என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    நாகையை அடுத்த நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. ஆண்டு தோறும் சின்ன ஆண்டவர் கந்தூரி விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
    நாகையை அடுத்த நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படும் செய்யது முகமது யூசுப் சாஹிப் தாதா சமாதி உள்ளது. ஆண்டு தோறும் சின்ன ஆண்டவர் கந்தூரி விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

    கடந்த ஆண்டு விழா கொரோனா ஊரடங்கு காரணமாக மிக எளிமையான முறையில் நடைபெற்றது. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் சின்ன ஆண்டவர் கந்தூரி விழா நேற்று இரவு தொடங்கியது.

    முன்னதாக தர்கா அலங்காரவாசல் முன்பு தொட்டில் அமைக்கப்பட்டது. இதில் திரளானோர் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தன பூசும் நிகழ்ச்சி நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.
    “பகலின் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (பஜ்ர், அஸர்) தொழுகிறவர் சொர்க்கத்தில் நுழைவார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி), புகாரி)
    ஒவ்வொரு நாள் அதிகாலையிலும், அனைத்து உயிரினங்களும் புதிய விடியலைத் தேடி தான் உற்சாகமாய் எழுகிறது. எழுச்சியை நோக்கி நகர்கிறது. ஒவ்வொரு நாளின் விடியலும் உன்னதமானது என்பதை பின்வரும் வசனம் உணர்த்துகிறது:

    “விடியற்காலையின் மீது சத்தியமாக!” (திருக்குர்ஆன் 89:1)

    ஒவ்வொரு விடியலும் உற்சாகமாக விடிவதும், சோம்பலாக மாறிவிடுவதும் அவரவர் நடத்தையில் தான் உண்டாகிறது. இதை பின்வரும் நபிமொழி எடுத்துக் கூறுகிறது:

    “நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், ‘இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுப்பதற்காக எஞ்சி) இருக்கிறது. எனவே, நீ தூங்கிக் கொண்டேயிரு’ என்று போதித்து (அவனை விழிக்கவிடாமல் உறங்க வைத்து) விடுகிறான். அவர் (அவனது போதனையைக் கேட்காமல் அதிகாலையில்) கண் விழித்து, இறைவனை நினைவு கூர்ந்தால், ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. அவர் (உளூ) அங்கத்தூய்மை செய்தால், மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. அவர் அதிகாலைத் தொழுகையை தொழுதுவிட்டால், முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்து விடுகிறது. அவர் சுறுசுறுப்புடனும், உற்சாகமான மனநிலையுடனும் காலைப்பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும், சோம்பலுடனும் தான் காலைப்பொழுதை அடைவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    ஒவ்வொரு நாளும் புதிய விடியலை உற்சாகமாகவும், மனநிறைவாகவும் அடைந்து கொள்ள மூன்று விஷயங்களை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

    1) இரவில் தூங்கி எழுந்தவுடன் முதலில் இறைவனை நினைக்க வேண்டும். பின்வரும் பிரார்த்தனையை ஓதவேண்டும்.

    “நபி (ஸல்) அவர்கள் அதிகாலையில் எழுந்தால், பின்வரும் பிரார்த்தனையை புரிவார்கள். ‘அல்ஹம்துலில்லாஹில்லதீ அஹ்யானா பஃதமா அமாத்தனா வஇலைஹின் நுஷூர்’. இதன் பொருள்: எங்களை (சிறியதாக) மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த இறைவனுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே நமது திரும்பிச் செல்லுதல் உள்ளது”. (அறிவிப்பாளர்: பராஉ (ரலி), நூல்: அஹ்மது)

    2) இறைவனை நினைவு கூர்ந்தவுடன் உளூச் செய்ய வேண்டும்.

    “நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்யும்போது தங்களின் உறுப்புக்களை மூன்று தடவை கழுவுவார்கள்” (நூல்: புகாரி )

    3) உளூச் செய்தவுடன் உபரியான தொழுகை தஹஜ்ஜத் அல்லது கடமையான அதிகாலத் தொழுகை (பஜ்ர்) தொழவேண்டும்.

    “சூரியன் உதயமாவதற்கு முன்னர் ‘பஜ்ர்’ எனும் அதிகாலைத் தொழுகையை தொழுதவர், சூரியன் மறைவதற்கு முன்னர் ’அஸர்’ எனும் மாலை நேரத் தொழுகையை தொழுதவர் எவரும் ஒரு போதும் நரக நெருப்பில் நுழையமாட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: உமாரா பின் ருஐபா (ரலி), நூல்: புகாரி)

    “பகலின் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (பஜ்ர், அஸர்) தொழுகிறவர் சொர்க்கத்தில் நுழைவார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி), புகாரி)

    “ஒருவர் விடியும் வரை தூங்கிக் கொண்டே இருக்கிறார். அவர் தொழுகைக்கு எழுவதில்லை”, என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்’ என்று விடையளித்தார்கள்”. (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் (ரலி), புகாரி)

    அதிகாலை வேளையில் இம்மூன்று செயல்களை கடைப்பிடிப்பவருக்கு அன்றைய தினம் புதியதோர் விடியலாக பிறக்கிறது. அது அவருக்கு உற்சாகத்தையும், மனநிறைவையும் கொடுக்கிறது.

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிவாசல்கள் மற்றும் மசூதிகளில் இஸ்லாமியர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து தொழுகை நடத்தினர்.

