என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    குறைந்த ஆழம் கொண்ட ஒரு கிணறு ஹஜ் மற்றும் உம்ரா காலங்களில் கூடும் லட்சக்கணக்கான பயணிகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வது அதிசயம்.
    கஅபாவின் தென் கிழக்கு மூலையில் ஒரு கறுப்புக் கல் பதிக்கப்பட்டுள்ளது. அதன் வரலாறு நீண்டது; மாண்புடையது.

    ஆரம்பத்தில் வானவர்கள் அல்லது ஆதி இறைத் தூதர் ஆதம் (அலை) அவர்கள் புனித கஅபாவைக் கட்டினார்கள் என்று சொல்லப்படுகிறது.

    இரண்டாவதாக இறைதூதர் இப்ராகீம் (அலை) அவர்கள், கஅபாவின் அஸ்திவாரத்தைக் கண்டுபிடித்து அதன் மீது கட்டிடத்தை எழுப்பினார்கள். அப்போது ஒரு வானவ தூதரால் பக்கத்தில் இருந்த அபூ குபைஸ் என்ற மலையில் இருந்த ஒரு கற்பாறை இப்ராகீம் நபியிடம் வழங்கப்பட்டது. இந்தக் கற்பாறை வானலோகத்தில் இருந்து பூமிக்குக் கொண்டு வரப்பட்ட காலம் முதல் அந்த மலையிலேயே இருந்து வந்தது. இந்தக் கற்பாறை கஅபாவின் தென் கிழக்கு மூலையில் நிறுவப்பட்டது.

    'இந்தக் கல் சொர்க்கத்தில் இருந்து வந்தது. அப்போது அது பாலை விட வெண்மையாக இருந்தது. மனிதனின் பாவக்கறைகள் அதைக் கறுப்பாக்கி விட்டன' என்பது நபிமொழியாகும்.

    அறியாமைக் காலத்தில் கஅபாவை குரைஷிகள் புதுப்பித்தனர். அப்போது நபிகளாருக்கு வயது 35. கட்டுமான வேலை ஒரு கட்டத்திற்கு வந்தவுடன், அந்தக் கட்டிடத்தில் இப்ராகீம் நபி பதித்திருந்த 'ஹஜருல் அஸ்வத்' என்னும் புனிதக் கல்லை அது முன்பிருந்த இடத்தில் வைத்துக் கட்ட வேண்டி இருந்தது.
    அந்தக் கல்லைத் தூக்கிக் கொண்டு போய் வைக்கும் பெருமை தங்களுக்கே கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு கோத்திரத்தாரும் ஆர்வம் கொண்டனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்படும் நிலை நிலவியது.

    அங்கிருந்த முதியவர் அபூ உமையா பின் முகைரா, 'நாளை அதிகாலை இங்கு யார் முதலில் நுழைகிறாரோ அவரிடம் நம் வழக்கைச் சொல்லி தீர்ப்புக் கோருவோம்' என்றார். அதை அனைவரும் ஏற்றனர்.

    மறுநாள் கஅபாவுக்குள் முதலில் நுழைந்த நபிகளாரிடம் அவர்கள் முறையிட்டனர். சிறிது நேரச் சிந்தனைக்குப் பிறகு ஒரு போர்வையை வாங்கி தரையில் விரித்தார்கள். 'ஹஜருல் அஸ்வத்' என்ற அந்தப் புனிதக் கல்லைத் தனது திருக்கரங்களால் எடுத்துப் போர்வையில் வைத்தார்கள்.

    'ஒவ்வொரு கோத்திரத்தாரும் போர்வையின் ஓரங் களைப் பிடித்துக் கொள்ளுங்கள்' என்று கூறி அந்தக் கல்லைப் பதிக்க வேண்டிய இடத்திற்கு அருகே வைக்குமாறு பணித்தார்கள். இதை ஏற்று அவ்வாறே அவர்கள் அதைத் தூக்கிக்கொண்டு சென் றனர். பின்னர் அதனை உயர்த்திப் பிடிக்கக் கூறிய நபிகளார், சரியான உயரத்திற்கு வந்ததும், கல்லை எடுத்து உரிய இடத்தில் தனது கரங்களால் பதித்தார்கள். இத்தகைய முத்திரைத் தீர்ப்பால் அத்தரையில் பெரும் போர் தவிர்க்கப்பட்டது.

    இன்றைய தினம் ஹஜ் பயணிகள் இந்தக் கல்லை நோக்கி கையை உயர்த்துகிறார்கள் அல்லது முத்தமிடுகிறார்கள் என்றால், அன்று தனது புத்திசாலித்தனத்தால் அமைதியை நிலை நாட்டிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நினைவு கூரும் வகையில் அவ்வாறு செய்கிறார்கள்.

    'ஸம் ஸம்' - அதிசய நீரூற்று

    மக்காவில் உள்ள புனித கஅபாவுக்கு அருகில் உள்ள வற்றாத நீரூற்றே 'ஸம் ஸம்' ஆகும். இது கஅபாவுக்கு கிழக்கே 20 மீட்டர் (66 அடி) தூரத்தில் உள்ளது. இறைத்தூதர் இப்ராகீம் (அலை) அவர்கள் தமது மனைவி ஹாஜரா (அலை) மகன் பாலகன் இஸ்மாயில் (அலை) ஆகியோரை மக்காவில் உள்ள பாலைவனத்தில் விட்டுவிட்டுச் சென்றார். மனைவிக்கும், குழந்தைக்கும் அவர் கொடுத்துச் சென்ற உணவும், நீரும் தீர்ந்து போயின. இதனால் தண்ணீரைத் தேடி ஹாஜரா அங்குமிங்கும் அலைந்தார்கள்.

    இறுதியில் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றி, தனது காலால் மண்ணில் அழுத்தினார்கள். அந்த இடத்தில் ஓர் ஊற்று பீரிட்டு எழுந்தது. அதைக் கண்ட ஹாஜரா ஓடிச் சென்று, அந்த ஊற்றை அணை கட்டி 'ஸம் ஸம்' என்றார். அதற்கு 'நில் நில்' என்று அர்த்தம். அதன்படி அந்த ஊற்று அப்படியே நின்றது. அதுதான் இன்றைய 'ஸம் ஸம்' கிணறாகும்.

    அந்தக் கிணற்றின் ஆழம் 30 மீட்டர். நீர் மட்டம் சுமார் 4 மீட்டர். அந்தக் கிணற்றின் ஊற்றில் இருந்து ஒரு வினாடிக்கு 11 லிட்டர் முதல் 19 லிட்டர் வரை நீர் வந்து கொண்டிருக்கிறது. அது உருவான காலத்தில் இருந்து இன்று வரை ஓய்வறியா சூரியனைப் போல ஓயாது, வற்றாத நீரை வழங்கிக் கொண்டிருக்கிறது.

    குறைந்த ஆழம் கொண்ட ஒரு கிணறு ஹஜ் மற்றும் உம்ரா காலங்களில் கூடும் லட்சக்கணக்கான பயணிகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வது அதிசயம் அல்லவா?

    மேலும், 'ஸம் ஸம்' கிணற்று நீரையும், மக்கா நகரில் உள்ள வேறு கிணற்று நீரையும் ஆராய்ந்து பார்த்ததில், இரண்டுக்கும் இடையே கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமும் ஓர் அதிசயத்தை அரங்கேற்றியது. 'ஸம் ஸம்' நீரில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்), வெளிமம் (மக்னீசியம்) ஆகிய சத்துகள் அதிகம் உண்டு. இதனால் களைப்பை நீக்கும் நிவாரணியாகக் கருதப்படுகிறது. அந்த நீரில் கிருமிகளைக் கொல்லும் 'புளோரைடுகள்' உள்ளன. உள்ளபடியே அந்த நீர் குடிப்பதற்கு உகந்த நீர் என்று கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் வைத்திருந்தபோதிலும் கெடாத தன்மையைக் கொண்டது.
    ‘இன்ஷா அல்லாஹ்’- இறைவன் நாடினால் என்ற வார்த்தை இறைவன் மீது பெரும் நம்பிக்கை வைத்துச் சொல்லப்படுகிற பொருள் பொதிந்த வார்த்தையாகும்.
    அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் கட்டளைகளை ஏற்றுச் செயல்படுவதே இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படை கொள்கையாகும். இவை இன்றி ஈமானும் இல்லை; இஸ்லாமும் இல்லை.

    இதையே இறைவன் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் வலியுறுத்திக் கூறுகின்றான்.

    ‘‘அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வை) அஞ்சுவீர்களாயின் உங்களுக்கு மகத்தான (நற்)கூலியுண்டு’’. (திருக்குர்ஆன்-3:179)

    ‘‘நிச்சயமாக அல்லாஹ் இறையச்சம் உள்ளவர்களோடு இருக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்’’ (திருக்குர்ஆன்-9:123) -இப்படி எண்ணற்ற வசனங்கள் உள்ளன.

