search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஹிஜ்ரத் - மக்காவை விட்டு மதினாவிற்கு புலம் பெயர்தல்
    X

    ஹிஜ்ரத் - மக்காவை விட்டு மதினாவிற்கு புலம் பெயர்தல்

    நபிபெருமானார் (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த காலத்தில் இருந்தே சொல்லொண்ணா தொல்லைகளுக்கு ஆளானார்கள்.
    “நபியே! உங்களைச் சிறைப்படுத்தவோ, அல்லது உங்களை கொலை செய்யவோ, அல்லது உங்களை ஊரை விட்டு அப்புறப்படுத்தவோ, நிராகரிப்பவர்கள் சூழ்ச்சி செய்த நேரத்தை நினைத்துப் பாருங்கள். அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிராக அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். ஆனால் சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் அல்லாஹ் மிக மேலானவன்.” (திருக்குர்ஆன் 8:30)

    நபிபெருமானார் (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த காலத்தில் இருந்தே சொல்லொண்ணா தொல்லைகளுக்கு ஆளானார்கள். மக்காவை விட்டு தாயிப் நகருக்கு சென்று அங்கு தன் பிரச்சாரத்தை தொடங்கினார்கள். அங்குள்ள மக்களும் நபிகளாரை துன்புறுத்தினார்கள்.

    எனவே, மக்காவைப் பிரிந்து மதினா சென்றால் தான் இறைச்செய்தியை எடுத்துச்சொல்ல முடியும் என்று நபிகளார் முடிவு செய்தார்கள். இருப்பினும், அல்லாஹ்வின் கட்டளைக்காக காத்திருந்தார்கள்.

    ஒரு நாள் இரவு மக்கா முழுவதும் நீண்ட அமைதி நிலவியது. நபிகளாரைக்கொல்ல எதிரிகள் திட்டம் வகுத்து காத்திருந்தார்கள்.

    அப்போது, இரவின் பிற்பகுதியில் அண்ணலாருக்கு இறைவனின் கட்டளை வருகிறது. “நீங்கள் மக்காவை விட்டு மதினாவிற்கு ‘ஹிஜ்ரத்’ செய்யுங்கள்” (புலம் பெயர்ந்து செல்லுங்கள்) என்று உத்தரவு வருகிறது.

    உடனே எம்பெருமானார் (ஸல்) அவர்கள், அலி (ரலி) அவர்களை அழைத்து, “அருமை அன்பரே! எனக்கு அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டது. நான் இப்போதே மதினாவிற்கு பயணம் புறப்படப்போகிறேன். அதற்கு முன்னால் எனக்கு ஒரு கடமை இருக்கிறது. என்னிடம் மக்கா குரைஷியர்கள் பலர், எதிரிகளாய் இருந்தாலும் அமானிதமாய் பல உயர்ந்த பொருட்களை என்னிடம் கொடுத்திருக்கின்றனர். அத்தனைப் பொருட்களையும் உரியவர்களிடம் சேர்க்கின்ற பொறுப்பை உங்களுக்கு வழங்குகிறேன்.”

    “இன்ஷா அல்லாஹ், உடமைகளை உரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு, என்னை மதினாவில் இரண்டொரு நாளில் வந்து சந்தியுங்கள்” என்று பணித்தார்கள்.

    அன்று இரவு அண்ணல் எம்பெருமானார் (ஸல்) வீட்டை விட்டு புறப்படுவதற்கு முன்பே மக்கத்து குரைஷிகள், ஏற்கனவே சதித்திட்டம் தீட்டியபடி, அண்ணலாரின் வீட்டைச் சூழ்ந்து கொண்டார்கள். வாள், வில் ஆயுதங்களுடன் எதிரிகள் நிற்பதைக்கண்டு அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் சிறிதும் அஞ்சவில்லை.