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதையொட்டி கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் நேற்று திறக்கப்பட்டன.

    கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள மசூதியில் அத்தர் ஜமாத் அமைப்பினர் தொழுகையில் ஈடுபட்டனர். இது போல் மற்ற பள்ளிவாசல்கள் மற்றும் மசூதிகளில் இஸ்லாமியர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து தொழுகை நடத்தினர்.
    ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் 21 பேர் தலைமையில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது. கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழக அரசு அறிவிப்பின்படி வெளியாட்கள் மற்றும் யாத்திரீகர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் 847-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா நேற்று மிக எளிமையாக நடந்தது. மாலை 6.45 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம் டவுன் காஜி சலாவுதீன் ஆலிம் தலைமையில் மவுலிது ஓதப்பட்டு இரவு 10 மணி அளவில் மகான் சுல்தான் செய்யது இப்ராகிம் ஷஹீதின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் 21 பேர் தலைமையில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது. கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழக அரசு அறிவிப்பின்படி வெளியாட்கள் மற்றும் யாத்திரீகர்கள் அனுமதிக்கப்படவில்லை. முன்னதாக உலக நன்மைக்காகவும் உலக மக்களுக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து வருகிற 11-ந்் தேதி மாலை 5 மணி அளவில் கொடி இறக்கப்படும் என்று ஹக்தார்கள் தெரிவித்துள்ளனர்.

    தர்கா உள்புறம் வெளியாட்கள் அனுமதிக்கப்படாததால் வெளியூர்களில் இருந்து வந்த யாத்திரீகர்கள் தர்கா நுழைவாயில் முன்பு காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    மனிதர்களை நன்மையின் பக்கம் வழிநடத்திச்செல்ல ஏராளமான நற்செயல்கள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கவை இந்த நான்கு முக்கிய செயல்கள். அவை வருமாறு:-
    இறைவனின் அருளால் சொர்க்கத்திற்கு சொந்தக்காரர்கள் ஆக வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம். இதற்கு, அந்த ஏக இறைவன் அல்லாஹ் வகுத்த வழியில் நமது வாழ்க்கையை வாழ வேண்டும்.

    இறைவன் காட்டிய வழியில் நமது வழிபாடுகள், செயல்கள் அனைத்தும் அமைய வேண்டும். நற்செயல்களை அதிகமாக செய்வதன் மூலம் நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களில் இருந்து மன்னிப்பு பெற முடியும்.

    மனிதர்களை நன்மையின் பக்கம் வழிநடத்திச்செல்ல ஏராளமான நற்செயல்கள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கவை இந்த நான்கு முக்கிய செயல்கள். அவை வருமாறு:-

    1) “இறைவன் ஒருவனே, வணக்கத்திற்கு உரியவன் அந்த அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை” என்று பொருள் தரும் முதலாவது கலிமாவை அதிகமாக ஓதி வரவேண்டும்.

    2) வாழ்நாளில் செய்த பாவமான செயல்கள், காரியங்களை நினைத்து மனம் வருந்தி கண்ணீர் சிந்தி இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும். மீண்டும் அதுபோன்ற பாவங்களை செய்யாமல் இருக்க வேண்டும்.

    3) இந்த உலக வாழ்க்கையில் நிறைய நன்மைகள் செய்து அதன் மூலம் மறுமையில் சொர்க்கத்தை பெறும் வகையில் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    4) நரகத்தில் மனிதனை தள்ளும் தீய செயல்கள், தீய எண்ணங்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு தருமாறு இறைவனிடம் மன்றாடி கேட்டுக்கொள்ள வேண்டும்.

    இதுபோன்ற நற்செயல்கள் மூலம் நாம் அதிகமாக நன்மைகள் செய்து, பாவங்கள், தீமைகளை விட்டு விலகி இருந்து சொர்க்கத்தைப்பெற முயற்சி செய்திட வேண்டும். இது சொல்வதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் இதை கடைப்பிடிப்பது மிகவும் கடினம்.

    ஆசையிலும், ஆணவத்திலும் ஆர்வம் கொண்டுள்ள மனித மனம் இதைச்செய்ய விடாமல் தடுக்கும். எனவே ஒவ்வொரு மனிதனும் இறைவனின் அருளைப்பெறும் வகையில் தன்னை தகுதிப்படுத்திக்கொள்வது மிக முக்கியம்.

    அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெறும் வகையில் நமது அன்றாட வாழ்க்கை முறைகளையும், செயல்பாட்டையும் அமைத்துக்கொள்வது அவசியம். அப்போது தான் அல்லாஹ்வின் அருட்பார்வை நமக்கு கிடைக்கும். இதைப்பெறுவது என்பது எளிதானது அல்ல. இறைவனிடம் இருந்தே இதற்கும் பல்வேறு வகையில் சோதனைகள் நமக்கு வரத்தான் செய்யும். குறிப்பாக நடைமுறை வாழ்க்கையில் ஒவ்வொரு பொருளையும் பார்க்கும் போதே மனதில் ஆசை தூண்டப்பட்டு சோதனைகள் வரத்தொடங்கும்.

    இதுபற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும்போது, “பார்வை என்பது ஷைத்தானின் விஷம் கலந்த அம்புகளில் ஒன்று. அல்லாஹ்வின் தண்டனைக்குப் பயந்து தன் பார்வையை எவர் பாதுகாத்துக்கொள்வாரோ அவருக்கு உள்ளத்தில் ஈமான் (இறையச்சம்) பாதுகாக்கப்படும்” என்றார்கள். (நூல்: ஹாகிம்).