    இறைவன் திருக்குர்ஆனில் மனிதர்களை, ‘இறை நம்பிக்கையாளர்களே’ என்றுதான் அழைக்கிறான். மனிதர்கள் இறை நம்பிக்கையோடும், இறையச்சத்தோடும் வாழ வேண்டும் என்பதே அவனுடைய ஆசையும், விருப்பமும்.

    இஸ்லாம் மார்க்கத்தில் இறை நம்பிக்கையும், இறையச்சமும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல பிரிக்க முடியாதவை; ரெயில் தண்டவாளங்களைப் போல இணை பிரியாதவை.

    ‘வாழ்வையும், மரணத்தையும் அளிப்பவன் இறைவனே’ என்பதை முஸ்லிம்கள் மனதார ஒப்புக் கொள்ள வேண்டும். ‘அவனின்றி அணுவும் அசையாது’ என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.

    ‘‘உண்மையில் உயிரைக் கொடுப்பவனும், உயிரைப் பறிப்பவனும் அல்லாஹ்வே ஆவான்’’ (திருக்குர்ஆன்-3:156)

    ‘‘அவனே வாழ்வை அளிக்கின்றான். இன்னும் (அவனே) மரணிக்கச் செய்கின்றான். பின்னர் அவனிடமே நீங்கள் (மறுமையில்) திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்’’. (திருக்குர்ஆன்-10:56)

    ‘‘அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த உயிரினமும் மரணிக்க முடியாது’’. (திருக்குர்ஆன்-3:145)



    ‘‘வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது. (அவனே) உயிர் கொடுக்கின்றான். (அவனே) மரணிக்கும்படியும் செய்கின்றான். அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு வேறு பாதுகாவலரும் இல்லை. உதவியாளரும் இல்லை’’ (திருக்குர்ஆன்-9:116) என்பன போன்ற கருத்துகளைத் திருமறையில் திருப்புகின்ற பக்கங்களில் எல்லாம் காணலாம்.

    ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும், வீரனாக இருந்தாலும் கோழையாக இருந்தாலும், மாளிகையில் வாழ்ந்தாலும், மண் குடிசையில் இருந்தாலும் மரணத்தைச் சந்தித்தே தீர வேண்டும்.

    ‘‘நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும். நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்தபோதிலும் சரியே!’’ (திருக்குர்ஆன்-4:78) என்கிறது, திருமறை.

    ‘இன்று இருப்போர் நாளை இல்லை’- இதனால்தான் முஸ்லிம்கள், ‘நாளை நான் உன்னைக் கண்டிப்பாகச் சந்திக்கிறேன்’ என்று சொல்ல மாட்டார்கள். இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) நாளை சந்திக்கிறேன்’ என்பார்கள்.

    ‘இன்ஷா அல்லாஹ்’- சொல்ல மறந்ததால் ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இன்னலைச் சந்திக்க நேர்ந்தது.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கடினமான கேள்வி களைக் கேட்டு அவர்கள் பதில் சொல்ல முடியாத நிலையில் இஸ்லாம் மார்க்கத்தை போலி மார்க்கம் என்று முத்திரை குத்த மக்கா மாநகர் குரைஷிகள் திட்டம் தீட்டினர். இதற்காக அவர்கள் இருவரைத் தேர்ந்தெடுத்து மதீனா நகருக்கு அனுப்பினார்கள். அவர்கள் அங்கு சென்று யூத வேத குருக்களைச் சந்தித்து, ஆலோசனை செய்தனர்.

    அதற்கு அவர், ‘‘1. கடந்த காலத்தில் வாழ்ந்த வாலிபர்களின் அதிசய வரலாற்றைப் பற்றிக் கேளுங்கள். 2. பூமி முழுவதும் கிழக்கில் இருந்து மேற்கு வரை சுற்றி வந்த அந்த அரசரைப் பற்றிக் கேளுங்கள். 3. உயிரை (ரூஹ்) பற்றிக் கேளுங்கள்’’ என்று சொல்லி அனுப்பினார். இந்தக் கேள்விகளை குரைஷிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர் களிடம் கேட்டனர்.

    அப்போது நபிகளார், ‘‘நாளை வாருங்கள்; பதில் சொல்கிறேன்’’ என்று அவர்களிடம் சொல்லி அனுப்பினார்கள்.

    அப்போது, ‘இன்ஷா அல்லாஹ்’ என்பதைக் கூற மறந்து விட்டார்கள். இதனால் இறைச்செய்தி (வஹி) பல நாட் களாக வரவில்லை. இதன் காரணமாக குரைஷிகளுக்கு பதில் சொல்வதும் நாளை, நாளை என்று நாட்கள் பல நகர்ந்தன.

    ‘‘விடை கூறத்தெரியாமல் விழிக்கிறார், முகம்மது. அல்லாஹ் அவரைக் கைவிட்டு விட்டான்’’ என்று குரைஷிகள் எள்ளி நகையாடினர். நபிகளார், ‘‘இறைவா! வஹி வரவில்லையே’’ என்று இறைஞ்சினார்.

    ‘‘(நபியே!) இன்னும் எந்த விஷயத்தைப் பற்றியும் ‘நிச்சயமாக நான் நாளை நான் அதை செய்பவனாக இருக்கிறேன்’ என்று கூறாதீர்கள். ஆயினும் இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால் நாளைக்குச் செய்வேன்) என்று கூறுங்கள். நீங்கள் இதை மறந்து விட்டால் (ஞாபகம் வந்ததும் இவ்வாறு) உங்கள் இறைவனின் பெயரைக் கூறுங்கள்’’ (திருக்குர்ஆன்-18:23) என்ற இறைச்செய்தி இறங்கியது. அதில் குரைஷிகளின் இரு கேள்விகளுக்கான பதில்களும் இருந்தன. (உயிரை (ரூஹ்) பற்றி வேறொரு அத்தியாயத்தில் பதில் சொல்லப்பட்டிருக் கிறது.) இதை அவர்களிடம் கூறி, தான் இறைத்தூதர் என்பதை நிரூபித்தார்கள்.

    ‘இன்ஷா அல்லாஹ்’- இறைவன் நாடினால் என்ற வார்த்தை இறைவன் மீது பெரும் நம்பிக்கை வைத்துச் சொல்லப்படுகிற பொருள் பொதிந்த வார்த்தையாகும். இதை முஸ்லிம்கள் மட்டுமல்ல, இறைவனை நம்புகிற அனைவருமே பயன்படுத்தலாம். பிற மதத்தைச் சேர்ந்த பலர் இந்த வார்த்தையைப் பயன்படுத்தி வருவதைப் பார்க்கிறோம்.
    எல்லோரும் புத்தாடை அணிந்து, புதுபொலிவோடு அல்லாஹ் மகா பெரியவன் என்ற முழக்கங்களோடு ஈகைப் பெருநாளை இன்ப திருநாளை கொண்டாட வேண்டும்.
    அகன்ற வானில் அள்ளித்தெளித்த நவரத்தின விண்மீன்கள் இடையே நகக்கீற்றாய் ஈகை பெருநாள் பிறை பிறந்தது. மனம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்தது. ஒரு மாத காலம் பயிற்சி களத்தில் எத்தனையோ மாற்றங்களைப் பெற வழிவகுத்த ரமலான் நம்மிடம் விடைபெற்றுச் செல்கிறது. இந்தப் பயண பாதையில் ஈகைத்திள் நம்மை ஆரத்தழு விக் கொண்டது.

    அல்லாஹ்வின் அச்சத்தில் அன்பை பரிமாறிக்கொண்ட நெஞ்சங்கள் அதில் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும். அல்லாஹ்வின் முன் அணி அணியாய் தோளோடு தோள் உரசி நின்று வேற்றுமை தவிர்த்த சமத்துவம் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும்.

    ஏழைகள் வாழ்வில் ஜகாத்தின் மூலம் கைதூக்கி விட்டு பொருளாதார மேடு பள்ளங்கள் சமன் செய்த நிலை என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும். தினந்தோறும் இறை இல்லத்தில் இரவில் சந்தித்து வளர்த்த உறவு பாலங்களில் நம் வாரிசுகள் சந்தோஷமாய் பயணிக்கும் நிலை என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும்.



    மாற்று மத சகோதரர்களிடம் மனமாச்சரியங்கள் தவிர்த்து, மனித நேயம் பேணிய நிலை என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும். வட்டி வாங்கி பிறர் உழைப்பை உறிஞ்சும் நிலை மாறி உண்மையான உழைப்பால் உயர வேண்டும் என்று உறுதிகொண்ட நிலை என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும்.

    ‘பக்கத்து வீட்டில் பசித்திருக்க தான் உண்ண உரிமையில்லை’ என்ற நபி மொழி செயல்பாட்டில் நிலைத்திருக்கவேண்டும். தொழுகைக்காக ரமலானில் நிறைந்திருந்த இறை இல்லங்கள் என்றென்றும் நிறைந்திருக்க வேண்டும். வணிகம், தொழில்களில் கடைப்பிடிக்கப்பட்ட கண்ணியம்- உண்மை வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்க வேண்டும்.

