என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘எனக்காக நீங்கள் ஆறு விஷயங்களில் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்காக நான் சொர்க்கத்தை பெற்றுத்தருவதில் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘எனக்காக நீங்கள் ஆறு விஷயங்களில் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்காக நான் சொர்க்கத்தை பெற்றுத்தருவதில் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’.

    நபிகள் குறிப்பிட்ட அந்த ஆறு விஷயங்கள் இது தான்:

    1. நீங்கள் பேசினால் உண்மையே பேசுங்கள், 2. நீங்கள் வாக்குறுதி கொடுத்தால் முழுமையாக நிறைவேற்றுங்கள், 3. உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்து விடுங்கள், 4. உங்களின் கற்புகளை பேணிக் காத்துக்கொள்ளுங்கள், 5. உங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள், 6. உங்களின் கைகளை போர் செய்யாமல் தடுத்துக் கொள்ளுங்கள்.

    வாய்மையே சொர்க்கத்தை வென்று கொடுக்கும்

    ‘நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள். மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்’. (திருக்குர்ஆன் 9:119)

    ‘வாய்மை நன்மையின் பக்கம் வழிகாட்டும். நன்மை சொர்க்கத்தின் பக்கம் வழிகாட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார். (அறிவிப்பாளர்: இப்னுமஸ்ஊத் (ரலி) புகாரி, முஸ்லிம்)

    வாக்குறுதியை நிறைவேற்றினால் சொர்க்கம் உறுதி

    ‘நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக வாக்குறுதி (பற்றி தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும்’. (திருக்குர்ஆன் 17:34)

    ‘இன்னும், நீங்கள் இறைவனின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்’. (திருக்குர்ஆன் 16:91)

    வாக்குறுதி என்பது வெறும் வார்த்தைகள் மட்டும் அல்ல. அதில் உண்மையும், உறுதியும் அடங்கியிருக்க வேண்டும். வெற்று வாக்குறுதிகளை கொடுப்பவன் ஏமாற்றுப்பேர்வழி. அவன் பொய்யன். அவன் ஒதுங்கும் இடம் நரகமே. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுபவனும், அதை பாதுகாப்பவனும் தான் உண்மையான மனிதன். உண்மையான மனிதன் ஒதுங்கும் இடம் சொர்க்கமே.

    வாக்கு மோசடிகளில் ஈடுபடுவோரின் முகமூடிகளை திருக்குர்ஆனும், நபிமொழிகளும் இவ்வாறு தோலுரித்துக் காட்டுகிறது.

    ‘இறைவிசுவாசிகளே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது இறைவனிடம் கடும் கோபத்துக்குரியது’. (திருக்குர்ஆன் 61:2,3)

    ‘நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகன் ஆவான். பேசும்போது பொய்சொல்வதும், வாக்குறுதியளித்தால் அதற்கு மாறு செய்வதும், ஒப்பந்தம் செய்தால் நம்பிக்கை மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும் தான் அவை. எவனிடம் இவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதை விட்டுவிடும் வரை அவனுள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), புகாரி)

    ‘இறைநம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் இறைவனிடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்’. (திருக்குர்ஆன் 33:23)

    ‘இன்னும், அவர்கள் தங்கள் (வசம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதங்களையும், வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்’. (திருக்குர்ஆன் 23:8)

    ‘இத்தகையோரே பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்’. (திருக்குர்ஆன் 23:10,11)

    நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானித பொருட்களை அதனுடைய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும்படியும், அதற்கு மோசடி செய்யாமல் இருக்கும்படியும் இறைவன் இறைநம்பிக்கையாளர்களிடம் கேட்டுக்கொள்கிறான்.

    ‘அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் என இறைவன் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்’. (திருக்குர்ஆன் 4:58)

    ‘இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இறைவனுக்கும், இறைத்தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்’. (திருக்குர்ஆன் 8:27)

    ‘இந்தச் சமுதாயத்திலிருந்து முதன்முதலாக உயர்த்தப்படுவது வெட்கமும், அமானிதமும் ஆகும். எனவே அவ்விரண்டையும் இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல் : தப்ரானீ)

    கற்பை பாதுகாப்பவருக்கு சொர்க்கமே பாதுகாப்பு

    ‘இறைநம்பிக்கையாளர்கள் தங்களது கற்புகளை பாதுகாத்துக் கொள்வார்கள்’. (திருக்குர்ஆன் 23:5)

    ‘ஒரு பெண் ஐவேளைத் தொழுது, மேலும், ரமலான் மாதம் நோன்பும் நோற்று, மேலும், அவள் தமது கற்பையும் பாதுகாத்து, இன்னும், அவள் தமது கணவனுக்கும் கட்டுப்பட்டு நடந்தால், சொர்க்கத்தின் எந்தவாசல் வழியாக நீ உள்ளே செல்ல நாடுகிறாயோ, அந்த வாசல் வழியாக நுழைந்து கொள்’ என்று அவருக்கு சொல்லப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி), நூல்: அஹ்மது)

    ‘எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியில் இருக்கும் நாவுக்கும், இரண்டு தொடைகளுக்கு மத்தியில் இருக்கும் பாலின உறுப்புக்கும் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்டாரோ, அவருக்கு நான் சொர்க்கத்தின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஸஹ்ல் பின் ஸத் (ரலி) புகாரி)

    பார்வைகளைத் தாழ்த்திக் கொண்டவர்களுக்கு சொர்க்கம்

    தகாத பார்வை என்பது பாவத்தில் தள்ளிவிடும். ஆபாச பார்வை என்பது விபச்சாரத்தில் தள்ளிவிடும்.

    ‘பார்வை என்பது விஷம் தடவப்பட்ட ஷைத்தானின் ஒரு அம்பு’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) தப்ரானீ)

    ‘(நபியே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக. இது அவர்களுக்கு பரிசுத்தமானது, அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் கூறுவீராக’. (திருக்குர்ஆன் 24:30,31)

    ‘இன்னும், உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்’. (திருக்குர்ஆன் 2:195)

    மேற்கூறப்பட்ட ஆறு அம்சங்களையும் இஸ்லாம் கூறும் வழியில், இறைத்தூதர் காட்டிய வழியில் செயல்படுத்தி வாழ்ந்து வந்தால் சொர்க்கம் நிச்சயம். இது வேத சத்தியம், இது நபி (ஸல்) அவர்களின் உறுதியான உத்தரவாதம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன். 
    அன்சாரி நண்பர்கள் புடைசூழ அல்லாஹ்வின் தூதர் ஏகத்துவத்தின் தலைநகரம் மதினாவை சென்றடைந்தார்கள். ஹிஜ்ரத் முடிவடைந்தது. இஸ்லாம் என்னும் பேரொளி குன்றிலிட்ட ஒளியாய் பிரகாசிக்கத் தொடங்கியது.
    “மலைக்குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்த போது, எதிரிகள் வந்து சூழ்ந்து கொண்ட சமயத்தில் தன்னுடன் குகையில் இருந்த தோழராகிய அபூபக்கரை நோக்கி, ‘நீங்கள் கவலைப்படாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான்’ என்று கூறிய போதும், அல்லாஹ் அவருக்கு தன்னுடைய மன நிம்மதியை அளித்தான்”. (திருக்குர்ஆன் 9:40)

    மக்கள் மூட நம்பிக்கையில் திளைத்திருந்த காலம் அது. தங்கள் கற்பனையில் உருவான உருவங்களை கடவுளாக வணங்கி வந்தனர். மேலும் தவறான, பாவம் நிறைந்த செயல்களில் ஈடுபட்டு வாழ்ந்தனர்.

    அப்போது மக்களை திருத்தி, நல்வழிப்படுத்தி, அவர்களுக்கு நேர்வழிகாட்ட முகம்மது நபி (ஸல்) அவர்களை, தனது தூதராக இறைவன் அனுப்பினான். ஏக இறைவன் அல்லாஹ், தனது இறைச்செய்தியை நபிகளாருக்கு அனுப்பி மக்களிடம் அதை தெரிவிக்கச்செய்தான். ஆனால் மக்கள் இதை ஏற்க மறுத்தனர். அதோடு, நபிகளாருக்கு கடும் துன்பங்களையும் கொடுத்தார்கள்.

    நாளுக்கு நாள் இறைமறுப்பாளர்களின் துன்பங்களும், கொடுமைகளும் அதிகரித்தன. ஏக இறைக்கொள்கைகளை மக்களிடம் எடுத்துச்சொல்ல முடியாத அளவுக்கு எதிரிகளின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது.

    எனவே இறைக்கட்டளைப்படி நபிகளார் தனது தோழர் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களுடன் மக்காவில் இருந்து மதினாவுக்கு புலம் பெயர்ந்து சென்றார். இந்த நிகழ்ச்சி ‘ஹிஜரத்’ என்று அழைக்கப்பட்டது.

    அருமை நாயகம் முகம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில்இருந்து தப்பி விட்டார்கள் என்ற செய்தி அறிந்த எதிரிகள் கோபம் அடைந்தனர். குறிப்பாக அபூஜஹில் ஆத்திரத்தின் உச்சியில் இருந்தான், ‘அவர்கள் அவ்வளவு எளிதில் எல்லையை கடந் திருக்க முடியாது. முகம்மதை உயிரோடு பிடித்து கொண்டு வருபவர்களுக்கு நூறு வெள்ளை ஒட்டகங்கள் பரிசாக அளிப்பேன்’ என்று அறிவித்தான்.

    அரேபியர்கள் மத்தியில் வெள்ளை ஒட்டகத்திற்கு என்று தனி மதிப்பு உண்டு. அதுவும் நூறு வெள்ளை ஒட்டகங்கள் என்றால் கேட்கவா வேண்டும். எதிரிகள் அத்தனை பேருமே அண்ணலாரைத் தேடி பல திசைகளில் பயணித்தார்கள்.

    ஆனால், அருமை நபிகளும், அபூபக்கரும் பாலைவனத்தில் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்தார்கள். கிட்டத்தட்ட பாதி தூரம் சென்றவர்கள், அந்த பாலைவனத்தைக் கடந்து தவுர் மலையில் உள்ள ஒரு குகையை அடைந்தார்கள்.

    அந்த குகை மிகவும் பழமை வாய்ந்த பள்ளதாக்கில் இருந்ததால் மிகவும் சிரமப்பட்டு இருவரும் அதில் ஏறினார்கள். தங்களது கால்தடங்கள் கூட தங்களை எதிரிகளிடம் காட்டிக்கொடுத்து விடும் என்று நபிகளார் அஞ்சினார்கள். எனவே அவர்கள் தங்களது விரல் நுனியிலேயே நடந்து வந்தார்கள். இதனால் அவர் களது கால் விரல் வெப்பத்தினால் வெந்து காயங்கள் ஏற்பட்டு ரத்தம் கசிய ஆரம்பித்தது.

    அதனைக் கண்ணுற்ற அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் உடனே நபிகளாரை தனது தோள்களில் தூக்கி வைத்துக்கொண்டு அந்த குகையை ேநாக்கி நடந்தார்கள். குகைக்குச் சென்றதும் அண்ணலாரை வெளியே இருக்கச் செய்து விட்டு, தான் மட்டும் உள்ளே நுழைந்தார்கள். அந்த குகை மிகவும் சிறியதாக இருந்தது. இரண்டு நபர்கள் படுப்பதற்கும் மூன்று அல்லது நான்கு நபர்கள் அமரும் இடவசதி கொண்டது.

    உள்ளே சென்ற அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் குகையை நன்றாக சுத்தம் செய்தார்கள். குகைகளில் இருந்த ஏராளமான துவாரங்களை தங்களுடைய ஆடையை கிழித்து அடைத்தார்கள். பின்னர் அண்ணலாரை உள்ளே அழைத்தார்கள். அண்ணலார் உள்ளே சென்றதும், களைப்பின் மிகுதியால் அப்படியே துயில் கொள்ள ஆரம்பித்தார்கள்.

    அண்ணலாரின் தலையை தன் மடியில் சாய்த்துக்கொண்ட அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள், தன்னுடைய கால் விரல்களால் மீதமிருந்த இரண்டு துவாரங்களையும் அடைத்துக் கொண்டார்கள்.

    துரதிர்ஷ்டவசமாக அந்த துவாரத்தில் இருந்த நாகம் ஒன்று அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் பாதங்களை தீண்டி விட்டது. கொடிய விஷம் உடலில் ஏறியதால் சொல்லொண்ணா வலியும் வேதனையும் ஏற்பட்டது. கால்களை அசைத்தால் அது அண்ணலாரின் தூக்கத்தை கெடுத்து விடும் என்று நினைத்து, வலியை பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்.

    ஆனால், வலியின் வேதனையில் அவரது கண்ணிலிருந்து வழிந்தோடிய கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. சில கண்ணீர்த்துளிகள் வழிந்தோடி அண்ணலாரின் கன்னங்களில் பட்டு தெறித்தது.

    உடனே விழித்துக்கொண்ட அண்ணலார், ‘அபூபக்கரே! என்ன நேர்ந்தது?’ என வினவினார்கள்.

    அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள், ‘அண்ணலே! எனது காலில் ஏதோ விஷ ஜந்து தீண்டி விட்டது போல் தெரிகிறது. வலியையும் வேதனையையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை’ என்றார்கள்.

    உடனே பெருமானார் (ஸல்) அவர்கள் தங்கள் உமிழ் நீரை எடுத்து கடிபட்ட இடத்தில் தடவினார்கள். உடனே அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் வலியும் வேதனையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது.

    அண்ணலாரும், அபூபக்கரும் குகையில் நுழைந்ததும் ஒரு புறா ஜோடி அங்கே கூடு கட்டி அதில் முட்டையிட்டு அடைகாக்க ஆரம்பித்து விட்டது. குகையின் வாயிற் பகுதியில் ஒரு சிலந்தி தன் வலைகளை முழுவதுமாக பின்னி அந்த இடத்தில் எந்தவித அசைவுகளும் ஏற்படவில்லை என்பது போலவும், யாரும் அங்கே நுழைந்திருக்க முடியாது என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தையும் ஏற்படுத்தி விட்டது.