    மனிதனுக்கு ஏற்படும் சோதனைகள் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; ‘நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு’ என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்”. (திருக்குர்ஆன் 8:28).

    “மனிதனை யாதேனும் தீங்கு அணுகும் சமயத்தில், (அதனை நீக்கும்படி) நம்மிடமே அவன் பிரார்த்தனை செய்கின்றான். (அதனை நீக்கி) அவனுக்கு நாம் யாதொரு அருள் புரிந்தாலோ, ‘தான் அதனை அடைந்ததெல்லாம் தன்னுடைய அறிவின் சாமர்த்தியத்தால்தான்’ என்று கூறுகின்றான். (அது சரி) அல்ல; அதுவும் (அவர்களுக்கு) ஒரு சோதனையாகும். ஆயினும், அவர்களில் அனேகர் இதனை அறிந்து கொள்வதில்லை” (திருக்குர்ஆன் 39:49).

    இறைவன் நம்மை சோதிப்பது எல்லாம் அவன் தரும் அருட்கொடைகளுக்கு நம்மை தகுதியானவர்களாக ஆக்குவதற்குத்தான். அதை நாம் புரிந்து கொண்டு எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை இறைவன் பொருட்டால் ஏற்றுக்கொண்டு, இறைவழியில் செயல்பட்டு நற்செயல்கள் செய்துவந்தால் இம்மையிலும், மறுமையிலும் நன்மைகள் பெற முடியும்.

    நன்மைகள் பக்கம் நம்மை அழைத்துச்செல்லும் நற்செயல்களை எப்போதும் செய்வோம், மற்றவர்களையும் அதுபோன்ற செயல்களை செய்யும்படி தூண்டுவோம். இதன் மூலம் ஒட்டுமொத்த மனித சமுதாயமும் இறையச்சத்துடன் திகழும், இறைவனின் அன்பும், கருணையும் நம்மை வழிநடத்தி நன்மைகளை பெற்றுத்தரும்.

    பேராசிரியர் அ முகம்மது அப்துல் காதர், சென்னை.
    தமிழக அரசு ஊரடங்கு அறிவிப்பின்படியும், மாவட்ட கலெக்டர் உத்தரவின் படியும் இந்த திருவிழாவில் பங்கேற்க யாத்திரிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவில் அடங்கப்பட்ட மகான் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீதின் 847-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா, ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு சந்தனக்கூடு திருவிழா நடைபெறவில்லை.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை 5 மணி அளவில் கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் தலைமை டவுன் ஹாஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் தர்கா ஹக்தார்கள் மற்றும் ஆலிம்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு மவுலிது ஓதப்பட்டது.

    உலக நன்மைக்காகவும், கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. வருகிற 4-ந் தேதி மாலை உரூஸ் எடுக்கப்பட்டு 5-ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும் என்று ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக அரசு ஊரடங்கு அறிவிப்பின்படியும், மாவட்ட கலெக்டர் உத்தரவின் படியும் இந்த திருவிழாவில் பங்கேற்க யாத்திரிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
    நம்மால் செய்ய இயலும் காரியங்களை மட்டும் வாக்குறுதிகளாகக் கூறக் குர்ஆன் வலியுறுத்துகிறது. செய்ய இயலா ஒன்றைப் பெருமைக்காகப் பேசிவிட்டுச் செல்வது அல்லாஹ்வை கோபமடையச் செய்யும் செயலாக குர்ஆன் கண்டிக்கின்றது.
    மனித சமூகம் நல்லொழுக்கங்களுடன் வாழ, ஒழுக்கம் சார்ந்த அம்சங்களை இஸ்லாம் போதனை செய்யத் தவறியதில்லை. ஒரு மனிதன் நன்நடத்தைகளுக்குச் சொந்தமானவன் என்பதற்குப் பல பண்புகள் சான்று வழங்கினாலும், அனைத்திற்கும் முதன்மையானது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகும். ‘கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றா மனிதன் நிறை மனிதனல்ல’ என்கிறது இஸ்லாம்.

    வாக்குறுதிகளை முழுமைப்படுத்துவதே இறை நம்பிக்கையாளரின் அடையாளங்களில் ஒன்றாக முன்வைத்து அதனை முழுமைப்படுத்துவதை ஆணையிடுகிறது திருக்குர்ஆன்.

    முஃமின்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள். (திருக்குர்ஆன் 5:1)

    படாடோபத்திற்குப் போகிற போக்கில் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு அதனை அலட்சியம் செய்வது இறை நம்பிக்கைக்குச் சேதம் ஏற்படுத்தும் செயலாக பார்க்கிறது இஸ்லாம்.