    வியர்வைகள் உலரும் முன் விளைந்த பயன்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். ஈந்து சிவந்த கரங்கள் வளர்ந்து பலரது வாழ்வில் வளம் சேர்க்க வேண்டும். வைகறை விடியும் முன்னே ‘பித்ரா’ (ஏழை வரி) வழங்கப்பட்டு ஏழைகளும் இந்த இனிய பெருநாளை இன்பமாய் கொண்டாட வேண்டும்.

    எல்லோரும் புத்தாடை அணிந்து, புதுபொலிவோடு அல்லாஹ் மகா பெரியவன் என்ற முழக்கங்களோடு ஈகைப் பெருநாளை இன்ப திருநாளை கொண்டாட வேண்டும். அல்லாஹ் நம் அனைவர் வாழ்விலும் வளங்கள் கொழித்து, வாழ்வாதாரங்கள் செழித்து, வாழ்வாங்கு வாழ அருள் கிருபை செய்யவேண்டும். ஆமீன்.

    ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

    எம். முஹம்மது யூசுப், உடன்குடி.
    இன்று ‘ஈதுல் பித்ர்’ எனப்படும் ஈகை திருநாளை கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் மாலைமலர் டாட்காமின் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்!
    மனித குலத்துக்கு சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும், இறையச்சத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தில் முஹம்மது நபியால்(ஸல்) தோற்றுவிக்கப்பட்ட எழில் மார்க்கமான இஸ்லாத்தின் வாயிலாக ”அல்லாஹ்” என்றழைக்கப்படும் இறைவன் ஒருவனே! அவன் உருவம் அற்றவன்; ஒளிமயமானவன்; ஈடு- இணையற்றவன் என்னும் பகுத்தறிவு சித்தாந்தத்தை அரேபிய மக்களின் உள்ளங்களில் முகம்மது நபி(ஸல்) விதைத்தார்.

    இந்தக் கொள்கையினை ஏற்றுக் கொள்ள மறுத்த அவரது உறவினர்களும், ஊராரும் முஹம்மது நபிக்கு(ஸல்) பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தினர். சதித்திட்டம் தீட்டி அவரைக் கொல்லவும் துணிந்தனர். பித்தர் என்ற பட்டத்தை சூட்டியும், கல்லால் அடித்தும் பலர் அவரை சித்ரவதைப் படுத்தினர்.

    முஹம்மது நபியின்(ஸல்) ஓர் இறைக் கொள்கையினை ஏற்று அவரது மனைவியார் கதீஜா, முதன்முதலாக இஸ்லாம் மார்க்கத்தை தழுவினார்.

    சொந்த மண்ணில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதை உணர்ந்த முஹம்மது நபி(ஸல்), அண்டை நகரமான மதீனாவுக்கு தப்பிச் சென்றார். மதீனா வாசிகளின் அன்பும், ஆட்சியாளர்களின் ஆதரவும் அளப்பரியதாக அமைந்ததால் அங்கிருந்தபடியே உலகம் முழுவதும் இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கைகளை அவர் பரப்பினார்.

    இஸ்லாம் என்பது ஈமான், தொழுகை, நோன்பு, ஜக்காத்து, ஹஜ் என்னும் ஐம்பெரும் கடமைகளை நிறைவேற்றி, அவற்றின் மூலம் இறையருளை அடைய வழிகாட்டும் அமைதி மார்க்கம் என்று அவர் போதித்தார்.

    ”வணக்கத்திற்குரிய நாயனாக ஈடு- இணையற்ற அல்லாஹ்வை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். அவனது திருத்தூதரும், எனது வழிகாட்டியுமான முஹம்மது நபியை(ஸல்) பின்பற்றி, இஸ்லாத்தின் பாதையில் நின்று, இந்த மார்க்கத்தின் நெறிகளை பிறழாமல் பின்பற்றி உண்மையான முஸ்லிமாக வாழ்வேன்” என்று உளப்பூர்வமாக உறுதி ஏற்பது, இஸ்லாத்தின் முதல் கடமையான ஈமான் (உறுதிப்பாடு) கொள்ளுதல் ஆகும்.

    இரண்டாவது கடமையாக, தன்னை படைத்த இறைவனை நினைந்து, நன்றி கூறும் பொருட்டு தரையில் நெற்றி பதியும்படி சிரம் தாழ்த்தி, அன்றாடம் ஐவேளை அல்லாஹ்வை வணங்க வேண்டும்.

    ஏழைகளின் பசியை உணராமல் வசதி படைத்தவர்கள் சொகுசாக வாழ்வதும், ஏழைகள் குடல் கொதித்து பட்டினியால் சாவதும் சமத்துவம் ஆகாது. எனவே, பசியின் அருமையை உணர்த்தி, பசித்தவருக்கு அன்னமிடும் நற்பண்பை செலவந்தர்களுக்கு உணர்த்தவும், பசியின் கொடுமையை செலவந்தர்களும் அனுபவித்து உணர்ந்து, தான- தர்மங்களை தொடரவும் இஸ்லாத்தில் நோன்பு மூன்றாவது கடமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், அல்லாஹ்வால் முஹம்மது நபிக்கு(ஸல்) அருளப்பட்ட திருக்குர்ஆனின் அனேக வசனங்கள் நோன்பின் அவசியத்தையும், அருமையையும் போதிக்கின்றன. ரமலான் என்றழைக்கப்படும் இந்த நோன்பு மாதத்துக்கு ஏனைய பல்வேறு சிறப்புகளும் உண்டு.

    இஸ்லாமியர்களின் மறைநூலான திருக்குர்ஆன் ரமலான் மாதத்தின் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றில் தான் அருளப்பட்டது என்பது இம்மாதத்தின் தனிச்சிறப்பை தரணிக்கு உணர்த்துகின்றது.

    ரமலான் மாதத்தின் முதல் பிறை காணப்பட்ட மாலைப்பொழுதின் அதிகாலையில், முதல் நோன்பினை முஸ்லிம்கள் கடைபிடிக்கின்றனர். அதிகாலையில் எழுந்து, “ஸஹர்” எனப்படும் கதிரவனின் உதய வேளை முடிவதற்குள் சாப்பிட்டு முடித்தபின், “மஹ்ரிப்” எனப்படும் மாலை தொழுகை நேரம் வரை சுமார் 14 மணி நேரம் ஒருதுளி நீரைக்கூட பருகாமல் உடலை வருத்தி, படைத்தவனை நினைத்து, அவனை ஐந்து வேளையும் வணங்கியவர்களாய் மாதத்தின் 30 நாட்களையும் கழிப்பதே, ரமலான் நோன்பின் சிறப்பாகும்.



    இத்தகைய நோன்பினை பேணுபவர்கள் நல்ல சிந்தனை, நல்ல நடத்தை, நல்லொழுக்கம் ஆகியவற்றை கடைபிடிக்கவும், அன்றாட ஐவேளை தொழுகையை தவறாமல் மேற்கொள்வதன் மூலம் இறைவனிடம் நெருங்கி உறவாடவும் இஸ்லாத்தின் மூன்றாவது கடமையான நோன்பு, பாதை வகுத்து தந்துள்ளது.

    அதோடு, மட்டுமில்லாமல், ஜக்காத் எனப்படும் நான்காம் கடமைக்கான வாசலாகவும் ரமலான் நோன்பு திழ்கின்றது.

    ரமலான் மாதத்தின் 30 நாட்களும் நோன்பிருந்து, தங்களின் கடமையை நிறைவேற்றிய இஸ்லாமியர்கள், ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையை பார்த்ததும் பசுவைக் கண்ட கன்றாக துள்ளி மகிழ்ந்து, களிப்பெய்துகிறார்கள். அன்று மாலையில் இருந்து ஈகைத் திருநாள் (ஈதுல் ஃபித்ர்) எனப்படும் பெருநாள் துவங்கிவிடும்.

    மறுநாள் காலை மசூதிகளிலும், ஈத்கா எனப்படும் திறந்த வெளி திடல்கள், கடற்கரை போன்ற பரந்த- திறந்த வெளிகளிலும் கூட்டாக “குத்பா” எனப்படும் சிறப்பு தொழுகையில் பங்கேற்று, நோன்பு, ஜக்காத்து என்னும் இரு கடமைகளையும் ஒருசேர நிறைவேற்ற தங்களுக்கு அருள் புரிந்த அல்லாஹ்விற்கு அவர்கள் தொழுகையின் வாயிலாக சிரம் தாழ்த்தி நன்றி கூறி மகிழ்கின்றனர்.

    நமக்குள் பேதங்கள் இல்லை; ஏற்றத் தாழ்வுகள் அறவே இல்லை என்பதை உணர்த்தும் வகையில் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர். அண்டை வீட்டாரையும், நண்பர்களையும் தங்களது இல்லத்திற்கு வரவேற்று, இனிப்புகள் மற்றும் பிரியாணி விருந்தளித்து, உபசரித்து இஸ்லாமியர்கள் பேருவகை கொள்கின்றனர்.

