
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட விழா இன்று(வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் நடக்கிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பனை, வாகை மற்றும் புளி ஆகிய மரங்களைக் கொண்டு புதியதாக தேர் உருவாக்கி 7-வது நாள் விழாவில் தேரில் அம்மன் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி புதிதாக வடிவமைக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே தேரோட்ட விழாவுக்கு வருகை தரும் பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் விழாவுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இவற்றை கடைபிடித்து கொரோனா நோய் தொற்று பரவாமல் அரசுக்கும், கோவில் நிர்வாகத்துக்கும் ஒத்துழைப்பு தரவேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.