search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக கோப்பையில் 3-வது இடத்துக்கான போட்டி: குரோஷியா-மொராக்கோ நாளை மோதல்
    X

    உலக கோப்பையில் 3-வது இடத்துக்கான போட்டி: குரோஷியா-மொராக்கோ நாளை மோதல்

    • 2-வது சுற்றில் ஜப்பானையும், கால் இறுதியில் பிரேசிலையும் குரோஷியா வீழ்த்தியது.
    • மொராக்கோ 2-வது சுற்றில் ஸ்பெயினையும், கால் இறுதியில் போர்ச்சுக்கல்லையும் தோற்கடித்தன.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து கத்தார் நாட்டில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள உலக கோப்பையின் இறுதி போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது.

    இதில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முன்னதாக 3-வது இடத்துக்கான போட்டி நாளை நடக்கிறது.

    இதில் அரை இறுதியில் தோல்வி அடைந்த குரோஷியா-மொராக்கோ அணிகள் மோதுகின்றன. இப்போட்டி தோகாவில் உள்ள கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    அரை இறுதியில் குரோஷியா, அர்ஜென்டினாவிடமும், மொராக்கோ பிரான்சிடமும் தோல்வி அடைந்தன. லீக் போட்டியின் போது குரோஷியாவும், மொராக்கோவும் 'எப்' பிரிவில் இடம் பெற்று இருந்தன. இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிரா ஆனது.

    அந்த பிரிவில் பெல்ஜியம், கனடா அணிகளை வீழ்த்திய மொராக்கோ 7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. கனடாவை தோற்கடித்த குரோஷியா அணி பெல்ஜியத்துடன் டிரா செய்தது. குரோஷியா 5 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தது.

    2-வது சுற்றில் ஜப்பானையும், கால் இறுதியில் பிரேசிலையும் குரோஷியா வீழ்த்தியது. அதே போல் மொராக்கோ 2-வது சுற்றில் ஸ்பெயினையும், கால் இறுதியில் போர்ச்சுக்கல்லையும் தோற்கடித்தன.

    இரு அணிகளும் தங்களது முந்தைய ஆட்டங்களில் பலம் வாய்ந்த அணிகளை தோற்கடித்துள்ளதால் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இப்போட்டி நாளை இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.

    Next Story
    ×