    வசதி படைத்தவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் தங்களது செல்வத்தை (நிலம், கால்நடை, ரொக்கப்பணம், தங்கம், வெள்ளி மற்றும் வைர ஆபரணங்கள், வாகனம் உள்ளிட்டவை) ஆண்டுதோறும் கணக்கிட்டு, அதில் 2 1/2 சதவீதத்தை (நாற்பதில் ஒரு பங்கு) உள்ளச்சுத்தியுடன் பங்கிட்டு, அந்த பங்கினை ஏழை, எளிய மக்களுக்கு தானமாக பகிர்ந்து வழங்கும் ஈகையாம் ஜக்காத்து என்னும் தானத்துக்கும் புனித ரமலான் நோன்பு வழி அமைக்கின்றது.

    இதன் அடிப்படையில் நான்கு கடமைகளையும் நிறைவேற்றி இறைவனின் இன்னருளைப் பெற்ற நல்லடியார்களை, பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டு- அன்று பிறந்த குழந்தைகளாக புதிய வாழ்வினை தொடங்கும் ஐந்தாவது கடமையான ஹஜ்ஜுக்கும் ரமலான் நோன்பு முன்நின்று, தயார்படுத்தி அழைத்து செல்கிறது.

    இந்த புனித ரமலான் பெருநாள் மூலம் ஏழை-பணக்காரர்கள் என்ற பேதங்கள் நீங்கி, உயர்ந்தோர்-தாழ்ந்தோர் என்ற ஏற்றத்தாழ்வுகள் அகன்று, அனைவரும் சமநிலையில் வாழும் சமதர்ம சமுதாயம் படைக்க வலியுறுத்திய அண்ணலார் முஹம்மது நபி(ஸல்) வழியில் நடக்க உறுதி மொழியேற்போம். தான, தர்மங்களை செய்து இறைவழியில் இன்புற்று இணைந்திருப்போம்.

    புண்ணியங்களின் பூக்காலமான புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று, தவறாமல் திருக்குர்ஆன் ஓதி, இரவுகளில் நின்று வணங்கி, இறைவனை அதிகமதிகம் நினைத்துக் கொண்டு, இஸ்லாமியக் கடமைகளில் ஒன்றான ‘ஸகாத்தையும்’ நிறைவேற்றி, படைத்த இறைவனுக்காகப் பசித்து, தனித்து, விழித்திருந்து புனித ரமலான் மாதம் முடிந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளைத்தான்  ஈகைத் திருநாளாகக் (‘ஈத் அல் ஃபித்ர்’) கொண்டாடுகிறோம். இதையேதான் நோன்புப் பெருநாள் என்றும் அழைக்கிறோம்.

    இந்தப் பெருநாளில் குளித்து, புத்தாடை உடுத்தி, பெருநாள் தொழுகைக்கு முன்பே ‘ஸதகத்துல் ஃபித்ர்’ என்ற தானத்தைச் செலுத்திவிட்டுத்தான் ’குத்பா’ தொழுகைக்கே செல்ல வேண்டும்.

    ’ஈத் அல் பித்ர்’ அன்று நோன்பு நோற்கக் கூடாது. ரமலானில் எடுத்துக் கொண்ட புலனடக்கப் பயிற்சியை பின்வரும் நாட்களிலும் பேணுதல் அவசியம்.

    நோன்பு நோற்றுப் பழகிய உடலுக்கு நோன்பு அல்லாத பெருநாளை அடையும் போது வெறும் வயிற்றில் தொழுகைக்குச் சென்றால் தொழுகையில் கவனம் செலுத்த முடியாத அளவுக்குப் பசிக்க ஆரம்பித்துவிடும். அதனால் தொழுகைக்குச் செல்லும் முன்பு ஏதேனும் சாப்பிட்டுவிட்டுச் செல்வது நல்லது.

    இறைத்தூதர் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் காலையில் தொழுகைக்குச் செல்லும் முன்பு சில பேரீச்சம்பழங்களை உண்ணாமல் புறப்பட மாட்டார்கள்.

    “ரமலான் மாதம் நோன்பு நோற்று பெருநாளுக்குப் பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்” என்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) கூறியுள்ளார்கள்.

    பெருநாள் முடிந்த உடனேயே அந்த ஆறு நோன்பை தொடர வேண்டுமென்ற அவசியமில்லை, ஷவ்வால் மாதத்தில் ஏதேனும் ஆறு நாட்களில் இந்த நோன்பை நம் வசதிக்கேற்ப வைத்துக் கொள்ளலாம். இது (மாதவிலக்கின்போது) பெண்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்றுவதற்கானது என்ற தவறான கூற்று நிலவுகிறது. மாறாக, இது எல்லாருக்குமானது, கடமையான நோன்பாக இல்லாவிட்டாலும் இந்த உபரியான நோன்பை கடைபிடிப்பது சிறப்பானது.

    நபி முஹம்மது (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் பள்ளியில் தொழாமல் திடலுக்குச் செல்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் முதலில் தொழுகையைத் துவக்கி நிறைவேற்றிவிட்டே மக்களுக்குப் போதனைகள் செய்வார்கள். ஆனால், நபிகளாரின் காலத்திற்குப் பிறகு, தொழுகை நடத்துபவரின் போதனைகளுக்காகக் காத்திராமல், தொழுகை முடிந்ததும் மக்கள் கலைந்து சென்றுவிடுபவர்களாக இருந்ததைக் கண்டதால் நடைமுறையை விளங்கிக் கொண்டு தொழுகைக்கு முன்பே உரையை நிகழ்த்தும் பழக்கத்தை இமாம்கள் ஏற்படுத்திக் கொண்டனர்.

    ஈகைப் பெருநாளை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதைப்போல் நம்முடைய சமுதாய மக்களும் மகிழ்ச்சியாகக் கொண்டாட நமது கடமையான ஸக்காத் என்னும் தர்மத்தை முழுமையாக, சரியாகச் செய்வோம். நாம் செய்யும் சிறிய தர்மத்தால் ஒரு சிலராவது பயன்பெறுவார்கள்.

    சதக்கா என்றால் தான தர்மம். அல்லாஹ்வின் பெயரால் வழங்கப்படும் இந்த தான தர்மங்கள் நெருப்பை நீர் அணைப்பதுபோல் நம் பாவங்களை அழித்துவிடும் வல்லமை பெற்றது என நபிகள் நாயகம் (ஸல்) பகன்றுள்ளார்கள்.

    மேலும், சதக்கா என்ற அழகிய கடனை அல்லாஹ்வின் பெயரால் ஏழைகளுக்கு அளிப்பவர்கள், அக்கடனை பன்மடங்கு அபிவிருத்தியுடன் இறைவனால் அவர்களுக்கு திருப்பி வழங்கப்படும். சதக்கா அளிக்கும் கொடையாளர்களின் நற்செயல்கள் அவர்களுக்குரிய சிறப்பையும், நற்பேற்றினையும் பெற்றுத்தரும் என திருமறையும் குறிப்பிடுகின்றது.

    ஒருவர் இறைத்தூதர் அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?' என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு 'எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    இதனை மனதில் நிறுத்திக் கொண்டு பிறருக்கு நன்மைகளைச் செய்து நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் சமாதானம் நிலவ சகல மக்களும் சகோதர பாசத்துடன் வாழ எல்லாம் வல்லோனைப் பிரார்த்திப்போம்.  

    இன்று ‘ஈதுல் பித்ர்’ எனப்படும் ஈகை திருநாளை கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் மாலைமலர் டாட்காமின் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்!
    ரமலான் மாதம் எத்தகைய சிறப்புள்ளது என்று மனிதர்கள் விளங்கி விடுவார்களானால் ஆண்டு முழுவதும் ரமலானாகவே இருக்க வேண்டும் என உம்மத்தினர் விரும்புவார்கள்.
    புனித ரமலான் மாதம் முஸ்லிம்களுக்காக அல்லாஹூ தஆலாவினால் வழங்கப்பட்ட மிகப்பெரிய வெகுமதியாகும். ஒரு அதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது. ரமலான் மாதம் எத்தகைய சிறப்புள்ளது என்று மனிதர்கள் விளங்கி விடுவார்களானால் ஆண்டு முழுவதும் ரமலானாகவே இருக்க வேண்டும் என உம்மத்தினர் விரும்புவார்கள், ஆண்டு முழுவதும் நோன்பு நோற்பது சிரமமான காரியம் என்று மக்கள் விளங்குகின்றனர்.

