search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோபம் என்னும் சாபம்
    X

    கோபம் என்னும் சாபம்

    எல்லோரையும் ஏற்ற, தாழ்வின்றி சமமாகப் பாவிப்பவர்களுக்கு கோபம் வருவது அரிதே. கோபம் கொள்வதால் நாம் செய்யும் நற்செயல்கள், இறைவனிடத்தில் எந்த பலனையும் பெற்றுத் தராது.
    உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பது உயிரினங்களின் பண்பாக இருக்கிறது. விலங்குகளுக்கு பகுத்தறிவு இல்லாததால் அவைகளால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது.

    ஆனால் மனிதர்களுக்கு எது சரி, எது சரியல்ல, இதைச் செய்யலாமா? செய்யக்கூடாதா? என்று பகுத்து அறியும் ஆற்றலை இறைவன் அருளியுள்ளான். எனவே உணர்ச்சிகள் கொப்புளிக்கும்பொழுது தன்னைக் கட்டுப்படுத்துபவனே விலங்குகளிடம் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்கிறான்.

    மற்றவர்களைக் காயப்படுத்தும் உணர்ச்சிகளுள் ஒன்றான கோபத்தை ஒருவன் அடக்கத் தவறினால் அந்தக் கோபம் அவனையும் அழித்து, அடுத்தவர்களையும் பொசுக்கி விடும்.

    மற்றவர்களின் மீது ஒருவருக்கு கோபம் ஏற்பட முக்கிய காரணங்கள் இவை தான்: 1) சம்பந்தப்பட்ட நபர் மீது வெறுப்பு, 2) தான் சரியென்று நினைப்பதை அடுத்தவர் ஒப்புக்கொள்ளாமல் இருப்பது, 3) தான் எண்ணியது நடக்கவில்லை என்கிற போது... இதுபோன்று பல காரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

    கோபத்தில் முகம் சிவந்தது, கோபத்தில் ரத்தம் கொதித்தது போன்ற வார்த்தை பிரயோகங்கள் அறிவியல் பூர்வமாக சரியானவையே. ஒருவர் கோபப்படும் பொழுது ரத்த நுண் குழாய்களில் அழுத்தம் அதிகமாகி வெடித்து விடும் ஆபத்தும் உள்ளது என்று எச்சரிக்கிறது மருத்துவம்.

    இதனால் கோபப்படுபவருக்கு உடல் நலம் கெடுவதுடன் அதனால் சம்பந்தப்பட்டவர்களும் மனஅழுத்தத்திற்கு ஆளாகலாம். கோபத்தினால் எந்த லாபமும் இல்லை, புண்ணியமும் இல்லை.

    அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் (எளிதில் கோபப்படும் இயல்புடைய) ஒருவர் வந்து, ‘எனக்கு ஏதாவது ஒரு அறிவுரை கூறுங்களேன்’ என்று கேட்டார். அதற்கு ஏந்தல் நபி (ஸல்) ‘கோபப்படாதீர்’ என்று பதில் கூறினார்கள். இதே கேள்வியை பல முறை அந்த மனிதர் கேட்டும் அண்ணலார் அவர்கள் ஒவ்வொரு முறையும் ‘நீர் கோபம் கொள்ளாதீர்’ என்றே கூறினார்கள்.

    கட்டுப்படுத்த முடியாமல் கோபம் வரும்பொழுது அதை அடக்கிக் கொள்பவனே உண்மையான வீரன். “குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்பொழுது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையில் வலிமை வாய்ந்தவன்” என்றும் நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

    மிகுதியான கோபம் ஏற்படும்பொழுது நாவைக் கட்டுப்படுத்துவது மிகச்சிறந்ததாகும். ஏனெனில் கோபம் மூளையை ஆக்கிரமித்து, என்ன பேசுகிறோம் என்பதை நாம் உணராத அளவிற்கு செய்து விடும். கோபம் குறைந்த பின், ‘நானா அப்படிச் சொன்னேன்?’ என்று நாம் ஆச்சரியப்படுவது இந்த காரணத்தினால் தான்.

    எரிமலையாய்ச் சீறும் ஒருவரின் நாவில் இருந்து வரும் வார்த்தைகள் தீக்கங்குகளாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. எனவே தான் கோபம் சாட்டப்பட்டவர்கள் வேதனையில் வெந்து போகிறார்கள். இதையே திருவள்ளுவர் ‘தீயினாற் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு’ என்கிறார்.