    “எவரிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை நிறைவேற்றும் தன்மை இல்லையோ, அவரிடம் இறை நம்பிக்கை இல்லை. எவரிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் தன்மை இல்லையோ அவரிடம் இஸ்லாம் மார்க்கம் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: அஹ்மது)

    கொடுத்த வாக்குறுதிகளை மீறுவது நயவஞ்சகனின் குணங்களில் ஒன்றாக நபிமொழி சுட்டிக் காட்டுகின்றது. நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும். 1) பேசினால் பொய்யுரைப்பான். 2) வாக்களித்தால் மாறு செய்வான் 3) நம்பினால் மோசடி செய்வான். (நபி மொழி)

    நம்பிக்கையின் மறு பிரதிபலிப்பே வாக்குறுதிகளாகும். அதனை நிறைவேற்றாமல் கடந்து செல்வது மனிதனுக்குச் செய்ய வேண்டிய உரிமைகளை மீறுவதாகும். நாளை மறுமையில் இதற்கான கேள்விகளுக்குப் பதில் கூறும் சங்கட நிலை ஏற்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதும் அநியாயம் என்கிறது இஸ்லாம்.

    தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் இவைகளை முறையாகச் செய்துவந்து, ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், செய்த நற்செயல்கள் அனைத்தும் வீணாகிவிடும்.

    நம்மால் செய்ய இயலும் காரியங்களை மட்டும் வாக்குறுதிகளாகக் கூறக் குர்ஆன் வலியுறுத்துகிறது. செய்ய இயலா ஒன்றைப் பெருமைக்காகப் பேசிவிட்டுச் செல்வது அல்லாஹ்வை கோபமடையச் செய்யும் செயலாக குர்ஆன் கண்டிக்கின்றது.

    ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?. நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (திருக்குர்ஆன் 61:2-3)

    வாக்குறுதிகளை நிறை‌வேற்றுவது இறைவனின் பண்பாகும். மற்றும் அவனது தூதுவர்களின் பண்புகளில் ஒன்றாகும். இஸ்மாயீல் (அலை) அவர்களின் நற்பண்புகள் குறித்து இறைவன் பேசுகையில் ‘அவர் வாக்கை காப்பாற்றுபவர்’ என்றும் குறிப்பிடுகின்றான்.

    ‘(நபியே) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக. திண்ணமாக, அவர் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்’. (திருக்குர்ஆன் 19:54)

    வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் மற்றவர்களுக்கு நம்மைப் பண்பாளர் என்பதை அறிமுகம் செய்கிறது. இதனை கவனித்து வாக்குறுதிகளை நிறைவேற்றும் பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாம் விரும்பும் அறங்களில் ஒன்றாகும்.

    ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை
    “நபியே! நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீங்கள் கூறுங்கள், அவர்கள் தங்கள் பார்வைகளை கீழ்நோக்கியே வைத்திருக்கவும். இது அவர்களை பரிசுத்தமாக்கி விடும்” (திருக்குர்ஆன் 24:30).
    தன் வாழ்நாளில் ஒரு மனிதன் பாவத்தில் இருந்து விடுபட்டு வாழ வேண்டும் என்றால், கண்களையும் மனதையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். கண்கள் காணும் காட்சிகள், மனதில் ஆசைகளாக மாறி அதனை அடைய முற்படும் போது தான் மனிதன் பாவச்சேற்றில் சிக்கிக்கொள்கிறான்.

    கண்களில் படும் அனைத்தையும் அடைந்துவிட வேண்டும் என்ற சுயநலமும் பேராசையும் தான் மனிதனின் பாவத்திற்கு காரணமாகின்றது. அதனை அல்லாஹ் அறிந்தவனாக இருக்கிறான். இதையே திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

    ‘மனிதர்களின் கண்கள் செய்யும் சூதுகளையும், உள்ளங்களில் மறைத்து இருப்பவைகளையும் இறைவன் நன்கறிவான்’ (திருக்குர்ஆன் 40:19).

    தவறான பார்வைகளை தவிர்த்தாலே மனங்களும் அதன் எண்ண ஓட்டங்களும் நம் கட்டுப்பாட்டில் வந்துவிடும். அதற்கான வழிமுறைகளையும் அல்லாஹ் திருக்குர்ஆனில் அழகாக குறிப்பிடுகின்றான்:

    “நபியே! நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீங்கள் கூறுங்கள், அவர்கள் தங்கள் பார்வைகளை கீழ்நோக்கியே வைத்திருக்கவும். இது அவர்களை பரிசுத்தமாக்கி விடும்” (திருக்குர்ஆன் 24:30).

    அதேபோன்று பெண்களையும் இவ்வாறு எச்சரிக்கின்றது திருமறை:

    “நபியே! நம்பிக்கை உள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள், அவர்களும் தங்கள் பார்வையை கீழ்நோக்கி வைத்துக் கொள்ளட்டும், தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளட்டும்” (திருக்குர்ஆன் 24:31).

    பெண்களுக்கு பார்வையை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கையோடு மட்டும் விட்டுவிடவில்லை தங்கள் கற்பை பாதுகாத்துக் கொள்ளட்டும் என்று சேர்த்தே எச்சரிக்கிறது திருக்குர்ஆன்.

    ஒருவரது பார்வை தற்செயலாக ஒரு பெண்ணின் மேல் விழுந்து விட்டாலும், அது அவன் மனதில் சஞ்சலங்களை ஏற்படுத்தாத வகையில் அந்தப்பெண்கள் தாங்கள் அணியும் ஆடைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு பெண் கவனத்தில் கொள்ளும்போது அவளும் பாதுகாப்பு பெறுகிறாள், பாவத்தை தூண்டும் செயலிலிருந்து மற்றவர்களையும் தடுத்து விடுகின்றாள். இந்த அறிவுரைகளை பின்பற்றும் போது பாவங்கள் நிகழாதவண்ணம் பரிசுத்தமான நிலை அங்கே உருவாகிவிடும்.