    ஆனால் புனித ரமலான் மாதத்தில் கிடைக்கின்ற நன்மைகளைக் கருதி மனிதர்கள் அதனை விரும்புவார்கள் என்பதாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அருளுகிறார்கள். ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் வைப்பதும் உள்ளத்தின் அழுக்குகளையும், மனோ ஊசலாட்டங்களையும் நீக்கி விடும் என ஒரு அதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நோன்பினுள் பலவிதமான நோக்கங்களும் பலன்களும் இருக்கின்றன. மார்க்கம் நோன்பை விதியாக்கி இருப் பதில் பலவிதமான பலன்கள் மனிதனுக்கு கிடைக்க வேண்டு மென்பதுதான் நோக் கம், அவை அனைத்தும் கொஞ்சம் பசித்திருக்கும் பொழுதுதான் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றில் மிகப்பெரிய பலனாகிய மனோ இச்சையை முறியடித்தல் என்பது சிறிது நேரம் பசித்திருப்பதில்தான் அடங்கியிருக்கிறது.

    சைத்தான் மனிதனின் உடலில் ரத்தம் போன்று ஊடுருவி சென்று கொண் டிருக்கிறான். அவனுடைய வழிகளை பசித்திருப்பதின் மூலம் தடை செய்யுங்கள் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள். அனைத்து உறுப்புகளின் திருப்தி நஃப்ஸின் பசியில் அடங்கி யுள்ளது. ஏனெனில் நஃப்ஸ் பசித்திருந்தால், உறுப்புகள் அனைத்தும் திருப்தியுற்று அமைதி பெறுகின்றன.



    நஃப்ஸ் திருப்தியடைந்தால் இதர உறுப்புகளுக்கு பசியெடுத்து விடுகிறது. (பாவங்கள் செய்ய துடிக்கின்றன)நோன்பி னால் மற்றொரு பலன் என்ன வென்றால் ஏழைகளைபோல் பசித்திருந்து அவர்களுடைய நிலைகளை உணர்வதாகும். இந்த நோக்கம் மாலை வரை பசி தெரியாமல் இருக்க ஸஹர் நேரத்தில் பால், இனிப்பு வகைகள், ஆகா ரங்கள் ஆகியவற்றை கொண்டு குடலை நிரப்பாமல் இருப்பதில்தான் உண்டாக முடியும். ஏழைகளுக்கு ஒப்பாக இருத்தல் என்பது கொஞ்சநேரம் பசித்திருப்பதின் மூலம்தான் சாத்தியமாகும்.

    வயிற்றை நிரப்புவது போன்று வேறு எந்தப் பாத்திரத்தையும் நிரப்புவது அல்லாஹூ தஆலாவுக்கு வெறுப்பானதாக இல்லை என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளி யுள்ளார்கள். மேலும் அல்லாஹூ தஆலா புனித ரமலான் மாதத்தில் அர்ஷைச்சுமக்கும் மலக்குகளிடம் உங்களுடைய வணக்கங்களை விட்டுவிட்டு நோன்பாளிகளின் துஆக்க ளுக்கு ஆமின் கூறிக் கொண்டிருங்கள் என்பதாக கூறுகிறார் என ஓர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ரமலான் மாதத்தில் கேட்கப்படும் துஆக்கள் விசேஷமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பது பல அதீஸ்களின் மூலம் விளங்குகிறது. அல்லாஹூ தஆலாவின் வாக்கும், ரஸூ லுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் உண்மையான அறிவிப்பும் இருக்கும் பொழுது துஆ ஏற்கப் படுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆகவே இந்த புனிதமான ரமலான் மாதத்தின் பர்க்கத்தை கொண்டு நாம் நோற்ற இந்த நோன்பினையும், கொடுத்த ஜகாத்தினையும், செய்த அனைத்து இபாதத்துகளையும், நன்மையான காரியங்களை ஏற்று முழுமையான கூலியை நம் அனைவருக்கும் கொடுத்து அருள்வாராக. ஆமின்.
    திருமறையின் வழியில், நபிகளார் செய்ததுபோல நாமும் ரமலான் மாதத்தில் அதிக நன்மைகளையும், தான தர்மங்களையும் செய்யவேண்டும்.

    புனிதம் நிறைந்த ரமலான் மாதத்தை நாம் அடைந்து அதன் சிறப்பை அனுபவித்துவருகிறோம். சில பொருட்கள் குறிப்பிட்ட சில காலத்தில் மட்டுமே கிடைக்கும். அது போல, நன்மைகளை அதிகம் தருகின்ற காலமாக ரமலான் மாதத்தை இறைவன் நமக்கு அமைத்து தந்துள்ளான்.

    ரமலான் மாதத்தின் சிறப்பு குறித்து “ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான திருக்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்.” என்று திருக்குர்ஆன் (2:185) என்று கூறுகிறது.

    ரமலான் மாதத்தை அடைந்து விட்டால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அதிகமான தான தர்மங்களில் ஈடுபடுவார்கள்.

    திருமறையின் வழியில், நபிகளார் செய்ததுபோல நாமும் ரமலான் மாதத்தில் அதிக நன்மைகளையும், தான தர்மங்களையும் செய்யவேண்டும். உயர்வான சிந்தனைகளை அதிகம் வளர்த்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு இந்த ரமலான் மாதத்தை கண்ணியப்படுத்த கடமைப்பட்டவர்களாக நாம் இருக்கின்றோம்.

    ரமலானை எப்படி தொடக்கவேண்டும்? எவ்வாறு நிறைவு செய்ய வேண்டும் என்பதை அண்ணலாரின் அமுத மொழிகள் அழகுற சொல்லித்தருவதைப் பார்ப்போம்.

    ‘(நீங்கள்) பிறையை பார்த்து நோன்பு வையுங்கள், பிறையை பார்த்து நோன்பை விடுங்கள். (பிறையை பார்ப்பதில்) உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை 30 நாட்களாக முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள்’. (நூல்: புகாரி)

    சுருங்கக்கூறி நிறைவான விளக்கத்தை தருவதாக உள்ள இந்த நபிமொழி மேகமூட்டம் போன்ற இயற்கையின் இடர்பாடுகள் ஏற்பட்டு பிறை தென்படாமல் போகுமானால், ஒன்றும் கவலைப்படத் தேவையில்லை ஷாபான் மாதப்பிறையை 30 ஆக பூர்த்தி செய்துவிட்டு ரமலானை தொடங்கிவிடலாம் என்பதையே இந்த நபிமொழி நமக்கு தெளிவுபடுத்தித் தருகிறது.


    பூமியின் சுழற்றி காரணமாக ஏற்படும் காலநேர மாற்றத்தால், நோன்பை தொடங்குவதிலும், அதனை நிறைவு செய்வதிலும் ஒவ்வொரு நாட்டிலும் கால வித்தியாசம் ஏற்படுகிறது என்பது இயற்கையே. அதற்காக ஒன்றும் குழப்பமடையத் தேவையில்லை, இந்த வித்தியாசம் கூட அல்லாஹ்வின் தூதரின் வார்த்தையை பின்பற்றுவதின் அடையாளமாகவே அது மதிக்கப்படும்.

    இறைவனின் அருளையும், அவனது அருள்மழையையும், கருணையையும் உணர வேண்டிய சிறப்பு மிக்கது ரமலான் மாதம். நிறைவான வணக்க வழிபாடுகளை கொண்டும், அமைதியை கடைப்பிடிப்பதை கொண்டும் இந்த ரமலானைக் கண்ணியப்படுத்த நம்மால் ஆன முயற்சியில் ஈடுபடவேண்டும்.

    “(நபியே!) உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீங்கள் கூறுங்கள்:) ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கின்றேன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்’. ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும். என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேரான வழியை அடைவார்கள்” என்ற திருக்குர்ஆன் (2:186) வசனப்படி நாம் நடந்துகொண்டு, ஏக இறைவன் அல்லாஹ்வை வணங்கி வழிபட்டு நேரான வழியை அடைய இந்த ரமலான் மாதத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

    ‘ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

    மற்றொரு நபிமொழியில், ‘நம்பிக்கை கொண்டு (நற் கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

    எனவே, இந்த ரமலான் காலத்தில் உடலையும், மனதையும் ஒருமைப்படுத்தி இறைவனின் நினைவில் நம்மை முழுவதுமாக பிணைத்துவிட வேண்டும். அதிக வணக்க வழிபாடுகளில் நேரத்தை செலவிடுவதும் தான் ரமலானை நாம் கண்ணியப்படுத்தியதாக அமையும்.

    திருக்குர்ஆன் வழியிலும், நபிகளார் காட்டிய பாதையிலும் இந்த ரமலானை கடைப்பிடித்து கண்ணியப்படுத்தி, அதற்கு பரிசாக பாவமன்னிப்பும், சொர்க்கத்தில் நுழையும் வாய்ப்பையும் பெறுவோம். அத்தகைய மேலான நற்பாக்கியத்தை நம் அனைவருக்கும் இறைவன் தந்து பேரருள்புரிவானாக, ஆமீன்!

    மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
    ரமலான் மாதத்தின் 30 நாட்களும் நோன்பிருந்து அந்த உன்னத வழிபாட்டின் நிறைவாக கொண்டாடுவது தான் ஈகைத் திருநாள்.
    ரமலான் மாதத்தின் 30 நாட்களும் நோன்பிருந்து அந்த உன்னத வழிபாட்டின் நிறைவாக கொண்டாடுவது தான் ஈகைத் திருநாள். நபிகள் நாயகம் இறை தூதராக அனுப்பப்பட்டதன் நோக்கமே மக்களை நேர்வழிப்படுத்தி நல்வழிகாட்டத்தான். இதன் அடிப்படையில் அவரது வழிகாட்டுதல்களும், அறிவுரைகளும் அமைந்துள்ளன.

    பிறருக்கு உதவுவதையும், பிறர் கண்ணீர் துடைப்பதையும் முக்கிய கடமையாக ஆக்கியுள்ள மார்க்கமே இஸ்லாம். அதனால் நபிகள் நாயகம் “பசித்தவருக்கு உணவளிப்பதுதான் இஸ்லாம்” என்றும், “அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்க தாம் மட்டும் வயிறார உண்பவர் இறை நம்பிக்கையாளர் அல்லர்” என்று உரக்க கூறுகிறார்.

    இதனாலேயே நோன்பு நாட்களில் நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க உதவுங்கள். அவர்களுக்கு ஒரு பேரீச்சம் பழமாவது, ஒரு மிடறு பாலாவது கொடுத்து தர்மங்களை வாரி வழங்குங்கள் என கூறப்படுகிறது. இந்த தர்மம் கடமையாக்கப்பட்டதன் நோக்கம் யாதெனில் “பெருநாளன்று ஒரு ஏழையும்” பசியோடு இருக்கக்கூடாது. உணவின்றி வாடக்கூடாது. பிஞ்சுகள் பட்டினியால் தவிக்கக்கூடாது என்பதாகும். அதன் பொருட்டே இப்பண்டிகைக்கு “ஈதுல் பித்ரு” ஈகைத் திருநாள் என்று பெயர் வந்தது.

    இறைவனின் அருட்கொடையை பெற ‘பித்ரா’ எனும் பெருநாள் தருமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெருநாளன்று யாரும் பசி- பட்டினியோடு இருக்கக்கூடாது. அந்த மகிழ்ச்சியான நாளில் யாரும் நோன்பு கூட இருக்கக் கூடாது என அண்ணல் நபிகள் கட்டளையிட்டுள்ளார். இருப்பவர்க்கு இவ்விதி சரிப்படும். கஞ்சிக்கே வழியில்லாதவருக்கு என்ற கேள்விக்கு பதிலாகதான் பெரும் பணக்காரர்கள் மட்டுமல்ல ஓரளவு வசதி படைத்த நடுத்தர மக்கள் கூட பெருநாள் சிறப்பு தொழுகைக்கு போவதற்கு முன்பே ‘பித்ரா’ எனும் பெருநாள் தர்மத்தை கட்டாயம் தர வேண்டும்.



    நாம் என்ன விரும்பி சாப்பிடுகிறோமோ அதனை தான் தருமம் செய்ய வேண்டும். நாம் எந்த தரத்தில் அரிசியோ, உணவு பொருளோ சாப்பிடுகிறோமோ அதில் இரண்டரை கிலோ அரிசியை அல்லது அதன் மதிப்பு பணத்தை ஏழைகளுக்கு பெருநாள் தர்மமாக வழங்குதல் வேண்டும். ஒரு வீட்டில் 4 நபர் இருந்தால் 10 கிலோ அரிசியை வழங்கிடுதல் வேண்டும். ‘பித்ரா’ எனும் பெருநாள் தர்மம் வழங்காதவரின் நோன்பு ஏற்றுக் கொள்ளப்படாது. அது வானத்துக்கும் பூமிக்கும் இடையில் தொங்கி கொண்டேயிருக்கும் என நபிகள் எச்சரித்துள்ளார். பெருநாள் தொழுகைக்கு முன் ‘பித்ரா’ தருவதால்தான் இவ்விழா ‘ஈதுல் பிதுர்’ என்று அழைக்கப்படுகிறது.

    இஸ்லாமின் ஐந்து கடமைகளில் ஒன்று ஜகாத் எனும் தருமம். இதனை ரமலான் மாதத்தில் அதிகம் செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது. ‘ஜகாத்’ என்றால் தம்மிடம் கடந்த ஓராண்டில் சேமித்து வைக்கப்பட்ட பணம், நகை ஆகியவற்றின் மீது இரண்டரை சதவீத தொகையை எடுத்து ஏழைகளுக்கு வழங்க வேண்டும். இந்த ஜகாத் பெற தகுதியானவர்கள் முதலில் வறுமையில் உள்ள அவர்களின் உறவினர்கள்தான். முதலில் அவர்களுக்கு கொடுத்த பின், பிற ஏழைகளுக்கு தரலாம். பித்ரா என்பது வயிற்று பசியை போக்க வழி செய்கிறது. ஜகாத் வறுமை நிலையை ஒழிக்க, ஏற்ற தாழ்வை நீக்க வழிவகை செய்கிறது.

    அதுபோல் ஸதகா என்ற தர்மமும் உள்ளது. ஜகாத் என்பது கட்டாயக் கொடை. ‘ஸதகா’ என்பது விரும்பி வழங்கும் ஏனைய தான, தர்மம். அதாவது பணம், பொருளாக தர்மம் தருவது. இல்லையெனில் தன் உழைப்பை வழங்குவது. அதுவும் முடியாதபோது அவர்களுக்கு ஏதும் தீங்கு செய்யாதிருப்பது என நபிகள் கூறுகிறார். ஈகை பெருநாளில் இப்பிற தர்மங்களையும் அதிகமாக செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது.
    புனித இரவையொட்டி நேற்று, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
    ரம்ஜான் மாதத்தில் லைலத்துல் கத்ரு எனப்படும் புனித இரவில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து இரவு முழுவதும் தூங்காமல் பள்ளிவாசல்களில் திருக்குரான் ஓதி சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம்.

    இதன்படி நேற்று, புனித இரவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. முன்னதாக ரமலான் நோன்பின் மாண்பு குறித்தும், புனித இரவின் சிறப்பு குறித்தும் மதகுருமார்கள் பயான் (சொற்பொழிவு) செய்தனர்.

    ராமநாதபுரம், கீழக் கரை, ஏர்வாடி, ராமேசு வரம், பரமக்குடி, மண்ட பம், பெருங்குளம், உச்சிப் புளி, புதுநகரம், என்மனங் கொண்டான், புதுமடம், இருமேனி, பாம்பன், தங்கச்சிமடம், கமுதி, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், பெரியபட்டணம், ரெகுநாதபுரம், அழகன் குளம், சித்தார்கோட்டை, தேவிபட்டினம், பாரதி நகர், காரிக்கூட்டம், வாணி, சாத்தான்குளம், பெரியபட்டணம், வழுதூர், வாலாந்தரவை, உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்கள் முழுவதும் மின் விளக்குகளால் அலங் கரிக்கப்பட்டிருந்தது.

    இந்த பள்ளிவாசல்களில் நேற்று இரவு விடிய விடிய சிறப்பு தொழுகை நடைபெற்றது. உலக அமைதிக் காகவும், மக்களி டையே நல்லிணக்கம் தொடரவும் சிறப்பு பிரார்த் தனை நடைபெற்றது.

    பெண்களுக்கான தொழுகை பெண்கள் பள்ளி வாசலிலும், மதர ஸாக்களிலும், வீடுகளி லும் நடைபெற்றது. இதில் முஸ்லிம்கள் உற்சாகத் துடன் கலந்து கொண்டு திருக்குரான் ஓதி இறை வனை தொழுதனர்.
    வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு ஒருவருமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மது, இறைத்தூதர் என்றும் நான் உறுதி கூறுகிறேன்.
    அகழ் மற்றும் குறைழா போர்களுக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் பல குழுக்களையும் படைப்பிரிவுகளையும்  எதிரிகளிடமிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்க நபி(ஸல்) அவர்கள் ‘நஜ்த்’ பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள்.

    தன்னை இறைத்தூதர் என்று வாதிட்ட பொய்யன் முஸைலமா, நபியவர்களைக் கொல்வதற்காக யமன் நாட்டிலிருந்து ஸுமாமா இப்னு உஸால் என்பவரை அனுப்பினான். நபிகளார் அனுப்பிய அந்தப் படையினர் 'பனூ ஹனீஃபா' குலத்தைச் சேர்ந்த ஸுமாமா இப்னு உஸாலை கைது செய்து கொண்டு வந்தார்கள்.

    பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, “ஸுமாமாவே! உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டார்கள். அவர், “நான் நல்லதே கருதுகிறேன். முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால், மரண தண்டனை விதிக்க வேண்டிய ஒருவனையே கொல்வீர்கள். ஆனால் என்னை மன்னித்து எனக்கு விடுதலை அளித்தால் உங்களுக்கு நான் விசுவாசியாக, காலம் காலமாகக் கடமைப்பட்டவனாகிவிடுவேன். நீங்கள் செல்வத்தை விரும்பினால் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள், நான் தருகிறேன்' என்று பதிலளித்தார். எனவே, நபிகளார் அவருக்கு எந்தத் தீர்ப்பும் வழங்காமல் சென்றுவிட்டார்கள்.

