸ் அணி 4-வது முறையாக இறுதி போட்டியில் ஆடுகிறது. 2006-ல் இத்தாலியிடம் தோற்று கோப்பையை பறி கொடுத்தது.

    தென் அமெரிக்க கண்டத்தின் வலுவான அணிகளில் ஒன்றான அர்ஜென்டினா தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கிறது. ஐரோப்பா கண்டத்தின் சிறந்த அணியில் ஒன்றான பிரான்ஸ் 4-வது வரிசையில் உள்ளது. இதனால் இறுதிப் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும்.

    • 2-வது சுற்றில் ஜப்பானையும், கால் இறுதியில் பிரேசிலையும் குரோஷியா வீழ்த்தியது.
    • மொராக்கோ 2-வது சுற்றில் ஸ்பெயினையும், கால் இறுதியில் போர்ச்சுக்கல்லையும் தோற்கடித்தன.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து கத்தார் நாட்டில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள உலக கோப்பையின் இறுதி போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது.

    இதில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முன்னதாக 3-வது இடத்துக்கான போட்டி நாளை நடக்கிறது.

    இதில் அரை இறுதியில் தோல்வி அடைந்த குரோஷியா-மொராக்கோ அணிகள் மோதுகின்றன. இப்போட்டி தோகாவில் உள்ள கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    அரை இறுதியில் குரோஷியா, அர்ஜென்டினாவிடமும், மொராக்கோ பிரான்சிடமும் தோல்வி அடைந்தன. லீக் போட்டியின் போது குரோஷியாவும், மொராக்கோவும் 'எப்' பிரிவில் இடம் பெற்று இருந்தன. இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிரா ஆனது.

    அந்த பிரிவில் பெல்ஜியம், கனடா அணிகளை வீழ்த்திய மொராக்கோ 7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. கனடாவை தோற்கடித்த குரோஷியா அணி பெல்ஜியத்துடன் டிரா செய்தது. குரோஷியா 5 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தது.

    2-வது சுற்றில் ஜப்பானையும், கால் இறுதியில் பிரேசிலையும் குரோஷியா வீழ்த்தியது. அதே போல் மொராக்கோ 2-வது சுற்றில் ஸ்பெயினையும், கால் இறுதியில் போர்ச்சுக்கல்லையும் தோற்கடித்தன.

    இரு அணிகளும் தங்களது முந்தைய ஆட்டங்களில் பலம் வாய்ந்த அணிகளை தோற்கடித்துள்ளதால் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இப்போட்டி நாளை இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.

    • ஆறு போட்டிகளில் நான்கில் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார்
    • அரையிறுதியில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து அசத்தினார்

    கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    நாளை நடைபெறும் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் குரோசியா- மொராக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் சாம்பியனுக்காக பிரான்ஸ்- அர்ஜென்டினா அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

    அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அந்த அணியின் கேப்டன் மெஸ்சிக்கு இதுதான் கடைசி உலகக் கோப்பை. இதற்கு முன் 2014-ல் நடைபெற்ற உலகக் கோப்பையில் அர்ஜென்டினா இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

    இதனால் மெஸ்சிக்கு உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பில்லை என கருதப்பட்டது. ஆனால், அதன்பின் மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது சிறப்பான விளையாட்டால் தற்போது அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    குரோசியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். அதன்பின் அல்வாரெஸ் கோல் அடிக்க துணை புரிந்தார்.

    இந்த போட்டியின்போது மெஸ்சி தசைப்பிடிப்பால் அவதிப்பட்டாராம். 100 சதவீதம் உடற்தகுதியுடன் இல்லையாம். இருந்தாலும் விளையாடுகிறேன் என மெஸ்சி தன்னம்பிக்கையுடன் விளையாடினாராம்.

    தற்போது இடது காலில் தசைப்பிடிப்பு (hamstring) ஏற்பட்டதன் காரணமாக நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். இதனால் அர்ஜென்டினா அணி மெஸ்சி காயத்தால் கவலையடைந்துள்ளது.

    ஒரு வேளை நாளைமறுதினம் பிரான்ஸ்க்கு எதிரான இறுதிப் போட்டியில் மெஸ்சி 100 சதவீத உடற்குதியுடன் விளையாடவில்லை என்றால், அது அர்ஜென்டினாவுக்கு மிகப்பெரிய இழப்பாகும் என்பதில் சந்தேகமில்லை.

    டி மரியா அரையிறுதியில் காயம் காரணமாக விளையாடவில்லை. தற்போது அவர் உடற்தகுதி பெற்று விட்டதால் இறுதிப் போட்டியில விளையாட வாய்ப்புள்ளது.

    இந்த உலகக் கோப்பையில் மெஸ்சி 5 கோல் அடித்துள்ளார். 3 கோல் அடிக்க துணை புரிந்துள்ளார். அவருடன் எம்பாப்வேவும் 5 கோல் அடித்துள்ளார். இருவரும் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

    • இந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத மொராக்கோ ரசிகர்கள் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் வன்முறையில் இறங்கினார்கள்.
    • பெல்ஜியத்தில் போலீசார் மீது மொராக்கோ ரசிகர்கள் பட்டாசுகளை கொளுத்தி போட்டும் வாகனங்களுக்கு தீ வைத்தும் ரகளையில் ஈடுபட்டனர்.