    ‘நீங்கள் மதினாவிற்குப் புறப்படுங்கள்’ என்று அல்லாஹ் ‘வஹி’ (இறைச்செய்தி) அனுப்பியிருக்கிறான். அல்லாஹ் சொல்வது சத்தியம். அது நிறைவேறித்தான் ஆக வேண்டும். எத்தனை இடையூறுகள் ஏற்பட்டாலும் நாம் மதினா செல்வது உறுதி. அந்த பொறுப்பை அல்லாஹ் ஏற்றிருக்கும் போது எதற்கு அனாவசிய கவலை என்று எண்ணியபடி தைரியமாக வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். எதிரிகளும் அவர்களைப் பார்த்தார்கள்.

    அப்போது, அண்ணலார் தன் கரங்களால் ஒரு பிடி மண்ணை எடுத்து எதிரிகளின் முன்னிலையில் வீசினார்கள். சூரா யாஸீனில் உள்ள இந்த வசனத்தை ஓதியவர்களாக முன்னேறினார்கள்.

    “அவர்களுக்கு முன்புறம் ஒரு சுவரும் பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி நாம் அவர்களை மூடி விட்டோம். ஆதலால் அவர்களால் எதையும் பார்க்க முடியாது” (திருக்குர்ஆன் 36:9)

    இந்த வசனத்தை கேட்ட உடனே, எதிரிகள் அனைவரும் அப்படியே உணர்ச்சியற்றவர்களாக ஸ்தம்பித்து நின்றனர். அல்லாஹ் திருமறையில் சொன்னது போல் அவர்கள் கண் திறந்திருந்தும் பார்க்க முடியவில்லை. கைகளில் வாள் இருந்தும் அவை அசையவில்லை.

    மிக மெதுவாக நிதானமாக அவர்களை கடந்து சென்றார்கள் நபிபெருமானார். நேரே அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் வீடு நோக்கி சென்றார்கள். என்ன ஆச்சரியம், வீட்டில் அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கதவை தட்டுவதற்காக கை வைத்த உடன் அது தானாக திறந்து கொண்டது. அங்கே அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் ஆவலாய் யாரையோ எதிர்பார்த்த வண்ணம் தயாராக இருப்பதை நபிகளார் கண்டார்கள்.

    “அருமை நண்பரே! இந்த இரவு வேளையில் யாரை எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள்” என்று நபிகளார் வினவினார்கள்.

    “யா ரஸூலுல்லாஹ்! நீங்கள் சில தினங்களுக்கு முன், அபூபக்கரே இங்கே மக்காவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது. ஏற்கனவே ஈமான் கொண்டவர்கள் புலம் பெயர்ந்து மதினா சென்று விட்டார்கள். இங்கே பலரும் நம்மை ஏற்றுக்கொள்ள முன் வரவில்லை. நாம் வெகு சிலரே மக்காவில் உள்ளோம். இதனை விட்டு அகன்று மதீனாவில் நம் இறைச்சேவையை, ஏகத்துவத்தை எடுத்தியம்பினால் மக்களிடம் கொஞ்சம் மாற்றம் ஏற்படும் போல் தெரிகிறது. எனவே நீங்கள் தயாராக இருங்கள். அல்லாஹ்வின் கட்டளைக்காக நான் காத்திருக்கிறேன். கட்டளை கிடைத்ததும் உங்களை நாடி வருவேன். நாம் இருவரும் ‘ஹிஜ்ரத்’ செய்து மதினா செல்ல வேண்டும் என்று சொன்னீர்கள்” .

    “அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் உங்கள் அழைப்பிற்காக இரவு பகலாக காத்திருக்கிறேன். நீங்கள் உத்தரவிட்டால் தாமதிக்காமல் உடனே புறப்பட வேண்டும். அதற்காகத் தான் தயாராய் காத்திருக்கின்றேன்” என்றார் அபூபக்கர் சித்திக் (ரலி).

    பின்னர் இருவரும் அங்கிருந்து உடனே மதினா நோக்கி புறப்பட்டார்கள்.

    அதேநேரத்தில், அண்ணலார் வீட்டை சுற்றி நிலைகுலைந்து நின்றிருந்த எதிரிகள் சிறிது நேரம் கழித்து சுயநினைவிற்கு வந்தார்கள்.

    ‘என்னவாயிற்று நமக்கு, நபிகள் நம் முன் வந்தது போல் தெரிந்ததே? எங்கே அவர் போய் விட்டார்?’ என்று நினைத்தபடி வீட்டினுள் நுழைந்தனர்.