    சுகாதாரமற்ற, காற்று வசதி இல்லாத இருண்ட, விஷ ஜந்துக்கள் குடியிருக்கும் அந்த குகையில் இரு நண்பர்களும் தங்கினார்கள்.

    இந்நிலையில் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் மகன் ஹஸ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், விரோதிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு ஒவ்வொரு இரவும் குகைக்கு வந்து மக்கா நகரின் தற்போதைய தகவல்களை சொல்லிச் செல்வார்கள்.

    அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் அடிமை ஆமீர் இப்னு பஷீர் என்பவர் பாலைவனப்பகுதியில் ஆடுகளை மேய்த்து வருவது போல குகை இருக்கும் பகுதிக்கு இரவில் வந்து, குகையில் தங்கியிருந்த அண்ணலாருக்கும், அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களுக்கும் ஆட்டின் பாலைக் கறந்து அருந்த கொடுப்பார்கள்.

    பரிசுகளின் அறிவிப்பை தொடர்ந்து மேலும் பலர் அண்ணலாரை எல்லா இடங்களிலும் தேட ஆரம்பித்தார்கள். ஒரு கூட்டத்தினர் அண்ணலார் இருந்த குகை வாசல் வரை வந்து விட்டார்கள். அவர்களின் கால் பாதங்களை அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களால் பார்க்க முடிந்தது.

    “அண்ணலே! நம்மை எதிரிகள் சூழ்ந்து விட்டார்கள். சற்று குனிந்து பார்த்தால் நாம் பிடிபட்டு விடுவோம். என்ன செய்வது ரசூலே” என்றார்கள்.

    அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் “நீர் அச்சம் கொள்ளாதீர். நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்றார்கள். (திருக்குர்ஆன் 9:40)

    அந்த நேரத்தில் எதிரிகளில் ஒருவன், ‘ஏதோ இங்கே ஒரு குகையின் வாசல் போல தோன்று கிறதே’ என்றான். ஆனால் அதற்கு பதிலாக மற்றொருவன், ‘இங்கே புறா கூடு கட்டியுள்ளது, சிலந்தி வலை பின்னியுள்ளது. இதனை அறுத்துக்கொண்டு யாரும் சென்றதற்கான அடையாளமே இல்லையே?. எனவே இங்கே யாரும் இருக்க மாட்டார்கள்’ என்று கூறியபடியே அவ்விடத்தை விட்டு அகன்றார்கள்.

    எதிரிகளின் ஆரவாரம் முடிந்ததும், நபிகளார் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து மதினாவின் எல்லையை அடைந்தார்கள். அந்த எல்லையில் ஒரு இடத்தில் தங்கினார்கள். அதுவே ஹிஜ்ரத்தின் கடைசி இடமாகும். அங்கு தான் வந்து தங்கியதும் தொழுவதற்காக பேரீச்சம் மர இலைகளால் கூரை வேய்ந்த பள்ளியைக் கட்டினார்கள். அதுவே ‘மஸ்ஜிதே குபா’ என்று அழைக்கப்படுகிறது.

    அங்கிருந்து அன்சாரி நண்பர்கள் புடைசூழ அல்லாஹ்வின் தூதர் ஏகத்துவத்தின் தலைநகரம் மதினாவை சென்றடைந்தார்கள். ஹிஜ்ரத் முடிவடைந்தது. இஸ்லாம் என்னும் பேரொளி குன்றிலிட்ட ஒளியாய் பிரகாசிக்கத் தொடங்கியது.

    மு. முஹம்மது யூசுப் - உடன்குடி.
    எல்லோரையும் ஏற்ற, தாழ்வின்றி சமமாகப் பாவிப்பவர்களுக்கு கோபம் வருவது அரிதே. கோபம் கொள்வதால் நாம் செய்யும் நற்செயல்கள், இறைவனிடத்தில் எந்த பலனையும் பெற்றுத் தராது.
    உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பது உயிரினங்களின் பண்பாக இருக்கிறது. விலங்குகளுக்கு பகுத்தறிவு இல்லாததால் அவைகளால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது.

    ஆனால் மனிதர்களுக்கு எது சரி, எது சரியல்ல, இதைச் செய்யலாமா? செய்யக்கூடாதா? என்று பகுத்து அறியும் ஆற்றலை இறைவன் அருளியுள்ளான். எனவே உணர்ச்சிகள் கொப்புளிக்கும்பொழுது தன்னைக் கட்டுப்படுத்துபவனே விலங்குகளிடம் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்கிறான்.

    மற்றவர்களைக் காயப்படுத்தும் உணர்ச்சிகளுள் ஒன்றான கோபத்தை ஒருவன் அடக்கத் தவறினால் அந்தக் கோபம் அவனையும் அழித்து, அடுத்தவர்களையும் பொசுக்கி விடும்.

    மற்றவர்களின் மீது ஒருவருக்கு கோபம் ஏற்பட முக்கிய காரணங்கள் இவை தான்: 1) சம்பந்தப்பட்ட நபர் மீது வெறுப்பு, 2) தான் சரியென்று நினைப்பதை அடுத்தவர் ஒப்புக்கொள்ளாமல் இருப்பது, 3) தான் எண்ணியது நடக்கவில்லை என்கிற போது... இதுபோன்று பல காரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

    கோபத்தில் முகம் சிவந்தது, கோபத்தில் ரத்தம் கொதித்தது போன்ற வார்த்தை பிரயோகங்கள் அறிவியல் பூர்வமாக சரியானவையே. ஒருவர் கோபப்படும் பொழுது ரத்த நுண் குழாய்களில் அழுத்தம் அதிகமாகி வெடித்து விடும் ஆபத்தும் உள்ளது என்று எச்சரிக்கிறது மருத்துவம்.

    இதனால் கோபப்படுபவருக்கு உடல் நலம் கெடுவதுடன் அதனால் சம்பந்தப்பட்டவர்களும் மனஅழுத்தத்திற்கு ஆளாகலாம். கோபத்தினால் எந்த லாபமும் இல்லை, புண்ணியமும் இல்லை.

    அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் (எளிதில் கோபப்படும் இயல்புடைய) ஒருவர் வந்து, ‘எனக்கு ஏதாவது ஒரு அறிவுரை கூறுங்களேன்’ என்று கேட்டார். அதற்கு ஏந்தல் நபி (ஸல்) ‘கோபப்படாதீர்’ என்று பதில் கூறினார்கள். இதே கேள்வியை பல முறை அந்த மனிதர் கேட்டும் அண்ணலார் அவர்கள் ஒவ்வொரு முறையும் ‘நீர் கோபம் கொள்ளாதீர்’ என்றே கூறினார்கள்.

    கட்டுப்படுத்த முடியாமல் கோபம் வரும்பொழுது அதை அடக்கிக் கொள்பவனே உண்மையான வீரன். “குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்பொழுது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையில் வலிமை வாய்ந்தவன்” என்றும் நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

    மிகுதியான கோபம் ஏற்படும்பொழுது நாவைக் கட்டுப்படுத்துவது மிகச்சிறந்ததாகும். ஏனெனில் கோபம் மூளையை ஆக்கிரமித்து, என்ன பேசுகிறோம் என்பதை நாம் உணராத அளவிற்கு செய்து விடும். கோபம் குறைந்த பின், ‘நானா அப்படிச் சொன்னேன்?’ என்று நாம் ஆச்சரியப்படுவது இந்த காரணத்தினால் தான்.

    எரிமலையாய்ச் சீறும் ஒருவரின் நாவில் இருந்து வரும் வார்த்தைகள் தீக்கங்குகளாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. எனவே தான் கோபம் சாட்டப்பட்டவர்கள் வேதனையில் வெந்து போகிறார்கள். இதையே திருவள்ளுவர் ‘தீயினாற் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு’ என்கிறார்.

    கோபம் கொள்பவர்கள் ஷைத்தானின் ஆதிக்கத்தில் இருக்கிறார்கள். நெருப்பால் படைக்கப்பட்ட அவனின் தாக்கமே அவர்களிடமிருந்து கோபமாக கொப்புளிக்கிறது. ஆகவேதான் கோபம் தலைக்கேறும் பொழுது நாவைக் கட்டுப்படுத்திக் கொண்டு உடனே தண்ணீரும் பருகுவதால் கோபம் தணியும்.

    கோபத்தில் பொங்கும் மன தைக் குளிர்விக்கவே ரஸூல் (ஸல்) அவர்கள் “கோபம் ஷைத்தானின் பாதிப்பினால் ஏற்பட்ட விளைவாகும். அவன் நெருப்பினால் படைக்கப்பட்டவன். நெருப்பு நீரினால் மட்டுமே அணைகிறது. எனவே உங்களில் ஒருவர் கோபம் கொள்ளும் பொழுது அவர் ‘ஒளு’ செய்து கொள்ளட்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.

    இன்னும் கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு “உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் பொழுது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும், இப்படிச் செய்து கோபம் மறைந்து விட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும்” என்றும் நபி (ஸல்) அவர்கள் அறிவுரை பகன்றுள்ளார்கள்.

    கோபம் வரும்பொழுது, ‘விரட்டப்பட்ட ஷைத்தானிடம் இருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்’ என்று இறைவனிடம் கோருவது, கோபத்தில் இருந்து நம்மைத் தடுத்துக் கொள்வதற்கான ஒரு எளிய வழியாகும்.

    கோபத்தை அடக்க முடியாமல் ஆத்திரத்தில் கொலை போன்ற கடுமையான குற்றங்களைச் செய்பவர்களை நாம் பார்க்கிறோம். கோபம் வடிந்து, ‘தவறு செய்து விட்டோமே’ என்று காலம் தாழ்ந்து உணர்பவர்கள் வேதனைப்பட்டாலும் அதில் எந்த பலனும் கிடைக்காது. பெரும் தவறு செய்த குற்றத்திற்காக சிறை தண்டனைதான் கிடைக்கும்.

    கோபத்தினாலும், ஆத்திரத்தினாலும் நடந்த முதல் கொலை ஆதம் (அலை) அவர்கள் காலத்தில் நடந்தது. காபீல், ஹாபீல் இருவரும் ஆதம் (அலை) அவர்களின் புதல்வர்கள். காபீலுக்கு ஹாபீலின் மீது பொறாமை ஏற்படுகிறது.

    இறைவனுக்காக இருவரும் சமர்ப்பணம் செய்த காணிக்கைகளில் ஹாபீலின் காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதனால் பொறாமைத் தீ இன்னும் கொழுந்து விட்டு எரிய, கோபத்தில் காபீல், ஹாபீலைக் கொன்று விடுகிறார்.

    கோபம் எப்படிப்பட்ட சீரழிவிலும் கொண்டு போய் விட்டு விடும் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் எதுவும் இல்லை. இதுமட்டுமின்றி பொறாமையின் காரணமாகவும் மனிதர்கள் கோபம் கொள்கிறார்கள் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ளலாம்.

    ‘நான் தான் பெரியவன்’ என்னும் அகம்பாவம் மனதில் மேலோங்கும் பொழுது ‘தாங்கள் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும்’ என்று எண்ணுபவர்களுக்கு, தங்கள் சொல்லைக் கேட்காதவர்கள் மீது கோபம் ஏற்படுகிறது. இதனால்தான் சிலர் தமக்குக் கீழ் பணியாற்றுபவர்களிடம் கோபம் கொள்கிறார்கள்.

    எல்லோரையும் ஏற்ற, தாழ்வின்றி சமமாகப் பாவிப்பவர்களுக்கு கோபம் வருவது அரிதே. கோபம் கொள்வதால் நாம் செய்யும் நற்செயல்கள், இறைவனிடத்தில் எந்த பலனையும் பெற்றுத் தராது. கோபத்தை நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் நன்மையை அளிக்கக் கூடியது என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்.

    மனிதர்களுக்கு கோபத்தைத் தூண்டி விட்டு, அவர்களை நன்மைகள் செய்வதிலிருந்தும் தடுப்பது ஷைத்தானின் வேலையாக இருக்கிறது. எனவே நாம், கோபம் கொள்வதிலிருந்து இறைவனிடத்தில் பாதுகாப்பு தேடிக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும்.

    ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை-84 
    இறைவனின் அன்பை அடைய நான்கு வழிகள் உண்டு. அவை: உணவை குறைப்பது, உறக்கத்தை குறைப்பது, பேச்சை குறைப்பது, மக்களுக்கிடையே கலந்திருப்பதை குறைப்பது.
    புனித ரமலானின் நோன்பு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அன்பை பெற்றுத்தரும் ஒரு சிறந்த வணக்க வழிபாடாக அமைந்துள்ளது. இறைவனின் அன்பை அடைய நான்கு வழிகள் உண்டு. அவை: உணவை குறைப்பது, உறக்கத்தை குறைப்பது, பேச்சை குறைப்பது, மக்களுக்கிடையே கலந்திருப்பதை குறைப்பது.

    இந்த நான்கு அம்சங்கள் ஒரு முஸ்லிமிடம் இடம் பெற்றால் அவர் இறைவனின் அன்பை எளிதாக பெற்றுவிடலாம். இந்த நான்கு அம்சங்களும் புனித ரமலானின் நோன்பில் அமைந்துள்ளது.

    உணவை குறைப்பது

    புனித ரமலானில் நோன்பாளிகள் வெகுவாக உணவை குறைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு உணவை குறைத்துக் கொள்வதின் மூலம் இறைவனின் நெருக்கத்தை சுலபமாக அடைந்து கொள்கிறார்கள். இதுகுறித்த நபிமொழி வருமாறு:-

    ‘எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார். நோன்பு எனக்கு மட்டுமே உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன் என்று இறைவன் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி) புகாரி)

    நோன்பு காலத்தில் உணவை குறைத்துக் கொள்வதின் வழியாக நோன்பின் சன்மானத்தை இறைவனின் திருக்கரத்தால் பெறமுடிகிறது.

    தூக்கத்தை குறைப்பது

    புனித ரமலானில் இரவு வணக்கம் என்பது முக்கியமானது. மற்ற மாதங்களை விட ரமலானில் இரவு வணக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனால் வெகுநேரம் தூங்கமுடியாது.