    பாரீஸ்:

    கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து அரை இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியிடம் மொராக்கோ அணி தோல்வியை தழுவியது. இதனால் அந்நாட்டு ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். இந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத மொராக்கோ ரசிகர்கள் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் வன்முறையில் இறங்கினார்கள்.

    பிரான்சில் போலீசார் மீது அவர்கள் கற்களை வீசினார்கள். பெல்ஜியத்தில் போலீசார் மீது மொராக்கோ ரசிகர்கள் பட்டாசுகளை கொளுத்தி போட்டும் வாகனங்களுக்கு தீ வைத்தும் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. அந்த பகுதி முழுவதும் தீ பிழம்பாக காட்சி அளித்தது. இந்த வன்முறைகளை தடுத்த போது போலீசாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வன்முறையை அடக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு இறுதி ஆட்டம்.
    • இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொண்டது. அல்பேத் ஸ்டேடியத்தில் ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் தியோ ஹெர்னாண்டஸ் தமது அணிக்கான முதல் கோலை அடித்தார். பதில் கோல் அடிக்க மொராக்கோ வீரர்கள் தீவிரமாக முயன்றனர்.

    எனினும் அவர்களது முயற்சிகள் வெற்றி பெறவில்லை. முதல் பாதி ஆட்ட நிறைவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தின் 79 வது நிமிடத்தில் மற்றொரு பிரான்ஸ் வீரர் கோலோ முவானி தனது அணிக்கான 2வது கோலை அடித்தார். இதனால் பிரான்ஸ் வெற்றி உறுதியானது. கூடுதல் ஆட்ட நேர முடிவு வரை  கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதையடுத்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் உலக கோப்பை தொடரில் 4வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.

    இந்த உலகக் கோப்பையில் கணிக்க முடியாத ஒரு அணியாக கருதப்பட்ட மொராக்கோ, அரை இறுதியை எட்டிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற சாதனையை படைத்தது. எனினும் இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் அந்த அணி வெளியேறியது அந்நாட்டு ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அரையிறுதி போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

    • உலகக் கோப்பைப் பயணத்தை இறுதிப் போட்டியில் விளையாடியவுடன் முடிவுக்கு கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,
    • 35 வயதான மெஸ்ஸி தனது ஐந்தாவது உலகக் கோப்பையில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றிற்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில் ஃபிஃபா உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியோடு அதாவது டிசம்பர் 18 ஆம் தேதி ஓய்வு பெறப்போவதாக லியோனல் மெஸ்ஸி உறுதிப்படுத்தினார். அர்ஜெண்டினா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரரூமான மெஸ்ஸி இன்றைய போட்டியில் கடைசியில் அடித்த கோல் மூலம் அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றதோடு அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:-

    உலகக் கோப்பைப் பயணத்தை இறுதிப் போட்டியில் விளையாடியவுடன் முடிவுக்கு கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அடுத்த தொடர் வருவதற்கு பல வருடங்கள் ஆகும், என்னால் அதை செய்ய முடியாது என்று நினைக்கிறேன். இப்படி முடித்து கொள்வதே சிறந்தது என அவர் கூறினார்.

    35 வயதான மெஸ்ஸி தனது ஐந்தாவது உலகக் கோப்பையில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்த கேப்ரியல் பாடிஸ்டுடாவை முந்தினார் லியோனல் மெஸ்ஸி.
    • மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார்.

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றிற்கு தகுதி பெற்றது.

    இதனை அடுத்து 7-வது முறையாக அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜெண்டினா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரரூமான மெஸ்ஸி இந்த போட்டியில் கடைசியில் அடித்த கோல் மூலம் அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றதோடு அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்த கேப்ரியல் பாடிஸ்டுடாவை முந்தினார் லியோனல் மெஸ்ஸி.

    இந்நிலையில் இன்று பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையிலான அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது என்பதும் டிசம்பர் 18 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

    முதல் முறையாக அரையிறுதிப் போட்டியில் தகுதி பெற்ற குரோஷியா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணியின் கனவு தகர்ந்தது.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 5 ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் 3-ல் பிரான்சும், ஒன்றில் மொராக்கோவும் வெற்றி பெற்றது.
    • இந்த உலகக் கோப்பையில் கணிக்க முடியாத ஒரு அணியாக அரைஇறுதி வரை நுழைந்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது, மொராக்கோ.

    தோகா

    22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடந்து வருகிறது. இதில் இன்றிரவு (புதன்கிழமை) அல்பேத் ஸ்டேடியத்தில் நடக்கும் 2-வது அரைஇறுதியில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொள்கிறது. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் வலம் வரும் தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் பிரான்ஸ் அணி லீக் சுற்றில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் முதலிடம் பிடித்தது. 2-வது ரவுண்டில் 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தையும், கால்இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும் பதம் பார்த்து அரைஇறுதியை எட்டியிருக்கிறது.