    இந்த கட்டளைகளை மீறும் மனித குலத்திற்கு பெரும் தண்டனை மறுமை நாளில் காத்திருக்கிறது என்றும் இறைவன் எச்சரிக்கின்றான். மறுமைநாளில் கேள்வி கணக்கு கேட்கப்படும் சமயத்தில் அவனிடமிருந்து பதிலை அல்லாஹ் எதிர்பார்ப்பதில்லை. அவர்களின் வாய்களுக்கு முத்திரை வைக்கப்பட்டு விடும், அவர்களின் கண்களும் செவிகளும், தோல்களும் பேச ஆரம்பிக்கும். மனிதன் செய்த பாவங்களை அவனின் ஒவ்வொரு உறுப்பும் சாட்சியாக விவரிக்கும்போது மனிதனால் அதை மறுக்க முடியாது.

    “அல்லாஹ்வுடைய எதிரிகளை நரகத்தின் பக்கம் ஒன்று சேர்க்கப்படும் நாளில் (அதன் சமீபமாக வந்ததும்) அவர்கள் (விசாரணைக்காக நல்லோரில் இருந்து) பிரித்து நிறுத்தப்படுவார்கள். அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவைகள் செய்தவைகளைப் பற்றி சாட்சி கூறும்” என்று திருக்குர்ஆன் (41:19,20) எச்சரிக்கை செய்கின்றது.

    இணைவைத்தலை தவிர அத்தனை பாவங்களையும் மன்னிக்கக் கூடிய இரக்கமுள்ள இரட்சகன் அல்லாஹ். அவனிடம் இரு கரம் ஏந்தி பாவமன்னிப்பு கேட்போம். நம் பார்வைகளை பாதுகாத்து பாவங்களை தவிர்த்து வாழ்வோம். இம்மையிலும் மறுமையிலும் நன்மைகளை பெற்றுக்கொள்வோம்.

    மு. முகமது யூசுப், உடன்குடி.
    “இறைவன் உங்கள் தோற்றத்தையோ, உங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளத்தை (இறையச்சத்தை) பார்க்கிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
    இஸ்லாம் தனது அனைத்து வழிபாடுகளையும் இறையச்சத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கின்றது. இறையச்சமற்ற வழிபாடுகள், சுவரில் வீசிய பந்து போன்று ஏற்கப்படாமல் சென்ற வேகத்தில் திரும்பிவிடுவதைப் ‌பல்வேறு கோணங்களில் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகள் எச்சரிக்கை மணியாக ஒலிக்கின்றன. இறையச்சம் இல்லா வாழ்க்கை சீரான பாதையில் கடக்காது.

    ‘‘இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு எவ்வாறு பயந்து வாழ வேண்டுமோ, அவ்வாறு பயந்து வாழுங்கள். மேலும், நீங்கள் முஸ்லிம்களாகவே அன்றி மரணிக்க வேண்டாம்”. (திருக்குர்ஆன் 3:102)

    இறையச்சம் என்பது உள்ளம் சார்ந்த ஒன்று. உள்ளத்தில் இதன் தாக்கம் அதிகமானால், வெளிப்புற செயல்பாடுகள் செவ்வனே அமைந்துவிடுகிறன. இல்லையேல், வெளிப்புறம் வெறுமையாகக்‌ காணப்படும்.

    ‘முக அழகையோ, ஆடை அலங்காரங்களையோ இறைவன் பார்க்க விருப்பம் கொள்வதில்லை. உள்ளத்தில் எழும் நல்லெண்ணங்கள், இறைவனின் பொருத்தத்தைக் கருதி செய்கின்ற இறையச்ச உணர்வு இவற்றையே காண்கிறான். இதை, அடிப்படையாகக் கொண்டு நன்மைகளை ஏட்டில் பதிவு செய்கிறான்’, என்கின்றன நபி மொழிகள்.

    “இறைவன் உங்கள் தோற்றத்தையோ, உங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளத்தை (இறையச்சத்தை) பார்க்கிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    “அல்லாஹ்விடத்தில் உங்களில் கண்ணியமிக்கவர் உங்களில் மிகுந்த இறையச்சமுடையவர்களாகும்”. (திருக்குர்ஆன் 49:13)

    இதே பொருளினைக் கொண்டிருக்கும் ஒரு நபி மொழியும் சான்றாக அமைந்துள்ளது.

    “(நபி (ஸல்) அவர்களிடம்), ‘அல்லாஹ்வின் தூதரே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?’ என்று வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘மனிதர்களிலேயே (அல்லாஹ்வை) அதிகம் அஞ்சுபவர் தான்’ என்று பதிலளித்தார்கள்”. (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி).

    இறையச்சத்துடன் தன் வாழ்க்கை முறைகளைக் கொண்டு சென்றால், இம்மை மற்றும் மறுமையில் வெற்றிக்கான வழிகளைத் திறந்து விடுகின்றான். வாழ்வின் அடிப்படைத் தேவைகள் முதல் அனைத்து தேவைகளையும் இறைவன் பொறுப்பெடுத்து செய்து முடிக் கின்றான்.

    “எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான். அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்; மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் - திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 65:2-3)

    இறைநம்பிக்கையின் திறவுகோல் இறையச்சம். நம் வாழ்க்கை முழுவதும் இறையச்சத்தை பேணி இறைவனின் பொருத்தம் பெறுவோம்.