    ‘எவர் ரமலான் இரவில் இறை நம்பிக்கையாளராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் இருந்து (தராவீஹ்) தொழு கிறாரோ, அவர் முன் செய்த (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி) புகாரி)

    ‘நபி (ஸல்) அவர்கள் ரமலான் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள்.’ (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) புகாரி)

    ‘கடமையான தொழுகைக்குப் பிறகு சிறப்பான தொழுகை ‘தஹஜ்ஜத்’ தொழுகை ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)

    ‘பயபக்தியாளர்கள் பொறுமையாளராகவும், வாய்மையாளராகவும், இறைவனுக்கு முற்றிலும் வழிபடுவோராகவும், தான தர்மங்கள் செய்வோராகவும், ஸஹ்ர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருபவராகவும் இருப்பர்.’ (திருக்குர்ஆன் 3:17)

    ‘(ரமலானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவில் அல்லாஹ்வைத் தொழுது உயிர்ப்பிப்பார்கள். (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்.’ (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), புகாரி)

    ‘நோன்பும், திருக்குர்ஆனும் நாளை மறுமையில் அடியானுக்கு பரிந்துரை செய்யும். ‘இறைவா! நான் அவனை பகலில் உண்ணுவதை விட்டும், மனோ இச்சைகளை விட்டும் தடுத்தேன். எனவே அவன் விஷயத்தில் எனது சிபாரிசை ஏற்றுக் கொள்வாயாக’ என்று நோன்பு கூறும்.

    ‘இறைவா! நான் அவனை இரவில் தூங்குவதை விட்டும் தடுத்தேன். எனவே அவன் விஷயத்தில் எனது சிபாரிசை ஏற்றுக் கொள்வாயாக’ என்று திருக்குர்ஆன் கூறும். எனவே இரண்டு வகையான பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. அறிவிப்பாளர் : அப்துல்லாஹ்பின்அம்ர் (ரலி), அஹ்மது)

    புனித ரமலானில் நிறைவேற்றப்படும் இந்த செயல்பாடுகள்தான் அவர்களுக்கு இறைவனின் அன்பை பெற்றுத்தர போதுமானதாக அமைந்துவிடுகிறது.

    பேச்சை குறைப்பது

    ‘எவர் பொய்யான காரியங்கள் செய்வதையும், பொய்யான பேச்சுகளையும் விடவில்லையோ, அவர் தமது உணவையும், நீரையும் விட்டுவிடுவ(நோன்பு வைப்ப)தில் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), புகாரி)

    ‘நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) ஒரு கேடயம் ஆகும். எனவே நோன்பாளி தவறான பேச்சுகளைப் பேசவேண்டாம். முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடவேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால், அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி’ என்று இருமுறை கூறட்டும்! என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), புகாரி)

    நோன்பு என்பது உண்ணாமல், பருகாமல் இருப்பது மட்டுமே அல்ல. கெட்ட வார்த்தைகளை பேசாமலும், பொய் பேசாமலும், புறம் பேசாமலும், அவதூறு பேசாமலும், கோள் பேசாமலும், ஆபாசமாக பேசாமலும், தீச்சொல் பேசாமலும் இருக்க வேண்டும். இவ்வாறு இருப்பதுதான் மெய்யான நோன்பாகும்.

    நோன்பின் ஒழுக்கங்கள் எட்டு. அதில் நாவைப் பேணுதலும் அடங்கும். இறைவனின் அன்பை பெற தேவையற்ற பேச்சு களை விட்டு தவிர்ந்திருக்க வேண்டும்.

    மக்களுடன் குறைவாக கலந்திருப்பது

    புனித ரமலானில் நோன்பாளிகள் தமது நட்பு வட்டாரத்தை சுருக்கிக் கொண்டு, இறை நெருக்கத்தை அடையும் வகையில் மக்களுடன் கலந்திருப்பதை தவிர்த்து கொள்கிறார்கள்.

    ரமலானின் மூன்றாவது பத்தில் நோன்பாளிகள் உலகத் தொடர்பை துண்டித்து, குடும்ப உறவை தற்காலிகமாக நிறுத்திவைத்து, இல்லறத்தொடர்பை முற்றிலும் விட்டுவிட்டு, பள்ளிவாசலில் தஞ்சமடைந்து மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை தியானிக்க ‘இதிகாப்’ இருப்பார்கள்.

    இதுகுறித்து குர்ஆன் கூறுவதைக் காண்போம். ‘நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இதிகாப்) இருக்கும்போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்’ (2:187)

    ‘நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமலானின் கடைசிப் பத்து நாட்கள் இதிகாப் இருந்தார்கள். அவர்களுக்குப் பின் அவர்களின் மனைவியரும் இதிகாப் இருந்தனர்.’ (அறிவிப் பாளர் : ஆயிஷா (ரலி), புகாரி)

    கெட்ட சகவாசத்தை விட ஒதுங்கி தனியாக இருப்பதே மேல். அதிலும் ரமலானில் இருப்பது அதைவிடவும் மேலானது.

    மேற்கூறப்பட்ட நான்கு அம்சங்களையும் கடைப்பிடித்தால் இறைவனின் அன்பை அடையலாம். மேலும், இறைவனையே பரிசாக பெற்றுவிடலாம். இத்தகைய அம்சங்களை கடைப்பிடிக்கக்கூடிய பாக்கியம் புனித ரமலானில் மட்டுமே அரிதாகக் கிடைக்கும்.

    ‘சுவையான உணவை தேடுபவன் இறைவணக்கத்தில் இன்பம் பெறமாட்டான். அதிகமாக தூங்குபவன் வாழ்க்கையில் அபிவிருத்தியை அடையமாட்டான். மனிதர்களிடம் புகழை தேடுபவன் இறைவனின் பொருத்தத்தை பெறமாட்டான். புறமும், வீண் பேச்சும் பேசுபவன் தீனுல் இஸ்லாத்தில் மரணிக்கமாட்டான்’ என இப்ராகீம் பின் அத்ஹம் (ரஹ்) கூறுகிறார்கள்.

    இந்த புனித ரமலானில் இறைவனுக்கு பிடிக்காத அனைத்துவிதமான செயல்களையும் அறவே விட்டுவிட்டு, அறவழியில் சென்று இறையருளைத்தேடுவோம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.
    அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிப்பார்கள்” (திருக்குர்ஆன் 76:7-8)


    “இவர்கள் தங்கள் நேர்ச்சைகளையும் நிறைவேற்றுவார்கள். நீண்ட வேதனையுடைய மறுமை நாளை பயந்து கொள்வார்கள். மேலும் அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிப்பார்கள்” (திருக்குர்ஆன் 76:7-8)

    அன்னை பாத்திமா (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கண்டு மனம் மகிழ்ந்த அல்லாஹ், இந்த வசனத்தை திருமறையில் இறக்கி வைத்து, நபிகளார் (ஸல்) மூலம் அன்னை பாத்திமா (ரலி) அவர்களுக்கு சுபச்செய்தி சொன்னான். இந்த நிகழ்வை காண்போம்.

    நபி பெருமானார் (ஸல்) அவர்கள் எப்படி தன் வாழ்க்கையை வறுமையோடு ஒன்றிணைந்து அமைத்துக் கொண்டார்களோ, அதே அடிச்சுவட்டைப் பின்பற்றி அவரது மகள் பாத்திமா (ரலி) அவர்களும் தன் வாழ்வை வறுமையோடு தோழமை கொண்டே வாழ்ந்து வந்தார்கள்.

    பாத்திமா (ரலி) அவர்கள் வீரர் அலி (ரலி) அவர்களின் வாழ்க்கைத் துணையாய் ஆனபோதிலும், அவர்கள் வாழ்வில் வசந்தத்தைக் காணவில்லை. இஸ்லாமிய தத்துவங்களால் அவர்கள் இதயங்கள் இன்பத்தில் திளைத்திருந்தன. ஆனால் வாழ்க்கையோ வறுமையில் தான் உழன்று கொண்டிருந்தது. ஒரு நாள் உண்டால் பலநாட்கள் பட்டினி கிடக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

    ஒரு முறை பாத்திமா (ரலி) அவர்களின் மகன்கள் இருவரும் ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டனர். அந்த சூழ்நிலையில் அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் இறைவனிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்:

    ‘என் அருமைச் செல்வங்கள் இந்த நோயிலிருந்து வெகுவிரைவில் மீண்டு வருவார்களேயானால், நான் இதற்கு பதிலாக, இறைவனுக்கு நன்றி செலுத்த மூன்று நாட்கள் நோன்பு நோற்பேன்’.

    இதனை அறிந்த அலி (ரலி) அவர்களும் பாத்திமா (ரலி) அவர்களோடு தானும் இணைந்து, நோன்பு வைக்க பிரார்த்தனை செய்து கொண்டார்கள்.

    அல்லாஹ்வும் அவர்கள் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு, அருமைச் செல்வங்கள் இருவரையும் அந்த நோயிலிருந்து காப்பாற்றி சுகமளித்தான். எனவே அவர்கள் இருவரும் நேர்ச்சையை நிறைவேற்ற எண்ணம் கொண்டார்கள்.

    கடும் கோடை வெயில், அலி (ரலி) அவர்கள் ஒரு ஈச்சமரத் தோப்பிற்கு நீரிறைத்து விடும் வேலையை ஒப்புக்கொண்டார்கள். மிகவும் குறைந்த தினக்கூலிக்கு வேலை செய்தார்கள். வேலை முடிந்த மாலை வேளையில் சொற்பமான கூலியை பெற்றுக் கொண்டு கடைத்தெருவிற்கு வந்தார்கள்.

    அங்கே அவர்கள் கைவசம் இருந்த சொற்பத் தொகையில், நன்றாக சலிக்காத கோதுமை மாவைத் தான் அவர்களால் வாங்க முடிந்தது.

    பாத்திமா (ரலி) அவர்களும் கல் திருவையில் போட்டு முடிந்த அளவிற்கு அதனை அரைத்து ரொட்டிக்கான மாவை தயார் செய்தார்கள். நோன்பு திறக்கும் நேரம் நெருங்கியது. மாவை தண்ணீர் விட்டு பிசைந்து ரொட்டிகளைத் தயார் செய்தார்கள்.

    கணவன்-மனைவி இருவரும் நோன்பு திறப்பதற்காக அமர்ந்திருந்த வேளையில், அவர்கள் வீட்டு வாசலில் ஒரு அபயக்குரல்.

    “சொர்க்கத்தின் தலைவியே! அன்னை பாத்திமாவே! நான் ஒரு பரம ஏழை. பசியாறி பல நாட்கள் ஆகிவிட்டன. என்னால் நடக்க முடியாத அளவு பலவீனப்பட்டு போனேன். அன்னையே! என் பசி தீர ஏதாவது உணவளியுங்கள்” என்று வேண்டி நின்றார்.

    நோன்பு திறக்கும் வேளை. இருப்பதோ குறைந்த உணவு, என்ன செய்வது? இருவருமே அந்த உணவை ஏழைக்கு வழங்கி விட முடிவு செய்தார்கள். அதன்படி ஏழைக்கு அந்த உணவை வழங்கி விட்டு, அன்றைய தினம் தண்ணீரைக் கொண்டே நோன்பை நிறைவு செய்தார்கள்.

    மறுநாள் இரண்டாம் நோன்பு. அதே கடின உழைப்புக்குப் பின் அதே சொற்பமான கூலியைப் பெற்று கோதுமை மாவினை வாங்கி வந்தார் அலி (ரலி) அவர்கள். அன்றும் நோன்பு திறக்கும் நேரம் வாசலிலிருந்து ஒரு அழுகுரல். “நானோ அநாதை, ஆதரிப்பார் யாருமில்லை. பசியை போக்க வழியும் தெரியவில்லை. அருமை நபிகளாரின் அன்பு மகளே, பாத்திமாவே! எனக்கு உணவு தந்து உதவுங்கள்” என்று குரல் ஒலித்தது.

    சற்றும் சிந்திக்கவில்லை. தம்பதியர் இருவரும், அன்று தயார் செய்த ரொட்டியையும் அந்த அநாதையின் பசி தீர்க்க வழங்கி விட்டு தண்ணீர் மட்டும் குடித்து நோன்பினை நிறைவு செய்தார்கள்.

    மூன்றாம் நாள், அன்றும் இருவரும் நோன்பு நோற்றார்கள். நோன்பு திறக்கும் நேரத்தில் வாசலில் அதே வேண்டுகோளோடு ஒரு புதிய குரல். “நான் சற்று முன்பு தான் சிறையிலிருந்து மீண்டு வந்த சிறைக்கைதி. என்னை இங்கே யாரும் ஆதரவு கரம் நீட்டி அரவணைக்கவில்லை. மாறாக சிறைக்கைதி என்று என்னை விரட்டியடிக்கிறார்கள். திக்கற்ற நிலையில் உங்களிடம் வந்து விட்டேன். அன்னையே! எனக்கு உணவு தந்து ஆதரியுங்கள்” என்றது.

    கணவன்-மனைவி இருவரும் மனம் இளகியவர்களாக, அன்றும் தங்களிடம் இருந்த உணவைக்கொடுத்தார்கள்.

    பின்னர் இறைவனிடம் கையேந்தி அன்னை பாத்திமா இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்:

    “எங்கள் இறைவா! எத்தனையோ பேரை எங்களை விட வறுமையில் வாழச் செய்திருக்கிறாய். அப்படிப்பட்டவர்களை விட எங்களை மேலாக்கி வைத்துள்ளாய். அது மட்டுமல்ல, ஏழைகளுக்கு எங்களால் உதவக்கூடிய வகையில் எங்களை மேன்மைப்படுத்தியும் வைத்துள்ளாய். வறுமையிலும் தர்மம் செய்யக்கூடிய மாபெரும் பாக்கியத்தை தந்த ரஹ்மானே, எல்லாப் புகழும் உனக்கே. எங்களின் இந்த நற்செயலை ஏற்றுக்கொள்வாயாக”.

