search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமைமிகு ஈகை திருநாள்
    X

    பெருமைமிகு ஈகை திருநாள்

    ரமலான் மாதத்தின் 30 நாட்களும் நோன்பிருந்து அந்த உன்னத வழிபாட்டின் நிறைவாக கொண்டாடுவது தான் ஈகைத் திருநாள்.
    ரமலான் மாதத்தின் 30 நாட்களும் நோன்பிருந்து அந்த உன்னத வழிபாட்டின் நிறைவாக கொண்டாடுவது தான் ஈகைத் திருநாள். நபிகள் நாயகம் இறை தூதராக அனுப்பப்பட்டதன் நோக்கமே மக்களை நேர்வழிப்படுத்தி நல்வழிகாட்டத்தான். இதன் அடிப்படையில் அவரது வழிகாட்டுதல்களும், அறிவுரைகளும் அமைந்துள்ளன.

    பிறருக்கு உதவுவதையும், பிறர் கண்ணீர் துடைப்பதையும் முக்கிய கடமையாக ஆக்கியுள்ள மார்க்கமே இஸ்லாம். அதனால் நபிகள் நாயகம் “பசித்தவருக்கு உணவளிப்பதுதான் இஸ்லாம்” என்றும், “அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்க தாம் மட்டும் வயிறார உண்பவர் இறை நம்பிக்கையாளர் அல்லர்” என்று உரக்க கூறுகிறார்.

    இதனாலேயே நோன்பு நாட்களில் நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க உதவுங்கள். அவர்களுக்கு ஒரு பேரீச்சம் பழமாவது, ஒரு மிடறு பாலாவது கொடுத்து தர்மங்களை வாரி வழங்குங்கள் என கூறப்படுகிறது. இந்த தர்மம் கடமையாக்கப்பட்டதன் நோக்கம் யாதெனில் “பெருநாளன்று ஒரு ஏழையும்” பசியோடு இருக்கக்கூடாது. உணவின்றி வாடக்கூடாது. பிஞ்சுகள் பட்டினியால் தவிக்கக்கூடாது என்பதாகும். அதன் பொருட்டே இப்பண்டிகைக்கு “ஈதுல் பித்ரு” ஈகைத் திருநாள் என்று பெயர் வந்தது.

    இறைவனின் அருட்கொடையை பெற ‘பித்ரா’ எனும் பெருநாள் தருமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெருநாளன்று யாரும் பசி- பட்டினியோடு இருக்கக்கூடாது. அந்த மகிழ்ச்சியான நாளில் யாரும் நோன்பு கூட இருக்கக் கூடாது என அண்ணல் நபிகள் கட்டளையிட்டுள்ளார். இருப்பவர்க்கு இவ்விதி சரிப்படும். கஞ்சிக்கே வழியில்லாதவருக்கு என்ற கேள்விக்கு பதிலாகதான் பெரும் பணக்காரர்கள் மட்டுமல்ல ஓரளவு வசதி படைத்த நடுத்தர மக்கள் கூட பெருநாள் சிறப்பு தொழுகைக்கு போவதற்கு முன்பே ‘பித்ரா’ எனும் பெருநாள் தர்மத்தை கட்டாயம் தர வேண்டும்.



    நாம் என்ன விரும்பி சாப்பிடுகிறோமோ அதனை தான் தருமம் செய்ய வேண்டும். நாம் எந்த தரத்தில் அரிசியோ, உணவு பொருளோ சாப்பிடுகிறோமோ அதில் இரண்டரை கிலோ அரிசியை அல்லது அதன் மதிப்பு பணத்தை ஏழைகளுக்கு பெருநாள் தர்மமாக வழங்குதல் வேண்டும். ஒரு வீட்டில் 4 நபர் இருந்தால் 10 கிலோ அரிசியை வழங்கிடுதல் வேண்டும். ‘பித்ரா’ எனும் பெருநாள் தர்மம் வழங்காதவரின் நோன்பு ஏற்றுக் கொள்ளப்படாது. அது வானத்துக்கும் பூமிக்கும் இடையில் தொங்கி கொண்டேயிருக்கும் என நபிகள் எச்சரித்துள்ளார். பெருநாள் தொழுகைக்கு முன் ‘பித்ரா’ தருவதால்தான் இவ்விழா ‘ஈதுல் பிதுர்’ என்று அழைக்கப்படுகிறது.

    இஸ்லாமின் ஐந்து கடமைகளில் ஒன்று ஜகாத் எனும் தருமம். இதனை ரமலான் மாதத்தில் அதிகம் செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது. ‘ஜகாத்’ என்றால் தம்மிடம் கடந்த ஓராண்டில் சேமித்து வைக்கப்பட்ட பணம், நகை ஆகியவற்றின் மீது இரண்டரை சதவீத தொகையை எடுத்து ஏழைகளுக்கு வழங்க வேண்டும். இந்த ஜகாத் பெற தகுதியானவர்கள் முதலில் வறுமையில் உள்ள அவர்களின் உறவினர்கள்தான். முதலில் அவர்களுக்கு கொடுத்த பின், பிற ஏழைகளுக்கு தரலாம். பித்ரா என்பது வயிற்று பசியை போக்க வழி செய்கிறது. ஜகாத் வறுமை நிலையை ஒழிக்க, ஏற்ற தாழ்வை நீக்க வழிவகை செய்கிறது.

    அதுபோல் ஸதகா என்ற தர்மமும் உள்ளது. ஜகாத் என்பது கட்டாயக் கொடை. ‘ஸதகா’ என்பது விரும்பி வழங்கும் ஏனைய தான, தர்மம். அதாவது பணம், பொருளாக தர்மம் தருவது. இல்லையெனில் தன் உழைப்பை வழங்குவது. அதுவும் முடியாதபோது அவர்களுக்கு ஏதும் தீங்கு செய்யாதிருப்பது என நபிகள் கூறுகிறார். ஈகை பெருநாளில் இப்பிற தர்மங்களையும் அதிகமாக செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது.
    Next Story
    ×