    பிரேசில் வெளியேறிய நிலையில் இப்போது அனைவரது கவனமும் பிரான்ஸ் பக்கம் திரும்பியிருக்கிறது. அதுவே அவர்களுக்கு கூடுதல் நெருக்கடியாக இருக்கும். 1962-ம் ஆண்டுக்கு பிறகு கோப்பையை தக்க வைக்கும் முதல் அணி என்ற மகத்தான சாதனையை நோக்கி பயணிக்கும் பிரான்ஸ் அணிக்கு கிலியன் எம்பாப்பே (5 கோல்), ஒலிவியர் ஜிரூட் (4 கோல்), கோல் வாய்ப்புகளை உருவாக்கும் கிரீஸ்மான் ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்கள். களத்தில் மின்னல் வேகத்தில் ஓடும் இவர்கள் சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் பந்தை வலைக்குள் தள்ளிவிடுவதில் கில்லாடிகள். கேப்டனும், கோல் கீப்பருமான ஹூகோ லோரிசும் அணியின் கட்டமைப்புக்கு பக்கபலமாக இருக்கிறார்.

    பிரான்ஸ் வீரர் ஜூலஸ் கோன்டோ நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'இது கடினமும், பரபரப்பும் நிறைந்த ஆட்டமாக இருக்கும். ஒரு அணியாக அற்புதமான பயணத்தை மேற்கொண்டு வரும் அவர்கள் சில பெரிய அணிகளை வெளியேற்றி இருக்கிறார்கள். அதனால் மொராக்கோவை நாங்கள் ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்வோம். பந்து வசம் இருக்கிறதோ இல்லையோ நாங்கள் மிக தீவிரமாகவும், வேகமாகவும் செயல்பட வேண்டியது அவசியமாகும். அப்போது தான் அவர்களின் வலுவான தற்காப்பு வளையத்தை தகர்த்து முன்னேற முடியும்' என்றார்.

    இந்த உலகக் கோப்பையில் கணிக்க முடியாத ஒரு அணியாக அரைஇறுதி வரை நுழைந்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது, மொராக்கோ. அரைஇறுதியை எட்டிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற சரித்திர சிறப்பும் உண்டு.

    லீக் சுற்றில் 2 வெற்றி, ஒரு டிராவுடன் முதலிடம் பெற்ற மொராக்கோ 2-வது சுற்றில் கோல் ஏதும் போடாத நிலையில் பெனால்டி ஷூட்-அவுட்டில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினை சாய்த்தது. மொராக்கோ கோல் கீப்பர் யாசின் போனோ ஸ்பெயினின் ஷாட்டுகளை எல்லாம் முறியடித்து ஹீரோவாக பிரகாசித்தார். தொடர்ந்து கால்இறுதியில் ஒரே கோலில் போர்ச்சுகலின் கனவை சிதைத்தது.

    நடப்பு தொடரில் 5 கோல்கள் அடித்துள்ள மொராக்கோ ஒரு கோல் மட்டுமே வாங்கியுள்ளது. அதுவும் சுயகோல் தான். இதன் மூலம் அவர்களின் தற்காப்பு ஆட்டம் எந்த அளவுக்கு பலமிக்கதாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். அந்த அணியில் யூசப் இன் நெசைரி (2 கோல்), அச்ராப் ஹகிமி, ஹகிம் ஜியேச் ஆகியோர் சிறப்பாக ஆடுகிறார்கள். ஏராளமான மொராக்கோ ரசிகர்கள் குவிந்திருப்பதால் அவர்களின் ஆர்ப்பரிப்பு அந்த அணிக்கு உந்துசக்தியாக இருக்கும்.க்

    இவ்விரு அணிகளும் இதுவரை 5 நட்புறவு ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 3-ல் பிரான்சும், ஒன்றில் மொராக்கோவும் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. உலகக் கோப்பையில் இவர்கள் மல்லுகட்டுவது இதுவே முதல் முறையாகும்.

    இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. உலகத் தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள மொராக்கோ, தாக்குதல் பாணியை கையாளும் பிரான்சுக்கும் அதிர்ச்சி அளிக்குமா அல்லது மொராக்கோவின் தடுப்பு அரணை உடைத்து பிரான்ஸ் 4-வது முறையாக இறுதிசுற்றுக்குள் அடியெடுத்து வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    • முதல் கோல் அடித்து வெற்றி கணக்கை தொடங்கி வைத்தார் மெஸ்சி.
    • முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, குரோஷியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் கோல் போடுவதற்கு அர்ஜென்டினா வீரர்கள் தீவிரம் காட்டினார்.

    34வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அர்ஜென்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சி முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். 39 வது நிமிடத்தில் அந்த அணியின் மற்றொரு வீரர் ஜூலியன் அல்வொரஸ் கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.


    2வது பாதியின் 69 வது நிமிடத்தில் மெஸ்சி கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி அல்வொரஸ் மீண்டும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினா வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் ஆட்ட நேர முடிவு வரை குரோஷியா வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதையடுத்து 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்திய அர்ஜென்டினா 6வது முறையாக உலக கோப்பை இறுதி போட்டிக்குள் நுழைந்தது. 

    ×