    இந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட அல்லாஹ், மிகவும் மனம் மகிழ்ந்தவனாக, அந்த நற்செயலை தான் ஏற்றுக்கொண்டதின் அடையாளமாக மேலே சொல்லப்பட்ட திருக்குர்ஆன் வசனத்தை இறக்கிவைத்தான்.

    தன் தேவையைப் பிற்படுத்தி பிறரின் தேவைக்கு முன்னுரிமை வழங்கிய இந்த சம்பவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

    ஒரு முறை, கைபர் யுத்தத்தில் எதிரிகளிடம் இருந்து ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதை அறிந்த பாத்திமா (ரலி) தங்கள் தந்தையை அணுகி, “அருமை தந்தையே! நான் வறுமையில் வாடி வருகிறேன். வீட்டு வேலை செய்வதற்கு கூட முடியாமல் பலவீனமாக உள்ளேன். எனவே எனக்கு உதவியாக ஓர் அடிமைப் பெண்ணை தந்து உதவுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள்.

    தன் மகளின் வறுமையை அறிந்து நபிகளார் வேதனை அடைந்தார்கள். இருந்தாலும், “அருமை மகளே! இதெல்லாம் அற்பமான இந்த உலகின் ஆதாயங்கள். எந்த நேரத்திலும் இவை அழிந்து விடும். மேலும் இது போரில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் பொருள். நபிகளின் மகள் என்பதால் உனக்கு தந்து விட முடியாது. மகளே! இதைவிட நிம்மதியைத் தரக்கூடிய சிறந்த செயல் ஒன்றைச் சொல்லித் தரவா என்று வினவி, ஒவ்வொரு இரவிலும் நீ தூங்கச் செல்லும் போது சுபுஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹமதுலில்லாஹ் 33 தடவை, அல்லாஹ் அக்பர் 34 தடவை ஓதி விட்டு தூங்கச் செல். உன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து நிம்மதியும் சந்தோஷமும் கிட்டும்” என்றார்கள்.

    இந்த வரலாற்று நிகழ்வுகள் மூலம், கடுமையான வறுமையிலும் தானம் செய்யும் மனநிலை, ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் நேர்மை தவறாத கண்ணியம் ஆகியவற்றை நாம் கற்றுக்கொண்டு அதன்படி நடக்க உறுதி கொள்வோம்.

    மு. முஹம்மது யூசுப். உடன்குடி.
    நபிபெருமானார் (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த காலத்தில் இருந்தே சொல்லொண்ணா தொல்லைகளுக்கு ஆளானார்கள்.
    “நபியே! உங்களைச் சிறைப்படுத்தவோ, அல்லது உங்களை கொலை செய்யவோ, அல்லது உங்களை ஊரை விட்டு அப்புறப்படுத்தவோ, நிராகரிப்பவர்கள் சூழ்ச்சி செய்த நேரத்தை நினைத்துப் பாருங்கள். அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிராக அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். ஆனால் சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் அல்லாஹ் மிக மேலானவன்.” (திருக்குர்ஆன் 8:30)

    நபிபெருமானார் (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த காலத்தில் இருந்தே சொல்லொண்ணா தொல்லைகளுக்கு ஆளானார்கள். மக்காவை விட்டு தாயிப் நகருக்கு சென்று அங்கு தன் பிரச்சாரத்தை தொடங்கினார்கள். அங்குள்ள மக்களும் நபிகளாரை துன்புறுத்தினார்கள்.

    எனவே, மக்காவைப் பிரிந்து மதினா சென்றால் தான் இறைச்செய்தியை எடுத்துச்சொல்ல முடியும் என்று நபிகளார் முடிவு செய்தார்கள். இருப்பினும், அல்லாஹ்வின் கட்டளைக்காக காத்திருந்தார்கள்.

    ஒரு நாள் இரவு மக்கா முழுவதும் நீண்ட அமைதி நிலவியது. நபிகளாரைக்கொல்ல எதிரிகள் திட்டம் வகுத்து காத்திருந்தார்கள்.

    அப்போது, இரவின் பிற்பகுதியில் அண்ணலாருக்கு இறைவனின் கட்டளை வருகிறது. “நீங்கள் மக்காவை விட்டு மதினாவிற்கு ‘ஹிஜ்ரத்’ செய்யுங்கள்” (புலம் பெயர்ந்து செல்லுங்கள்) என்று உத்தரவு வருகிறது.

    உடனே எம்பெருமானார் (ஸல்) அவர்கள், அலி (ரலி) அவர்களை அழைத்து, “அருமை அன்பரே! எனக்கு அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டது. நான் இப்போதே மதினாவிற்கு பயணம் புறப்படப்போகிறேன். அதற்கு முன்னால் எனக்கு ஒரு கடமை இருக்கிறது. என்னிடம் மக்கா குரைஷியர்கள் பலர், எதிரிகளாய் இருந்தாலும் அமானிதமாய் பல உயர்ந்த பொருட்களை என்னிடம் கொடுத்திருக்கின்றனர். அத்தனைப் பொருட்களையும் உரியவர்களிடம் சேர்க்கின்ற பொறுப்பை உங்களுக்கு வழங்குகிறேன்.”

    “இன்ஷா அல்லாஹ், உடமைகளை உரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு, என்னை மதினாவில் இரண்டொரு நாளில் வந்து சந்தியுங்கள்” என்று பணித்தார்கள்.

    அன்று இரவு அண்ணல் எம்பெருமானார் (ஸல்) வீட்டை விட்டு புறப்படுவதற்கு முன்பே மக்கத்து குரைஷிகள், ஏற்கனவே சதித்திட்டம் தீட்டியபடி, அண்ணலாரின் வீட்டைச் சூழ்ந்து கொண்டார்கள். வாள், வில் ஆயுதங்களுடன் எதிரிகள் நிற்பதைக்கண்டு அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் சிறிதும் அஞ்சவில்லை.

    ‘நீங்கள் மதினாவிற்குப் புறப்படுங்கள்’ என்று அல்லாஹ் ‘வஹி’ (இறைச்செய்தி) அனுப்பியிருக்கிறான். அல்லாஹ் சொல்வது சத்தியம். அது நிறைவேறித்தான் ஆக வேண்டும். எத்தனை இடையூறுகள் ஏற்பட்டாலும் நாம் மதினா செல்வது உறுதி. அந்த பொறுப்பை அல்லாஹ் ஏற்றிருக்கும் போது எதற்கு அனாவசிய கவலை என்று எண்ணியபடி தைரியமாக வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். எதிரிகளும் அவர்களைப் பார்த்தார்கள்.

    அப்போது, அண்ணலார் தன் கரங்களால் ஒரு பிடி மண்ணை எடுத்து எதிரிகளின் முன்னிலையில் வீசினார்கள். சூரா யாஸீனில் உள்ள இந்த வசனத்தை ஓதியவர்களாக முன்னேறினார்கள்.

    “அவர்களுக்கு முன்புறம் ஒரு சுவரும் பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி நாம் அவர்களை மூடி விட்டோம். ஆதலால் அவர்களால் எதையும் பார்க்க முடியாது” (திருக்குர்ஆன் 36:9)

    இந்த வசனத்தை கேட்ட உடனே, எதிரிகள் அனைவரும் அப்படியே உணர்ச்சியற்றவர்களாக ஸ்தம்பித்து நின்றனர். அல்லாஹ் திருமறையில் சொன்னது போல் அவர்கள் கண் திறந்திருந்தும் பார்க்க முடியவில்லை. கைகளில் வாள் இருந்தும் அவை அசையவில்லை.

    மிக மெதுவாக நிதானமாக அவர்களை கடந்து சென்றார்கள் நபிபெருமானார். நேரே அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் வீடு நோக்கி சென்றார்கள். என்ன ஆச்சரியம், வீட்டில் அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கதவை தட்டுவதற்காக கை வைத்த உடன் அது தானாக திறந்து கொண்டது. அங்கே அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் ஆவலாய் யாரையோ எதிர்பார்த்த வண்ணம் தயாராக இருப்பதை நபிகளார் கண்டார்கள்.

    “அருமை நண்பரே! இந்த இரவு வேளையில் யாரை எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள்” என்று நபிகளார் வினவினார்கள்.

    “யா ரஸூலுல்லாஹ்! நீங்கள் சில தினங்களுக்கு முன், அபூபக்கரே இங்கே மக்காவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது. ஏற்கனவே ஈமான் கொண்டவர்கள் புலம் பெயர்ந்து மதினா சென்று விட்டார்கள். இங்கே பலரும் நம்மை ஏற்றுக்கொள்ள முன் வரவில்லை. நாம் வெகு சிலரே மக்காவில் உள்ளோம். இதனை விட்டு அகன்று மதீனாவில் நம் இறைச்சேவையை, ஏகத்துவத்தை எடுத்தியம்பினால் மக்களிடம் கொஞ்சம் மாற்றம் ஏற்படும் போல் தெரிகிறது. எனவே நீங்கள் தயாராக இருங்கள். அல்லாஹ்வின் கட்டளைக்காக நான் காத்திருக்கிறேன். கட்டளை கிடைத்ததும் உங்களை நாடி வருவேன். நாம் இருவரும் ‘ஹிஜ்ரத்’ செய்து மதினா செல்ல வேண்டும் என்று சொன்னீர்கள்” .

    “அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் உங்கள் அழைப்பிற்காக இரவு பகலாக காத்திருக்கிறேன். நீங்கள் உத்தரவிட்டால் தாமதிக்காமல் உடனே புறப்பட வேண்டும். அதற்காகத் தான் தயாராய் காத்திருக்கின்றேன்” என்றார் அபூபக்கர் சித்திக் (ரலி).

    பின்னர் இருவரும் அங்கிருந்து உடனே மதினா நோக்கி புறப்பட்டார்கள்.

    அதேநேரத்தில், அண்ணலார் வீட்டை சுற்றி நிலைகுலைந்து நின்றிருந்த எதிரிகள் சிறிது நேரம் கழித்து சுயநினைவிற்கு வந்தார்கள்.

    ‘என்னவாயிற்று நமக்கு, நபிகள் நம் முன் வந்தது போல் தெரிந்ததே? எங்கே அவர் போய் விட்டார்?’ என்று நினைத்தபடி வீட்டினுள் நுழைந்தனர்.

    இதற்கிடையே அண்ணலாரின் கட்டளையை நிறைவேற்ற எண்ணிய அலி (ரலி) அவர்கள் எதிரிகளின் முற்றுகையைப் பொருட்படுத்தாமல் வீட்டினுள் சென்று அண்ணலார் வழக்கமாய் படுத்துறங்கும் இடத்தில் நன்றாக முகத்தை மூடி போர்வையை போர்த்தியவராக உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.

    அலி (ரலி) அவர்கள் படுத்திருந்த நிலையைக் கொண்டு அவர்கள் தான் நபியாக இருக்கும் என்று எண்ணிய எதிரிகள் அவர்களைச் சுற்றி சூழ்ந்து, கொல்வதற்காக வாட்களை ஓங்கினார்கள்.

    அப்போது, கூட்டத்தில் ஒருவர் சொன்னார், “முகத்தை மூடிய நிலையில் ஒருவரை கொல்வது அரேபியர் வீரத்திற்கு அழகல்லவே. போர்வையை விலக்கி முகத்தைப் பார்த்து அவரை கொல்வதே நமது வீரத்திற்கு சான்று பகரும் சாட்சி. எனவே போர்வையை விலக்குங்கள்” என்றார்.

    போர்வையை விலக்கியவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே அலி (ரலி) அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள். எதிரிகள் ஆச்சரியம் மேலிட்டவர்களாக அவரைத் தட்டி எழுப்பி, “அலியே! நாங்கள் முகம்மதை கொல்வதற்காக பல நாட்கள் காத்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இருந்தும் என்ன தைரியத்தில் முகம்மது வீட்டில், அதுவும் அவரது படுக்கையில் எந்த வித அச்சமின்றி தூங்கிக்கொண்டிருக்கிறாய்?. போர்வையை விலக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் உன் உயிர் போயிருக்குமே?” என்று வினவினார்கள்.

    அப்போது, அலி (ரலி) அவர்கள் மிக அலட்சியமாக, “அது எப்படி என் உயிர் போகும்? அண்ணல் நபிகளார் என்னிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்து, அதை நிறைவேற்றி விட்டு இரண்டொரு நாளில் என்னை வந்து சந்தி என்றல்லவா சொல்லிவிட்டு சென்றார்கள். எனவே எனக்கு நம்பிக்கை உண்டு. இரண்டு நாட்களில் நபிகளாரை நான் நிச்சயம் சந்திப்பேன் என்று சொன்னது நபிபெருமான். அவர் சொல்வது அனைத்தும் சத்தியம், உண்மை. அண்ணலின் வாக்கு என்றைக்குமே பொய்த்ததில்லையே? அதனால் தான் எந்தவித அச்சமின்றி தூங்கிக் கொண்டிருந்தேன்” என்றார்கள்.

    வாயடைத்து நின்றனர் எதிரிகள்.

    அண்ணல் நபிகளாரில் வாக்கில் எந்த அளவுக்கு அவரது தோழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்பதற்கு இந்த நிகழ்வுகள் சாட்சியாகும்.

    அபூபக்கர் சித்திக் (ரலி) என்னவென்றால், ‘நாயகம் சொல்லிவிட்டார்கள். எந்த நிமிடமும் அவர்கள் வரலாம்’ என்ற எதிர்பார்ப்போடு இரவு பகலாக தன் வீட்டில் காத்திருந்தார்கள்.

    அலி (ரலி) அவர்கள், ‘நபிகள் சொல்லி விட்டார்கள். நாளை அவர்களை உயிருடன் சந்திப்போம்’ என்ற நம்பிக்கையில் அச்சமின்றி இருந்தார்கள்.