    இதற்கிடையே அண்ணலாரின் கட்டளையை நிறைவேற்ற எண்ணிய அலி (ரலி) அவர்கள் எதிரிகளின் முற்றுகையைப் பொருட்படுத்தாமல் வீட்டினுள் சென்று அண்ணலார் வழக்கமாய் படுத்துறங்கும் இடத்தில் நன்றாக முகத்தை மூடி போர்வையை போர்த்தியவராக உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.

    அலி (ரலி) அவர்கள் படுத்திருந்த நிலையைக் கொண்டு அவர்கள் தான் நபியாக இருக்கும் என்று எண்ணிய எதிரிகள் அவர்களைச் சுற்றி சூழ்ந்து, கொல்வதற்காக வாட்களை ஓங்கினார்கள்.

    அப்போது, கூட்டத்தில் ஒருவர் சொன்னார், “முகத்தை மூடிய நிலையில் ஒருவரை கொல்வது அரேபியர் வீரத்திற்கு அழகல்லவே. போர்வையை விலக்கி முகத்தைப் பார்த்து அவரை கொல்வதே நமது வீரத்திற்கு சான்று பகரும் சாட்சி. எனவே போர்வையை விலக்குங்கள்” என்றார்.

    போர்வையை விலக்கியவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே அலி (ரலி) அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள். எதிரிகள் ஆச்சரியம் மேலிட்டவர்களாக அவரைத் தட்டி எழுப்பி, “அலியே! நாங்கள் முகம்மதை கொல்வதற்காக பல நாட்கள் காத்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இருந்தும் என்ன தைரியத்தில் முகம்மது வீட்டில், அதுவும் அவரது படுக்கையில் எந்த வித அச்சமின்றி தூங்கிக்கொண்டிருக்கிறாய்?. போர்வையை விலக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் உன் உயிர் போயிருக்குமே?” என்று வினவினார்கள்.

    அப்போது, அலி (ரலி) அவர்கள் மிக அலட்சியமாக, “அது எப்படி என் உயிர் போகும்? அண்ணல் நபிகளார் என்னிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்து, அதை நிறைவேற்றி விட்டு இரண்டொரு நாளில் என்னை வந்து சந்தி என்றல்லவா சொல்லிவிட்டு சென்றார்கள். எனவே எனக்கு நம்பிக்கை உண்டு. இரண்டு நாட்களில் நபிகளாரை நான் நிச்சயம் சந்திப்பேன் என்று சொன்னது நபிபெருமான். அவர் சொல்வது அனைத்தும் சத்தியம், உண்மை. அண்ணலின் வாக்கு என்றைக்குமே பொய்த்ததில்லையே? அதனால் தான் எந்தவித அச்சமின்றி தூங்கிக் கொண்டிருந்தேன்” என்றார்கள்.

    வாயடைத்து நின்றனர் எதிரிகள்.

    அண்ணல் நபிகளாரில் வாக்கில் எந்த அளவுக்கு அவரது தோழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்பதற்கு இந்த நிகழ்வுகள் சாட்சியாகும்.

    அபூபக்கர் சித்திக் (ரலி) என்னவென்றால், ‘நாயகம் சொல்லிவிட்டார்கள். எந்த நிமிடமும் அவர்கள் வரலாம்’ என்ற எதிர்பார்ப்போடு இரவு பகலாக தன் வீட்டில் காத்திருந்தார்கள்.

    அலி (ரலி) அவர்கள், ‘நபிகள் சொல்லி விட்டார்கள். நாளை அவர்களை உயிருடன் சந்திப்போம்’ என்ற நம்பிக்கையில் அச்சமின்றி இருந்தார்கள்.

    நபிகள் சொல்லில் எந்த மாற்றமும் நிகழாது என்பதில் அவர்கள் இருவருக்கும் அத்தனை உறுதி. நம்மில் எத்தனை பேர் நபிகளார் மீது அத்தகைய நம்பிக்கையை வைத்துள்ளோம், சிந்திப்போமாக. 
    Next Story
    ×