    ஏ.எச்.யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
    படைத்தவனை மறந்து அல்லது மறுத்து வாழ்வது மனிதன் தன் வாழ்வில் செய்யும் மிகப்பெரிய பிழை ஆகும். இறைவன் கேட்கின்றான்: “மனிதனே! அருட்கொடையாளனாகிய உன் இறைவனைக் குறித்து உன்னை ஏமாற்றத்தில் வீழ்த்தியது எது?” (திருக்குர்ஆன் 82:6)
    இஸ்லாம், மனிதர்களுக்கு செய்யும் சேவையை மாபெரும் அறச்செயலாக கருதுகிறது. அது கடமைகளை இரண்டாக பிரிக்கிறது. ஒன்று படைத்த இறைவனுக்கு நன்றிக்கடனாக ஆற்ற வேண்டிய கடமைகள், மற்றொன்று இறைவனின் படைப்புகளுக்கு ஆற்ற வேண்டிய சேவை, ஒத்துழைப்பு மற்றும் உதவிகள்.

    தற்போதைய தலைமுறை சந்திக்காத ஓர் அச்சுறுத்தல்தான் கோவிட்-19 என்கின்ற சர்வதேச தொற்று நோய் பரவல். ஒரு வருடத்திற்கு அதிகமாக இந்த நோயின் வீரியம், கவலை, பீதி, மக்களிடையே அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இப்போராட்டத்தில் மருத்துவர்களின், செவிலியர்களின் கடுமையான பங்களிப்புடன், சமூக சேவகர்கள், பொதுமக்களும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு மருத்துவ வசதி வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதும், மனதால் பாதிக்கப்பட்டவர்களை மனநல ஆலோசகர் களுடன் இணைப்பதும் நமது பணிகளில் ஒன்றாகும். வெகுஜன மக்களுக்கு விழிப்புணர்ச்சி உண்டாக்குதல், தடுப்பூசி போட வழிகாட்டுதல் போன்றவை பொறுப்புள்ள மனிதர்களின் கடமையாகும். இவை அனைத்தும் நாம் பாதுகாப்பு எல்லைக்குள் இருந்து அரசு வழிக்காட்டல், ஆதரவுடன் பணிபுரியலாம்.

    நபிகள் நாயகம் கூறினார்கள்: “யார் மக்களுக்குக் கருணை காட்டுவதில்லையோ அவருக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை”.

    “பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச் சிறந்த தர்மமாகும்”.

    பல நெருக்கடிகளுக்குக்கிடையே இந்த தொற்று நோய் பல்வேறு மனதை தொடும் மனிதநேய சம்பவங்களை பதித்து இருக்கிறது. தனது உயிரையே பணயம் வைத்து இறந்தவர்களின் இறுதிச்சடங்குகளை நிறைவேற்றும் தியாகிகளை அடையாளம் காட்டியிருக்கிறது. நிராசையான இந்த காலத்தில் ஓர் நம்பிக்கை ஒளியை ஜொலிக்க வைத்திருக்கிறது.

    இத்தருணத்தில் நோய்க்கு நிவாரணமாக, மனதிற்கு ஆறுதலாக, இன்னொரு முக்கியமான அம்சத்தின் பக்கமும் நாம் கவனம் செலுத்த கடமைப்பட்டிருக்கின்றோம். மருத்துவ உலகம் மிக உச்சத்தில் இருக்கும் காலத்தில் இந்த நோய்க்கிருமி மனிதனுக்கு மிகப்பெரிய சவாலை விட்டிருக்கிறது. மனித இயலாமை மற்றும் பலவீனங்களை சுட்டிக்காட்டும் மிகப்பெரிய பாடத்தை இத்தலைமுறை பயின்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மனித இழப்புகளுக்கும், சோகங்களுக்கும் அருமருந்தாக மனிதன், தன்னைப் படைத்த இறைவனின் பக்கம் திரும்ப வேண்டும். ஆன்மிக பலத்தை பெற முயற்சிக்க வேண்டும்.

    படைத்தவனை மறந்து அல்லது மறுத்து வாழ்வது மனிதன் தன் வாழ்வில் செய்யும் மிகப்பெரிய பிழை ஆகும். இறைவன் கேட்கின்றான்: “மனிதனே! அருட்கொடையாளனாகிய உன் இறைவனைக் குறித்து உன்னை ஏமாற்றத்தில் வீழ்த்தியது எது?” (திருக்குர்ஆன் 82:6)

    வாருங்கள், படைத்தவனின் பக்கம் திரும்புவோம். நோய் கொடுமையில் இருந்து நம்மை பாதுகாக்க, ஏக இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம்.

    நசீர் அதாவுல்லாஹ், சென்னை.
    நாம் கர்வம் கொண்டு, மனதில் பெருமை கொண்டு வாழ முற்படும் போதுதான் சோதனைகளை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம் என்பதை இந்த இறைமறை வசனம் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கு வரலாற்றிலும் சான்றுகள் உள்ளன.
    மனிதன் சந்திக்கின்ற அத்தனை சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் முக்கிய காரணம் உள்ளது. அது- மனிதன் தன் கரங்களால் செய்கின்ற பாவங்களும், மனதால் ஏற்கின்ற கெட்ட எண்ணங்களும் தான்.