    நபிகள் சொல்லில் எந்த மாற்றமும் நிகழாது என்பதில் அவர்கள் இருவருக்கும் அத்தனை உறுதி. நம்மில் எத்தனை பேர் நபிகளார் மீது அத்தகைய நம்பிக்கையை வைத்துள்ளோம், சிந்திப்போமாக. 
    நோன்பு வைத்திருக்கும் நிலையில், இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள குணங்களையும் நாம் கொண்டால் இறைவனின் பொருத்தத்தையும் நாம் பெற்று விடுவோம்.
    நோன்பு காலத்தில் பயணிப்பதற்கு இன்னும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ள அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக. சென்ற நோன்பிலிருந்து இந்த ஆண்டு நோன்பு வரை ஒரு வருட காலத்தை நம் ஆயுளில் நீட்டித்து தந்துள்ள அந்த இறைவனுக்கு நாம் மிகுந்த நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

    நன்றி செலுத்தும் அதே வேளையில் சென்ற வருட நோன்புக்காலத்தில் நம்முடைய செயல்பாடுகள் எவ்வாறு இருந்தது, அதன் பிறகு இது வரையிலான இடைப்பட்ட காலத்தில் இறைவனுக்குத் திருப்தி அளிக்கும் விதத்தில் நம்முடைய செயல்பாடுகளில் நம்மை நாம் மாற்றிக் கொண்டோமா? மற்ற மனிதர்களிடம் நாம் நல்ல விதமாக நடந்து கொண்டோமா? என்று நம்மை நாமே சீர் தூக்கிப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

    நம் பதில் ‘ஆம்’ என்பதாக இருந்தால் அதிகமான நன்மைகளை இறைவனிடத்தில் சம்பாதித்துக் கொள்வதற்கு, இன்னும் முனைப்புடன் நோன்பினை நிறைவேற்ற நாம் தயாராக வேண்டும். ஏனெனில் அல்லாஹ், நம்முடைய ஒவ்வொரு நற்செயலுக்கும் ரமலான் மாதத்தில் எழுபது மடங்கு கூலியை வெகுமதியாகத் தருகிறான்.

    நம் பதில் ‘இல்லை’ என்பதாக இருந்தாலும், கவலை வேண்டாம். இப்பொழுது நமக்குக் கொடுக்கப்பட்ட இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி நம்முடைய நற்செயல்களால் அதிக நன்மைகளை அறுவடை செய்வதற்கு ஆர்வம் கொள்ள வேண்டும்.

    ‘ஏன் நோன்பு நோற்கிறீர்கள்?’ என்ற கேள்வி பொதுவாக கேட்கப்பட்டால், ‘ஏழைகளின் பசியை நாமும் அறிவதற்கு, இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்று என்பதால், வருடத்தில் ஒரு மாதம் நோன்பு வைப்பதால் நம்முடைய உடல் இயக்கங்கள் சீராகலாம்...’ என்பதாக பல பதில்கள் கிடைக்கலாம்.

    இஸ்லாத்தின் ஐந்து கடமைகளுமே இறைவனையும், இறை வனுக்கு விருப்பமான செயல்களையும் மையப்படுத்துவதாக அமைந்துள்ளன. நோன்பினைப் பற்றி இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

    ‘நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம்’. (2-183)

    ‘நோன்பு நோற்பதால் நீங்கள் இறையச்சம் உடையவர் ஆவீர்கள்’ என்பதற்கும், ‘நோன்பு நோற்பதால் இறை அச்சம் உடையவர்கள் ஆகலாம்’ என்பதற்கும் வேறுபாடுகள் உண்டு.

    கிட்டத்தட்ட 14 மணி நேரம் உண்ணாமல், பருகாமல் இருப்பதென்பது ஒரு ஆரோக்கியமான மனிதருக்கு சாத்தியமானதே. சாப்பிடாமல், குடிக்காமல் இருப்பது நோன்பன்று. இறைவன் வெறுக்கும் அத்தனை காரியங்களிலிருந்தும் தன்னை விலக்கிக் கொள்வதாலேயே ஒரு மனிதர் நோன்பு நோற்றவர் போல் ஆவார்.

    ஒருவர் பொய், புறம், பொறாமை, கோபம், இன்னும் ஒழுக்கக் கேடான விஷயங்களில் இருந்து தம்மைத் தடுத்துக் கொண்டு, ‘நான் நோன்பாளியாக இருக்கிறேன், என் இறைவனுக்கு நான் அஞ்சு கிறேன், தவறான காரியங்களில் ஈடுபடுவதில் இருந்தும் என்னை நான் முழுமையாகக் கட்டுப்படுத்திக் கொண்டேன்’ என்று தன்னைப் படைத்த இறைவனிடம் ரகசியப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார் என்றால் அவரே உண்மையான நோன்பாளி.

    இப்படிப்பட்ட மன வலிமையை யார் நோன்பின் மூலம் பெறவில்லையோ அவர்கள் இறை அச்சம் உடையவர்கள் ஆகவில்லை என்றுதான் கொள்ள வேண்டும். இதுவே இறை அச்சம் உடையவர்களாக ஆகலாம் என்பதின் விளக்கமாக நாம் எடுத்துக் கொள்ளலாம். நம்மைப் படைத்த இறைவனே அனைத்தையும் அறிந்தவனாக இருக் கிறான்.

    ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தை அடைந்து கொள்பவர்கள் பெரும்பேறு பெற்றவர்கள் என்று சொல்லலாம். ஏனெனில் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் நோன்பாளிகளுக்காக தயார்படுத்தி வைத்திருப்பதாக இறைவன் அறிவிக்கிறான்.

    ‘நிச்சயமாக முஸ்லிமாகிய ஆண்களும், பெண்களும், நம்பிக்கையாளரான ஆண்களும், பெண்களும், (இறைவனுக்கு) வழிபடும் ஆண்களும், பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும், பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும், பெண்களும், தானம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், கற்புள்ள ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயரை அதிகமாக நினைவு கூரும் ஆண்களும், பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயார்படுத்தி வைத்திருக்கிறான்’. (33:35)

    நோன்பு வைத்திருக்கும் நிலையில், இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள குணங்களையும் நாம் கொண்டால் இறைவனின் பொருத்தத்தையும் நாம் பெற்று விடுவோம்.

    எனவே பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அல்லாஹ்விடம் இருந்து கூலியையும் பெற்றுக்கொள்வதும், கொள்ளாததும் நம் கையில் தான் உள்ளது. சுவனபதி கிடைக்கும் என்று நற்செய்தி பெற்றவர்களில் நோன்பாளிகளும் இருக்கிறார்கள்.

    அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

    ‘பாவத்திலிருந்து விலகிக்கொண்டவர்களும்; (இறைவன் ஒரு வனையே) வணங்குபவர்களும்; (இரவு பகலாக அவனைத்) துதி செய்து புகழ்பவர்களும்: (நோன்பு நோற்பவர்களும், மார்க்கக் கல்வியை கற்றல், மார்க்கப் பிரச்சாரம் செய்தல் போன்ற மார்க்க விஷயத்திற்காக) பயணம் செய்பவர்களும், குனிந்து சிரம் பணிந்து (தொழுபவர்களும்) நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவுபவர்களும், பாவமான காரியங்களை விலக்குபவர்களும், அல்லாஹ்வுடைய வரம்புகளைப் பேணி நடப்பவர்களும் ஆகிய இத்தகைய (உண்மை) நம்பிக்கையாளர்களுக்கு (சுவனபதி கிடைக்கும் என்று நபியே) நீங்கள் நற்செய்தி கூறுங்கள்’. (9:112)

    நம்மில் பெரும்பாலானோர் நோன்பின் பொருட்டாவது, இறைவன் விரும்பியவாறு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதோடு தவறுகள் ஏதும் செய்துவிடக் கூடாது என்பதில் மிகவும் அக்கறை எடுத்துக் கொள்கிறோம்.

    ஆனால், ரமலான் முடிந்து மறுநாள் காலையிலேயே நோன்போடு எல்லா அமல்களும் முடிந்து விட்டது போலவும், ஒரு மாத காலம் வரை யாரோ நம்மை கட்டிப் போட்டது போலவும், தளைகளில் இருந்து விடுதலை பெற்றது போன்ற உணர்வு வருவதையும் தடுக்க முடிவதில்லை.

    ரமலானில் நம்முடைய செயல்பாடுகள் எப்படி இருந்ததோ, அப்படியே மீதமுள்ள 11 மாதங்களிலும் இருப்பதற்கு நாம் முயற்சி செய்தால் மற்ற சமுதாய மக்களுக்கும் நாம் ஒரு முன்னுதாரணமாக இருப்போம், நம்முடைய வாழ்வும் செழிப்பாகும்.

    ம.அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை.
    துன்பத்திற்குப் பின் நன்மை வந்தே தீரும், எந்த நிலையிலும் அல்லாஹ் ஒருவனிடமே நம்பிக்கையை உறுதியாய் கொள்ள வேண்டும், என்ற அறிவுரையும் சொல்லப்பட்டுள்ளது.
    எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர் ஆனில் யூசுப் நபிகளின் சரித்திரத்தைச் சொல்லும் போது, “(நபியே!) வஹீ மூலம் நாம் உங்களுக்கு அறிவிக்கும் இந்தக் குர்ஆனின் மூலம் சரித்திரங்களில் மிக்க அழகானதொன்றை உங்களுக்கு நாம் விவரிக்கின்றோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீங்கள் இதனை அறியாதவராகவே இருந்தீர்கள்” (திருக்குர் ஆன் 12:3) என்ற அடைமொழியோடு யூசுப் நபிகளின் சரித்திரத்தை சொல்கிறான்.

    திருக்குர்ஆனில் யூசுப் நபிகளின் மொத்த சரித்திரமும் ‘சூரத்து யூசுப்’ என்ற ஒரே அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது. திருக்குர்ஆனில் மற்ற நபிகளின் சரித்திரம் சொல்லப்பட்டு இருந்தாலும், அது அங்கொன்றும் இங்கொன்றுமாகவே சொல்லப்பட்டுள்ளது. ஒரே அத்தியாயத்தில் சொல்லப்படவில்லை.

    யாகூப் நபிகள் ‘மிஸ்ர்’ (எகிப்து) நாட்டில் வாழ்ந்து, அங்குள்ள மக்களுக்கு ஏக இறைக்கொள்கையைப் போதித்து வந்தார்கள். அவர்களுக்கு முதல் மனைவியின் மூலம் பத்து ஆண் குழந்தைகளும், இரண்டாவது மனைவியின் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தன. இரண்டாம் மனைவிக்குப் பிறந்தவர்கள் யூசுப் நபி மற்றும் புன்யாமீன்.

    யாகூப் நபிகள், யூசுப் நபி மற்றும் புன்யாமீன் ஆகிய இருவர் மீதும் அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் யூசுப் நபிகள் பேரழகனாக திகழ்ந்தார்.

    ஒரு நாள் யூசுப் நபி தன் தந்தையிடம் வந்து, “தந்தையே! பதினொரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும், எனக்கு சிரம் பணிய மெய்யாகவே கனவு கண்டேன்” (திருக்குர்ஆன் 12:4) என்று கூறினார்கள்.

    இந்த கனவின் பொருளை தன் ஞானத்தால் அறிந்து கொண்ட யாகூப் நபிகள் தன் மகனிடம், “என் அருமை குழந்தையே! நீ கண்ட கனவை உன் சகோதரர்களிடம் கூறாதே. அவ்வாறு கூறினால் அவர்கள் உனக்கு யாதேனும் தீங்கிழைக்கச் சதி செய்வார்கள். ஏனெனில் நிச்சயமாக சைத்தான் மனிதனுக்கு பயங்கரமான எதிரி ஆவான். சதி செய்யுமாறு அவர்களை அவன் தூண்ட கூடும்” என்று கூறினார். (திருக்குர்ஆன் 12:5)

    “மேலும், இ(க்கனவில் நீ கண்ட)து போன்றே நடைபெறும். உன் அதிபதி உன்னைத் (தனது பணிக்காக) தேர்ந்தெடுப்பான். மேலும், விஷயங்களின் உட்கருத்துகளைப் புரிந்துகொள்ளும் முறையை உனக்குக் கற்றுத்தருவான். இதற்கு முன்னர் உன் மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகியோர் மீது தன் அருட்பேற்றினை அவன் நிறைவு செய்தது போன்று உன் மீதும், யாகூப் நபியின் குடும்பத்தினர் மீதும் நிறைவு செய்வான். திண்ணமாக, உன் இறைவன் நன்கறிந்தவனும், நுண்ணறிவாளனும் ஆவான்” (திருக்குர்ஆன் 12:6) என்று அறிவுரை வழங்கினார்.

    நாட்கள் செல்லச்செல்ல யூசுப் நபி மீது தங்கள் தந்தை அதிக பாசத்துடன் இருப்பதையும், தங்கள் மீது பாராமுகமாக இருப்பதையும் மற்ற சகோதரர்கள் உணர்ந்தனர். இதனால் அவர்கள் யூசுப் நபி மீது பொறாமை கொண்டனர். எனவே அவரை கொலை செய்ய அவர்கள் திட்டம் தீட்டினார்கள். இதன்படி யூசுப் நபியை தங்களுடன் காட்டுப் பகுதிக்கு விளையாட அழைத்துச்செல்ல தந்தையிடம் அனுமதி கேட்டனர்.

    இந்த சதிதிட்டத்தை அறியாத யாகூப் நபியவர்கள் அவர்களின் சொல்லுக்கு செவி சாய்த்தார்கள். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட சகோதரர்கள் யூசுப் நபிகளை காட்டில் உள்ள பாழடைந்த கிணற்றில் தள்ளி விட்டனர்.

    பின்னர் தன் தந்தையிடம் ‘காட்டில் ஓநாய் ஒன்று யூசுப் நபியவர்களை அடித்து கொன்று விட்டது’ என்று நாடகமாடினார்கள்.

    யாகூப் நபியவர்கள், ‘எனது அருமை மகனை இழந்து விட்டேன். இது அல்லாஹ்வின் நாட்டமாக இருக்கும் பட்சத்தில் அவன் மீது நம்பிக்கை கொண்டு பொறுமையைக் கடைப்பிடிக்கிறேன். இதுவும் நிச்சயமாக நன்மைக்காகவே நிகழ்ந்திருக்கிறது’ என்றார்கள்.