    மறு நாளும் நபி(ஸல்) அவர்கள் ஸுமாமாவிடம் அதே கேள்வியைக் கேட்டார்கள். அதற்கு அவர், தங்களிடம் நான் ஏற்கெனவே கூறியது தான்: நீங்கள் எனக்கு மன்னிப்பு அளித்து உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்' என்றார். அன்றும் நபி(ஸல்) எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். மறுநாளுக்கு அடுத்த நாள் வந்தபோது, “ஸுமாமாவே!' நீ என்ன கருதுகிறாய்?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத்தான் கருதுகிறேன்' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள்' என்று கூறினார்கள்.



    உடனே ஸுமாமா பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு ஒருவருமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மது, இறைத்தூதர் என்றும் நான் உறுதி கூறுகிறேன்” என்று மொழிந்துவிட்டு, “முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றுவரை உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை.

    ஆனால், இன்று உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றுவரை உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது. உங்கள் குதிரைப்படையினர் என்னைப் பிடித்துக் கொண்டுவிட்டார்கள்' என்று சொல்லிவிட்டு, 'மேலும் நான் இப்போது மக்காவிற்குச் சென்று உம்ரா செய்ய விரும்புகிறேன். அனுமதிப்பீர்களா?” என்று கேட்டார்.

    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸுமாமா உம்ரா செய்ய அனுமதியளித்தார்கள். ஸுமாமா மக்காவிற்குச் சென்றபோது அங்கே ஒருவர் அவரிடம், 'நீ மதம் மாறிவிட்டாயா?' என்று கேட்டதற்கு ஸுமாமா(ரலி), 'இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் மதம் மாறவில்லை. மாறாக, இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை என்னுடைய நாடான யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட மக்காவாசிகளான உங்களுக்கு வராது' என்று கூறினார்கள்.

    இதனால் அவதிக்குள்ளான குறைஷிகள் நபி(ஸல்) அவர்களுக்குக் கடிதம் எழுதினர். அதில் தங்களின் இரத்த பந்தத்தைக் கூறி, ஸுமாமா தங்களுக்கு வரும் தானியங்களைத் தடுக்காமல் இருக்க நபியவர்கள் அவருக்குக் கடிதம் எழுதுமாறு கேட்டுக் கொண்டனர்.

    கருணையே வடிவான நபி(ஸல்), குறைஷிகளின் கோரிக்கையை நிறைவேற்றினார்கள்.

    ஸஹீஹ் புகாரி 5:64:4372, 2:44:2422, அர்ரஹீக் அல்மக்தூம்

    - ஜெஸிலா பானு.
    'லைலத்துல் கத்ர் இரவை ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான இரவுகளில் நீங்கள் தேடுங்கள்’ என்பது நபிமொழியாகும். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி), நூல்: புகாரி).
    புனித ரமலான் மாதத்தில் வரும் இரவுகளில் மிகவும் சிறப்பு மிக்கது, அற்புதங்கள் நிறைந்தது 'லைலத்துல் கத்ர்’ இரவாகும். இந்த இரவில் இறைவனை வணங்கி பாவ மன்னிப்பு கேட்டால் அது நிச்சயம் நிறைவேறும் என்று உறுதி தருகிறது திருக்குர்ஆனும், நபிமொழியும்.

    'நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலத்துல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கி வைத்தோம். (நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீங்கள் அறிவீர்களா?. கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங் களைவிட மிக்க மேலானதாகும்’ என்று கூறுகிறது திருக்குர்ஆன் (97:1&3).

    இந்த இரவு குறித்த நபிமொழிகள் வருமாறு:

    லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்: 'நிச்சயமாக, நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) இரவில் இறக்கினோம். கண்ணியமிக்க இரவு எதுவென உமக்கு அறிவித்தது எது? மேலும் கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும். அதில் வானவர்களும், ரூஹூம் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் அனுமதியுடன் (அவனுடைய) கட்டளை ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதற்காக இறங்குகின்றனர். (அந்த இரவு முழுக்க) சாந்தி (பொழிந்த வண்ணமிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை நீடிக்கும். அறிவிப்பாளர்: சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள்.

    ‘ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!‘ என்று நபிகள் கூறியதாக அபூ ஹூரைரா (ரலி) அறிவித்தார்.



    சிறப்பு மிக்க இந்த இரவில் இறைவனிடம் எப்படி பிரார்த்தனை செய்யவேண்டும் என்று நபி (ஸல்) அவர்களிடம் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்போது நபிகளார், 'இறைவா நீ மன்னிப்பாளன், மன்னிப்பை விரும்புபவன். எனவே என்னை மன்னிப்பாயாக’ என்பதை அதிகம் ஓத வேண்டும் என்றார்கள்.
    இந்த லைலத்துல் கத்ர் இரவிலே நாம் அதிகமாக அல்லாஹ்வை வணங்க வேண்டும். நமது பாவங்களை எல்லாம் மன்னிக்கும்படி இறைவனை பிரார்த்தனை செய்யவேண்டும்.

    'லைலத்துல் கத்ர் இரவை ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான இரவுகளில் நீங்கள் தேடுங்கள்’ என்பது நபிமொழியாகும். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி), நூல்: புகாரி).

    எனவே ரமலானில் இறுதிப்பகுதியில் இருக்கும் நாம் இந்த ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல்கத்ர் இரவை தேடுவோம். அந்த நாளில் அதிகமாக பிரார்த்தனை செய்து, பாவமன்னிப்பு கேட்டு இறைவனின் திருப்பொருத்தத்தைப்பெற முயற்சி செய்வோம், ஆமீன்.

    மவுலவி எம். எம். அப்துல் கனி, திருநெல்வேலி சந்திப்பு.
    காலை விழித்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என உன்னத வழிமுறைகளைச் சொல்வதாலேயே அது உன்னத மார்க்கம்.
    வேறு மதங்களோடு ஒப்பிடும்போது இஸ்லாம் மார்க்கம் வேறுபட்டது; ஒப்பற்றது.

    “வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை-அல்லாஹ்வைத் தவிர! முகம்மது நபி அவனது திருத்தூதர்” என்பதே இஸ்லாத்தின் அடிப்படையாகும்.

    ஏக இறைவனைத் தவிர வேறு யாருக்கும் தலை வணங்கக்கூடாது என்பதே இஸ்லாத்தின் தலையாய கொள்கையாகும்.

    வணக்கம் என்பது இறைவனுக்கு மட்டும் தான் என்பதில் இஸ்லாம் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது.

    “நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப்பெரும் பாவத்தையே கற்பனை செய்கிறார்கள்” (4:48) என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

    ‘இறைவன் மிகப் பெரியவன்’ (அல்லாஹு அக்பர்) என்று சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தன்னைச் சாதாரண மனிதனாகவே எண்ணினார்கள்.

    “முகம்மது (நபி) ஒரு தூதரேயன்றி (இறக்காமல் இருக்கக்கூடிய இறைவன்) அல்ல. அவருக்கு முன்னரும் (இவ்வாறே) பல தூதர்கள் சென்றிருக்கிறார்கள்” (3:144) என்றும்,

    “(நபியே!) நீங்கள் கூறுங்கள்: நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நிச்சயமாக உங்களுடைய இறைவன் ஒரே இறைவன்தான் என்று எனக்கு வஹி (இறைச்செய்தி) மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே எவர் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவாராக!” என்றும் திருமறை (18:110) தெரிவிக்கிறது.

    இறைவனின் வாக்கு, தன் வாயிலாக இறங்கியதற்குத் தான் ஒரு கருவி என்ற கருத்தையே நபிகளார் கொண்டிருந்தார்கள்.

    “இறைவனுக்கு உருவம் இல்லை; உருவ வழிபாடு கூடாது” என்பதை வலியுறுத்திய நபிகளார், எந்த நிலையிலும் தனது உருவத்தை நிலைநிறுத்த நினைக்கவில்லை. வருங்காலம் கையில் தனது உருவம் கிடைத்தால் கடவுளாக்கி விடுவார்கள் என்று கருதியே தனது உருவப் படத்தை உருவாக்கவில்லை. தோழர்கள் சிலர் நபிகளாரின் காலில் விழ முன்வந்தபோது அதை நபிகளார் தடுத்து விட்டார்கள். காலில் விழும் கலாசாரம் இஸ்லாத்தில் இல்லை என்பது அதன் உன்னதத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

    உலகில் அநியாயங்கள் அதிகரிக்கும்போது, அக்கிரமங்கள் உக்கிரம் அடையும்போது கடவுள் மனித அவதாரம் எடுத்து உலகிற்கு வருகிறான் என்ற கருத்தை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை.



