search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நாளை இறுதிப்போட்டி: உலக கோப்பையை வெல்வது யார்? அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை
    X

    நாளை இறுதிப்போட்டி: உலக கோப்பையை வெல்வது யார்? அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை

    • பிரான்ஸ் அணி 4-வது முறையாக இறுதி போட்டியில் ஆடுகிறது. 2006-ல் இத்தாலியிடம் தோற்று கோப்பையை பறி கொடுத்தது.
    • அர்ஜென்டினா 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது.

    லுசைல்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி கத்தாரில் தொடங்கி யது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன.

    கடந்த 2-ந்தேதி லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் நெதர்லாந்து, செனகல் ( குரூப் ஏ ), இங்கி லாந்து , அமெரிக்கா (பி), அர்ஜென்டினா போலந்து (சி), பிரான்ஸ் ஆஸ்திரேலியா ( டி ) , ஜப்பான் , ஸ்பெயின், (இ), மொராக்கோ, குரோஷியா (எப்), பிரேசில், சுவிட்சர்லாந்து (ஜி), போர்ச்சுக்கல், தென் கொரியா ( எச் ) ஆகிய 16 நாடுகள் நாக்அவுட்டான 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

    ஈக்வடார், கத்தார், ஈரான், வேல்ஸ், மெக்சிகோ, சவுதி அரேபியா, துனிசியா, டென்மார்க், ஜெர்மனி, கோஸ்டாரிகா , பெல்ஜியம், கனடா , கேமரூன், செர்பியா, உருகுவே , கானா ஆகிய நாடுகள் முதல் சுற்றி லேயே வெளியேற்றப் பட்டன.

    2-வது சுற்று ஆட்டங்கள் கடந்த 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடந்தது. இதன் முடிவில் நெதர் லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோஷியா, பிரேசில், மொராக்கோ, போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, போலந்து, செனகல், ஜப்பான், தென் கொரியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகியவை 2-வது சுற்றில் வெளி யேறின.

    கால்இறுதி போட்டிகள் கடந்த 9 மற்றும் 10-ந்தேதி நடைபெற்றது. இதன் முடிவில் குரோஷியா, அர்ஜென்டினா, மொராக்கோ , பிரான்ஸ் ஆகிய நாடுகள் அரை இறுதிக்கு முன்னேறின. பிரேசில் , நெதர்லாந்து , போர்ச்சுக்கல் , இங்கிலாந்து ஆகியவை கால்இறுதியில் வெளியேற்றப்பட்டன.

    13-ந்தேதி நடந்த முதல் அரை இறுதியில் அர்ஜென்டினா 3-0 என்ற கணக்கில் குரோஷியாவை யும், 14-ந்தேதி நடந்த 2-வது அரை இறுதியில் பிரான்ஸ் 2-0 என்ற கணக்கில் குரோஷியாவை யும் வீழ்த்தின.

    2 நாள் ஓய்வுக்கு பிறகு 3-வது இடத்துக்கான ஆட்டம் இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. இதில் மொராக்கோ- குரோஷியா அணிகள் மோதுகின்றன.

    உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை ) இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. லுசைல் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா-நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன.

    உலக கோப்பையை 3-வது முறையாக வெல்லப் போவது யார் ? என்று உலகம் முழுவதும் ஆவலு டன் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அர்ஜென்டி னாவும், பிரான்சும் இரண்டு தடவை சாம்பியன் பட்டம் பெற்று இருந்தன.

    அர்ஜென்டினா 1978, 1986 ஆகிய ஆண்டுகளிலும், பிரான்ஸ் 1998, 2018 ஆகிய ஆண்டுகளிலும் உலக கோப்பையை வென்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். சாம்பியன் பட்டம் பெற இரு அணிகளும் கடுமையாக போராடும்.

    அர்ஜென்டினா 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. கடைசியாக மரடோனா தலைமையில் 1986-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றது.

    அர்ஜென்டினா அணி 6-வது முறையாக இறுதி போட்டியில் ஆடுகிறது. இதில் 3 முறை தோல்வியை தழுவியது. 1930, 1990, 2014 ஆண்டுகளில் அந்த அணி இறுதி போட்டியில் தோற்று கோப்பையை பறி கொடுத்தது. கடைசியாக 2014-ல் மெஸ்சி தலைமை யிலான அணி ஜெர்மனி யிடம் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தது.

    அர்ஜென்டினாவின் பலமே மெஸ்சிதான். இந்த போட்டி தொடரில் அவரது ஆட்டம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இன்னும் ஒரே ஒரு ஆட்டத் தில் தனது திறமையை வெளிப்படுத்தினால் உலக கோப்பை கிடைத்துவிடும்.

    35 வயதான மெஸ்சி இந்த உலக கோப்பையில் 5 கோல்கள் அடித்து எம்பாப் வேயுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார். மேலும் அணியின் மற்ற வீரர்கள் கோல் அடிக்க உதவி புரிந்துள்ளார். இதுவரை 3 கோல்கள் அடிக்க உதவி புரிந்துள்ளார்.

    வீரர்களை ஒருங்கிணைத்து செல்வதிலும் மெஸ்சி முக்கிய பங்கு வகித்து வருகிறார். இதே போல அல்வாரெஸ் (4 கோல்கள்), என்சோ பெர்னாண்டஸ், அலெக்சிஸ் மேக் அலிஸ்டர், மொலினா போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

    இது தவிர கோன்சாலோ மான்டியல், அகுனா, டிபால், ஒட்டமன்டி போன்ற சிறந்த வீரர்களும் இருக்கிறார்கள். பிரான்சின் மின்னல் வேக ஆட்டத்தை எதிர் கொள்வது அர்ஜென்டினாவுக்கு சவாலானது. அந்த அணி பின்களத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

    பிரான்ஸ் அணி பின்களம், நடுகளம், முன் களம் என அனைத்து துறையிலும் அபாரமாக இருக்கிறது. மின்னல் வேகத்தில் ஆடுவது அந்த அணியின் கூடுதல் பலமாகும். ஒவ்வொரு பகுதியில் இருக்கும் வீரர்களும் தலை சிறந்தவர்கள்.

    5 கோல்கள் அடித்துள்ள எம்பாப்வே, 4 கோல் எடுத்த ஆலிவர் ஜிரவுட், கிரீன்ஸ்மேன், டெம்ப்ளே, ரேபியாட், கோண்டே, பெர்னாண்டஸ் போன்ற அபாரமாக ஆடும் வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    பிரான்ஸ் அணி தொடர்ந்து 2-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணி இத்தாலி, பிரேசில் அணிகளுடன் இணையும் வேட்கையில் உள்ளது.

    இத்தாலி 1934, 1938 ஆகிய ஆண்டுகளிலும், பிரேசில் 1958, 1962 ஆகிய ஆண்டுகளிலும் உலக கோப்பையை தொடர்ச்சியாக கைப்பற்றியது.

    பிரான்ஸ் அணி 4-வது முறையாக இறுதி போட்டியில் ஆடுகிறது. 2006-ல் இத்தாலியிடம் தோற்று கோப்பையை பறி கொடுத்தது.

    தென் அமெரிக்க கண்டத்தின் வலுவான அணிகளில் ஒன்றான அர்ஜென்டினா தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கிறது. ஐரோப்பா கண்டத்தின் சிறந்த அணியில் ஒன்றான பிரான்ஸ் 4-வது வரிசையில் உள்ளது. இதனால் இறுதிப் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும்.

    Next Story
    ×