    ‘பெரும் இழப்பிலும் பொறுமையைக் கடைப்பிடித்து, அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையை உறுதியோடு அதிகப்படுத்த வேண்டும்’ என்பது நமக்கு ஓர் பாடமாகும்.

    காட்டு வழியே வந்த வியாபார கூட்டம் ஒன்று கிணற்றில் அழகிய சிறுவன் ஒருவன் இருப்பதைக் கண்டு, அவனை கிணற்றில் இருந்து மீட்டு, அவனையும் வியாபார பொருளாக்கி எகிப்து நாட்டின் சந்தையில் அடிமையாய் விற்று விட்டார்கள்.

    எகிப்து நாட்டின் அரசர் அஜீஸ், யூசுப் நபியை ஏலத்தில் எடுத்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின் தன் மனைவியை நோக்கி, “நீ இவரை கண்ணியமாக வைத்துக் கொள். அவரால் நாம் நன்மையடையலாம் அல்லது அவரை நாம் நம் வளர்ப்பு மகனாக்கிக் கொள்ளலாம்” என்றார் (திருக்குர்ஆன் 12:21).

    ‘இவ்வாறு யூசுப் நபிகள் தான் கண்ட கனவை நிஜப்படுத்தும் பொருட்டு இந்த சூழ்நிலையை ஏற்படுத்தி தந்தோம்’ என்று திருமறையிலே தொடர்ந்து வரும் வசனங்களில் இறைவன் தெளிவுபடுத்துகிறான். தந்தையைப் பிரிந்து வந்த துக்கத்தை மறக்கடிக்க அரச குடும்ப பின்னணியில் வாழக் கூடிய மாபெரும் கிருபையை அல்லாஹ் யூசுப் நபிகளுக்கு வழங்கினான்.

    ‘எந்த ஒரு தீமைக்குப் பின்னாலும் நாம் அறியாத ஒரு நன்மையை இறைவன் வழங்குவான்’ என்கின்ற பாடத்தினை இங்கே சுட்டிக்காட்டுகிறது அருள்மறை.

    காலங்கள் கடந்தன. யூசுப் நபிகளின் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு நிகழ்விலும் நமக்கு ஒரு படிப்பினையை சொல்லித் தருகிறது திருகுர்ஆன்.

    ஒருமுறை எகிப்தின் அரசன் ஒரு கனவு காண்கின்றான். பின்னர் அரசவையைக் கூட்டி தன் கனவுக்கான விளக்கத்தை கேட்டான்.

    “நான் ஒரு கனவு கண்டேன். ஏழு கொழுத்த பசுக்களை ஏழு மெலிந்த பசுக்கள் தின்று கொண்டிருக்கின்றன; மேலும் பசுமையான ஏழு தானியக்கதிர்களையும், ஏழு காய்ந்த கதிர்களையும் நான் கண்டேன். எனவே, அவையோரே! கனவிற்கான விளக்கத்தை நீங்கள் தெரிந்தவர்களாயிருந்தால் எனது கனவுக்குரிய விளக்கத்தைக் கூறுங்கள்!” என்று கூறினார். (திருக்குர்ஆன் 12:43)

    அதற்கு அவர்கள், “இது அஜீரணத்தாலும், சிதறிய சிந்தனையாலும் ஏற்பட்ட வீணான கனவு தான். இத்தகைய வீண் கனவுகளுக்கு விளக்கங்களை நாங்கள் அறிந்தவர்கள் அல்ல” என்று கூறினர். (திருக்குர்ஆன் 12:44)

    அதன்பின் கனவுக்கு விளக்கம் சரியாய் அளிக்கக் கூடிய யூசுப் நபிகளை அணுகி அதன் விளக்கம் கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் கூறியதாவது: ‘தொடர்ந்து வழக்கம் போல் நல்லவிதமாக ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வீர்கள். அதில் நீங்கள் அறுவடை செய்யும் விளைச்சலில் நீங்கள் புசிப்பதற்கு வேண்டிய ஒரு சொற்ப அளவைத் தவிர மற்ற அனைத்தையும் அதன் கதிரிலேயே விட்டு வையுங்கள்.”

    “அதற்குப் பின்னர் கடினமான பஞ்சத்தையுடைய ஏழு ஆண்டுகள் வரும். நீங்கள் கதிர்களில் பத்திரப்படுத்தி வைத்திருந்தவற்றில் விதைப்பதற்கு வேண்டிய சொற்ப அளவைத் தவிர நீங்கள் சேமித்திருந்த அத்தனையையும் அப்பஞ்சம் தின்று விடும்.” (திருக்குர்ஆன் 12:47,48)

    யூசுப் நபி சொன்னது போல் நடக்கவே மனம் மகிழ்ந்த அரசர் அவரை சிறப்புக்குரிய மந்திரியாக நியமித்து பெருமைப்படுத்தினான்.

    யாகூப் நபிகளின் குடும்பமும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு மிஸ்ர் தேசம் வந்து உதவிப்பொருட்களை பெற்றனர். அப்போது, கருவூலத்தின் அதிபதி தன் சகோதரர் யூசுப் நபி என்பதை அறிந்த அவரது மூத்த சகோதரர்கள் தங்கள் செயலுக்கு பாவ மன்னிப்பு கோரினார்கள்.

    இப்படி யூசுப் நபிகளின் சரித்திரம் மூலம் எண்ணற்ற படிப்பினைகளை அறிவுரைகளாக நமக்கு அளிக்கின்றான் அல்லாஹ். பொறாமை கொள்ளக்கூடாது, ஏழ்மையிலும் நன்மை செய்ய வேண்டும், துன்பத்திலும் பொறுமையை கையாள வேண்டும், நம்பிக்கைத் துரோகம் செய்யக் கூடாது என்பது போன்ற படிப்பினைகள் இதில் சொல்லப்பட்டுள்ளது.

    மேலும், துன்பத்திற்குப் பின் நன்மை வந்தே தீரும், எந்த நிலையிலும் அல்லாஹ் ஒருவனிடமே நம்பிக்கையை உறுதியாய் கொள்ள வேண்டும், என்ற அறிவுரையும் சொல்லப்பட்டுள்ளது. இந்த அறிவுரைகளை கடைப்பிடிக்கும் போது நிச்சயம் நாம் நமது வாழ்வில் வெற்றி பெறுவோம். 
    அனேகமானவர்கள் வீடுகளை அன்பால் கட்டாமல் செங்கலால் மட்டுமே கட்டுகின்றார்கள். ஆகவேதான் இல்லறம் என்ற கட்டிடத்தில் அடிக்கடி விரிசல் ஏற்படுகிறது.
    இல்லறம் வெற்றிகரமாக அமைவதும், ஏனோதானோ என்று அமைவதும் தம்பதியர் கைகளில்தான் இருக்கிறது. என்றாலும், தம்பதியர் தம்மிடையே பேசும் உரையாடலிலும் அது அமைந்துள்ளது.

    அனேக தம்பதியர் தங்களிடையே மனம்விட்டுப் பேசிக்கொள்வதே இல்லை. மனம்விட்டுப் பேசுவது இல்லை என்பதைவிட, பலகாலமாக பரஸ்பரம் பேசுவதே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. இதுவே மன விரிசலுக்கும், பின்னர் மண விரிசலுக்கும் காரணமாக அமைகிறது.

    கி.மு., கி.பி. என்பதைப் போன்று அனேகமானவர்களின் வாழ்வு தி.மு. (திருமணத்திற்கு முன்), தி.பி. (திருமணத்திற்குப் பின்) என்று மாறிப்போனதற்கு உரையாடலை நிறுத்தியமையும் ஒரு காரணம் என்று கூறலாம்.

    வெளி உலகில் சுற்றித் திரிந்துவிட்டு வீட்டுக்கு வரும் ஆண்களுக்கு வேண்டு மானால், மனைவியுடன் உரையாடுவது தேவையற்ற செயலாகவோ, எரிச்சலை ஏற்படுத்தும் செயலாகவோ தோன்றலாம். ஆனால் வீடே கதி என்று கிடக்கும் மனைவியருக்கு அந்த உரையாடல்தான் உயிரோட்டமாக இருக்கும்.

    திருமணத்திற்கு முன்னரும், திருமணம் நடைபெற்ற புதிதிலும் சிலர் பேச்சோ பேச்சென்று பேசுகின்றார்கள். ஆனால், தொடர்ந்து வரும் நாட்களில் பேசுவதையே தொந்தரவாகக் கருதுகின்றனர்.

    ஏன் இப்படி..? பேசவேண்டியதை எல்லாம் பேசியாகிவிட்டது, இனி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என்பதாலா..? அல்லது இனிமேல் பேசி என்ன ஆகப்போகிறது என்ற விரக்தி நிலையா..? தெரியவில்லை.

    ‘மனம்விட்டுப் பேசினால் ரணம்விட்டுப் போகும்’ என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்.

    வக்கீல் ஒருவரின் அலுவலகத்தில் தமது கணவரை விவாகரத்துச் செய்ய வேண்டும் என்று ஒரு பெண் வந்தார். அதற்கு அவர் கூறிய காரணம்: “காதலிக்கும்போது மணிக்கணக்கா பேசுவார். இப்போ பேசுறதே இல்ல!”.

    ஒருவரியில் சொல்வதென்றால், ‘உரையாடலை நிறுத்தும் இடத்தில்தான் கலகங்கள் தொடங்குகின்றன’. காதல் தொலைந்துவிடுகின்றது. பெண்களை எப்படிக் கையாள்வது என்றுதான் ஆண்களுக்குப்பாடம் எடுக்கப்படுகிறதே தவிர, அவர்களுடன் எவ்வாறு வாழ்வது எனச் சொல்லிக் கொடுப்பதில்லை. விரிசலுக்கு இதுவும் ஒரு காரணம்.

    ‘மனைவியிடம் மனம் விட்டுப் பேசுங்கள்’. நபிகளாரின் வழிமுறையும் இதுதான். ஒன்பது மனைவியர் ஒருசேர இருந்த பின்னரும் நபிகளாரின் மணவாழ்வு வெற்றிகரமாக அமைந்தமைக்குக் காரணம் மனைவியரிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் மனம்விட்டுப் பேசியதும்தான்.

    வீட்டிலும் நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியருடன் திருக்குர்ஆன், நபிமொழி, இம்மை, மறுமை, சொர்க்கம், நரகம் என்று பக்திப்பழமாகவே பேசியிருப்பார்கள் என்று எவராவது நினைத்தால் அது பிழை.

    அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் பெருமானார் (ஸல்) அவர்களும் என்னவெல்லாம் பேசியிருக்கின்றார்கள் என்பது குறித்த விளக்கம், தலைசிறந்த நபிமொழித் தொகுப்பான புகாரியில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    எந்த அளவுக்கு இருவரும் பேசியிருக்கின்றார்கள் என்றால், முற்காலத்தில் வாழ்ந்த காதல் ஜோடிகளைக் குறித்து பெருமானார் (ஸல்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களும் நெடுநேரம் பேசியிருக்கின்றார்கள். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல.. பதினோரு காதல் ஜோடிகளைக் குறித்து பேசிய உரையாடல் முழுவதும் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அவ்வாறு பேசிக்கொண்டே வந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் இறுதியாக அபூ ஸர்வு-உம்மு ஸர்வு என்ற தம்பதியைக் குறித்துக் கூறினார்கள். அப்போது கவலையுடன் இவ்வாறு கூறினார்கள்: “ஆயினும் அல்லாஹ்வின் தூதரே! அபூஸர்வு, உம்மு ஸர்வுவை மணவிலக்குச் செய்துவிட்டார்”.

    இதனைக் கூறும்போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கவலை கொள்வதை கவனித்த நபிகள் (ஸல்) அவர்கள், “ஆயிஷாவே! உம்மு ஸர்வுக்கு, அபூ ஸர்வு எப்படியோ; அப்படியே உனக்கு நானும் அன்பாளனாக இருப்பேன். ஆயினும் அபூஸர்வு மணவிலக்குச் செய்ததைப் போன்று ஒருபோதும் உன்னை நான் மணவிலக்குச் செய்யமாட்டேன்” என்று கூறினார்கள். அப்போது ஆயிஷா (ரலி) கூறினார்கள்: “இறைவனின் தூதரே! அபூஸர்வுவைவிட தாங்கள் எவ்வளவோ சிறந்தவர்”. (புகாரி, முஸ்லிம், நஸாயி)

    அபுத் தர்தா (ரலி) அவர்கள் தமது மனைவியிடம் இவ்வாறு கூறுவார்: “நான் கோபம் கொள்வதைக் கண்டால் நீதான் என்னை சாந்தப்படுத்த வேண்டும். நீ கோபம் கொள்வதைக் கண்டால் நான் உன்னை சாந்தப்படுத்துவேன். இல்லையேல் நாம் இணைந்து வாழ்வது இல்லாமல் ஆகிவிடும்”.

    ஒரு கவிஞர் தம்முடைய மனைவியிடம் இவ்வாறு கூறினார்:

    “கண்ணே! மன்னிக்கும் மனோபாவத்துடன் என்னோடு நடந்துகொள்! நானும் உன்னுடன் அவ்வாறே நடக்கிறேன்.

    உன்னோடு நான் பாடும் அனுராகத்திற்கு நீண்ட ஆயுளை வழங்கு!

    நான் கோபமுற்று இருக்கும்போது என்னோடு பேசாதே!

    கோபத்தின் விளைவு எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது.

    புகார்களை அதிகரிக்காதே! அது அன்பை பலம் குன்றச் செய்துவிடும்.

    மேலும் உனக்கு எதிராக என் மனதை அது தூண்டும்.

    புரண்டு கொண்டிருப்பதுதானே இதயத்தின் வேலை.

    பிரியமும் வெறுப்பும் எப்போதாவது மனதில் ஒருசேர ஒன்று சேர்ந்தால்

    பிரியம் தாமதமின்றி வெளியேறிவிடும் என்று நான் புரிந்து வைத்துள்ளேன்”.