    “இறைவன் ஒருவனே! அவன் தேவையற்றவன்; அவன் யாரையும் பெறவும் இல்லை; யாராலும் பெறப்படவும் இல்லை. அவனுக்கு ஒப்பாரும் இல்லை. அவனை மிக்காரும் இல்லை” (112:1-4) என்பது இறைவசனம்.

    எனவே மக்களுக்கு வழிகாட்ட இறைவன் அந்த மக்களில் ஒருவரையே தனது தூதராக நியமிக்கிறான் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆதித்தூதர் ஆதம், இப்ராகீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப், மூஸா, ஈசா, நூஹ் போன்ற எந்த இறைத் தூதர்களையும், இஸ்லாத்துக்கு முன் தோன்றிய மதங்கள் பெருமைப்படுத்தவில்லை. ஆனால் அவர் களைப் போற்றி ஏற்றுக் கொண்ட ஒரே மார்க்கம், இஸ்லாம். இது அதன் உன்னதத்திற்கு இன்னொரு சான்று.

    இயற்கையோடு இயைந்த மார்க்கம் இஸ்லாம். இதனால் இயற்கைக்கு எதிரான எந்த செயலையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. பசி, தாகம் போன்றே உடல் இச்சையும் கட்டுப்படுத்த முடியாத ஒன்று. இதனால்தான் இஸ்லாம் துறவறத்தை ஏற்றுக் கொள்வதில்லை. மேலும் உடலை வருத்தும் எந்தக் காரியத்தைச் செய்யவும் இஸ்லாம் உடன்படவில்லை.

    உலகில் உள்ள எல்லா மதங்களும் விவாகரத்துக்கு எதிரானவை. ஆனால் இதில் இஸ்லாத்தின் நோக்கமே வேறு. அனுமதிக்கப்பட்ட காரியங்களில் இறைவன் வெறுக்கும் செயல், விவாகரத்து. தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒன்று சேர முடியாத நிலை நிலவும்போது பிரிவது நல்லது என்று இஸ்லாம் கருது கிறது.

    இஸ்லாத்தை பொறுத்தவரை திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம். ஒப்பந்தம் என்பதற்கு உடன்பாடு என்ற பொருளும் உண்டு. ‘உடன்பாடு உடையவர், உடன்பட்டோராம்’ என்பது தொல்காப்பியம். ஆணும், பெண்ணும் திருமணம் செய்ய உடன்பட்ட காரணத்தினால்தான் அவர்களுக்குள் திருமண உடன்பாடு ஏற்பட்டது. இப்போது அவர்கள் ஒன்றாக இருக்க உடன்படவில்லை. கட்டிக் கொண்டோம் என்பதற்காக காலமெல்லாம் கட்டிக் கொண்டு கவலைப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதால் விவாகரத்துக்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறது. இது வாழ்வியல் நடைமுறைகளுக்கு ஏற்ற கொள்கைகளைக் கொண்ட மார்க்கம் இஸ்லாம் என்பதைக் காட்டுகிறது.

    இதைப்போலவே கணவன் இறந்த பிறகு பெண்கள் மறுமணம் செய்யும் உரிமை, பெண்களுக்கு இஸ்லாம் அளித்த சமூக உரிமைகளில் மிக முக்கியமானதாகும். உலகத்தில் பெண்களுக்கு முதன்முறையாக சொத்துரிமை வழங்கியதும் இஸ்லாம்தான்.

    வணக்க வழிபாடுகளையும், வாழ்க்கையையும் இஸ்லாம் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. வணிகம் செய்வதும் வணக்கமே; இல்லறமும் ஒரு வணக்கமே. தொழுகை, நோன்பு, ஹஜ் ஆகியவைகளும் வணக்கங்களே என்கிறது, இஸ்லாம். எப்படி உண்ண வேண்டும், எப்படி நீரைப் பருக வேண்டும், எப்படி உறங்க வேண்டும், எப்படி உடுக்க வேண்டும், எப்படி உடல் நலம் பேண வேண்டும்? என்பன போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறது. காலை விழித்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என உன்னத வழிமுறைகளைச் சொல்வதாலேயே அது உன்னத மார்க்கம்.
    நபி (ஸல்) அவர்கள் மூன்று வருடம் கழித்துத் திரும்பி வந்த தமது மருமகன் அபுல் ஆஸிற்குத் தனது மகள் ஸைனபை முதல் திருமண ஒப்பந்தத்தைக் கொண்டே சேர்த்து வைத்தார்கள்.
    அகழ்ப் போரின்போது ஸஅத் இப்னு முஆத்(ரலி) கை நரம்பில் தாக்கப்பட்டார். அவரை அருகிலிருந்து நோய் விசாரிப்பதற்கு ஏற்ப பள்ளிலேயே அவருக்குக் கூடாரம் ஒன்றை நபி(ஸல்) ஏற்படுத்தினார்கள். சில நாட்களில் ஸஅதின் காயம் வீங்கி உடைந்து, அதற்கு அருகில் கூடாரம் அமைந்திருந்த பனூ கிஃபார் குலத்தினரின் கூடாரம் வரை ஸஅதின் இரத்தம் பாய்ந்து அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

    'கூடார வாசிகளே! உங்கள் தரப்பிலிருந்து எங்களை நோக்கிப் பாய்கின்றதென்ன?' என்று கேட்டுக் கொண்டு அங்கே பார்த்தபோது காயத்திலிருந்து இரத்தம் வடிய ஸஅத் (ரலி) இருந்தார்கள். அந்தக் காயத்தினாலேயே மரணமும் அடைந்தார்கள். ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களின் மரணத்தினால் அல்லாஹ்வின் சிம்மாசனமே குலுங்கியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அகழ் மற்றும் குறைழா போர்களுக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் பல குழுக்களையும் படைப்பிரிவுகளையும் ஒன்றன்பின் ஒன்றாக எதிரிகளிடமிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்க அனுப்பினார்கள்.

    பத்ருப் போரில் நபி (ஸல்) அவர்களுடைய மகள் ஸைனபின் கணவர் அபுல் ஆஸும் கைதியாக இருந்தபோது, கணவரை மீட்க ஸைனப் தனது தாயின் அதாவது கதீஜா (ரலி) அவர்களின் மாலையை ஈட்டுத்தொகையாக அனுப்பியதைக் கண்ட நபிகளார், தங்களது தோழர்களிடம் அபுல் ஆஸை ஈட்டுத் தொகையின்றி விடுதலை செய்ய அனுமதி கேட்டார்கள்.



    தோழர்கள் அனுமதிக்கவே, மகள் ஸைனப்பை மதீனாவிற்கு அனுப்பிவிட வேண்டுமென்ற நிபந்தனையோடு அபுல் ஆஸ் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இஸ்லாம் பற்றிய புரிதல் இருந்ததால் ஸைனப் இஸ்லாத்தை ஏற்றார் ஆனால் இஸ்லாம் பற்றிப் புரிந்தும் மக்கள் தன் மனைவியின் சொல்லுக்காகத் தன் மூதாதையரின் மதத்தைத் துறந்தார் என்ற அவப்பெயர் வந்துவிடுமென்று அஞ்சி அபுல் ஆஸ் இஸ்லாத்தை ஏற்க மறுத்தார். நிபந்தனைக்குட்பட்டு ஸைனப்பை மதீனாவிற்கு அனுப்பி வைத்தார்.

    அதனால் பல வருடங்களாக ஸைனபும் அவரது கணவர் அபுல் ஆஸும் பிரிந்தே இருந்தனர். அகழ் மற்றும் குறைழா போர்களுக்குப் பின் பல காலம் சென்று அபுல் ஆஸ் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தோடு மீண்டும் பிடிபட்டார். முஸ்லிம்கள் அனைத்தையும் அவர்களிடமிருந்து கைப்பற்றினர். ஆனால், அபுல் ஆஸ் அங்கிருந்து தப்பி மதீனாவில் நபியவர்களின் மகளார் ஸைனபிடம் அடைக்கலம் தேடிச் சென்றார். அவரது பொருட்களைத் திருப்பித் தருமாறும் கேட்டுக் கொண்டார். நபிகளாரின் எந்த நிர்பந்தமுமில்லாமல் நிலையைப் புரிந்து கொண்ட மக்கள் அப்பொருட்களை நபிகளாரின் மகளுக்காக விடுவித்து அபுல் ஆஸையும் விடுவித்தனர்.

    அபுல் ஆஸ் அப்பொருட்களை எடுத்துக் கொண்டு மக்கா சென்று அப்பொருட்களுக்குரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, இஸ்லாமை ஏற்று மதீனா திரும்பினார். நபி (ஸல்) அவர்கள் மூன்று வருடம் கழித்துத் திரும்பி வந்த தமது மருமகன் அபுல் ஆஸிற்குத் தனது மகள் ஸைனபை முதல் திருமண ஒப்பந்தத்தைக் கொண்டே சேர்த்து வைத்தார்கள்.

    ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 1:7:463, 4:63:3804, அர்ரஹீக் அல்மக்தூம்

    -ஜெஸிலா பானு.
    ×