    இதுகுறித்து, அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்:

    “யார் இறைநம்பிக்கை கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழுமையாக (அல்லாஹ்) கொடுப்பான்; இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான்; எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணி கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான்; அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணமாட்டார்கள்”. (திருக்குர்ஆன் 4:173)

    நாம் கர்வம் கொண்டு, மனதில் பெருமை கொண்டு வாழ முற்படும் போதுதான் சோதனைகளை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம் என்பதை இந்த இறைமறை வசனம் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கு வரலாற்றிலும் சான்றுகள் உள்ளன.

    அல்லாஹ்வின் அரசவையில் கண்ணியமிக்க அறிவுஜீவியாக இருந்த ‘இப்லீஸ்’ , தான் கொண்ட கர்வத்தின் காரணமாகவே அழிவைத் தேடிக்கொண்டான். இப்ராஹீம் நபி காலத்தில் வாழ்ந்த ‘நம்ரூத்’ என்ற மன்னனும் கர்வம் கொண்டு அழிந்து போனான். மூசா நபி காலத்தில் வாழ்ந்த ‘பிர் அவ்ன்’ என்ற கொடுங்கோல் அரசன் ‘நான் தான் இறைவன்’ என அகம்பாவம் கொண்டு திரிந்தான். பின்னர், அவனும் கடலில் மூழ்கி அழிந்து போனான். காரூன் என்ற பெரும் பணக்காரன் தான் சம்பாதித்த அத்தனை செல்வங்களும் தன் திறமையால் பெற்றுக்கொண்டது என்பதை கர்வத்தோடு சொல்லி, அதனால் பூமியில் புதைந்த வரலாறும் இறைமறையில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    கர்வம் கொண்ட யாரும் எந்த காலத்திலும் நிலைத்து வாழ்ந்ததில்லை. அவர்கள் அல்லாஹ்வின் அருள்மறை சொல்லும் செய்தியை அறிந்தும் ஏனோ தங்கள் நிலைமையை மாற்றிக் கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதையே அல்லாஹ் இவ்வாறு கண்டித்து கூறுகின்றான்:

    “பெருமை கொண்டு உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே. பூமியில் பெருமை அடித்துக் கொண்டு நடக்காதே. நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 31:18)

    ‘கர்வம்’, ‘தலைக்கனம்’, ‘அகம்பாவம்’, ‘ஆணவம்’ ஆகிய தன்மையைக் கொண்ட குணாதிசயத்தை மனிதன் தன்னிலிருந்து விலக்கிக் கொள்வதற்கு ஒரு சிறந்த வழியையும் அல்லாஹ் தன் அருள் மறையிலே இவ்வாறு பதிவு செய்கின்றான்:

    “அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள், அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். தாய் தந்தைக்கு நன்றி செய்யுங்கள். அவ்வாறு உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டாருக்கும், எப்பொழுதும் உங்களோடு இருக்கக்கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் நன்றி செய்யுங்கள். எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கிறானோ, அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 4:36)

    நாம் அல்லாஹ்வை பயபக்தியுடன் வணங்கி அடிபணியும் போது, அந்த ஏக இறைவன் முன்பு பெருமை பாராட்டுவதற்கு நாம் தகுதியற்றவர்கள் என்கின்ற உண்மை புரியவரும். இறைவன் முன்பு தலை குனியும் போது, தலைக்கனம் அங்கிருந்து அகன்றுவிடும்.

    அடுத்ததாக சொல்லுவது- உங்களது பெற்றோர்களுக்கும் அடிபணியுங்கள். பெற்றோர்கள் தான் நமது வளர்ச்சிக்காக பாடுபடும் தியாக சீலர்கள். அவர்கள் எப்பொழுதுமே நம்மை விட மேலானவர்கள் என்ற எண்ணம் கொண்டிருக்க வேண்டும்.

    அடுத்ததாக ஏழைகளைப் பற்றி சொல்கிறான். அவர்களிடம், பணிவு, அன்பு, பிறரை மதிக்கும் குணாதிசயங்கள் காணப்படும். அப்படிப்பட்ட ஒரு நற்பண்பு நம்மிடம் இல்லை என்றால், அவர்களை விட நாம் மிக சாதாரணமானவர்கள் என்று எண்ணத் தோன்றும்.

    அடுத்து நண்பர்கள். அவர்கள் ஒரு கண்ணாடியைப் போன்றவர்கள். நம்மிடம் இருக்கின்ற குறை நிறைகளை எடுத்துச்சொல்லி நமக்கு வழி காட்டக் கூடியவர்கள். நமது துன்பத்திலும், துக்கத்திலும் கைகொடுத்து உதவக்கூடியவர்கள். அப்படிப்பட்ட நண்பர்கள் நம்மை விட உயர்ந்தவர்கள் என்கின்ற எண்ணம் நம்மை சற்று சிந்திக்க வைக்கும்.

    பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி சொல்லும்போது, அவர்கள் நமக்காக எத்தனை விஷயங்களை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்பதை அறிந்தால், நம்மிடம் உள்ள கர்வம் நம்மைவிட்டு அகன்று போகும்.

    உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும் நன்றி செய்யுங்கள், என்று அல்லாஹ் சொல்லும் போது, மனித வாழ்வு என்பது தனிப்பட்ட வாழ்வு அல்ல, அது ஒன்றுபட்டு வாழ்கின்ற ஒரு வாழ்வியல் தத்துவம் என்கின்றான். நம்மை சுற்றி இருக்கின்ற அத்தனை பேர்களுடன் நாம் இணைந்து வாழும்போது, அவர்களின் தேவைகளை நாமும், நமது தேவைகளை அவர்களும் பூர்த்தி செய்வதை உணரலாம்.

    இதன்மூலம், நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கின்றோம் என்பதும், ஒட்டுமொத்தமாக நாம் எல்லோருமே அல்லாஹ்வைச் சார்ந்து இருக்கிறோம் என்பதும் புலப்படும்.

    இந்த அறிவுரையை நாம் ஏற்றுக்கொண்டு வாழத்தொடங்கும்போது சுபிட்சம் மிளிரத்தொடங்கும். நாமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மைகளை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்ளலாம்.

    மு. முகமது யூசுப், உடன்குடி.
    பெற்றோரை போற்றுவோம். பெற்றோரை இழந்தவர்கள் அவர்கள் செய்து வந்த நல்ல காரியங்களை தொடர்ந்து செய்வோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.
    எத்தனையோ விதமான தியாகங்கள் இந்த உலகில் போற்றப்படுகின்றன. ஆனால் நம் பெற்றோர்கள் செய்த தியாகத்திற்கு ஈடுஇணை எதுவும் கிடையாது. அதனால் தான் திருக்குர்ஆனில் அல்லாஹ் மனிதர்களை விளித்து “தன்னை வணங்குங்கள் என்று சொல்கின்ற இடங்களில் எல்லாம் உங்கள் பெற்றோருக்கும் நன்றி செலுத்துங்கள்” என்று சேர்த்து சொல்கின்றான். மேலும், “மனிதன் தன் தாய் தந்தையருக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம்” (திருக்குர்ஆன் 46:15) என்றும் வலியுறுத்துகின்றான்.

    பெற்றோர்கள் நம் சொர்க்கத்தின் வாசல்களாக உள்ளனர். நாம் அவர்களுக்கு செய்கின்ற அனைத்து உதவிகளும் சொர்க்கத்தில் நமக்காக பெரும் மாளிகையாக உருவாகிக் கொண்டிருக்கின்றன.

    ஒருமுறை ஒரு சஹாபாவின் தாயார் இறந்து விட்டார்கள். அவர் கதறி அழுகிறார். அவரிடம் கேட்டபோது, “என் தாயின் பிரிவு தாங்க முடியாத துக்கத்தை தந்தாலும் இன்றிலிருந்து சின்னச்சின்ன விஷயங்களுக்காக பெரும் நன்மைகளை பெற்றுத்தரும் என் சொர்க்க வாசல் அடைபட்டு விட்டதே” என்று ஆதங்கப்பட்டார். எனவே பெற்றோருக்காக நாம் செய்யும் ஒவ்வொரு உதவியும் அவர்களுக்கானதல்ல, நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் உன்னதமான பாதை.

    பெற்றோர் இறந்து விட்ட பின்னர் சொர்க்கத்திலும் கூட நமக்காக அல்லாஹ்விடம் முறையிடுவார்களாம். “இறைவா, என்னை சொர்க்கவாசி ஆக்கி நன்மை செய்தாய். என் பிள்ளைகளையும் இங்கே என்னோடு இணைத்து விடு” என்று வேண்டுவார்களாம். “அதற்குரிய நன்மை அவனிடம் இல்லையே” என்று அல்லாஹ் சொன்னால், “உன் அளப்பரிய அருள் கிருபை என்று ஒன்று இருக்கிறதே அதன் மூலம் அதனை உண்மை படுத்திவிடு அல்லாஹ்” என்பார்களாம். அல்லாஹ் இந்த நிகழ்ச்சியை அருள்மறையில் இவ்வாறு படம் பிடித்துக் காட்டுகின்றான்.

    “எந்த நம்பிக்கையாளர்களின் சந்ததிகள் தங்கள் பெற்றோர்களை பின்பற்றி நம்பிக்கை கொள்கிறார்களோ, அந்த சந்ததியினரின் நன்மை குறைவாக இருந்தாலும், அவர்கள் பெற்றோர்கள் திருப்தி அடையும் பொருட்டு அவர்களுடைய சந்ததிகளையும் அவர்களுடன் சுவனபதியில் சேர்த்து விடுவோம்”. (திருக்குர்ஆன் 52:21)

    பெற்றோர்கள் உயிருடன் நம்முடன் வாழ்ந்த காலத்தில் நமக்கு சொர்க்க வாசல்களாக உள்ளனர். இறந்தபின், தங்கள் முயற்சியால் நமக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தர வல்லவர்களாக உள்ளனர் என்ற கருத்தை உள்வாங்கி எண்ணிப்பார்க்க வேண்டும்.

    அவர்கள் இருந்தாலும், இறந்தாலும் நமக்கு நன்மை மட்டுமே செய்தார்கள். நாம் சொர்க்கம் பெற்றுக்கொள்வதற்கு காரணமாய் இருப்பார்கள். இதனை உணர்ந்து உத்தமராய் வாழ்ந்து, பெற்றோரை போற்றுவோம். பெற்றோரை இழந்தவர்கள் அவர்கள் செய்து வந்த நல்ல காரியங்களை தொடர்ந்து செய்வோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.

    மு. முகமது யூசுப், உடன்குடி.
    ×