    அனேகமானவர்கள் வீடுகளை அன்பால் கட்டாமல் செங்கலால் மட்டுமே கட்டுகின்றார்கள். ஆகவேதான் இல்லறம் என்ற கட்டிடத்தில் அடிக்கடி விரிசல் ஏற்படுகிறது.

    மணாளியிடம் மனம்விட்டுப் பேசாமல் வேறு யாரிடம்தான் மனம்விட்டுப் பேசப் போகின்றோம். காலம் கடந்துவிட்டாலும் நம்பிக்கை இன்னும் இருக்கத்தான் செய்கிறது. எனவே உடன் வாழ்பவர்களுடன் ஒருபோதும் உரையாடலை நிறுத்தாதீர்கள்!

    மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல். 
    முகம்மது நபிகள் (ஸல்) அவர்களை தனது தூதராக தேர்ந்து எடுத்து அவருக்கு ‘வஹி’ (இறைச்செய்தி) மூலம் இறைக்கட்டளைகளை அறிவித்து வந்தான் அல்லாஹ்.
    முகம்மது நபிகள் (ஸல்) அவர்களை தனது தூதராக தேர்ந்து எடுத்து அவருக்கு ‘வஹி’ (இறைச்செய்தி) மூலம் இறைக்கட்டளைகளை அறிவித்து வந்தான் அல்லாஹ். அப்போது முகம்மது நபிகளுக்கு முன்னர் வாழ்ந்த பல நபிகளின் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை அல்லாஹ் விளக்கினான். அதில் ஒன்று தான் இப்ராகீம் நபி களின் வரலாறு.

    நாட்டு மக்களிடமும், மன்னரிடமும் இறைக்கொள்கைகளை ஆணித்தரமாக எடுத்துக் கூறியதால் நெருப்பில் தூக்கி வீசப்பட்டார் இப்ராகீம் நபிகள். அந்த நிகழ்வு குறித்து இறைச்செய்தி இவ்வாறு கூறுகிறது:

    “நபியே! நீர் ஒருவனை கவனித்தீரா? அவனுக்கு அல்லாஹ் அரசாட்சி கொடுத்ததற்காக அவன் கர்வம் கொண்டு இப்ராகீமிடம் அவருடைய இறைவனைப் பற்றி தர்க்கம் செய்தான். இப்ராகீம், ‘எவன் உயிர்ப்பிக்கவும், மரணிக்கவும் செய்கிறானோ அவன் தான் என் இறைவன்’ என்று கூறியதற்கு; அவன், ‘நானும் உயிர்ப்பிப்பேன், மரணிக்கவும் செய்வேன்’ என்று கூறினான். அதற்கு இப்ராகீம், ‘அவ்வாறாயின் அல்லாஹ் சூரியனை கிழக்குத் திசையில் உதயமாக்குகிறான். நீ அதை மேற்கு திசையில் உதயமாக்கு’ எனக்கூறினார். ஆகவே அல்லாஹ்வை நிராகரித்த அவன் எவ்வித விடையும் அளிக்க முடியாமல் திகைத்து வாயடைப்பட்டான். அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்டுவதில்லை”. (திருக்குர்ஆன் 2:258)

    இந்த திருக்குர்ஆன் வசனத்தின் வரலாற்று பின்னணியை விளக்கமாக அறிந்துகொள்வோம், வாருங்கள்.

    இப்ராகீம் நபிகள் காலத்தில் வாழ்ந்த மக்கள் பல்வேறு சிலைகளை தங்கள் கடவுளாக வணங்கி வந்தார்கள். ஏக இறைக்கொள்கையை வலியுறுத்திய இப்ராகீம் நபிகள், சிலை வணக்கத்தை கண்டித்தார்கள். தனது கூட்டத்தார் வணங்கி வந்த சிலைகளை உடைத்து சேதப்படுத்தினார். ‘தன்னையே காத்துக்கொள்ள சக்தியற்ற இந்த சிலைகளை விடுத்து அகிலமனைத்தையும் படைத்து பரிபாலனம் செய்யக்கூடிய அல்லாஹ்வையே வணங்குங்கள்’ என்று மக்களுக்கு அறிவுரை கூறினார்.

    இதுபற்றி நம்ரூத் மன்னனிடம் மக்கள் புகார் தெரிவித்தனர். நம்ரூத் மன்னனும் இப்ராகீம் நபியை அழைத்து, ‘இந்த குற்றச்சாட்டிற்கு உங்களின் பதில் என்ன?’ என்று வினவினான்.

    அதற்கு இப்ராகீம் நபிகள், ‘நான் எல்லாவற்றையும் படைத்து பரிபாலனம் செய்து கொண்டிருக்கிற அல்லாஹ்வால், அவனுடைய தூதராக அனுப்பப்பட்டவன். அவன் படைத்த இந்த மக்கள், அவனைத் தவிர வேறு இறைவனை வணங்குவதை அல்லாஹ் தடை செய்திருக்கிறான். இந்த இறைச்செய்தியை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று எனக்கு கட்டளையிட்டுள்ளான். நான் அந்த ஏகத்துவ பிரச்சாரத்தை மக்களிடம் எடுத்துச்சொன்னேன். சிலை வணக்கங்கள் கூடாது என்பதற்காக அவற்றை சேதம் செய்தேன். அந்த செய்கையின் மூலம் எனக்கு அந்த சிலைகளால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே தன்னையே காத்துக்கொள்ள சக்தியற்ற அவற்றை வணங்க வேண்டாம் என்று மக்களை நேர்வழிப்படுத்தினேன்’, என்று விளக்கம் அளித்தார்கள்.

    ‘அப்படியானால் நீ சொல்லும் அல்லாஹ்வின் விசேஷ ஆற்றல் தான் என்ன?’ என்று மன்னன் நம்ரூத் வினவினான்.

    ‘எல்லாவற்றையும் படைத்த அல்லாஹ் ஒருவன் தான் அனைத்து உயிர்களையும் உயிர்ப்பிக்கின்றான், மரணிக்கவும் செய்கின்றான். அந்த சக்தி வேறு யாருக்கும் இல்லை’ என்றார் இப்ராகீம் நபிகள்.

    ‘இதுதான் உங்கள் இறைவனின் தன்மை என்றால் அதை என்னாலும் தான் செய்ய முடியுமே’ என்று சொன்ன நம்ரூத் மன்னன் உடனே காவலாளிகளை அழைத்து சிறையில் தண்டனை கைதிகளாக இருப்பவர்களில் இருவரை அழைத்து வருமாறு கட்டளையிட்டான்.

    கைதிகள் அவன் முன் கொண்டு வரப்பட்டதும், மரண தண்டனை பெற்றிருந்த கைதியை மன்னித்து விடுதலை செய்தான். இன்னொரு கைதியின் தலையை கொய்து எறியச் செய்தான்.

    பின் இப்ராகீம் நபிகளை நோக்கி, ‘சாவின் விளிம்பில் நின்ற ஒருவனை மன்னித்து உயிர்ப்பிச்சை கொடுத்து அவனை உயிர்ப்பித்தேன். இன்னொருவனை கொன்று மரணத்தைத் தழுவச்செய்தேன். இப்போது சொல்லுங்கள், நானும் உங்கள் கடவுளும் ஒன்றல்லவா?’ என்று எக்காளமிட்டான்.

    இப்ராகீம் நபிகள் அமைதியாக இவ்வாறு பதில் கூறினார்கள்:

    ‘என்னுடைய இறைவன் இந்த ஒளிரும் சூரியனைப் படைத்து, கிழக்கில் உதித்து மேற்கில் நீ மறைய வேண்டும் என்று அதற்கு கட்டளையிட்டு இருக்கிறான். அந்த சூரியனை நீ மேற்கில் உதிக்கச் செய்ய முடியுமா?’

    இதற்கு விடைசொல்ல முடியாமல் நம்ரூத் மன்னன் வெட்கித் தலைகுனிந்தான். இருந்தாலும் தன்னை ஒரு சாதாரண மனிதன் தலைகுனியச் செய்து விட்டானே என்ற ஆத்திரத்தில், ‘இப்ராகீம் நபிகளை நெருப்புக்குண்டத்தில் வீசி எறியுங்கள்’ என்று கட்டளையிட்டான்.

    உடனே மிகப்பெரிய நெருப்புக்குண்டம் தயார் செய்யப்பட்டது. நெருப்பின் உக்கிரம் அதிகமாக இருந்ததால் நீண்ட தூரத்தில் இருந்து இப்ராகீம் நபிகளை நெருப்புக்குண்டம் இருக்கும் இடத்திற்கு தூக்கி வீசினார்கள்.

    நெருப்புக்குண்டம் அருகே நெருங்கியபோது, மழை பொழியச்செய்யும் வானவர் தூதர் ஒருவர் இப்ராகீம் நபிகள் முன் தோன்றி, ‘நபிகளே எனக்கு கட்டளையிடுங்கள். மழையைப் பொழிந்து இந்த நெருப்புக்குண்டத்தை அழித்து விடுகிறேன்’ என்றார்கள்.

    அந்த இக்கட்டான சந்தர்ப்பத்திலும் இப்ராகீம் நபிகள் தன் ஈமானை இழந்து விடவில்லை. தன்னைப்படைத்த அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் தன் நம்பிக்கையை வைக்கவில்லை.

    ‘வானவத்தூதரே! மிக்க நன்றி. எனக்கு உங்கள் உதவி தேவையில்லை. ஏக இறைவன் அல்லாஹ்வை மக்கள் வணங்க வேண்டும் என்பதற்காகத் தான் அவர்களை நான் நேர்வழியில் அழைத்தேன். அவர்கள் அதனை சரியாக புரிந்து கொள்ளாமல் என்னை இந்த துன்பத்திற்கு ஆளாக்கி இருக்கிறார்கள். இந்த நிகழ்வுகள் அத்தனையையும் உங்களைப் போன்று அல்லாஹ்வும் பார்த்த வண்ணமாகவே இருக்கின்றான். அவனே இந்த நிகழ்வின் பொறுப்பாளனும் ஆவான். அவன் நாடியதே நடக்கும், அதனை ஏற்றுக்கொள்வதே எனது கடமை. அல்லாஹ்வே எனக்குப்போதுமானவன். அவனிடமே என் காரியங்களை ஒப்படைத்து விட்டேன், எனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அவன் பார்த்துக்கொள்வான்’ என்று பதிலுரைத்தார்கள்.

    இப்ராகீம் நபிகளின் நம்பிக்கையின் உறுதியை மெச்சியவனாக அல்லாஹ், ‘நெருப்பே! நீ இதம் தரும் குளிராக குளிர்ந்து விடு’ என்று அந்த நெருப்பிற்கு கட்டளையிட்டான்.

    இறைவனின் கட்டளையால் தகிக்கும் நெருப்பு, இதம் தரும் குளிராய் மாறியது. இப்ராகீம் நபிகள் தீக்குண்டத்தின் மத்தியில் அமைதியாய் அமர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    அல்லாஹ் இந்த நிகழ்வை அருள் மறையில் இவ்வாறாக பதிவு செய்கின்றான்.

    “அவ்வாறே அவர்கள் இப்ராகீமை நெருப்பு கிடங்கில் எறியவே நெருப்பை நோக்கி, ‘நெருப்பே நீ இப்ராகீமுக்கு சுகம் தரும் விதத்தில் குளிர்ந்து விடு’ என்று நாம் கூறினோம்.” (திருக்குர்ஆன் 21:69)

    நெருப்பு குண்டம் முழுவதும் அழிந்தது. இப்ராகீம் நபிகள் எந்த பாதிப்பும் இன்றி உயிரோடு மீண்டு வந்தார்கள்.

    இறைநம்பிக்கை கொண்டோருக்குப் பாதுகாப்பு அளித்து உதவுபவன் அல்லாஹ் ஒருவனே என்பது இந்த வரலாற்று நிகழ்வு மூலம் நிரூபணம் ஆகிறது. 
    உலகியலின் தொடர்பை குறைத்து இறை நெருக்கத்தில், நம்மை பரிபூரணமாக நனையச்செய்திட இந்த ‘இக்திகாப்’ நிகழ்வு பெரிதும் உதவுகின்றது.
    இஸ்லாம் வலியுறுத்தும் 5 கடமைகளில் 3-வது கடமை நோன்பாகும். இது ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

    ஆண்டில் 11 மாதங்கள், பகல் பொழுதில் விரும்பியதை எல்லாம் உண்டு கழித்து, பருகி மகிழ்ந்து வாழ்ந்து வருகிறோம். இந்த நிலை மாறி ரமலானில் ஒரு மாத காலம் பகலில் உண்ணாமலும், பருகாமலும், ஒழுக்கத்தால் மனதை கட்டுப்படுத்தியும் நோன்பு நோற்கிறோம். மனதையும், உடலையும் ஒழுங்குபடுத்துகின்ற ஒரு மாபெரும் பயிற்சியை இந்த நோன்பு கற்றுத்தருகின்றது.

    இந்த ஆன்மிக பயிற்சி மனித மனங்களில் இரக்கச் சிந்தனைகளை சுரக்கச் செய்கிறது. மேலும் பிற மனிதர்களின் பசியையும், இன்னல்களையும் அனுபவப்பூர்வமாக நமக்கு உணர்த்தி, தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையை நம்மிடம் வளரச் செய்கின்றது.

    நற்பாக்கியங்கள் குவிந்து கிடக்கும் ரமலானில், அதற்கு ஒரு மணி மகுடம் சூட்டுவதாக அமைந்திருப்பது லைலத்துல் கத்ர் இரவாகும். இதன் மகிமை குறித்து இறைமறை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    ‘நபியே! மகிமை பொருந்திய (லைலத்துல் கத்ர்) இரவு, என்னவென்று உமக்கு தெரியுமா? (அந்த இரவு) மகிமை மிக்க இரவு (அது) ஆயிரம் மாதங்களைவிடவும் மேன்மையானதாகும்’ (97:2,3).