    கோபம் கொள்பவர்கள் ஷைத்தானின் ஆதிக்கத்தில் இருக்கிறார்கள். நெருப்பால் படைக்கப்பட்ட அவனின் தாக்கமே அவர்களிடமிருந்து கோபமாக கொப்புளிக்கிறது. ஆகவேதான் கோபம் தலைக்கேறும் பொழுது நாவைக் கட்டுப்படுத்திக் கொண்டு உடனே தண்ணீரும் பருகுவதால் கோபம் தணியும்.

    கோபத்தில் பொங்கும் மன தைக் குளிர்விக்கவே ரஸூல் (ஸல்) அவர்கள் “கோபம் ஷைத்தானின் பாதிப்பினால் ஏற்பட்ட விளைவாகும். அவன் நெருப்பினால் படைக்கப்பட்டவன். நெருப்பு நீரினால் மட்டுமே அணைகிறது. எனவே உங்களில் ஒருவர் கோபம் கொள்ளும் பொழுது அவர் ‘ஒளு’ செய்து கொள்ளட்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.

    இன்னும் கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு “உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் பொழுது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும், இப்படிச் செய்து கோபம் மறைந்து விட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும்” என்றும் நபி (ஸல்) அவர்கள் அறிவுரை பகன்றுள்ளார்கள்.

    கோபம் வரும்பொழுது, ‘விரட்டப்பட்ட ஷைத்தானிடம் இருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்’ என்று இறைவனிடம் கோருவது, கோபத்தில் இருந்து நம்மைத் தடுத்துக் கொள்வதற்கான ஒரு எளிய வழியாகும்.

    கோபத்தை அடக்க முடியாமல் ஆத்திரத்தில் கொலை போன்ற கடுமையான குற்றங்களைச் செய்பவர்களை நாம் பார்க்கிறோம். கோபம் வடிந்து, ‘தவறு செய்து விட்டோமே’ என்று காலம் தாழ்ந்து உணர்பவர்கள் வேதனைப்பட்டாலும் அதில் எந்த பலனும் கிடைக்காது. பெரும் தவறு செய்த குற்றத்திற்காக சிறை தண்டனைதான் கிடைக்கும்.

    கோபத்தினாலும், ஆத்திரத்தினாலும் நடந்த முதல் கொலை ஆதம் (அலை) அவர்கள் காலத்தில் நடந்தது. காபீல், ஹாபீல் இருவரும் ஆதம் (அலை) அவர்களின் புதல்வர்கள். காபீலுக்கு ஹாபீலின் மீது பொறாமை ஏற்படுகிறது.

    இறைவனுக்காக இருவரும் சமர்ப்பணம் செய்த காணிக்கைகளில் ஹாபீலின் காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதனால் பொறாமைத் தீ இன்னும் கொழுந்து விட்டு எரிய, கோபத்தில் காபீல், ஹாபீலைக் கொன்று விடுகிறார்.

    கோபம் எப்படிப்பட்ட சீரழிவிலும் கொண்டு போய் விட்டு விடும் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் எதுவும் இல்லை. இதுமட்டுமின்றி பொறாமையின் காரணமாகவும் மனிதர்கள் கோபம் கொள்கிறார்கள் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ளலாம்.

    ‘நான் தான் பெரியவன்’ என்னும் அகம்பாவம் மனதில் மேலோங்கும் பொழுது ‘தாங்கள் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும்’ என்று எண்ணுபவர்களுக்கு, தங்கள் சொல்லைக் கேட்காதவர்கள் மீது கோபம் ஏற்படுகிறது. இதனால்தான் சிலர் தமக்குக் கீழ் பணியாற்றுபவர்களிடம் கோபம் கொள்கிறார்கள்.

    எல்லோரையும் ஏற்ற, தாழ்வின்றி சமமாகப் பாவிப்பவர்களுக்கு கோபம் வருவது அரிதே. கோபம் கொள்வதால் நாம் செய்யும் நற்செயல்கள், இறைவனிடத்தில் எந்த பலனையும் பெற்றுத் தராது. கோபத்தை நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் நன்மையை அளிக்கக் கூடியது என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்.

    மனிதர்களுக்கு கோபத்தைத் தூண்டி விட்டு, அவர்களை நன்மைகள் செய்வதிலிருந்தும் தடுப்பது ஷைத்தானின் வேலையாக இருக்கிறது. எனவே நாம், கோபம் கொள்வதிலிருந்து இறைவனிடத்தில் பாதுகாப்பு தேடிக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும்.

    ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை-84 
    Next Story
    ×