    இந்த இரவின் சிறப்பு குறித்து இறைதூதர் நபி (ஸல்) அவர்கள் கூறுவதை பார்ப்போம்:

    ‘யார் (இந்த) லைலத்துல் கத்ரின் (இரவில்) நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து (இறைவனை) வணங்குகிறார்களோ, அவர்களது முன்பாவங்கள் (யாவும்) மன்னிக்கப்படுகின்றது. இன்னும் யார் ரமலானில் நம்பிக்கையுடன் நன்மையை எதிர்நோக்கி நோன்பு நோற்கின்றார்களோ, அவர்களது முந்தைய பாவங்கள் (யாவும்) மன்னிக்கப்படுகின்றது. (நூல்: புகாரி)

    மனிதர்களின் பிழைகள் மன்னிக்கப்பட வேண்டும், அதனால் அவர்கள் தூய்மை அடைய வேண்டும் என்பதற்காகவே ரமலான் நோன்பும், லைலத்துல் கத்ர் இரவும் உள்ளது என்பதை அண்ணலாரின் அமுத மொழி அறிவுறுத்தும் செய்தியாக உள்ளது.

    லைலத்துல் கத்ர் இரவில் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அண்ணலாரிடம் வினவிய போது, அவர்கள் இவ்வாறு ஒரு பிரார்த்தனையை கற்றுக்கொடுத்தார்கள்.

    ‘இறைவனே, நிச்சயமாக நீ பிழைகளை பொருத்துக் கொள்ளக் கூடியவன், (பிழைகள் செய்வதை விட்டும் மனம் திருந்தி உன் பால்) மன்னிப்பு கோருவதை விரும்பக்கூடியவன் (அத்தகைய என் இறைவா) என் பிழைகளை பொருத்து அருள் புரிவாயாக’.

    பிழைகளில் இருந்து மனிதன் பாடம் கற்றுக்கொண்டு, அத்தகைய பிழைகள் மீண்டும் நடக்காதபடி உறுதி பூண்டு, தனது இறைவனிடம் மன்றாடி பிழைகளை மன்னிக்க பாவ மன்னிப்பு தேடுவது என்பது மிகப்பெரிய பாக்கியமாகும். அதனை இந்த மகிமை மிக்க இரவில் பெற முடியும் என்பதையே நபிகளாரின் இந்த பிரார்த்தனை வலியுறுத்தும் கருத்தாகும்.

    இந்த லைலத்துல் கத்ர் இரவு ரமலான் மாதத்தின் கடைசி பத்து இரவுகளில் வரும் ஒற்றைப்படை இரவுகளான 21, 23, 25, 27, 29 ஆகிய 5 இரவுகளில் ஒன்றில் பொதிந்து உள்ளது. இதனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் தொட்டே ரமலானின் கடைசி பத்து நாட்கள், பள்ளிவாசலில் தங்கியிருந்து பிரார்த்தனை செய்யும் ‘இக்திகாப்’ என்ற அழகிய நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

    உலகியலின் தொடர்பை குறைத்து இறை நெருக்கத்தில், நம்மை பரிபூரணமாக நனையச்செய்திட இந்த ‘இக்திகாப்’ நிகழ்வு பெரிதும் உதவுகின்றது.

    குர்ஆன் இறங்கிய மாதம் ரமலான். உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி, ஆன்மிக பலத்தை அதிகரிக்கச் செய்யும் மாதம் ரமலான். ஆசைகளைக் குறைத்து பிறருக்கு உதவும் மனப்பான்மையை ஓங்கச்செய்கின்ற மாதம் ரமலான். தான் ஈட்டிய செல்வத்தில் இரண்டரை சதவீதத்தை ஏழைகளுக்கு பகிர்ந்து வழங்கிட வழிகாட்டும் மாதம் ரமலான். ஆயிரம் மாதங்களைவிட சிறந்த ஓர் இரவை தன்னுள் பொதிந்து வைத்து கணக்கின்றி நற்பாக்கியங்களை பொழிகின்ற மாதம் ரமலான்.

    எல்லா பாக்கியங்களும் பூத்து குலுங்கிடும் இந்த ரமலான் மாதத்தில் இறைவன் ஏவிய அனைத்து நற்செயல்களையும் தொய்வின்றி நிறைவேற்றி, நாம் வாழும் காலமெல்லாம் இந்த சங்கைமிகும் ரமலானை பெறுகின்ற பெரும் பேற்றினை அடைய இறைவன் பேரருள் பாலிப்பானாக, ஆமின்.

    மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம். 
    இப்ராகிம் நபிகள் தங்கள் இளமைகாலம் தொட்டே மிகவும் முற்போக்கு சிந்தனையாளராக விளங்கினார். அவரது தந்தை ஆஜர் என்பவர் கடவுள் சிலைகளை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தார்.
    இப்ராகிம் நபிகள் தங்கள் இளமைகாலம் தொட்டே மிகவும் முற்போக்கு சிந்தனையாளராக விளங்கினார். அவரது தந்தை ஆஜர் என்பவர் கடவுள் சிலைகளை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தார்.

    இதுகுறித்து தன் தந்தையிடம் இளம் வயதிலேயே இப்ராகிம் நபிகள் இவ்வாறு கேள்விகள் கேட்டார்.

    “தந்தையே, நீங்கள் உருவாக்கும் ஒரு சிலையை கடவுள் என்று சொல்லி மக்களை நம்ப வைக்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் தான் கடவுள்களை படைக்கின்றீர்களா? அப்படியிருந்தும் அவை சில சமயங்களில் உடைந்து சிதறி விடுகின்றன. தன்னையே உடையாமல் காத்துக்கொள்ள முடியாத இந்த சிலைகள் உலகையும், உலகளாவிய உயிர்களையும் காக்கும் என்று நம்புவது எப்படி அறிவிற்கு பொருத்தமானதாக இருக்க முடியும்?”.

    இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “இப்ராகிம் தன் தந்தையாகிய ஆஜரை நோக்கி, ‘நீர் சிலைகளை தெய்வங்களாக எடுத்துக் கொண்டீரா? என்று கேட்டு, நிச்சயமாக நீரும் உம்முடைய மக்களும் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை நான் காண்கிறேன்” என்று கூறினார். (திருக்குர்ஆன் 6:74)

    தந்தையிடம் கேள்வி கேட்டவர் மனதில் இறைவனைப் பற்றிய தேடல் அதிகரித்தது. அந்த காலத்தில் மக்கள் எவற்றை எல்லாம் கடவுளாக வணங்கினார்களோ, அவைகள் அனைத்தைப் பற்றியும் அறிந்து கொள்ளும் ஆசை அவரது உள்ளத்தில் தோன்றியது. இதையடுத்து நட்சத்திரம், நிலவு, சூரியன் ஆகியவை கடவுளாக இருக்குமா? என்று அவர் தேடினார். இதை திருக்குர்ஆன் இவ்வாறு விளக்குகிறது:

    “ஒரு நாள் இருள் சூழ்ந்த இரவில் அவர் மின்னிக்கொண்டிருந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டு ‘இது என் இறைவன் ஆகுமா?’ என தம் மக்களைக் கேட்டு, அது மறையவே, மறையக் கூடியவற்றை இறைவனாக எடுத்துக் கொள்ள நான் விரும்ப மாட்டேன்” எனக் கூறிவிட்டார். (திருக்குர்ஆன் 6:76)

    “பின்னர் உதயமான சந்திரனைக் காணவே, ‘இது என் இறைவன் ஆகுமா?’ எனக்கேட்டு அதுவும் அஸ்தமித்து மறையவே அதையும் நிராகரித்து விட்டு, எனது இறைவன் எனக்கு நேரான வழியை அறிவிக்காவிட்டால் வழி தவறிய மக்களில் நிச்சயமாக நானும் ஒருவனாகி விடுவேன்” என்று கூறினார். (திருக்குர்ஆன் 6:77)

    “பின்னர் உதயமான பளிச்சென்று நன்கு ஒளிரும் சூரியனைக் கண்ட போது, ‘இது மிக பெரிதாக இருக்கிறது. இது என் இறைவன் ஆகுமா?’ எனக்கேட்டு அதுவும் அஸ்தமித்து மறையவே, அவர் தம் மக்களை நோக்கி, ‘என் மக்களே நீங்கள் இறைவனுக்கு இணையாக்கும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நிச்சயமாக நான் வெறுத்து ஒதுங்கி விட்டேன்’ என்று கூறினார்”. (திருக்குர்ஆன் 6:78)

    சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்றவை எல்லாம் கடவுளாக இருக்கமுடியாது என்றால், யார் இறைவனாக இருக்கமுடியும் என்ற மெய்ப்பொருளை அறிவதில் அவரது ஆர்வம் தொடர்ந்தது. தன் சக்திக்கும் அப்பாற்பட்ட அந்த பரம்பொருளை அறிந்து கொள்வதற்கு அதனிடமே உதவியையும் தேடினார். அப்போது அவர் உணர்ந்துகொண்டதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “வானங்களையும், பூமியையும் எவன் படைத்தானோ அந்த ஒருவனின் பக்கமே நிச்சயமாக நான் முற்றிலும் நோக்குகிறேன். நான் அவனுக்கு எதையும் இணை வைப்பவன் அல்ல” என்று கூறினார். (திருக்குர்ஆன் 6:79)

    இப்ராகிம் நபிகள், இறைவன் யார் என்ற தேடலில் இறுதி இலக்கை அடைந்த போது, ‘இந்த உலகை படைத்து பரிபாலனம் செய்யக்கூடிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான். தனது வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் மட்டுமே’ என்று அவர் முடிவுக்கு வந்தார். அல்லாஹ்வும் அவரை தனது தூதராக ஏற்றுக்கொண்டு அவருக்கு இறைச்செய்தியை அளித்தான்.

    என்றைக்கு இறைவனைப் பற்றிய ஞானம் ஏற்பட்டு விட்டதோ, அன்றிலிருந்து தன் தந்தை உள்ளிட்ட அத்தனை மக்களையும் அறியாமையில் இருந்து விடுவித்து அல்லாஹ்வின் பாதையில் திருப்ப முயற்சிகள் பல செய்தார். இதனால் அவர் கடும் எதிர்ப்புகளை சந்தித்தார். இருந்தாலும் அவர் இறைச்சேவையை நிறுத்தி விடவில்லை.

    ஒரு முறை அந்த மக்கள் மத்தியில் ஒரு திருவிழா வந்தது. ஊரின் வெளியே இருந்த கடவுளை வணங்கி வழிபட மக்கள் அனைவரும் சென்றுவிட்டனர்.

    அப்போது, இப்ராகிம் நபிகள் ‘கஅபா’ ஆலயத்தில் உள்ளே சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த மண் சிலைகளை தன் கோடாரியால் உடைத்து நொறுக்கினார். பின்னர் அங்கிருந்த ஒரு சிலையின் தோளில் தன் கோடாரியை மாட்டி விட்டு எதுவும் அறியாதவர் போல் சென்று விட்டார்.

    ஊர் திரும்பிய மக்கள், தங்களுடைய ஆலயத்தில் சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பதை அறிந்து ஆத்திரம் கொண்டனர். இப்ராகிம் நபிகள் மீது சந்தேகம் கொண்டு விசாரித்தனர்.

    இதற்கு இப்ராகிம் நபிகள், “அதோ கோடாரியை தன் தோளில் மாட்டியிருக்கும் உங்கள் கடவுளிடம் கேளுங்கள். கோடாரியை கையில் வைத்திருப்பதால் ஒரு வேளை அதுதான் கோபமுற்று தன் தோழர்களை உடைத்திருக்குமோ என்று விசாரியுங்கள்” என்றார்.

    அதற்கு மக்கள், “சிலைகள் எவ்வாறு பேசும். எங்களை நீர் திசை திருப்புகிறீர்” என்றார்கள்.

    உடனே இப்ராகிம் நபிகள், ‘தன்னால் பேசவோ, தன்னை ஆபத்தில் இருந்து காத்துக்கொள்ளவோ சக்தியற்ற இந்த சிலைகளை விட நீங்கள் மேலானவர்கள் அல்லவா?. உங்களால் பேச முடியும். உங்களைத் தற்காத்து கொள்ளவும் முடியும். அப்படி இருக்கும் போது இச்சிலைகளை உங்களைக் காக்கும் கடவுளர்களாக நீங்கள் வணங்குவது சரியானதாக இருக்க முடியுமா? யோசியுங்கள். நம்மையும், இந்த சிலையையும் படைத்த ஏக இறைவனையே வணங்குங்கள்’ என்றார்.

    அவரின் பதிலால் வெட்கித்தலைகுனிந்தாலும் இதை ஏற்க மக்கள் தயாராக இல்லை. ‘இவர் தன் வாதத்திறமையால் நம் தெய்வங்களையே குறை கூறுகிறார். நம் கடவுள்களுக்கு தீமை செய்த இவரை அரசரின் முன் நிறுத்தி, தீயிலிட்டு பொசுக்க வேண்டும்’ என்று அந்த மக்களும், மக்கள் தலைவர்களும் கூறினார்கள். இந்த நிகழ்வை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “அதற்கவர்கள் தங்கள் மக்களை நோக்கி, நீங்கள் ஏதும் செய்ய வேண்டுமென்றிருந்தால் இவரை நெருப்பில் எரித்து உங்கள் தெய்வங்களுக்காக இவரிடம் பழிவாங்குங்கள்” என்று கூறினார்கள். (திருக்குர்ஆன் 21:68)

    அவர்களின் திட்டப்படியே இப்ராகிம் நபிகள் தீயில் எறியப்பட்டார்கள். ஆனால் அல்லாஹ்வின் அருளால் இப்ராகிம் நபிகள் காப்பாற்றப்பட்டார்கள். இந்த நிகழ்வுகள் அனைத்தும் திருக்குர்ஆனில் வரலாறு ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

    யார் ஒருவர் ஏக இறைவன் மீது உறுதிகொண்டு, அவனையே முற்றிலும் சார்ந்து இருந்து, அவனையே வணங்கி வந்தால் அவருக்கு வரும் சோதனைகள் எல்லாம் நொடியில் விலகிவிடும் என்பதையும், அவர்கள் இறைவனின் திருப்பொருத்தத்தை பெற்றவர்களாக மாறிவிடுவார்கள் என்பதையும் இப்ராகிம் நபிகள் சரித்திரத்தின் மூலம் நாம் அறியலாம். 
    ×